செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 07

Rate this item
(0 votes)

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

 வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?

பகுதி : 7

 

முர்ஸல் குறித்த விளக்கமும், சட்டங்களும்.

'முர்ஸல்' என்றால் 'இடையில் விடுபட்டது' என்பது இதன் சொற் பொருளாகும். அதாவது 'அர்ஸல்' என்ற இறந்த கால வினைச் சொல்லிலிருந்து வந்த 'இஸ்மு மஃப்ஊல்' வடிவமே 'முர்ஸல்' என்பதாகும். அதன் அர்த்தம் 'பொதுவாக விட்டுவிட்டான்' என்பதுதான். ஏனெனில் முர்ஸல் வகை நபிமொழியில் அறிமுகமான அறிவிப்பாளரை குறிப்பிடாமல் அறிவிப்பாளர் தொடர் விடப்பட்டு விடுகிறது.

முர்ஸல் அறிவிப்பை வரையறுப்பதில் ஹதீஸ்கலை அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். அதாவது இந்த முர்ஸல் வகை நபிமொழியின் சட்டம் என்ன? என்பதிலும், அதன் மூலம் மார்க்க சட்டத்திற்கு ஆதாரம் எடுக்கும் விஷயத்திலும் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.

 

முதலாவது கருத்து :

மார்க்க சட்டங்களை தொகுத்தளித்த சட்டமேதைகளான இமாம்களும், ஹதீஸ்கலை அறிஞர்களில் பெரும்பான்மையினரும் இந்த முர்ஸல் வகை நபிமொழியும் பலவீனமான நபிமொழிதான் என்கிறார்கள். முர்ஸல் அறிவிப்புகள் மார்க்க சட்டங்களுக்கு ஆதாரமாகாது என்கின்றனர். காரணம் முர்ஸல் ரிவாயத்துகளில் விடுபட்ட அறிவிப்பாளரின் விபரம் தெரியாததால் அவர் ஸஹாபி (நபித்தோழர்) அல்லாதவராகவும் இருக்கக்கூடும் என்பதாகும்.

இன்னும் அறிவிப்பாளர்களின் தொடர்ச்சியின் கடைசியிலிருந்து தாபிஈயிக்கு பிறகு இருப்பவர் சரிந்துயிருப்பார் என அல்ஹாபில் இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்கள்.

 

இரண்டாவது கருத்து :

இன்னும் சில அறிஞர்களோ இந்த முர்ஸல் வகை நபிமொழியை ஒரு நிபந்தனையின் அடிப்படையில் ஆதாரத்திற்காக எடுத்துக் கொள்ளலாம் என்கின்றனர். அந்த நிபந்தனையாவது, இந்த முர்ஸல் நபிமொழியை அறிவிப்பவர் நம்பத்தகுந்தவராக இருக்கவேண்டும் மேலும் நம்பத் தகுந்தவரிடமிருந்தே அவர் தகவலை அறிவிக்க வேண்டும். காரணம் நம்பகமான ஒரு 'தாபிஈ நம்பகமான ஒருவரிடமிருந்து கேட்காமல் அல்லாஹ்வின் தூதர் கூறியுள்ளார்கள் என்று சொல்ல மாட்டார்கள் என்ற நல்லெண்ணமே.

இமாம் அபுல் ஹுசைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் தம்முடைய முஸ்லிம் கிரந்தத்தில் வியாபாரம் என்ற அத்தியாயத்தில் பதிவு செய்திருக்கும் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) வாயிலாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு ரிவாயத்து முர்ஸல் வகைக்கு சிறந்த உதாரணமாகும். அதன் விபரமாவது :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸாபனா மற்றும் முஹாகலா ஆகிய வியாபாரங்களை தடை செய்தார்கள். முஸாபனா என்றால் பேரீச்ச மரத்திலுள்ள (உலராத) கனிகளை உலர்ந்த (கொய்யப்பட்ட) பேரீச்சம் கனிகளுக்கு பதிலாக பண்டமாற்று முறையில் விற்பதாகும். 'முஹாகலா என்றால் (அறுவடை செய்யப்பட்ட) கோதுமைக்கு பதிலாக கதிரிலுள்ள (தானியத்)தை விற்பதும் (அறுவடை செய்யப்பட்ட) கோதுமைக்கு பதிலாக நிலத்தை குத்தகைக்கு கொடுப்பதும் ஆகும்.

