செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 12

Rate this item
(0 votes)

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

 வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?

பகுதி :12

 

இமாம் இப்னுஹிப்பானின் கூற்றும், அபூஉமைரின் நம்பகத்தன்மையும்.

இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை அறிவிக்கும் அபூஉமைரை இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் ஸிகா நம்பகமானவர் என்று கூறவில்லையா? அபூ உமைரை இப்னு ஹிப்பான் அவர்கள் நம்பகமானவர் என்று கூறியுள்ளது போதாதா என்று சிலர் வாதிடுவதை பார்க்கிறோம். ஒரு அறிவிப்பாளரை ஸிகா நம்பகமானவர் என்று அறிவிப்பதில் ஹதீஸ்கலை இமாம்களின் சட்டவிதிகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளாத காரணத்தினால்தான் இத்தகைய வாதங்கள் எழுகின்றன.

காரணம் இப்னு ஹிப்பான் அவர்கள் ஒரு அறிவிப்பாளரை ஸிகா அதாவது நம்பகமானவர் என்று கூறுவதை வைத்தோ, அல்லது ஒரு ராவியின் பெயரை அவர்களது கிதாபுஸ்ஸிகாவில் இடம் பெறச்செய்ததை வைத்தோ சம்பந்தப்பட்ட அந்த ராவியை ஸிகாவானவர் (நம்பகமானவர்) என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் யாரும் முடிவெடுக்க மாட்டார்கள்.

இன்னும் தெளிவாக சொல்வதென்றால், அபூஉமைரைப் பற்றி இப்னு ஹிப்பான் அவர்கள் ஸிகா நம்பகமானவர் என்று எங்கும் குறிப்பிடவில்லை என்பதும், அபூஉமைரைப் பற்றிய எந்தக் குறிப்புகளையும் இப்னு ஹிப்பான் அவர்கள் தமது கிதாபுஸ்ஸிகாவில் தெரிவிக்கவில்லை என்பதுமே உண்மை. இதற்கும் ஒருபடி மேலே சொல்வதானால், அபூஉமைர் என்ற பெயரைக்கூட இப்னு ஹிப்பான் அவர்கள் தங்களது ஸிகா பட்டியலில் சேர்க்கவில்லை. இந்நிலையில் அபூஉமைரை இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் ஸிகா நம்பகமானவர் என்று கூறவில்லையா? என்று கேள்வி எழுப்புவது (இப்னு ஹிப்பான் அவர்கள் ஸிகா விஷயத்தில் விமர்ச்சிக்கப்பட்டுள்ளார் என்பதால்) அவர்களது பெயரை பயன்படுத்தி புனையப்படும் மாபெரும் பொய்யாகத்தான் அது அமையும்.

எந்தக்காரணங்களும் தெரிவிக்கப்படாமல் ஸிகா பெயர் பட்டியல் என்று வெறும் பெயர்கள் மட்டும் இடம்பெறும் பட்டியலில் அப்துல்லா பின் அனஸ் என்ற பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது அவ்வளவுதான். இதை வைத்துக்கொண்டு அப்துல்லாஹ் பின் அனஸ் என்பவர்தான் அபூஉமைர் பின் அனஸ் என்று தவறாக விளங்கி இப்னு ஹிப்பான் அவர்கள் அபூஉமைரை ஸிகா என்று கூறிவிட்டார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இது அறியாமையினால் ஏற்பட்ட மிகத்தவறான வாதமாகும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக இப்னு ஹிப்பானின் ஸிகா பட்டியலில் இடம்பெறும் அந்த நபர் யார் என்பதில் கூட குழப்பமே நிழவுகிறது. காரணம் இப்னு ஹிப்பான் கூறியுள்ள அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் என்ற பெயருடைய அந்த நபர்தான் அபூஉமைர் என்று மாற்றுக் கருத்துள்ளவர்கள் கூறும் நிலையில், அபூஉமைர் யார் என்பதிலும், அவர் அனஸ் (ரழி) அவர்களின் மகனா என்பதிலும் இப்னுஹிப்பான் அவர்களுக்கு சந்தேகங்கள் வந்துள்ளதையும் நாம் அறியமுடிகிறது.

நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வாகனக்கூட்டம் அறிவிப்பின் அபூஉமைரோ ஒரு தாபியியாவார். தயாபியி என்பதிலும் மிகவும் சிறிய தரத்தில் உள்ளவராவார். மேலும் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களும், வாகனக்கூட்டம் செய்தியை அறிவித்த அபூஉமைரும் இருவேறு நபர்களே என்பதை ஏன் இந்த ஆள்மாறாட்டம்? என்ற தலைப்பில் பிற்பகுதியில் விளக்கமாக தெரிவித்துள்ளோம்.

இன்னும் ஒரு வாதத்திற்காக நாம் ஆய்வுசெய்து கொண்டிருக்கும் இந்த அபூஉமைரைத்தான் இப்னு ஹிப்பான் அவர்கள் ஸிகா என்று குறிப்பிடுவதாக வைத்துக்கொண்டாலும், இப்னு ஹிப்பான் அவர்கள் பல அறிவிப்பாளர்களின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் அவர்களை ஸிகா என்று விளக்கமாகக் கூறியுள்ளதைக்கூட பல ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்னுஹிப்பான் அவர்களின் கிதாபுஸ்ஸிகா நூலில் இடம்பெறும் ஸிகா சம்பந்தமான விஷயங்களையும், ஸிகா என்று அறிவிப்பாளரை அவர் முடிவு செய்யும் விதங்களையும் இமாம் இப்னுஹஜர் (ரஹ்), இமாம் அல்பானி (ரஹ்) உட்பட பல அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். இன்னும் இப்னு ஹஜர் அவர்கள்கூட அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் பெயர் இப்னு ஹிப்பானின் ஸிகா பட்டியலில் இடம்பெற்றுள்ளதைத்தான் அவர்களும் தெரிவித்துள்ளார்களே தவிர இப்னு ஹஜர் அவர்களும் அபூஉமைர் நம்பகமானவர் என்பதற்கு எந்தச் சான்றுகளையும் முன்வைக்க வில்லை என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு இப்னு ஹிப்பான் அவர்கள் ஸிகா என்று கூறுவதை விமர்சனம் செய்துள்ள ஹதீஸ்கலை அறிஞர்களின் அனைத்து ஆதாரங்களையும் மூல மொழிபெயர்ப்போடு எழுதுவதாக இருந்தால், அதையே தனித்தலைப்பாக அமைத்து ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்ற அளவிற்கு மிகமிக நீளமான செய்திகளை நாம் காண்கிறோம். எனவே புரிந்து கொள்வதற்காக இப்னு ஹிப்பான் பற்றிய அத்தகைய விமர்சனங்களில் ஒருசிலவற்றை மட்டும் தொகுத்து மிகச்சுறுக்கமாக கீழே தருகிறோம்.

1. ஒரு செய்தியை அறிவிக்கும் ராவியை அவர்மீது நன்லெண்ணம் கொண்டு அவரை ஸிகா என்று அறிவித்து விடுவார். இன்னும் இனம் தெரியாத மஜ்ஹூல் நபர்களைக்கூட ஸிகா என்று கூறுவார். அந்த அளவிற்கு ஸிகா விஷயத்தில் இப்னு ஹிப்பான் அவர்கள் கவனக்குறைவானவர் ஆவார்.

2. இப்னு ஹிப்பான் அவர்கள் அறிவிப்பாளர் சிலரை ஸிகா என்று கூறியுள்ளதில் பெரும் சர்ச்சை நிலவுகிறது. காரணம் ராவிகளை ஸிகா என்று அறிவிக்கும் விஷயத்தில் இப்னு ஹிப்பான் அவர்களுக்கு வஹ்ம் வந்துவிட்டது. அதாவது கிதாபுன் மஜரூஹின் என்ற புத்தகத்தில் இவர் ஸிகா இல்லை என்று சொல்லிய நபர்களையெல்லாம் ஸிகா என்று மாற்றி கூறிவிட்டார்.

