வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 19

Super User
Super User
Offline
0

بسم الله الرحمن الرحيم

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?

பகுதி :19

 

விமர்சனம் 3:

இப்னுல் முன்திர், இப்னுஸ்ஸகன், இப்னு ஹஸ்ம் ஆகியோரும் இது ஆதாரப்பூர்வமானது எனக் கூறியுள்ளதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் அத்தல்கீஸுல் ஹபீர் நூல் : (பா.2, பக்.:208) எழுதியுள்ளார்கள்.

 

விளக்கம் :

இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை இப்னு முன்திர், இப்னுஸ்ஸகன் மற்றும் இப்னு ஹஸ்ம் ஆகியோர் ஆதாரப்பூர்வமானது என்று கூறியுள்ளதாகவும், அதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தல்ஹீஸூல் ஹபீர் நூலில் இடம் பெறச் செய்துள்ளார்கள் என்றும் சிலர் வாதம் எழுப்புகின்றனர்.

இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை நன்கு அறிந்திருந்த இப்னு முன்திர் அவர்கள், அபூ உமைரைப் பற்றி எந்தத் தகவலும் கூறவில்லை என்பதையும் அந்த ரிவாயத்தில் இடம்பெறும் எந்த அறிவிப்பாளரைப் பற்றியும் எத்தகைய விபரங்களும் கூறவில்லை என்பதையும், அதன் ஸனது பற்றி ஸஹீஹ் என்றோ வேறு எந்த ஆய்வுகளையோ தெரிவிக்கவில்லை என்பதையும் இப்னு முன்திர் இந்த அறிவிப்பை ஸஹீஹ் என்றார்களா? என்ற தனித்தலைப்பில் விளக்கப்பட்டுள்ளதை நீங்கள் படித்திருப்பீர்கள்.

இந்நிலையில் பல விமர்சனங்களுக்கு உள்ளான இப்னு முன்திர் கூற்றுபற்றி மாற்றுக் கருத்துடையோர் இனியும் வாதிட்டால், இன்று மஃரிபு வேளையில் மறையும் பிறையை பார்த்துக்கொண்டு அது அடுத்தநாளைக்குரிய பிறை என்று கூறுவதற்கும், பிறைத்தகவலை பிற இடங்களிலிருந்து பெறுவதற்கும் முரணாக அது அமையும் என்பதையும், இப்னு முன்திர் அவர்கள் கூற்றுப்படி இந்த வாகனக்கூட்டம் ரிவாயத்து இந்திய ஹிஜ்ரி கமிட்டியின் பிறைநிலைபாட்டிற்கும், பிறைகளை கணக்கிடுவதற்கும்தான் ஆதாரமாக அமையும் என்பதையும் நாம் முன்னரே விளக்கிவிட்டோம். எனவே இப்னு முன்திர் அவர்கள் பற்றிய விஷயங்களை இத்தோடு விட்டுவிடுகிறோம்.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தல்ஹீஸூல் ஹபீர் நூலில் இந்த ரிவாயத்தை சரிகண்டுள்ளதாக ஒரு புதிய வாதத்தையும் எழுப்புகின்றனர். அபூஉமைரை இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் நம்பகமானவர் என்று கூறிவிட்டார்கள் என்று யாரும் வாதித்தால் அதுவும் அபூஉமைருக்கு எதிராகத்தான் அமையும் என்பதை இமாம் இப்னு ஹஜர் அபூஉமைரை நம்பகமானவர் என்று கூறினார்களா? என்ற தனித்தலைப்பில் முன்னர் விளக்கியுள்ளோம். எனினும் தல்ஹீஸூல் ஹபீர் நூலில் இப்னுஸ்ஸகன் மற்றும் இப்னு ஹஜ்ம் போன்றவர்கள் இவ்வறிவிப்பை சரிகண்டார்கள் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளதாக வாதம் வைத்துள்ளதின் உண்மை விளக்கத்தையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.

1.       وَعَلَّقَ الشَّافِعِيُّ الْقَوْلَ بِهِ عَلَى صِحَّةِ الْحَدِيثِ فَقَالَ ابْنُ عَبْدِ الْبَرِّ أَبُو عُمَيْرٍ مَجْهُولٌ كَذَا قَالَ وَقَدْ عَرَفَهُ مَنْ صَحَّحَ لَهُ

முதலாவதாக இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இந்த வாகனக்கூட்ட அறிவிப்பை சரிகண்டுவிட்டதினால் இமாம் இப்னு அப்துல்பர் அவர்களின் மஜ்ஹூல் என்ற கூற்று நிராகரிக்கப்படுகிறது என்றும் யார் அபூஉமைரை சரிகாண்கிறாரோ அவருக்கு அந்த அபூஉமைரை நன்கு தெரியும் என்றும் இப்னு ஹஜர் அவர்கள் கூறியதாக தல்ஹீஸூல் ஹபீர், அவ்னுல் மஃபூத் போன்ற நூல்களில் எழுதியுள்ளனர்.

