செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 08

Rate this item
(0 votes)

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?

பகுதி : 8

 

முர்ஸல் அறிவிப்பு பற்றி சட்ட மாமேதை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் விளக்கம்:

மேலும் மேற்படி முர்ஸல் தரத்தில் அமைந்த நபிமொழியை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான சட்ட நிபந்தனைகளை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் மிக நேர்த்தியாக தொகுத்துள்ளார்கள். இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் ஹதீஸ் கலை சட்டங்களை பல ஹதீஸ் கலை அறிஞர்கள் மிகவும் தரம் வாய்ந்ததாக ஏற்றுக் கொண்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். அத்தகைய சட்டமேதை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களும், அவர்களின் ஹதீஸ் கலை நுணுக்கத்தை சரிகண்ட பல அறிஞர்களும் பின்வரும் நிபந்தனைகள் இருந்தால் மட்டுமே முர்ஸல் வகை நபிமொழியை ஏற்றுக் கொள்ளத் தகுந்த நபிமொழியின் தரத்தை அது அடையும் என்கிறார்கள்.

 

அவைகளாவன:

1. இந்த முர்ஸல் நபிமொழியை அறிவிக்கும் அறிவிப்பாளர் மூத்த தாபியீன்களில் ஒருவராக இருக்கவேண்டும்.

2. முர்ஸல் நபிமொழி அறிவிப்பாளர், தான் யாரிடமிருந்து ஹதீஸை முர்ஸலாக அறிவிக்கிறாரோ அவரை நம்பகமானவர் என்று கூறவேண்டும். மேலும் அறிவிப்பாளர் நம்பகமானவரிடமிருந்து மட்டும்தான் அறிவிப்பதாகக் குறிப்பிடவேண்டும்.

3. இந்த ஹதீஸை அறிவிப்பதில் இந்த அறிவிப்பாளருடன் நம்பிக்கைக்குரிய, நல்ல மனன சக்தி உடையோர் கூட்டாக இருந்தால் இவருக்கு மாற்றமாக அவர்களுடைய சொல் இருக்கக் கூடாது.

மேலே கூறப்பட்டுள்ள மூன்று பிரதான நிபந்தனைகளுடன் பின்வரும் நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றும் இணைந்திருக்க வேண்டும்.

1. இந்த நபிமொழி வேறு ஒரு வழியில் முஸ்னதாக அறிவிக்கப்பட வேண்டும். முஸ்னத் என்றால் அறிவிப்புத் தொடர் அறுபடாமல் தொடர்ச்சியாக நபி (ஸல்) அவர்கள் வரை சென்று இணையும் நபிமொழியாகும்.

2. இந்த நபிமொழி வேறு ஒரு வழியில் முர்ஸலாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த முர்ஸலையும் முன் சென்ற முர்ஸல் நபிமொழியின் அறிவிப்பாளர்கள் அல்லாத மற்றவர்களிடமிருந்து விஷயத்தை எடுத்த ஒருவர் இர்ஸால் செய்திருக்கவேண்டும். அதாவது வேறு ஓர் அறிவிப்பாளர் வரிசை மூலம் அறுபட்ட அந்த அறிவிப்பாளர் தொடர் நிரப்பப்பட்டு இருக்க வேண்டும்.

3. அல்லது ஒரு நபிதோழரின் கூற்றுக்கு ஒத்திருக்க வேண்டும்.

4. மிகுதமான அறிஞர்கள் இந்த ஹதீஸின் கருத்துப்படியே மார்க்கத் தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும் அதாவது ஃபத்வா கொடுத்திருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகள் உண்மையாக இருந்துவிட்டால் முர்ஸல் நபிமொழி வெளியான இடத்தின் உண்மையும் அதற்கு உதவியாக இருந்ததும் தெளிவாகிவிடும். இன்னும் முஸ்னதாக வந்துள்ள அந்த நபிமொழியும், அதற்கு வலுசேர்க்கக் கூடியதும் ஸஹீஹானது என்ற தரத்திற்கு வந்துவிடும்.

இப்போது மேற்சொன்ன நிபந்தனைகளின் படி மேற்படி வாகனக்கூட்டம் சம்பந்தமாக வரும் இந்த அறிவிப்பை சற்று உரசிப் பார்ப்போம்.

இந்த முர்ஸல் நபிமொழியை அறிவிக்கும் அறிவிப்பாளர் மூத்த தாபியீன்களில் ஒருவராக இருக்கவேண்டும் என்ற நிபந்தனை படி, தனது தந்தையின் சகோதரரிடமிருந்து ரிவாயத்து செய்துள்ள, தபகாவில் 4-வது தரத்திலுள்ள மேற்படி அபூஉமைர் ஒரு மூத்த தாபியீதான் என்பதை இதை ஆதாரமாகக் கருதுபவர்கள்தான் நிரூபிக்க வேண்டும். இன்னும் ஒரு வாதத்திற்காக அபூஉமைரை மூத்த தாபியீயாக வைத்துக்கொண்டாலும் முர்ஸல் வகை நபிமொழி ஏற்று கொள்ளப்படாத பலவீனமான நபிமொழியாகும் என்பதை தைஸீரு முஸ்தலஹுல் ஹதீஸ் தொகுப்பிலிருந்து நாம் ஏற்கனவே விளக்கிவிட்டோம்.

முர்ஸல் நபிமொழி அறிவிப்பாளர், தான் யாரிடமிருந்து ஹதீஸை முர்ஸலாக அறிவிக்கிறாரோ அவரை நம்பகமானவர் என்று கூறவேண்டும் என்ற விதியின்படி தமக்கு ரிவாயத்து செய்த தனது தந்தையின் சகோதரரைப் பற்றிய அபூ உமைரின் சொந்தக் குறிப்பையும் இந்த அறிவிப்பை சரி காண்பவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த அறிவிப்பை அறிவிப்பதற்கு மாற்றமாக பிறருடைய சொல் இருக்கக் கூடாது என்ற நிபந்தனை அபூ உமைரைக் கட்டுப்படுத்தாது காரணம் அபூஉமைர் என்ற தனிநபர் மட்டுமே இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை தனித்து அறிவிக்கிறார். இருப்பினும் அபூஉமைர் வழியிலிருந்து ரிவாயத்து செய்யப்படும் இந்த அறிவிப்பு எவ்வாறெல்லாம் முரண்பட்டு அறிவிக்கப்படுகிறது என்பதை தனித் தலைப்பில் அடுத்து விளக்கியுள்ளோம்.

இந்த நபிமொழி வேறு ஒரு வழியில் முஸ்னதாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற விதிப்படி நாம் ஆய்வுசெய்ததில் மேற்படி ரிவாயத்தானது முஸ்னத் தரத்தில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. அப்படி பதிவு செய்யப்பட்டிருந்தால் இந்த வாகனக்கூட்ட அறிவிப்பை சரிகாண்பவர்கள் அந்த முஸ்னத் ரிவாயத்தை நமக்கு எடுத்துக் காட்டட்டும்.

அறிவிப்புத் தொடர் அறுபடாமல் தொடர்ச்சியாக நபி (ஸல்) அவர்கள் வரை சென்று இணைகிறதா என்றால் அதுவுமில்லை. இன்னும் இந்த நபிமொழி வேறு எந்த வழியிலும் முர்ஸலாக அறிவிக்கப்படவில்லை. இந்த ரிவாயத்தை நம்பகமான வேறெவரும் அபூஉமைர் அல்லாத மற்ற அறிவிப்பாளர் மூலம் இர்ஸால் செய்யவுமில்லை. அப்படி செய்திருந்தால் இதை ஆதாரமாக எடுப்பவர்கள் நமக்கு காட்டட்டும்.

இன்னும் இதுபோன்றதொரு ரிவாயத்து பிற அறிவிப்பாளர் வரிசை மூலம் அறுபட்ட அந்த அறிவிப்பாளர் தொடர் நிரப்பப்படவில்லை. மேலும் அபூஉமைரின் கூற்று எந்த ஒரு நபித்தோழரின் கூற்றுக்கும் ஒத்திருக்கவில்லை.

மிகுதமான அறிஞர்கள் இந்த அறிவிப்பின் கருத்துப்படியே மார்க்கத் தீர்ப்பு வழங்கிடவுமில்லை. இன்றுவரை இந்த அறிவிப்பில் அறிஞர்களிடேயே கருத்துவேறுபாடுகள்தாம் நிறைந்துள்ளன. மேலும் இந்த அறிவிப்பைக் கொண்டு ஃபத்வா வழங்கப்பட்டிருந்தாலும், இனிமேல் யாராவது வழங்கினாலும் அது மேற்கண்ட இமாம்களின் நிபந்தனைகளுக்கும், கூற்றுக்கும் எதிராக கொடுக்கப்பட்ட ஃபத்வாவாகவே அது அமையும்.

இவ்வாறு ஹதீஸ்கலை இமாம்களின் சட்டங்களில் உரசிப்பார்க்கும்போது மேற்படி அறிவிப்பு இல்லை இல்லை என்று அனைத்து விதிகளிலும் மோதி அடிபட்டு விழுந்தும் விடுகிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தொடர்ந்து படிக்க : வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா??

பாகம் 01,பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14,பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

பாகம் 21, பாகம் 22,

Read 2064 times Last modified on செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2016 05:30