செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 04

Rate this item
(0 votes)

بسم الله الرحمن الرحيم

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

 வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?

பகுதி :04

 

5. வாகனக்கூட்டத்திற்கு எதிராக அதே வாகனக்கூட்டமா? :

இன்னும் நபி (ஸல்) அவர்களிடம் வந்த அந்த வாகனக்கூட்டத்தினர் நோன்பு நோற்றவாறு சட்டம் கேட்டு வந்ததாகவும், அதனாலேயே நோன்பை விட்டுவிடுமாறு (அமரஹூம் என்று) அந்த வாகனக்கூட்டத்திற்கு மட்டும் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாகவும். அவர்களைத்தான் பெருநாள் திடலுக்கு செல்லுமாறு பணித்ததாகவும் தத்தம் பகுதி பிறை நிலைபாட்டில் உள்ளவர்கள் இந்த அறிவிப்பை விளக்குகின்றனர்.

இந்த ஆய்வு சரியானதாக இருக்குமேயானால் 'பிறையைக் கண்டு நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்ன அதே நபி (ஸல்) அவர்கள்தான் பிறையைக் கண்டு நோன்பை விடுங்கள்' என்றும் சொன்னார்கள். இக்கட்டளையை ருஃயத் என்ற பதத்திற்கு பிறையைப் புறக்கண்ணால் பார்த்து என தவறான பொருள்செய்யும் மேற்படி தத்தம்பிறை அறிஞர்கள் எவரும் மறுக்க வாய்ப்பில்லை.

எனவே பிறையைக் கண்டால் நோன்பு வைக்கவேண்டும் என்பதை அறிந்துள்ள மேற்படி வாகனக்கூட்டத்திற்கு பிறையைப் பார்த்ததும் நோன்பை விட்டுவிடவேண்டும் என்ற சட்டம் தெரியாதா? பெருநாள் பிறையைப் பார்த்த பிறகும் வீம்புக்கு நோன்பை பிடித்துக்கொண்டு அவர்கள் ஏன் நபி (ஸல்) அவர்களிடம் வரவேண்டும்? சற்று சிந்தியுங்கள்.

ஆக இந்த அறிவிப்பை சரிகாண்பவர்களின் கூற்றுப்படி அந்த வாகனக்கூட்டத்தில் இருந்த எவருக்கும் பிறையை பார்த்து நோன்பை விடுங்கள் என்ற சட்டம்கூட தெரியாதவர்களாகவும், பெருநாளன்று ஹராமான நோன்பை பிடித்தவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதைத்தான் தெரிவிக்கிறது. இவ்வாறு தேவையில்லாமல் அந்த வாகனக் கூட்டத்தினரையும் வம்புக்கு இழுப்பது முறைதானா? பாவம் அந்த வாகனக்கூட்டத்தினர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், பெருநாள் பிறையைப் பார்த்த பிறகும் அந்த வாகனக்கூட்டத்தினர் ஏன் வீம்புக்கு நோன்பை பிடிக்கவேண்டும்? ஏன் அவர்கள் மதீனா வரவேண்டும்? என்ற கேள்விகள் எழுவதால் அதற்கு பதிலளிக்கும் முகமாக சிலர், அந்த வாகனக் கூட்டத்தினர் அவ்வாறு நோன்பு பிடித்துக்கொண்டு வரவில்லை மாறாக அவர்கள் பெருநாளைக் கொண்டாடிவிட்டுத்தான் மதீனா வந்தார்கள் என்றும், அவ்வாறு வந்த அவர்கள் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் நோன்பு பிடித்திருப்பதைக் கண்டதால்தான் நோன்பை விடுமாறு பிறைபார்த்த சாட்சியளித்தனர் என்றும் வாதிடுகின்றனர்.

வாகனக்கூட்டத்தினர் நோன்பு பிடித்தவாறு மதீனா வரவில்லை என்பதற்கும், அவர்கள் பெருநாளை கொண்டாடிவிட்டுத்தான் மதீனா வந்தார்கள் என்பதற்கும் ஆதாரமாக இந்த அறிவிப்பில் எந்த வாசகமும் இடம்பெறவில்லை. இவ்வாறு வாதம் வைப்பவர்கள்தான் இதற்கான நேரடியான ஆதாரத்தைக் காட்டவேண்டும்.