யார் அபூஉமைரை சரிகாண்கிறாரோ அவருக்கு அந்த அபூஉமைரை நன்கு தெரியும் என்று கூறுவது ஒரு நேர்மையான வாதமா? என்பதை சிந்திக்க வேண்டும். இது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய சரியான வாதம்தான் என்றால், பிற்காலத்தில் தோன்றிய / தோன்றும் எந்த ஒரு அறிஞரும் பலஹீனமான, யாரென்றே அறியப்படாத ஒருஅறிவிப்பாளரை பற்றி நம்பகமானவர் என்று சொல்லிவிட்டாலே அதில் எத்தகைய எதிர் கேள்விகளும் கேட்கக்கூடாது என்ற நிலைதான் ஏற்படும். காரணம் அந்த மஜ்ஹூலான அறிவிப்பாளரை யார் சரிகாண்கிறாரோ அந்த அறிஞருக்கு அந்த அறிவிப்பாளரை பற்றி நன்கு தெரியும் எனவே அவர் பலமான ராவிதான் என்று வாதம் வைக்கலாம். இப்படி வாதித்தால் அது அறிவுப்பூர்வமாகுமா? சற்று சிந்தியுங்கள் மக்களே. இப்படி முதுகெலுப்பில்லாத செய்திகளே இப்னு ஹஜர் அவர்களின் சொந்தக்கருத்தாக தல்ஹீஸூல் ஹபீர், அவ்னுல் மஃபூத் போன்ற நூட்களில் காணக் கிடைக்கின்றன.

மேற்படி வாதத்தின் உண்மை நிலையை இன்னும் தெளிவாக விளங்குவதென்றால், ஒரு நீதிமன்றத்தில் ஒருவரைப் பற்றிய குற்றவழக்கு விசாரணைக்கு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபரை குற்றவாளிதான் என்று ஆதாரங்களை அடுக்கடுக்காக வைத்து அக்குற்றவாளிக்கு எதிராக வழக்கின்வாதம் சென்று கொண்டிருக்கையில், அவர் நிரபராதிதான் என்று நிரூபிக்கக் கடமைப்பட்ட குற்றவாளியின் தரப்பினர், யார் அவரை நிரபாதி என்று கருதுகிறாரோ அவருக்குத் தெரியும் அவர் நிரபராதிதான் என்றகோணத்தில் வாதம் வைத்தால் அது எவ்வளவு நகைப்புக்குரியதாக மாறி, நீதிமன்றத்தால் அவ்வாதம் தள்ளுபடி செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அந்நபர் குற்றாவாளிதான் என்று தீர்ப்பாகி அவருக்கு தண்டனையும் அளிக்கப்படுமோ அதுபோலத்தான், யார் சரிகாண்கிறாரோ அந்த அறிஞருக்கு அந்த அறிவிப்பாளரை நன்கு தெரியும் என்று வாதம் வைப்பதுமாகும்.

இன்னும் மேற்படி வாதத்திலுள்ள விஷயம்தான் அளவுகோள் என்றால், இந்த அளவுகோளின்படி எத்தகைய பலஹீனமான செய்திகளையும், இட்டுக்கட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான ரிவாயத்துகளையும் சுலபமான முறையில் ஸஹீஹான ஹதீஸ்களாக ஆக்கிவிடலாம். ஒருவேளை மாற்றுக் கருத்துடையவர்களின் திட்டம் இதுவாகத்தான் இருக்குமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

மேலும் அச்செய்தியில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பை சரிகண்டதைப்போல போகிறபோக்கில் எழுதியுள்ளார்கள். அப்படி செய்துவிட்டதால் அது இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் சொன்னதாக ஆகிவிடுமா என்ன? இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பை ஒருபோதும் சரிகாணவில்லை என்பதையும் நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம்.

அதாவது சுனனுல் பைஹக்கி அல் குப்ரா, மஃரிபத்துல் சுனன் வல் ஆதார் போன்ற கிதாபுகளில் இந்த ஹதீஸ் அபூஉமைர் அறிவிக்கும் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பு நிரூபனமானால் மட்டுமே அதன்படி அடுத்தநாள் தொழுகைத் திடலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்வோம் என்பதும், பெருநாள் தொழுகைக்கான வக்து போய்விட்டதால் அந்தத் தொழுகையை அடுத்த நாள் தொழக்கூடாது என்பதும்தான் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் நிலைபாடுகளாகும். இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இந்த வாகனக்கூட்ட அறிவிப்பை சரிகண்டுவிட்டதினால் என்று கூறுவது ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் மீது இட்டுக்கட்டிக் கூறுவதேயாகும். எனவே இமாம் இப்னு அப்துல்பர் அவர்கள் அபூஉமைரை மஜ்ஹூல் என்று கூறியது இன்னும் திட்டவட்டமாக நிரூபனமாகியுள்ளதே தவிர அது நிராகரிக்கப்பட மாட்டாது.