சயீத் பின் அல் முஸய்யிப் அவர்கள் ஒரு மூத்த 'தாபிஈ ஆவார்கள். இவர் தனக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே (நடுவராக பாலமாக) இருப்பவர்களை சொல்லாமல் விட்டுவிட்டு தானே நபியிடமிருந்து நேரடியாக இந்த நபிமொழியை அறிவித்துள்ளார்கள். இந்த நபிமொழி அறிவிப்பாளர் தொடர்ச்சியில் இறுதியானவரை இவர்கள் விட்டுவிட்டார்கள். அவருமோ தாபிஈக்கு பின்னால் உள்ளவராவார். பெரும்பாலும் இவ்வாறு விடுபடுவதில் குறைந்தது ஒரு நபித்தோழராவது இருப்பார்கள். ஒரு நபித்தோழரோடு, ஒரு தாபிஈயும் சேர்த்து விடுபடுவதற்கான சாத்தியகூறும் உண்டு.

ஏற்றுக் கொள்ளத்தக்க நபிமொழிக்கான நிபந்தனைகளில் ஒன்றான (அறுபடாத) அறிவிப்பாளர் தொடர்ச்சியை இழந்த காரணத்தினாலும், விடுபட்ட அறிவிப்பாளரின் விவரம் தெரியாததாலும் அவ்வாறு விடுபட்டவர் நபித்தோழர் அல்லாதவராக இருக்கலாம் என்ற காரணத்தாலும் இந்த முர்ஸல் வகை நபிமொழி ஏற்று கொள்ளப்படாத பலவீனமான நபிமொழியாகும். இவ்வாறு தைஸீரு முஸ்தலஹுல் ஹதீஸ் தொகுப்பில் நம்மால் காணமுடிகிறது. (தைஸீரு முஸ்தலஹுல் ஹதீஸ் (1/36) எனும் சிறந்த ஹதீஸ் கலை தொகுப்பின் தமிழாக்கத்தில் பக்கம் 54 முதல் 58 வரையுள்ள செய்திகளின் சுறுக்கமாவது.)

சயீத் பின் முஸய்யிப் அவர்கள் பிரபலமான தாபியாக இருந்தும், அவரின் பிற அறிவிப்புகளில் அபூஹுரைரா (ரழி) போன்றவர்கள் ஆசிரியராக உள்ள நிலையிலும், முர்ஸலாக ஒரு அறிவிப்பை அறிவித்ததால் அவருடைய இந்த அறிவிப்பை ளயீபான - பலஹீனமானது எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் எந்த ஒரு ஆசிரியரும் இல்லாத, இனம்காணப்படாத, ஸஹாபியின் பெயரை சொல்லாமல் மூடலாக அறிவித்த அபூஉமைர் அவர்களின் வாகனக்கூட்டம் சம்பந்தமான செய்தியின் நிலை என்ன என்பதை நாங்கள் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.

ஹதீஸ்கலையைப் பொருத்தவரையில் எத்தகைய பிரபலமான தாபியாக இருந்தாலும் அவர் முர்ஸலாக ஒரு அறிவிப்பை அறிவித்தால் அவருடைய அறிவிப்பு பலஹீனமான செய்தியாகத்தான் கருதப்படும் என்பதை விளக்கவே முஸாபனா மற்றும் முஹாகலா சம்பந்தமான முர்ஸல் ரிவாயத்தின் அறிவிப்பாளர் வரிசையை இங்கு மேற்கோள் காட்டியுள்ளோம். மேற்கூறப்பட்டுள்ள முஸாபனா மற்றும் முஹாகலா ஆகிய வியாபாரங்களை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்பதற்கு வேறு அறிவிப்பாளர்களைக் கொண்ட ஸஹீஹான ஹதீஸ்களும் உள்ளன. அதனால்தான் மேற்படி வியாபாரங்களை செய்வது ஹராம் என்று நாம் அனைவரும் நம்பியுள்ளோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

தொடர்ந்து படிக்க : வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா??

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

பாகம் 21, பாகம் 22,

 

Read 2315 times Last modified on செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2016 05:29