இந்நிலையில் இந்த அறிவிப்பை சரிகாண்பவர்களிடையே உள்ள இவ்வாறான கருத்து வேறுபாடுகளால் அந்த வாகனக்கூட்டத்தினர் நோன்பை வைத்த நிலையில் வந்தார்களா? அல்லது நோன்பை திறந்துவிட்டு வந்தார்களா? என்பதை தெளிவுபடுத்துவதும், அக்கூட்டத்தினர் பெருநாளை நபி (ஸல்) அவர்களோடு சேர்ந்து கொண்டாடுவதற்காக மதீனா வந்தார்களா? அல்லது பெருநாளை கொண்டாடிவிட்டு மதீனா வந்தார்களா போன்ற எதிர்முரணான வினாக்களுக்கெல்லாம் விடையளிப்பதும் இவ்வறிவிப்பை சரிகாண்பவர்களின் மீது கடமையாகும்.

இவ்வாறு தேவையில்லாமல் வாகனக் கூட்டத்தினரையும் முரண்பாடுகளுக்குள் மாட்டிவிடுவதாகவே இந்த அறிவிப்பு அமைகிறது. எனவே நபி (ஸல்) அவர்களின் மீது மட்டுமல்லாமல் அந்த வாகனக்கூட்டத்திற்கு எதிராக அவர்கள் மீதும் ஹராமை இட்டுக்கட்டும் அளவிற்குத்தான் இந்த அறிவிப்பின் வாசகங்கள் அமைந்துள்ள இந்த அறிவிப்பு மிகத்திறைமையாகப் புனையப்பட்டுள்ளது என்பதற்கு இது ஐந்தாவது சிறந்த உதாரணமாகும்.

 

6. இம்மாபெரும் நிகழ்வை அறிவிக்க ஒரு ஸஹாபிகூட முன்வரவில்லையா? :

ஒரு வாகனக்கூட்டம் பெருநாள் பகல் பொழுதில் வந்து நபி (ஸல்) அவர்களிடம் பிறைபார்த்த சாட்சியம் அளித்து அன்று மதீனாவில் அனைவரும் நோன்பை விட்டார்கள் என்றால், பரபரப்பு வாய்ந்த இச்செய்தி ஸஹாபாக்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக தெரிந்த ஒரு மிகப்பெரிய விஷயமாகவும், அவர்கள் யாரும் மறக்க முடியாத நிகழ்வாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்க வேண்டும்.

அப்படியானால் ஹதீஸ்களை அறிவிப்பதில் முன்னனியில் இருக்கும் அபூஹூரைரா (ரழி) போன்ற பிரபலமான நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்களோடு என்றும் நெருக்கத்தோடு இருந்த திண்ணைத் தோழர்கள், வஹியை எழுதுபவர்கள் என ஒருபெரும் நபிதோழர் பட்டாளமே இச்சம்பவத்தை அறிவித்து முதவாதிர் அறிவிப்பாக ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றிருக்கும்.

ஆனால் நடந்திருப்பது என்ன? அறிவித்த ஸஹாபியின் பெயரைக்கூட தெரிவிக்காமல் வந்துள்ள இந்த முர்ஸலான, இஸ்மு முப்ஹமான அறிவிப்பை, அபூஉமைர் என்பரின் வாயிலாகத் தவிர வேறெவரும் அறிந்திருக்கவே இல்லை என்பதை இங்கே மீண்டும் நினைவூட்டுகிறோம். சாதாரணமாகச் சிந்தித்தாலே இதன் உண்மை நிலை பளிச்சிடும்.

மேலும் ஹதீஸ் கலையின் மாபெரும் இமாம்களாகத் திகழ்ந்த இமாம் இப்னு அப்துல்பர் (ரஹ்), இப்னல் கத்தான் (ரஹ்) அவர்கள் உட்பட பல ஹதீஸ்கலை இமாம்கள் மேற்படி அறிவிப்பாளரான அபூஉமைர் அவர்களை விமர்ச்சித்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

எனவே மதீனாவில் அனைவரும் நோன்பை விட்டார்கள் என்றால், பரபரப்பு வாய்ந்த இச்செய்தியை ஸஹாபாக்களில் யாரும் அறிந்திடாத நிலையில் அபூஉமைர் பின் அனஸ் என்பவர் மட்டும் அறிவிக்கும் இந்த அதிசயமான மேற்படி நிகழ்வு இது இட்டுக்கட்டப்பட்ட செய்திதான் என்பதற்கு ஆறாவது ஆதாரமாகும்.

 

7. தனிநபரின் சாட்சிக்கு மார்க்க அங்கீகாரம் உண்டா?