மேலும் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் தங்கள் கைப்பட எழுதிய கிதாபுல் உம்மு போன்ற ஹதீஸ் புத்தகங்களில் இந்த அறிவிப்பைப் பற்றிய எந்த விபரங்களும் கிடைக்கவில்லை. இமாம் ஷாஃபிஈ (ரஹ்) ஸஹீஹ் என்று சொல்லிவிட்டார் என்று சம்பந்தமில்லாத பிறநபர்கள் எவ்வித ஆதாரங்களும் தறாமல் கூறிகிறார்களே தவிர இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் தன் கைப்பட எழுதிய புத்தகங்களில் இதுபற்றிய எந்த விபரங்களும் இல்லை.

இந்த வாகனக்கூட்ட அறிவிப்பை சரியென நிறுவுவதற்கு படாத பாடுபடுபவர்கள் முதலில் ஸஹீஹ் என்றால் என்ன? ஹஸன் என்றால் என்ன? இமாம் இப்னுல் முன்திர், இப்னுஸ்ஸகன், இப்னு ஹஸ்ம் மற்றும் இப்னு ஹஜர் போன்றோர் யார்? இவர்களுடைய வரலாறுகள் என்ன? இந்த ரிவாயத்தைப் பற்றி இவர்கள் அல்லாத மற்ற அறிஞர்களின் கருத்துக்கள்தான் என்ன என்பதையெல்லாம் முதலில் படித்துவிட்டு பின்னர் கேள்வி எழுப்பினால் அந்த கேள்விக்கு ஒரு தகுதியிருக்கும். அதுவல்லாமல் தங்களை ஹதீஸூகளை கையாள்வதில் கைதேர்ந்தவர்கள் என்று மக்களிடம் காட்டுவதற்காக மக்தபுஸ் ஷாமிலா போன்ற ஹதீஸ் மின்னனு கோப்புகளிலிருந்து தேடியதில் கிடைத்த தகவல்களை எல்லாம் மின்னஞ்சல் மூலம் பரப்பி மக்களிடையே குழப்பங்கள் செய்யும் ஆசாமிகள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்.

இன்னும் மாற்றுக் கருத்துள்ளவர்கள் இந்த வாகனக்கூட்டம் ரிவாயத்தை இப்னுஸ்ஸகன் அவர்கள் ஸஹீஹ் என்று சொல்லிவிட்டார்கள் என்று வாதம் எழுப்பியுள்ளதையும் தெளிவாக விளங்கக் கடமைப்பட்டுள்ளோம். ஏதோ இப்னுஸ்ஸகன் அவர்கள் ஒரு ரிவாயத்தை ஸஹீஹ் என்று சொல்லிவிட்டால் அதற்கு அப்பீலே இல்லை என்பது போலவும், இப்னு ஸகன் ஸஹீஹ் என்று சொன்னால் அந்த ரிவாயத்தை அனைத்து அறிஞர்களும் எந்த மறுப்பும் சொல்லாமல் ஏகோபித்து ஏற்றுக்கொள்வது போலவும் ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளனர். இப்னுஸ்ஸகன் அவர்கள் இதை ஸஹீஹ் என்று எங்கே கூறினார்கள்? எந்த அடிப்படையில் சரியெனக் கூறினார்கள்? என்பதையெல்லாம் அவர்கள்தான் நமக்கு விளக்கிட வேண்டும். முதலில் இப்னுஸ்ஸகன் யார் என்பதையும் நாம் முதலில் விளங்கிட வேண்டும்.

قال الشيخ عبدالله السعد حفظه الله في مقدِّمته لكتاب تعليقة على علل ابن أبي حاتم : "وكتاب إبن السكن هذا لا يوجد منه الآن إلا قطعة يسيرة, مع أنه لو وقف على الكتاب لتبين الأمرأكثر". (مقدِّمة لكتاب تعليقة على العلل ابن أبي حاتم , رقم الصفحة : 83-84). (أرشيف ملتقى أهل الحديث 3 – الجزء : 1, رقم الصفحة :  4353).

தாலிகது அலல்இலலீய் லி இப்னு அபிய் ஹாதிம் என்ற நூலில் இப்னு ஸகன் பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. அதாவது இப்னு ஸகனுடைய புத்தகங்களில் சில பகுதிகளைத் தவிர முழுமையான புத்தகம் என்று ஒன்றும் காணக் கிடைக்கவில்லை. அவர் எழுதியுள்ள புத்தகங்கள் முழுமையான தொகுப்பை ஆராய்ந்தால்தான் அவர் பற்றிய விஷயங்கள் தெளிவாகும்.

صحيح ابن السكن مفقود و كان ابن حجر ينقل أقواله في التصحيح و التضعيف و قد قرأت مقالا لشيخ عبد الله السعد حول صحيحه و قد رمي بالتساهل . أما مكانة صحيحه فأظنه في مرتبة ابن خزيمه و ابن حبان استنبط بعض العلماء من نقولاته عن الاحاديث انه متساهل بعض الشيء فهو على طريقة الحاكم والله اعلم . (أرشيف ملتقى أهل الحديث 3 – الجزء : 1, رقم الصفحة :  4353).