3. ஒரு ராவியைப் பற்றியத் தகவல்கள் மற்றும் அவரது நிலைமை தெரியாமல் இருக்கும் போது, அவரைப்பற்றி வேறு குற்றச்சாட்டுகள் இல்லாத பட்சத்தில் அந்த ராவியையும் ஸிகா – நம்பகமானவர் என்று இப்னு ஹிப்பான் குறிப்பிட்டு விடுவார்.

4. யாராலும் அறியப்படாத நபர்களைக்கூட நல்லவர் என்று இப்னு ஹிப்பான் கூறிவிடுவதால் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது.

5. ஒரு ராவிக்கு பலஹீனமான ஒரு மாணவரோ, அல்லது அடையாளம் தெரியாத ஒரு மாணவரோ இருந்து விட்டால் சம்பந்தப்பட்ட அந்த ராவி அவர் யாரென்றே தெரியாத பட்சத்திலும்கூட அவரையும் ஸிகா-நம்பகமானவர் என்று கூறிவிடுவார். இவ்வாறு கூறுவது இமாம் இப்னு ஹஜர் அவர்களின் ஹதீஸ்கலைக்குக்கூட நேர் முரணானதாகும்.

6. ஒரு அறிவிப்பாளரை ஸிகா என்று கூறுவதில் முக்கியமாகக் கருதப்பட வேண்டிய விஷயங்களான, ஒருவரைப்பற்றிய நிலைமை தெரியாத நிலை (மஜ்ஹூலுல் ஹால்), ஒருவரைப்பற்றிய விமர்சனங்கள் இல்லாத நிலை (மஜ்ஹூலுல் அய்ன்) என்பதைக்கூட இப்னு ஹிப்பான் பிரித்து அறிவிக்கமாட்டார். அத்தன்மைகளில் அமைந்த அனைத்து ராவிகளையும் நம்பகமானவர் என்று கூறிவிடுகிறார்.

7. இப்னு ஹிப்பான் அவர்கள் ராவிகளை ஸிகா என்று கூறுவதில் சில நபர்களை நல்லவர் என்றும் சிலரை கெட்டவர் என்றும் கூறியிருந்தாலும், பல அறிவிப்பாளர்களை எதற்காக அவர் ஸிகா என்று கூறியுள்ளார் என்பதற்குக் காரணம் தெரிவிக்காமலேயே வெறுமனே சம்பந்தப்பட்ட ராவியின் பெயரை மட்டும் பட்டியலிட்டுவிட்டு அவர் ஸிகா – நம்பகமானவர் என்று கூறிவிடுவார். (அபூ உமைரையும் இவ்வாறுதான் இப்னுஹிப்பான் குறிப்பிட்டுள்ளார்)

8. பல அறிவிப்பாளர்களை நம்பகத்தகுந்தவர் என்று சுயமாக ஆய்வுசெய்யாமலேயே கூறியுள்ளார். ஒரு அறிவிப்பாளரை பற்றி வேறொரு அறிஞர் சொல்லிவிட்டார் என்பதால் நானும் அவரை நம்பத் தகுந்தவர் என்று கூறுகிறேன் என்று கூறுகிறார். மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் யாரையாவது ஸிகா என்று சொன்னால், அதையும் பிடித்துக்கொண்டு தானும் சம்பந்தப்பட்ட ராவியை ஸிகா என்று அறிவித்துவிடுவார்.

இப்படி இப்னு ஹிப்பான் அவர்கள் அறிவிப்பாளர்களை ஸிகா என்று கூறுவதை அறிஞர்களில் பலர் பலவிதங்களில் விமர்சனம் செய்துள்ளனர். மேற்கண்ட குறிப்புகள் பற்றிய மேலதிக விளங்கங்களை அறிந்துகொள்ள கீழ்க்காணும் கிதாபுகளை பார்வையிடுங்கள்.