ஒரு விஷயத்தைப் பற்றி சாட்சி பகர்வதாக இருந்தால் அதை உறுதிப்படுத்த இரண்டு நபர்கள் சாட்சியாக வரவேண்டும். இதைத்தான் திருக்குர்ஆன் வழியுறுத்துகிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلَا يَأْبَ كَاتِبٌ أَن يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللَّـهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللَّـهَ رَ‌بَّهُ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا فَإِن كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لَا يَسْتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ وَاسْتَشْهِدُوا شَهِيدَيْنِ مِن رِّ‌جَالِكُمْ فَإِن لَّمْ يَكُونَا رَ‌جُلَيْنِ فَرَ‌جُلٌ وَامْرَ‌أَتَانِ مِمَّن تَرْ‌ضَوْنَ مِنَ الشُّهَدَاءِ أَن تَضِلَّ إِحْدَاهُمَا فَتُذَكِّرَ‌ إِحْدَاهُمَا الْأُخْرَ‌ىٰ وَلَا يَأْبَ الشُّهَدَاءُ إِذَا مَا دُعُوا وَلَا تَسْأَمُوا أَن تَكْتُبُوهُ صَغِيرً‌ا أَوْ كَبِيرً‌ا إِلَىٰ أَجَلِهِ ذَٰلِكُمْ أَقْسَطُ عِندَ اللَّـهِ وَأَقْوَمُ لِلشَّهَادَةِ وَأَدْنَىٰ أَلَّا تَرْ‌تَابُوا إِلَّا أَن تَكُونَ تِجَارَ‌ةً حَاضِرَ‌ةً تُدِيرُ‌ونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلَّا تَكْتُبُوهَا وَأَشْهِدُوا إِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَارَّ‌ كَاتِبٌ وَلَا شَهِيدٌ وَإِن تَفْعَلُوا فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْ وَاتَّقُوا اللَّـهَ وَيُعَلِّمُكُمُ اللَّـهُ وَاللَّـهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ﴿البقرة: ٢٨٢﴾.

உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;. ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள் அல்குர்ஆன் (2:282)

فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُ‌وفٍ أَوْ فَارِ‌قُوهُنَّ بِمَعْرُ‌وفٍ وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِّنكُمْ وَأَقِيمُوا الشَّهَادَةَ لِلَّـهِ ذَٰلِكُمْ يُوعَظُ بِهِ مَن كَانَ يُؤْمِنُ بِاللَّـهِ وَالْيَوْمِ الْآخِرِ‌ وَمَن يَتَّقِ اللَّـهَ يَجْعَل لَّهُ مَخْرَ‌جًا ﴿الطلاق: ٢﴾.

உங்களில் நியாயமுடைய இருவரை சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள், மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள் அல்குர்ஆன் (65:2)

அபூ உமைரின் வாயிலாக அறிவிக்கப்பட்டிருக்கும் இத்தகவலைப் போன்று வேறு ஸஹீஹான அறிவிப்பாளர் வரிசையோடு எந்த ஹதீஸ் கிரந்தத்திலும் காணமுடியவில்லை. வாகனக்கூட்டம் சம்பந்தமாக வரும் இத்தகவல் அபூஉமைர் என்பவர் வாயிலாக மட்டுமே அனைத்து அறிவிப்புகளிலும் இடம் பெற்றுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இப்படி தனிநபர் ஒருவர் தனித்து அறிவிப்பது பற்றி ஹதீஸ்கலை இமாம்கள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றனர்.

قال الهيثمى (2/40): فيه أبو عمير بن أنس ولم أر أحدا روى عنه غير أبى بشر وبقية رجاله موثقون. (جمع الجوامع أو الجامع الكبير للسيوطي - (1 / 19511).

இதில் அபூஉமைர் இப்னு அனஸ் இடம்பெருகிறார். அவரிடமிருந்து அபூ பிஷ்ரை தவிர எவரும் அறிவித்ததாக நான் அறியவில்லை மேலும் மற்ற நபர்கள் நம்பகமானவர்கள் என ஹைஸமி அவர்கள் கூறுகின்றார்கள்.

"فأما من لم يرو عنه إلا رجل واحد انفرد بخبرالواحد وجب التوقف عن خبره حتى يوافقه غيره". (سنن الدارقطني- الجزء: 03, الصفحة : 174).

தனிநபராக ஒருவர் ஒரு அறிவிப்பை ஒருவரிடமிருந்து அறிவித்திருந்தால் அந்த அறிவிப்பை ஏற்க கூடாது. எதுவரையென்றால் இன்னொருவர் அந்த அறிவிப்பை போன்று அறிவித்து உறுதிப்படுத்தும் வரை அதை நிறுத்தி வைப்பது கடமையாகும். (ஸுனன் அத் தாரகுத்னி 3:174)

فقد قال الدارقطني : "من روى عنه ثقتان فقد ارتفعت جهالته وثبتت عدالته ". (فتح المغيث  : الجزء : 01, الصفحة : 322).