ஸஹிஹ் இப்னு ஸகன் என்ற இப்னுஸகன் அவர்களின் புத்தகம் அழிந்துவிட்டது. இப்னு ஸகனின் ஸஹிஹ் லயிஃப் குறித்து கூறப்பட்ட கூற்றுகளை இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுவார்கள். எனினும் இப்னு ஸகனின் ஸஹிஹ் நூலில் அவர் ஹதீஸ்களை சரிகாண்பதில் கவனக்குறைவுள்ளவர். இப்னு குஸைமா மற்றும் இப்னு ஹிப்பான் அவர்களின் தர வரிசையைப் போன்றுதான் இப்னு ஸகனின் ஸஹிஹ் எனும் புத்தகமும் உள்ளது. ஹதீஸை குறித்து அவரின் கூற்றுகளை சில அறிஞர்கள் ஆதாரத்திற்கு எடுப்பார்கள். எனினும் அவர் சில விஷயங்களில் கவனக்குறைவுள்ளவர். அந்த கவனக்குறைவு ஹாகிமுடைய வழிமுறையைப் போல - அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

ثم قال حفظه الله : "….. وهناك أحاديث كثيرة تسهل ابن السكن في تصحيحها، وهي فيها نظر". (مقدِّمة لكتاب تعليقة على العلل ابن أبي حاتم , رقم الصفحة :95). (أرشيف ملتقى أهل الحديث 3 – الجزء : 1, رقم الصفحة :  4353)

இங்கே பல ஹதீஸ்கள் உள்ளன. அவைகளை இப்னு ஸகன் அவர்கள் சரி காண்பதில் கவனக்குறை செய்துள்ளார். மேலும் அவைகளை ஆராய்வது நம் மீது கடமையாகும்.

قال الشيخ عبدالله السعد حفظه الله في مقدِّمته لكتاب تعليقة على علل ابن أبي حاتم : "ابن السكن عنده تساهل واضح، يعرف هذا من تتبَّع تصحيحاته. فقد صحَّح أحاديث باطلة ومعلولة، وصحَّح لبعض المتروكين". ومن الأحاديث التي تساهل ابن السكن في تصحيحها..........". (مقدِّمة لكتاب تعليقة على العلل ابن أبي حاتم , رقم الصفحة : 83-84). (أرشيف ملتقى أهل الحديث 3 – الجزء : 1, رقم الصفحة :  4353).

இப்னு ஸகன் அவர்களிடம் தெளிவான கவனக்குறைவுகள் உள்ளன. இப்னு ஸகன் ஸஹிஹ் கண்ட ஹதீஸ்களை எவர் ஆராய்கிறார்களோ அவர்கள் இதை நன்கு அறியமுடியும். மேலும் நிராகரிக்கப்பட்ட ஹதீஸ்களையும் குறைகள் கூறப்பட்ட ஹதீஸ்களையும் சில கைவிடப்பட்ட நபர்களையும் கூட இவர் சரி காண்பவர் ஆவார்.

இதற்கு உதாரணமாக, நோன்பு வைத்திற்கும் நபரை விருந்துக்கு அழைக்கப்பட்டால் பதில் அளிப்பது அதனால் அந்நோன்பை மற்றொரு நாளில் கழா செய்வது பற்றியுள்ள அறிவிப்பை இப்னு ஸகன் சரி என கூறியுள்ளார். ஆனால், இதன் அறிவிப்பாளர் வரிசையில் முஹம்மது இப்னு அபிய் ஹமீது இடம் பெறுகிறார் அவர் மத்ரூக் மற்றும் வாஹியுல் ஹதீஸ் ஆவார். மேலும் இப்னு மஸ்வூது அவர்களின் அறிவிப்பு எந்த செயல் சிறப்பானது என நபி ஸல் அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நபி ஸல் அவர்கள் கூறினார்கள் தொழுகையை அதன் முதல் சமயத்தில் தொழுவது என்று வருவதில் முதல் சமயத்தில் தொழுவது| என்னும் வார்த்தை சரியானதல்ல. இந்த ஹதீஸ் இஸ்திராபுகளை கொண்டு குறைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் இதில் இனம் கானப்படாதவர்கள் இடம் பெறுகிறார்கள். இதுபோன்ற ஹதீஸ்களை இப்னு ஸகன் பலம்வாய்ந்தது என்று கூறக்கூடியவர்.

قلتُ -يعني السَّعد-: لا شكَّ أنَّ كتاب النسائي أصحُّ من صحيح ابن السكن؛ فهو لم يخرِّج للواقدي، والحارث بن وجيه، ومحمد بن حميد الرازي، وكل هؤلاء ممن اشتهر ضعفهم. وتجنَّب النَّسَائي أيضاً إخراج أحاديث معلولة خرَّجها ابن السكن". (مقدِّمة لكتاب تعليقة على العلل ابن أبي حاتم , رقم الصفحة : 97). (أرشيف ملتقى أهل الحديث 3 – الجزء : 1, رقم الصفحة :  4353)

ஸஹீஹ் இப்னு ஸகன் என்ற அவருடைய புத்தகத்தைவிட இமாம் நஸாயி அவர்களுடைய புத்தகம் மிக மேலானது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. நஸாயி அவர்கள் அனைவரும் அறிந்த வாகிதி, ஹாரிஸ் பின் வஜிஹ் மற்றும் முஹம்மது பின் அர்ராஸி போன்ற பலஹீனமான அறிவிப்பாளர்களின் ரிவாயத்துகளை தமது நூலில் இடம்பெறச் செய்யவில்லை. காரணம் இமாம் நஸயி அவர்கள் குறைவுள்ள ஹதீஸ்களை வெளியிடுவதிலிருந்து தன் புத்தகத்தை பாதுகாத்துள்ளார்கள். ஆனால் மேற்சொன்ன பலஹீனமானவர்களின் அறிவிப்புகள்கூட இப்னு ஸகன் அவர்கள் ஸஹீஹ் என அறிவித்துள்ளார்.