(1) مقدمة صحيح ابن حبان، ج1 ص 32 .(2) لسان الميزان، ج 1 ص 14.(3) صحيح ابن حبان ، ج1 ص 39 ، بحث في المقدمة لهذا الكتاب.(4) البغدادي، الكفاية في علم الرواية، ص 88، نور الدين عتر، منهج النقد في علوم الحديث، ص 89،عماد الدين رشيد، نظرية نقد الرجال، ص 165.(5) السخاوي، فتح المغيث، ج 1 ص 322.(6) نزهة النظر ، ص 53.(7) المصدر نفسه، ج1 ص 322. الرفع والتكميل، ج1 ص 250.(8) الاستذكار ، ج1 ص 180.(9) الرفع والتكميل ،ج1 ص 250.(10) عماد الدين رشيد، نظرية نقد الرجال، ص 168.(11) لسان الميزان، ج1 ص 14.(12) القاري، شرح شرح نخبة الفكر، ج 1 ص 518.(13) تهذيب التهذيب، ج 1 ص 77.(14) المصدر نفسه، ج 1 ص 76.(15) لسان الميزان، ج4 ص 100.(16) الموقظة، شرح عبد الفتاح أبو غدة، ص 79.(17) ميزان الاعتدال، ج 3 ص 426.(18) شرح شرح نخبة الفكر، ج1 ص 518.(19) الرفع و التكميل، ص 335.(20) تأنيب الخطيب، ج1 ص 256.(21) إشارة إلى العلامة ناصر الدين الألباني .(22) رفع المنارة ، ص 122.

இன்னும் இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் இப்னு ஹிப்பான் ஒரு ராவியை ஸிகா என்று அறிவித்துள்ளதை ஆய்வு செய்து அவரது கூற்றை கீழ்க்கண்டவாறு தரம் பிரித்தும் உள்ளனர்.

1) இப்னு ஹிப்பான் அவர்கள் ஒரு அறிவிப்பாளரை ஸிகா என்று கூறினால் சம்பந்தப்பட்ட நபரின் நன்பகத் தன்மையை பற்றிய தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

2) ஸிகா என்று இப்னு ஹிப்பான் கூறும் நபருக்கு ஆசிரியர்கள் இருக்கவேண்டும். அவ்வாறு நம்பகமான ஆசிரியர்கள் இருக்கும் பட்சத்தில் ஸிகா என்று கூறப்பட்ட அந்த நபர் ஸிகா என்ற நன்பகத்தன்மைக்கு அருகாமைக்கு வந்துவிட்டார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்

3) இப்னு ஹிப்பானால் ஸிகா என்று கூறப்பட்ட அந்த நபர் அறியப்பட்டவராகவும், அதிகமான ஹதீஸ்களைக் அறிவித்தவராகவும் இருக்கவேண்டும். அவரிடமிருந்து இப்னு ஹிப்பான் அவர்கள் அந்த ஹதீஸை நேரடியாக அறிவித்திருக்கவும் வேண்டும்.

4) இப்னு ஹிப்பான் அவர்களால் ஸிகா என்று சொல்லப்பட்ட நபர் நல்லவரா அல்லது கெட்டவரா என்பதை இப்னு ஹிப்பானின் வார்த்தைகளை வைத்தே அறிந்து கொள்ளலாம்.

5) இதற்கு மேற்பட்ட எல்லா விஷயங்களும்.

حاشية التنكيل بما في تأنيب الكوثري من الأباطيل - (2 / 152),(الضعيفة) (2/ 328-239).

இவ்வாறு இவ்வாறு இப்னு ஹிப்பான் அவர்கள் ஸிகா என்று கூறியதை நாம் எவ்வாறு பிரித்தறிய வேண்டும் என்பதை இமாம் அல்பானி (ரஹ்) குறிப்பிட்டுள்ளார்கள்.

அபூஉமைரைப் பற்றி இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் ஸிகா – நம்பகமானவர் என்று எங்கும் குறிப்பிடவில்லை, அபூஉமைரைப் பற்றிய எந்தக் குறிப்புகளையும் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் தமது கிதாபுஸ்ஸிகாவில் தெரிவிக்கவில்லை அவ்வளவு ஏன்? அபூஉமைர் என்ற பெயரைக்கூட இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் தங்களது ஸிகா பட்டியலில் சேர்க்கவில்லை என்பதை முன்னரே விளக்கி விட்டோம்.

இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் ஸிகா என்று குறிப்பிட்டுள்ளதை பற்றி பல்வேறு இமாம்கள் விமர்சனங்கள் செய்துள்ளதற்கு மத்தியில், அபூஉமைரை இப்னு ஹிப்பான் ஸிகா பெயர்பட்டியலில் குறிப்பிட்டுள்ளார் என்ற பொய்செய்தியையும், இமாம் அல்பானி (ரஹ்) அவர்களின் மேற்கண்ட விதிமுறைகளில் பொருத்திப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

ஒரு வாதத்திற்காக, அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் அவர்கள்தான் அபூஉமைர் என்று மாற்று கருத்துடையவர்களின் யூகத்தையும், இப்னு ஹிப்பான் அவர்கள் அபூஉமைரை ஸிகா என்று சொல்லி விட்டார்கள் என்ற அப்பொய்செய்தியையும் உண்மை என்று வைத்துக்கொண்டு, மேற்காணும் விதிமுறைகளில் உரசிப் பார்த்தால் அது அபூஉமைரின் நன்பகத்தன்மைக்கு எதிராகத்தான் அமைகின்றன. அதாவது...

1) இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் அபூஉமைர் பெயரை தனது ஸிகா பெயர் பட்டியலில் கூறியிருந்தும் சம்பந்தப்பட்ட அபூஉமைரின் நன்பகத்தன்மையைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடவில்லை என்று நிரூபனமாகிறது.

2) இப்னு ஹிப்பானின் ஸிகா பெயர் பட்டியலில் இடம்பெறும் அபூஉமைருக்கு ஆசிரியர்கள் யார் என்று அறியப்படவில்லை. இவ்வாறு நம்பகமான ஆசிரியர்கள் கண்டறியப்படாததால் அபூ உமைர் ஸிகா என்ற நன்பகத்தன்மைக்கு அருகாமையில்கூட வரமாட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

3) இப்னு ஹிப்பானின் ஸிகா பெயர் பட்டியலில் இடம்பெறும் அபூ உமைர் அறியப்பட்டவராகவோ, அதிகமான ஹதீஸ்களை அறிவித்தவராகவோ இல்லை. அவரிடமிருந்து இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் இந்த வாகனக்கூட்டம் ஹதீஸை நேரடியாக அறிவிக்கவும் இல்லை என்று விளங்குகிறது.

4) அபூஉமைரின் பெயரை ஸிகா பட்டியலில் சேர்த்ததற்கு எந்தக் காரணங்களும் தெரிவிக்காமல் வெறுமனே அபூஉமைரின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளதால், மேற்படி அபூ உமைர் நல்லவரா அல்லது கெட்டவரா என்பதை இப்னு ஹிப்பானின் வார்த்தைகளை வைத்துக்கூட அறிந்து கொள்ள முடியவில்லை என்று இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களையும் விமர்சனம் செய்வதாக அமைகிறது.

இவ்வாறு அபூஉமைரின் நம்பகத்தன்மை என்பது அனைத்து விஷயங்களிலும் தோல்வியைத்தான் தழுவுகிறது. எனவே அபூஉமைரை இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) ஸிகா – நம்பகமானவர் என்று கூறவில்லையா? அபூ உமைரை இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் நம்பகமானவர் என்று கூறியுள்ளது போதாதா? என்று எவரும் கேள்வி எழுப்பினால் அது அபூ உமைருக்கு எதிரான கேள்வியாகவே அமையும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டுகிறோம். அபூஉமைர் என்ற பெயரைக்கூட இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் தங்களது ஸிகா பட்டியலில் சேர்க்காத நிலையில் மேற்கண்டவாறு கேள்வி எழுப்புவதே ஒரு மிகப்பெரிய தவறு என்பதையும் மக்களே நீங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

தொடர்ந்து படிக்க : வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா??

பாகம் 01,பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14,பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

பாகம் 21, பாகம் 22,

Read 2415 times Last modified on செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2016 05:30