செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 11

Rate this item
(0 votes)

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

 வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?

 பகுதி :11

இந்த அறிவிப்புகளில் பதிவுசெய்யப்படுள்ள முரண்பட்ட வார்த்தைகள்

இந்த வாகனக்கூட்டம் சம்பந்தமான அறிவிப்பின் விதங்கள்பற்றி ஆய்வுசெய்து கொண்டிருக்கிறோம். இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், ரிவாயத்து செய்தவர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மற்றும் உமூமத் பிரச்சனை என்று இந்த வாகனக்கூட்ட அறிவிப்பிலுள்ள பிரச்சனைகள் நீண்டுகொண்டே போகின்றன. இதன் வரிசையில் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்புகளில் கையாளப்பட்டுள்ள வார்தைகளிலுள்ள முரண்பாடுகளைப் பற்றியும் காண்போம்.

பிறையைப் பார்த்தது யார்? என்ற கேள்விக்கு பொதுவாக இந்த அறிவிப்பில் ஒரு வாகனக்கூட்டம்தான் பிறையைப் பார்த்தாக நாம் அறிந்திருந்தாலும், இரண்டு மனிதர்கள் அதைப்பார்த்து தங்கள் சப்தத்தை உயர்த்தியதாகவும் வந்துள்ளன. இன்னும் பொதுவாக எதை என்று சொல்லாமல் அதைப் பார்த்ததாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவர்கள் அதைப்பார்த்தார்களா? ஹிலாலை பார்த்தார்களா? சப்தத்தை உயர்த்தியது யார் என்பதெல்லாம் இருக்கட்டும், அந்த ஹிலாலை பார்த்தது யார்? என்ற கேள்விக்கு ஒரு சமூகம் ஹிலாலை பார்த்தனர் என்று ஸுனனுஸ்ஸுக்ரா, அத்தாருகுத்னீயின் ஒரு அறிவிப்பிலும், ஸுனன் நஸாயீ அல்குப்ரா, ஸுனன் நஸாயீ அஸ்ஸுக்ரா போன்ற கிரந்தங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஷர்ஹு மஆனில் ஆஸார் என்ற கிதாபில் மக்கள் ஹிலாலை பார்த்ததாக வந்துள்ளது. மேலும் ஒரு உமுமத்தினர் ஹிலாலைப் பார்த்ததாக அத்தாருகுத்னீ, அல்ஃபாவா அஷ்ஷஹீர் போன்ற கிரந்தங்களின் அறிவிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் நாம் கேட்பது என்னவென்றால் உண்மையில் ஹிலாலைக் கண்டவர்கள் யார்? ஒரு பயணக்கூட்டமா? ஒரு சமுகமா? ஒரு ஊமூமத்தா? மக்களா? அல்லது இரண்டு மனிதர்களா? இவர்களில் யார்? என்ற கேள்வியும் எழுகிறது.

சரி அவ்வாறு பிறையைப் பார்த்துத் தகவல் அளித்தது யார்? என்ற கேள்விக்கும் இந்த அறிவிப்பை வைத்து வாகனக் கூட்டம்தான் பிறையைப் பார்த்து தகவல் அளித்தனர் என்று பதிலளிப்பர். ஒரு பயணக்கூட்டம் பிறையைப் பார்த்த தகவலை நபி (ஸல்) அவர்களுக்கு அளித்தனர் என்று பல்வேறு ரிவாயத்துகள் வந்தாலும், ஒரு சமூகம் பிறை கண்டதாக ஸுனனுஸ் ஸுக்றா, நஸாயீ, மற்றும் அல்இஸ்தீஸ்காரில் வந்துள்ளன. இன்னும் ஒரு உமூமத் பிறை கண்டதாக தாருகுத்னியிலும் அல்ஃபாவா அஷ்ஷஹீர் கிரந்தங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷர்ஹு மஆனில் ஆஸார் என்ற கிதாபில் பொதுவாக மக்கள் பிறை கண்டதாக பதிவு செய்யப்படடுள்ளது. பாபு திக்ரு மா இஹ்தஜ்ஜ பிஹீ அல்முகாலிஃப் மினல் அல்அக்பார் என்ற கிதாபில் இரண்டு மனிதர்கள் பிறை கண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது நாம் கேட்பது என்னவென்றால் உண்மையில் பிறையைக் கண்டு தகவல் அளித்தது யார்? ஒரு பயணக்கூட்டமா? ஒரு சமுகமா? ஒரு உமூமத்தா? மக்களா? இரண்டு மனிதர்களா? இவர்களில் யார்? என்ற கேள்விகள் இங்கும் எழுகின்றன.