وتصحيح أبي عيسى الترمذي أقوى منه [يعني: ابن السكن] بكثير.  وتقدَّم بعض الأحاديث التي ضعَّفها أبو عيسى بينما صحَّحها ابن السكن  .  (مقدِّمة لكتاب تعليقة على العلل ابن أبي حاتم , رقم الصفحة : 97).

மேலும் திர்மிதி அவர்கள் ஹதீஸ்களை சரி காண்பதில் இப்னு ஸகனை விட பல விஷயங்களில் பலம் வாய்ந்தவர். இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் பலஹீனம் என்று அறிவித்த அறிவிப்புக்களைக்கூட இப்னு ஸகன் அவர்கள் ஸஹிஹ் எழுதியுள்ளார்.

وصفه الألباني بالتساهل في التصحيح. (تراجم المحدثين:353).

அல்பானி (ரஹ்) அவர்கள் தராஜிமுல் முஹத்திஸீன் என்ற நூலில், இப்னுஸ்ஸகன் ஹதீஸ்களை ஸஹீஹ் என்று வரையறுப்பதில் கவனக்குறைவுள்ளவர் என்று விமர்சித்துள்ளார்கள். இன்னும் தஹபி அவர்களும் இந்த இப்னுஸ்ஸகனை பல தவறுகளும், குறைகளும் உள்ளவர் என்றும் புதிய விஷயங்களை சொல்லக்கூடியவர் என்றும் விமர்சித்துள்ளனர். இப்படி இப்னுஸ்ஸகன் பற்றி பல்வேறு விமர்சனங்கள் உள்ளன.

இந்நிலையில்தான் இந்த அறிவிப்பை இந்த இப்னுஸ்ஸகன் உட்பட மேற்காணும் மூவர் ஆதாரப்பூர்வமானது எனக் கூறியதாகவும், அதை இப்னுஹஜர் அவர்கள் எழுதிவிட்டார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்னும் இப்னுஹஸ்ம் அவர்களும் இந்த அறிவிப்பை சரிகண்டுவிட்டார்கள் என்று கூறுவதின் உண்மை நிலையையும் நாம் சுறுக்கமாக தெரிந்து கொள்வோம். அபூ முஹம்மத் என்று அழைக்கப்பட்ட இந்த இப்னு ஹஸ்ம் அவர்கள் ஹிஜ்ரி 384ல் அந்தலூஸ் நாட்டைச் சார்ந்த குர்துபாவில் பிறந்தவர்கள். அவர்கள் தம் நாட்டு தமது ஆரம்பகாலத்தில் மாலிக் மத்ஹபைப் பின்பற்றினார்கள். அதில் தாம் கருத்துவேறுபாடு கொண்டு அதிலிருந்து விலகி சிலகாலம் ஷாஃபிஈ மத்ஹபைத் தழுவினார்கள். பின்னர் ஷாஃபிஈ மத்ஹபும் அவர்களுக்குக் கடினமாகத் தெரியவே, அனைத்து மத்ஹபுகளின் கட்டுப்பாடுகளிலிருந்து வெளியேறி, ஷாபியீ இமாமின் மாணவரான இஸ்பஹானைச் சார்ந்த தாவூது ளாஹிரீயின் வழியைப் பின்பற்றி எந்த மத்ஹபையும் சாராது செயல்பட்டார்கள்.

அந்தலூஸ்(ஸ்பெயின்) நாட்டில் இமாம் மாலிக் அவர்களைப் பின்பற்றுவதும், எமன் நாட்டில் இமாம் ஷாஃபியீ அவர்களைப் பின்பற்றுவதும், குராஸானில் இமாம் அபூஹனீபா அவர்களைப் பின்பற்றுவதும் அவர்களுடைய சட்டங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருப்பதும் வியப்பாக உள்ளதாகவும், இதுதான் அல்லாஹ்வுடைய மார்க்கமா? என்றும் கேள்வி எழுப்பினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் இப்படி கட்டளையிடவே இல்லையே! அல்லாஹ்வுடைய மார்க்கமும் ஒன்று தான். அவனது சட்டமும் ஒன்று தான். அது வேறுபடாது என்று தமது பல்வேறு நூல்களில் மிகமிக ஆணித்தரமாக குறிப்பிடுகிறார்கள்.