எந்த ஒரு அறிவிப்பாளருக்கும் அவருடைய செய்திகளை அறிவிக்கும் இரண்டு மாணவர்கள் இருந்தால்தான் அவரின் அறியப்படாத தன்மை நீங்கி, அவரின் நம்பகத்தன்மை நிருபணமாகும் என அத்தாரகுத்னி கூறியுள்ளார். (ஃப்த்ஹுல் முகீஸ் 1/322).

எனவே பிறைவிஷயமாக சாட்சி பகருவதாக வரும் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை அபூஉமைர் என்பவர் மட்டுமே தனித்து அறிவிக்கிறார். மேலும் அவரிடமிருந்து அபூபிஷ்ரு என்ற ஒருநபர் மட்டுமே அறிவிக்கிறார். அபூஉமைருக்கு இச்செய்தியை அறிவித்தது யார் என்பது தெளிவுபடுத்தப்படாத காரணத்தினால், பெயர் கூறப்பட்ட அபூஉமைர்தான் இச்செய்திக்கு முதல்சாட்சியாகவும், தனிநபர் சாட்சியாகவும் ஆகிறார். பல லட்சக்கணக்கான ஸஹாபாக்களில் ஒருவர்கூட இந்த வாகனக்கூட்டம் சம்பந்தமான செய்தியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக அறிவித்து இவ்விஷயத்தை உறுதிப்படுத்தாத காரணத்தினால் இச்செய்தி ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய பலஹீனமான செய்திதான் என்பதற்கு ஏழாவது காரணமாகும்.

 

8. வாகனக்கூட்டம் எந்தப் பிறையை எப்போது பார்த்தார்கள்? :

மேற்படி அறிவிப்பின் வாசகங்களை வைத்துப் பார்க்கும் போது அந்த வாகனக்கூட்டத்தினர் ரமழானின் 29 நோன்புகளை முடித்த நிலையில் பிறை பார்த்ததாக நம்மால் புரிய முடிகிறது. நோன்பு கடமையாக்கப்பட்ட ஹிஜ்ரி 2ம் வருடத்திலிருந்து நபி (ஸல்) அவர்கள் மரணித்த வரையிலுள்ள ஹிஜ்ரி 12ம் ஆண்டு வரை நாம் கணக்கிட்டுப் பார்த்தால் ஹிஜ்ரி ஆண்டுகளான 2, 4, 5, 10, 12  ஆம் ஆண்டுகளில் ரமழான் 29 நாட்களாகவும், ஹிஜ்ரி ஆண்டுகளான 3, 6, 7, 8, 9, 11 ஆம் ஆண்டுகளில் ரமழான் 30 நாட்களாகவும் அமைந்துள்ளதை துல்லியமாக நாம் அறியமுடிகிறது. மேற்கண்ட ரமழான் மாதங்களின் 29 மற்றும் 30ஆம் நாள்களில் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் கும்மாவுடைய நாளில் சங்கமம் (Conjunction) ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதில் நோன்பு 29ல் வாகனக்கூட்டம் பிறையை எங்கே எந்த வேளையில் பார்த்தார்கள்? எந்த ஆண்டில்; இந்த சம்பவம் நடந்தேறியது? போன்ற கேள்விகளுக்கு தெளிவான விடையில்லை. நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருந்த நிலையில் ஐந்து முறை ரமழான் 29 நாட்களின் முடிந்துள்ளது. இதில் வாகனக்கூட்டம் 29வது நாளின் கும்மாவுடைய (Conjunction - சங்கமம்) தினத்தில் பிறையை புறக்கண்ணால் பார்த்ததாகக் கூறும் ஆண்டைக் கழித்து எஞ்சியுள்ள பிற ஆண்டுகளில் எந்த ஸஹாபியாவது இவ்வாறு சங்கமம் என்னும் கும்மாவுடைய தினத்தில் பிறையைத் தம் புறக்கண்ணால் பார்த்ததாக ரிவாயத்து செய்துள்ளனரா என்பதை சற்று சிந்திக்கவேண்டும். அப்படி ஒரு செய்தியும் ஹதீஸ்களில் காணக்கிடைக்க வில்லை.

இவ்வாறு ஹதீஸ்கலை என்னும் ஹதீஸ் ஆய்வில் பாண்டித்தியம் பெறாத சாதாரண மக்கள் கூட சந்தேகிக்கும் அளவிற்குத்தான் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பு ரிவாயத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலவீனம் என்பதைத் தாண்டி இது இட்டுக்கட்டப்பட்ட ஒன்றுதான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளங்கிக்கொள்ள இந்த ஆய்வுக் கட்டுரையை இறுதிவரை கவனமாகப் படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தொடர்ந்து படிக்க : வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா??

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

பாகம் 21, பாகம் 22,

 

Read 2565 times Last modified on செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2016 05:28