பிறைபார்த்த தகவல் எந்த நேரத்தில் கூறப்பட்டது? என்று கேட்டால் நபி (ஸல்) அவர்களிடம் அந்த வாகனக்கூட்டம் பகலின் இறுதியில்தான் வந்தனர் என்று பதிலளிப்பார்கள். பல ரிவாயத்துகளையும் நாம் பார்க்கின்றபோது பகலின் இறுதியில்தான் என்பது புலனாகிறது என்றாலும், அஹ்மத், ஸுனனுல் குப்ராவின் ஒருஅறிவிப்பிலும், மஅரிஃபதுஸ் ஸஹாபாஹ் போன்ற கிரந்தங்களிலும் அந்த வாகனக்கூட்டம் பகலின் இறுதியில் வந்ததை ஷுஃபா அவர்கள்தான் கருதுவதாக இடம் பெற்றுள்ளன. இன்னும் தாருகுத்னியிலோ உமூமத்தினர்கள் தான் பகலின் இறுதியில் நபி (ஸல்) அவர்களிடம் இருந்ததாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. நேற்று பகலின் இறுதியில் அந்த பயணக் கூட்டம் பிறை கண்டதாக அர்ராபிவு மின் ஹதீஸி ஷுஃபாஅ வ ஸுஃப்யான் மிம்மா அக்ரப பஃதஹூம் அலா பஃதீன், கிதாபு அல்அக்ராபில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் பயணக்கூட்டம் பகலின் இறுதியில் சாட்சி கூறியதாகவும், இரண்டு நபர்கள் சாட்சி கூறியதாகவும் இவ்வாறு பல்வேறு விதங்களில் இந்த அறிவிப்பு வந்துள்ளதையும் நாம் காண்கிறோம். இதில் நாம் என்ன கேட்கிறோம் என்றால் பிறைபார்த்த தகவல் நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது பகலின் இறுதியிலா? அல்லது இது ஷுஃபா அவர்களின் சொந்த கருத்தா? அந்த வாகனக்கூட்டம் பிறையை நேற்று பகலில்தான் பார்த்தார்களா? பகலில் பிறை பார்த்தார்கள் என்றால் அந்தப்பிறை எந்தப்பிறை? போன்ற வினாக்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள்தாம் விடையளிக்க வேண்டும்.

இன்னும் எந்த மாதத்தின் பிறைபற்றி இந்த அறிவிப்பு கூறுகிறது? என்ற கேள்வியும் முக்கியமானதாகும். மதீனாவிலிருந்த நபி (ஸல்) மற்றும் ஸஹாபாக்களுக்கும் பிறை கண்களுக்கத் தென்படாமல் மறைந்து இருந்ததாக இந்த அறிவிப்பு முன்னர் சொன்னது. ஆனால் அல்முன்தகாஹ் தஹ்தபுல் ஆசார், இப்னு அபி ஷைபா, இப்னு அப்துர் ரஜ்ஜாக், ஒரு ஷர்ஹு மஆனிவுல் ஆஸார், இப்னு மாஜா, முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக், அஹ்காமுல் குர்ஆன், ஸுனனுல் குப்றா பைஹகீ போன்ற ஏராளமான கிரந்தங்களில் இது ஷவ்வால் மாதத்தின் பிறை உமூமம்தினர் மீது மறைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் நபி ஸல் அவர்களின் காலத்தில் ரமழான் மாதத்தின் கடைசி நாளில் மக்கள் மீது பிறை மறைந்ததாக ஷர்ஹு மஆனிவுல் ஆஸார் என்ற கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ரமழான் மாதத்தில் நபி ஸல் அவர்களிடம் உமூமத் இருந்ததாக அல்ஃபாவா அஷ்ஷஹீர், தஹ்தீபுல்கமால் போன்ற நூல்களில் இடம்பெறுகின்றன.