இன்னும் ஒரு இமாமை மட்டும் பின்பற்றுவது என்பது அப்படிபின்பற்றுவதுதான் அல்லாஹ்வின் சட்டம் என்று தனது மத்ஹபைக் கருத வைத்துவிடும் என்றும், தனது இமாம் அல்லாதவர்களுடைய தீர்ப்பு அல்லாஹ், ரஸூலுடைய தீர்ப்புக்கு மாறுபட்டது என நம்பவைத்துவிடும் என்றும் மத்ஹபுகளை தக்லீது செய்வது குறித்து வன்மையாக கண்டித்தவர்கள்தாம் இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள்.

இதை ஏன் குறிப்படுகிறோம் என்றால், இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் ஃபிக்ஹூ சம்பந்தமாக விளக்கம் எழுதிய நூலான மஹல்லாவில் இடம்பெற்றிருக்கும் ஒரு விஷயத்தை தவறாக அவசர கோணத்தில் விளங்கி, மேற்படி இமாம் அவர்கள் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை சரிகண்டுவிட்டார்கள் என்று மலிவான பிரச்சாரம் செய்கிறார்களே என்ற வேதனையில்தான் அவர்களின் வாழ்க்கை சுறுக்கத்தை எழுதியுள்ளோம்.

قال أبو محمد: هَذَا مُسْنَدٌ صَحِيحٌ, وَأَبُو عُمَيْرٍ مَقْطُوعٌ عَلَى أَنَّهُ لاَ يَخْفَى عَلَيْهِ مِنْ أَعْمَامِهِ مَنْ صَحَّتْ صُحْبَتُهُ مِمَّنْ لَمْ تَصِحَّ صُحْبَتُهُ وَإِنَّمَا يَكُونُ هَذَا عِلَّةً مِمَّنْ يُمْكِنُ أَنْ يَخْفَى عَلَيْهِ هَذَا, وَالصَّحَابَةُ كُلُّهُمْ عُدُولٌ، رضي الله عنهم،, لِثَنَاءِ اللَّهِ تَعَالَى عَلَيْهِمْ.

وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ, وَالشَّافِعِيِّ.فَلَوْ لَمْ يَخْرُجْ فِي الثَّانِي مِنْ الأَضْحَى وَخَرَجَ فِي الثَّالِثِ فَقَدْ قَالَ بِهِ أَبُو حَنِيفَةَ, وَهُوَ فِعْلُ خَيْرٍ لَمْ يَأْتِ عَنْهُ نَهْيٌ.( المحلى - (5 / 92))

அவர்கள் எழுதியது என்னவெனில் : இந்த அறிவிப்பாளர் வரிசை சரியாக உள்ளது. அபூ உமைர் துண்டிக்கப்பட்டவர். அவருடைய உமூமத் அவருக்கு மறைந்ததாக இல்லை. யாரோடு சேர்ந்திருக்க வேண்டுமென்பது அவருக்கு தெரியும். உமூமத்தைப் பற்றிய விபரம் யாருக்கு தெரியவில்லையோ அவர்களுக்கு இது ஒரு பிழையாகக்கூட இருக்கும்.

ஸஹாபாக்கள் அனைவரும் நம்பகமானவர்கள். இது ஷாஃபிஈ, அபூஹனீபாவின் கூற்று. அடுத்தநாள்கூட பெருநாளைக்கு செல்லலாம் என்று அபூ ஹனிபா கூறுகிறார் (முஹல்ல 92/5). இவைகள்தாம் அதில் இடம்பெறும் வாசகம்.

அறிவிப்பாளர்களின் வரிசை சரியாக உள்ளது என்று சொல்லிய அதே இப்னு ஹஸ்ம் அவர்கள்தாம் அபூஉமைரை துண்டிக்கப்பட்டவர் என்றும் அடுத்த வாக்கியமாக சொல்கிறார்கள். இந்த வாக்கியத்தை வைத்துக்கொண்டு அபூஉமைர் வரை இந்த அறிவிப்பு வரிசை சரியாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமே தவிர இந்த அறிவிப்பை ஸஹீஹானது என்று இப்னு ஹஸ்ம் சொல்லிவிட்டார் என்பதற்கு எங்கே ஆதாரம் இருக்கிறது? அபூஉமைரின் உமூமத்தைப்பற்றி அபூ உமைருக்குத் தெரிந்திருந்தால் அவர் யார் என்று சொல்லிவிடவேண்டியதானே? ஏன் அபூஉமைர் அதை மறைத்தார் அல்லது மறந்தார்.

அவருடைய உமூமத் அவருக்கு மறைந்ததாக இல்லை என்று கூறுவதினாலோ, யாரோடு சேர்ந்திருக்க வேண்டுமென்பது அபூஉமைருக்குத் தெரியும் என்று கூறிவிட்டாலோ இந்த அறிவிப்பு ஸஹீஹாகிவிடுமா? ஸஹாபாக்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பது இமாம் ஷாஃபிஈ, இமாம் அபூஹனீபாவின் ஆகியோரின் கூற்று என்று கூறப்பட்டுள்ளது, ஹிஜ்ரி கமிட்டியினராகிய நமது கூற்றும் அதுதான். ஸஹாபாக்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் வாகனக்கூட்டம் அறிவிப்பு நம்பகமான ஹதீஸ் ஆகிவிடுமா?

இன்னும் அபூ உமைரை கத்தாபி (ரஹ்), இப்னு குத்தாமாஹ் (ரஹ்), இமாம் நவவி (ரஹ்) மற்றும் அல்பானி (ரஹ்) போன்றோர் சரிகண்டுள்ளார்கள் என்று மாற்றுக் கருத்துள்ளவர்கள் தவறாக விவாதிக்கலாம் என்பதால் அவற்றைப் பற்றிய உண்மை நிலையையும் சிறு குறிப்புகளாக இங்கு பதிவு செய்கிறோம்.

الشرح الكبير لابن قدامة - (2 / 225) وقال الخطابي سنة رسول الله صلى الله عليه وسلم أولى أن تتبع، وحديث ابن عمير صحيح والمصير إليه واجب ولانها صلاة مؤقتة فلا تسقط بفوات الوقت كسائر الفروض: فأما الجمعة فانها معدول بها عن الظهر بشرائط منها الوقت فإذا فات واحد منهما رجع إلى الاصل.

حدثنا حفص بن عمر نا شعبة عن جعفر بن أبي وحشية عن أبي عمير بن أنس عن عمومة له من أصحاب رسول اللّه صلى اللّه عليه وسلم أن ركبا جاؤوا إلى النبي صلى اللّه عليه وسلم يشهدون أنهم رأوا الهلال بالأمس فأمرهم أن يفطروا فإذا أصبحوا أن يغدوا إلى مصلاهم . قلت سنة رسول اللّه صلى اللّه عليه وسلم أولى وحديث أبي عُمير صحيح فالمصير إليه واجب .( معالم السنن لأبي سليمان الخطابي  1/321-221).

கத்தாபி அவர்களின் கூற்றை ஆய்வு செய்த இமாம் இப்னு குத்தாமாஹ் அவர்கள் இந்த ஹதீஸ் சரியானது என்று கூறியதாக சிலர் நினைக்கின்றனர். இப்னு குத்தாமாஹ் அவர்கள் இந்த அறிவிப்பைப் பற்றி விளக்கும் போது இந்த செய்தி இப்னு உமைர் என்பவர் மூலம் அறிவிக்கப்படுகிறது என்று ஒரு புதிய பெயரை கத்தாபி அவர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த குழப்பம் ஒரு பக்கம் இருக்க, பிறைசெய்தி கிடைத்த பின்னர் தொழுவதைப் பற்றிய கத்தாபி அவர்களின் மேற்கண்ட கூற்று இமாம் ஷாஃபியி (ரஹ்) அவர்களின் நிலைபாட்டிற்கு பதிலாகத்தான் அமையும். இன்னும் இப்னு குத்தாமாஹ் அவர்கள் இந்த அறிவிப்பை ஸஹீஹ் என்பதற்கு எவ்வித ஆதாரங்களையும் தெரிவிக்காமல்; வெறுமனே ஸஹீஹ் என்று தெரிவித்துள்ளதாக எழுதி வைத்துள்ளனர்.

அதுபோல இமாம் நவவி அவர்களின் கூற்றாக ஷரஹ் முஹத்தப் கிதாபில் பதிவு செய்யப்பட்டுள்ளதின் உண்மை நிலையையும் நாம் கவனிக்க வேண்டும்.

المجموع شرح المهذب - (5 / 26)* قال المصنف رحمه الله : { الشرح } حديث ابي عمير صحيح رواه أبو داود والنسائي وغيرهما باسانيد صحيحة ولفظ رواية ابى داود عن ابى عمير بن انس عن عمومة له من اصحاب النبي صلى الله عليه وسلم " ان ركبا جاؤا الي النبي صلي الله عليه وسلم يشهدون انهم رأوا الهلال بالامس فأمرهم ان يفطروا وإذا اصبحوا يغدوا الي مصلاهم " ورواه البيهقى ثم قال وهذا اسناد صحيح قال وعمومة ابي عمير صحابة لا تضر جهالة اعيانهم لان الصحابة كلهم عدول قال البيهقي وظاهر قوله امرهم ان يخرجوا من الغد الي المصلي انه امرهم بالخروج لصلاة العيد . وابو عمير المذكور هو عبد الله بن انس بن مالك الانصاري الصحابي وهو اكبر اولاد انس .