மேலும் ஒரு பயணக்கூட்டம் நேற்று பிறையைக் கண்டார்கள்,

முந்திய நாளில் மக்கள் பிறையை கண்டனர்,

இரண்டு மனிதர்கள் நேற்று கண்டதாக சப்தத்தை உயர்த்தி வந்தனர்,

நபி (ஸல்) அவர்கள் பகல் உயர்ந்த பிறகு அந்த சமுகத்திற்குக் கட்டளையிட்டார்கள்,

மிஞ்சிய நாளில் மக்களுக்கு கட்டளையிட்டார்கள்,

மிஞ்சிய நாளில் பயணக் கூட்டத்திற்கு கட்டளையிட்டார்கள்,

சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பிறகு மக்கள் முந்திய நாளில் பிறை பார்த்ததாக சாட்சி கூறினர்,

அதேசமயம் நபி ஸல் அவர்கள் அவர்களுக்கு நோன்பு திறக்க கட்டளையிட்டார்கள் அவர்களும் அதேசமயம் நோன்பை திறந்தார்கள்

இவ்வாறு பல விதங்களில் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பு ரிவாயத்து செய்யப்பட்டுள்ளன. இன்னும் நபி (ஸல்) அவர்களிடம் பகலின் இறுதியில் சாட்சி கூறப்பட்டால் அவர்கள் இவ்வாறுதான் நோன்பை திறக்க கட்டளையிடுவார்கள் என்று அறிவிப்பாளரின் வார்த்தைகளாகவும் இந்த வாகனக்கூட்டம் ரிவாயத்தில் வந்துள்ளது.

மதீனாவிலிருந்த நபி (ஸல்) மற்றும் ஸஹாபாக்களும் நோன்பை வைத்தவர்களாக இருந்தனர் என்பதை இந்த அறிவிப்பு நமக்கு உணர்த்தியது. ஆனால் உமூமத்தினராகிய நாம் நோன்பை வைத்தவாறு காலைப் பொழுதை அடைந்தோம் என்று அல்முன்தகாஹ், தஹ்தீபுல் ஆஸார் அத்தப்ரீ, முஸன்னஃப் இப்னு அபி ஷைபா, இப்னு மாஜா, முஸன்னஃப் இப்னு அப்துர் ரஜ்ஜாக், ஷர்ஹு மஆனில் ஆஸார், அல்அஹ்காமுல் குர்ஆன், ஒரு அறிவிப்பில் ஸுனனுல் குப்றா பைஹகீ போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ளன.

இன்னும் உமூமத்தினர் ரமழான் மாதத்தின் எதோ ஒரு நாள் நோன்பை வைத்தனர் (இப்னு அல்ஜஅது) என்றும் மக்கள் நோன்பை வைத்தவாறு காலைப் பொழுதை அடைந்தனர் (ஷர்ஹு மாஆனில் ஆஸார் அத்தஹாவி, மஅரிஃபதுஸ் ஸுனன் வல் ஆஸார் பைஹதகீ, அல்குனா வல் அஸ்மா, ஸுனன் அஸ்ஸகீர் பைஹகீ, அல்ஃபவாயிதுல் ஷஹீர்) என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்னும் சிலநூல்களில் உமூமத்தினருக்கு காலை பெருநாளிற்கு செல்ல கட்டளையிட்டதாகவும்,

சில கிதாபுகளில் மக்களுக்குக் காலை பெருநாளிற்கு செல்ல கட்டளையிட்டதாகவும்,

மேலும் ஷர்ஹூமஆனில் ஆஸார் என்ற கிரந்தத்தில் நபி (ஸல்) அவர்கள் அவர்களுடன் சென்று பெருநாள் தொழுகையை தொழுதததாகவும் வந்துள்ளன.

இவ்வாறு இந்த இந்த வாகனக்கூட்டம் அறிவிப்புகளில் பலவிதமான முரண்பாடான செய்திகளும், பல்வேறு முரண்பட்ட வார்த்தைகளும் மலிந்து காணப்படுகின்றன.

எம் அன்பிற்கினிய மக்களே! நாம் கேட்பது என்னவென்றால் இமாம் இப்னு அப்துல்பர், இமாம் இப்னுல் கத்தான் அவர்கள் உட்பட பல ஹதீஸ்கலை அறிஞர்கள் மேற்படி அறிவிப்பாளரான அபூஉமைர் அவர்களை யாரென்று அறியப்படாதவர் என்று விமர்ச்சித்துள்ள நிலையிலும், இந்த ஹதீஸின் மூன்றாம் நிலை அறிவிப்பாளரான அபூபிஷ்ரிடமிருந்து அறிவிக்கும் ஹுஸைம் மற்றும் ஷுஃபா அவர்களிடமிருந்து இரு வேறுபட்ட கருத்துக்கள் வந்துவிட்ட பிறகும், முன்னுக்குப்பின் முரணாக தகவல்கள் மற்றும் குளறுபடியான அறிப்பாளர்கள் வரிசை கொண்ட, முர்ஸலான, இஸ்மு முப்ஹமான இந்த அறிவிப்பை நமதூர் உலமாக்கள் இனியும் தூக்கிப்பிடிப்பது ஏன் என்றுதான் கேட்கிறோம்.

இன்னும் அமரன்னாஸ் என்று அறிவித்த ஹூஸைம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஏழு நபர்கள் தங்களுக்குத் தாங்களே முரண்பட்டு அறிவிப்பதாக தெளிவாக தெரிந்தும் இனியும் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்வதின் உள்நோக்கம்தான் என்ன?

அல்காமில் ஃபி ளுஅஃபாயிர் ரிஜால் (7 /137) லும் அல்காமில் லி இப்னு அதி (1 / 94) யிலும் அர்ஷீஃபு முல்தக அஹ்லுல் ஹதீஸ் 1 - (1 / 1515) லும் பக்வீ அவர்களும் மேலும் தாரீகுபுக்தாது (5 / 254) வில் முகமது பின் அஸ்ஸபாஹ் அவர்களும் கூறினார்கள் : மன்னர் ஹாரோன் காலக்கட்டத்தில் இதைப்போல் (அபூ பிஷ்ரு அவர்களிடமிருந்து ஹதீஸை அறிவிக்குமாறு) மக்கள் கூறினர். அப்போதே ஹுஷைம் அவர்கள் அபூ உமைருடைய தந்தையின் சகோதரரான நபித்தோழரிடமிருந்து அபூ உமைர் பின் அனஸ் அறிவிக்கிறார், அவரிடமிருந்து அபூபிஷ்ரு அறிவித்தார் என இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை அறிவித்தார். இப்படி அறிவித்த அவருக்கு பத்தாயிரம் திர்ஹம்கள் பரிசாகக் கிடைத்தன என்று பதித்துள்ளனர். இச்செய்தியை நாம் ஒரு தகவலாகத்தான் தருகிறோம். பத்தாயிரம் திர்ஹங்களைப் பற்றி நாம் விமர்சனம் ஏதும் செய்ய விரும்பவில்லை.

மேலும் அபூஉமைர் அவர்கள் அறிவித்துள்ள மேற்படி அறிவிப்புகளை அவைகள் இடம் பெற்ற ஹதீஸ் கிரந்தங்கள் உட்பட சுறுக்கமான பட்டியலை கீழே தந்துள்ளோம். இந்த பட்டியலில் இடம்பெறும் அனைத்து ரிவாயத்துகளிலும் ஸஹாபியின் பெயர் குறிக்கப்பட வேண்டிய இடத்தில் இஸ்மு முப்ஹம் (பெயர் அறியப்படாத) என்றே குறிப்பிடப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்க.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

தொடர்ந்து படிக்க : வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா??

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

பாகம் 21, பாகம் 22,

 

Read 2132 times Last modified on செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2016 05:30