நவவி அவர்கள் இந்த அபூஉமைரை ஸஹாபி என்று கூறியுள்ளதாக எழுதப்பட்டுள்ளது. அபூஉமைரை ஸஹாபியாக அறிவித்துவிட்டால் மேற்கண்ட அறிவிப்பின் இடம்பெரும் அறிவிப்பாளர் வரிசையில் பெரும் குழப்பமே வரும் என்பதை நாம் அறிந்துள்ளோம். அபூஉமைரை ஸஹாபி என்று இமாம் நவவி அவர்கள்தான் கூறினார்களா என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்க, இந்த அபூஉமைர் என்பவர் அப்துல்லாஹ் இப்னு அனஸ் இப்னு மாலிக் என்பதாகவும், அவர் அனஸ் அவர்களின் மூத்த மகன் என்றும் தவறாக விளக்கப்பட்டுள்ளது. இச்செய்தியின் உண்மைநிலையை ஏன் இந்த ஆள்மாறாட்டம் என்ற தலைப்பில் மிக விரிவாக விளக்கிவிட்டோம். இன்னும் யாரென்ரே அறியப்படாத அபூஉமைரின் உமூமத்தினர் அனைவரும் நபித்தோழர்கள் என்றும், பொதுவாக நபித்தோழர்கள் அனைவரும் நம்பிக்கையானவர்கள் என்றும் கூறி திசைதிருப்பிவிட்டாலும், இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை சரியானதாக நிறுவிட இயலாது என்பதையும் நாம் முன்னரே அறிந்து கொண்டோம்.

இவ்வாறு அபூஉமைரை சரியாக அடையாளம் காணாமல் ஒரு ஸஹாபியாக நினைத்துக் கொண்டு மேற்படி அறிவிப்பை இஸ்னாதுஹூன் ஸஹீஹூன் என்று எவ்வித ஆதாரங்களையும் தெரிவிக்காமல் ஒரு அறிஞர் கூறிவிட்டார் என்று எழுத்துவடிவில் வந்தால் அதை கண்ணை மூடி ஏற்பது என்பது மார்க்கம் நமக்கிட்ட கட்டளையில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அல்பானி (ரஹ்) அவர்களின் நிலைபாட்டையும் நாம் தெளிவாக பல இடங்களில் விளக்கிவிட்டோம். அவர்கள் அபூஉமைரை சரிகண்டு சரியான ஆதாரங்களை முன்னிருத்தி இந்த அறிவிப்பை ஸஹீஹ் என்று எங்கும் கூறிடவில்லை. ஒரு அறிஞர் ஒரு அறிவிப்பை ஸஹீஹ் என்று ஆதரிப்பதும், ழயீஃப் என்று நிராகரிப்பதும் அவருடைய சுயஆய்வின் அடிப்படையிலானதே. அவ்வறிஞரின் ஆய்வு சரியானதுதானா என்று சீர்தூக்கிப் பார்ப்பது நமது கடமையே என்பதை யாரும் மறுக்கவியலாது.

இன்னும் நாங்கள் என்ன கேட்கிறோம் என்றால், தமிழ்பேசும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பல வருடங்களாக பற்றி எறியும் இந்த பிறை சார்ந்த பிரச்சனையில் இவர்களின் நிலைபாட்டிற்கு அடிப்படை ஆதாரம் என்று கருதும் இந்த வாகனக்கூட்டம் ஹதீஸை நாம் முர்ஸல், இஸ்முமுப்ஹம்; என்று சொல்கிறோம். மற்றும் பல காரணங்களின் அடிப்படையில் இந்த செய்தி புனையப்பட்டது என்றும் நிரூபித்துவிட்டோம். அந்த அடிப்படையில அறிவிப்பாளர்களையும், மஜ்ஹுல், ஜிஹாலத்துல் ஹால் எனும் இனம்காணாதவர் என்றும் நாம் ஏற்கனவே நிரூபித்துவிட்டோம். அதில் இன்னும் பல எதிர் வாதங்களையும் வைத்திருக்கின்றோம். இந்த அறிவிப்பை குறைந்தபட்சம் முர்ஸல்தான் என்பதை மாற்றுக் கருத்துடையவர்கள் உட்பட அனைவரும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் உண்மையிலேயே நமக்கு பதில் கூறுவதாக இருந்தால், ஹிஜ்ரி கமிட்டியினரே அபூஉமைர் ரிவாயத்தையும், முர்ஸலான அறிவிப்பையும் விடுங்கள். இதோ எங்களிடம் அடுக்கடுக்கான ஸஹீஹான ரிவாயத்துக்கள் இந்த வாகனக்கூட்டம் சம்பந்தமாக இருக்கின்றன என்று பலமான ஆதாரங்களை அள்ளித்தர வேண்டியதுதானே.

முர்ஸலான, இஸ்முமுப்ஹமான ரிவாயத்திற்கு மாற்றாக வேறு எதாவது ஸஹீஹான ஹதீஸ் உள்ளதா என்றல்லவா இவர்கள் முதலில் ஆய்வு செய்திருக்க வேண்டும். இவர்களின் நிலைபாட்டிற்கு ஒரு ஸஹீஹான ரிவாயத்துகூட தேறவில்லையா? என நாம் அவர்களை நோக்கி கேட்கிறோம்.

இவர்கள் வாகனக்கூட்ட அறிவிப்பை பூசிமெழுகி தூக்கி நிறுத்த எத்தகைய முயற்சிகள் செய்தாலும் சங்கைக்குரிய இமாம்கள் மற்றும் ஹதீஸ்கலை அறிஞர்களின் ஆணித்தரமாக ஆய்வுகள் இவர்களின் முயற்சிகளை தவிடுபொடியாக்கி விடுவதையே காண்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தொடர்ந்து படிக்க : வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா??

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

பாகம் 21, பாகம் 22,

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply