வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 17

Super User
Super User
Offline
0

بسم الله الرحمن الرحيم

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?

 பகுதி :17

 ஓயாத வாதங்களும் உதவாத கோபங்களும்:-

மேற்படி வாகனக்கூட்டம் சம்பந்தமாக நாம் ஏற்கனவே ஆய்வுசெய்தவைகளை தொகுத்து சிற்றேடாக மக்களுக்கு அளிக்கலாம் என முடிவெடுத்து, அதன் சில பகுதிகளை இந்த அறிவிப்பை பலமானதுதான் என விவாதிக்கும் மாற்றுக் கருத்துள்ளவர்களுக்கும் பதிலளிக்கும்படி தூய எண்ணத்துடன் நாம் அனுப்பி வைத்தோம்.

இந்திய ஹிஜ்ரி கமிட்டி என்பது ஒரு இயக்கமோ, கழகமோ அல்ல. மாறாக பிறை விஷயங்களை ஆய்வு செய்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் ஒரு குழு (committee) மட்டுமே. இதைத் தெளிவாக தெரிந்திருந்தும், இந்த ஆய்வுக் கட்டுரையை நாம் அனுப்பிய மறுகணமே நாம் எடுத்து வைத்துள்ள ஆதாரங்களை சற்றும் பொருட்படுத்தாமல் எங்கள்மீது வழக்கம்போல வசைமாறி பொழிந்தனர். பொழிந்து கொண்டும் உள்ளனர். - அல்லாஹ் போதுமானவன்.

ஒரு ஹதீஸை பலமானதுதான் என அவர்கள் நம்பியிருக்கும் போது அதற்கு மாற்றமான ஒரு கருத்தை நாம் வாதமாக வைத்தால் அதற்கு பதிலளிப்பதை விடுத்து நம்மீது கடும் கோபப்படுவது சரிதானா? ஒருவேளை அவர்களின் இயக்கத்தலைவர் ஒன்றை ஸஹீஹ் என்று அறிவித்துவிட்டால் அதில் யாரும் அவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கக்கூடாது என்பது (அமீரின்) கட்டளை போலும். அத்தகைய கட்டளைகள்  சுயசிந்தனையுடைய மக்களுக்குப் பொருந்தாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும். நமது ஆய்வு குறித்த மாற்றுக் கருத்துள்ளவர்களின் அத்தகைய விமர்சனங்களுக்கும் இங்கு பதிலளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

விமர்சனம்-1 :

ஹிஜ்ரி கமிட்டியினருக்கு ஹதீஸ் கலையும் தெரியவில்லை, அரபி மொழியும் தெரியவில்லை. எனவேதான் இந்த வாகனக்கூட்டம் ஹதீஸை பலவீனமானது என்று சொல்கின்றனர். ஸஹாபியின் பெயர் விடுபட்டுள்ளது ஒரு குறையல்ல. காரணம் ஸஹாபாக்கள் அனைவரும் நம்பகமானவர்கள். இதை பைஹக்கீ இமாம் அவர்களே சொல்லவில்லையா? நவவீ (ரஹ்) அவர்கள் தம்முடைய குலாஸாவில் இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று கூறவில்லையா எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

விளக்கம் :

ஹிஜ்ரி கமிட்டியினருக்கு ஹதீஸ் கலை தெரியுமா? அல்லது அரபி மொழி தெரியுமா என்பது இங்கு பிரச்சனையல்ல. ஹிஜ்ரிகமிட்டியினர் வானத்திலிருந்து திடீரென்று குதித்தவர்களும் அல்லர். இவர்களைப் போலவே நாமும் பிறைவிஷயங்களில் பல நிலைபாடுகளை இதற்கு முன்னர் சரிகண்டோம். பின்னர் இக்லாஸான முறையில் சிந்தித்ததில் எங்களின் இன்றைய பிறை நிலைபாடுதான் குர்ஆன் சுன்னாவிற்கு நெருக்கமாக இருப்பதை உணர்ந்ததாலேயே, சத்தியத்தை மக்களுக்கும் எத்திவைக்க வேண்டும் என நாம் பாடுபடுகிறோம். இன்னும் எங்களை இன்று எதிர்ப்பவர்களில் சிலர் நமது பிறை நிலைபாடான இஸ்லாம் வலியுறுத்தும் பிறைகளின் துல்லியமான கணக்கிட்டை ஏற்கனவே சரிகண்டு, அதை பிரச்சாரமும் செய்துவந்ததோடு மாற்றுக் கருத்துள்ளவர்களிடம் நேரடி விவாதத்திலும் பங்கேற்றனர் என்பதும் உண்மை.

அவ்வாறு செய்தவர்கள் இன்று எங்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அரபிமொழியறிவு இருந்தால் மட்டுமே மார்க்கத்தை சரியாக விளங்க இயலும் என்றும் அரபி மதரஸாக்களில் பயின்றவர்களைத் தவிர வேரு யாரும் மார்க்கத்தை ஆய்வு செய்யக்கூடாது என்றும் அவர்களுடைய பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும், நடவடிக்கைகளிலும் வெளிப்படுத்துவதை நாம் காண்கிறோம். இதற்கு சிறந்த உதாரணம்தான் ஹிஜ்ரி கமிட்டியினருக்கு ஹதீஸ் கலையும் தெரியவில்லை, அரபி மொழியும் தெரியவில்லை என்ற இவர்களின் வாதம் என்பதை மக்கள் தெளிவாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வாதத்திற்காக கேட்கிறோம், அரபி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட யூதர்களும், கிருஸ்தவர்களும் (Coptic Christians) இவ்வுலகில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கையோ பல கோடிகளைத் தாண்டும். அரபிமொழியறிவு இருந்தால்தான் மார்க்கத்தை சரியாக விளங்க இயலும் என்ற கருத்து உண்மையானால் மேற்படி யூதர்களும், கிருஸ்தவர்களும் (Coptic Christians) இஸ்லாமிய மார்க்கத்தின் வாடையைக்கூட நுகராமல் இருக்கிறார்களே அது ஏன்? இதைவிட ஒருபடி மேலாக சொல்வதானால் அவர்களில் பலர் தங்களின் அரபி மொழியறிவை பயன்படுத்தி இஸ்லாத்திற்கு எதிராக அல்லவா பிரச்சாரம் செய்கின்றனர்? நம் நாட்டு அரபி மதரஸாக்களில் பட்டம் மட்டுமே பெற்றுள்ள இவர்களால் இதை சிந்திக்க இயலாதுதான். 

இவ்வாறு நேர்வழியை மொழியறிவோடு முடிச்சுப் போடுவதால் இஸ்லாம் பண்டிதர்களுக்கு மட்டும்தான் சொந்தமானது என்பதையும், முஸ்லிம்களாகிய நாம் அத்தகைய பண்டிதர்களையோ, மத்ஹபையோதான் பின்பற்றவேண்டும் என்று மறைமுகமாக கூறுகிறார்கள் போலும்.

அப்படி அரபிமொழியறிவு இருந்தால்தான் மார்க்கத்தை சரியாக விளங்க இயலும் என்றால் சுமார் ஒருகோடி தமிழக முஸ்லிம்கள் முதல் 25கோடி இந்திய முஸ்லிம்கள் உட்பட இவ்வுலகில் வாழும் சுமார் 200 கோடி முஸ்லிம்களில் எத்தனை சதவிகிதத்தினர் இந்த அரபி மொழியைக் கற்ற பண்டிதர்கள் என்பதை சிந்திக்க வேண்டாமா? அத்தகைய அரபி மொழியில் பாண்டித்தியம் பெறாத கோடான கோடி முஸ்லிம்களெல்லாம் இவர்கள் பார்வையில் மார்க்கத்தை விளங்காதவர், நேர்வழியை அறியாதவர்கள், இந்த மார்க்கத்தை ஆய்வு செய்யத் தகுதியற்றவர்கள் (நவ்வூதுபில்லாஹ்) என்றே இவர்கள் நம்பியுள்ளார்கள் போலும்.

அரபிமொழியறிவு இருந்தால்தான் மார்க்கத்தை சரியாக விளங்க இயலும் என்பது பொய் என்பதற்கு அரபிமொழியில் பாண்டித்தியம் பெறாத இத்தனை கோடி முஸ்லிம்களும் இஸ்லாமிய மார்க்கத்தை சரிகண்டு தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்று வாழ்ந்து கொண்டிருப்பதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டுமாம்? அரபிமொழியறிவு என்ற இந்த பழைய பஞ்சாங்க வாதமானது, தாங்கள் எடுத்து வைக்கும் ஒரு விஷயத்திற்கு ஆதாரமில்லாமல் போகும்போது, தப்பிக்க வழியின்றி வாதத்திற்காக எடுத்துக் கொள்ளும் கேடயம்தானே தவிர வேறு ஒன்றுமல்ல.

ஏகத்துவம் பேசிவரும் இன்றைய இயக்கங்கள், சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் ஷிர்க் பித்அத்துக்களுக்கு எதிரான தங்களது பிரச்சாரங்களைத் துவங்கிய காலகட்டத்தில் குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்களை அளித்து கேள்விகளை தொடுத்த வேளையில், அதை எதிர்த்தவர்கள் 'நீ என்ன ஆலிமா? உனக்கு அரபி தெரியுமா? மார்க்கத்தைப் பற்றிப் பேசுவதற்கு உனக்கு என்ன தகுதியுள்ளது?' என்பன போன்ற வாதங்களை முன்வைத்துதான் மக்கள் மன்றத்தில் தப்பித்து வந்தார்கள். இன்றோ பிறைபற்றிய தவறான நம்பிக்கைகளை நாம் உடைத்தெரிவதால் அதே 25 வருட பழமையான பஞ்சாங்க யுக்தியைத்தான் நம்மீது இவர்களும் கையாளுகின்றனர்.

இஸ்லாமிய சமுதாயம் கண்ட மாபெரும் இமாம்களான இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் உட்பட பல்வேறு அறிஞர்கள் அரபியைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்லர். அரபி அஜமி என மொழியின் மீதிருக்கும் மோகத்தையும், பாகுபாட்டையும் இஸ்லாமிய மார்க்கத்தின் மூலம் வல்ல அல்லாஹ் குழிதோண்டி புதைத்துவிட்டான். 'மொழியின் மீது மோகம் கொள்ளாமை' என்ற நிலை முஸ்லிம் சமுதாயத்திற்கு இறைவன் அளித்துள்ள மாபெரும் பரிசாகும். இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த மகத்துவத்தைக்கூட விளங்காத இவர்களின் அரபிப் புலமையின் லட்சனத்தையும் நம் மக்கள் அறிந்தே வைத்துள்ளார்கள்.

ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் அரபி மொழிக்கு எதிரானவர்கள் அல்லர். அரபி மொழியை நன்றாகப் படித்தவர்களிலும் மார்க்கத்தை விளங்காதவர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாத ஒன்றுமல்ல. அதுபோல அரபு மொழி தெரியாத முஸ்லிம்களில் சிறந்த சிந்தனையாளர்கள் கனிசமாக இருக்கின்றனர் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள் என்கிறோம்.

நாங்கள் ஆய்வு செய்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்து வருவதை வீம்பாக இன்று எதிர்ப்பவர்கள் தங்களின் உலமா சபையை ஒன்று கூட்டி ஹிஜ்ரி காலண்டர் சரியானதுதான், பிறை விஷயத்தில் கணக்கிடுவதை மார்க்கம் தடைசெய்ய வில்லை மாறாக ஊக்குவிக்கிறது என்றெல்லாம் மக்களுக்கு சொன்னார்கள். மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தவர்களுடன் விவாதமும் செய்தார்கள். ஆனால், இப்போது இவர்கள் தங்களின் நிலைபாட்டிலிருந்து சறுக்கிவிட்டார்கள். இவர்கள் சறுக்குவதற்கு முன்பு மக்கள் மன்றத்தில் கூறியவற்றை மக்களின் மனதிலிருந்து மறக்கடிக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது ஹிஜ்ரி கமிட்டியின் மீது வசைமாரி பொழிந்து வருகிறார்கள்.

மனிதர்கள் என்ற அடிப்படையில் நாங்களும் தவறு செய்பவர்களே என்ற ரீதியில் நமது ஆய்வை இவர்களிடமும் அனுப்பி 'இதில் அவர்களின் கருத்தைக் கூறுங்கள் எனக் கேட்டால்', 'உங்களுக்கு அரபி தெரியவில்லை ஹதீஸ்கலை தெரியவில்லை' என மழுப்புவது அறிவார்ந்த பதிலாகுமா?

இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பு ஸஹீஹான, பலமான ஹதீஸாக இருந்தால் அதை (ழயீஃப்) பலஹீனமானது என நாங்கள் ஏன் அறிவிக்கவேண்டும்? எங்களுக்கும் அபூ உமைருக்கும்; என்ன குடும்ப சண்டையா? அல்லது எங்களுக்கு மத்தியில் ஏதும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா? இல்லையே! ஸஹீஹான ஹதீஸ்களை பலஹீனமாக்குவது எங்களின் வேலையும் அல்லவே?.

ஸஹாபாக்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்ற உண்மையை இவர்களைவிட மிக ஆணித்தரமாக நாம் நம்புகிறோம், ஏற்றுக்கொள்கிறோம். தஹ்ரீரு உலூமுல் ஹதீஸ் கிரந்தத்தில் நபிதோழரைப் குறித்து அறியாமை சம்பந்தமாக வரும் சட்டங்களை முழுமையாக இவர்கள் படித்திருந்தால் இத்தகைய வாதத்தை ஒருபோதும் வைக்கவே மாட்டார்கள். ஹிஜ்ரிகமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை, ஹதீஸ்கலை தெரியவில்லை என்ற அவதூரை பரப்பி விட்டபடியால், 'நாம் எதையும் விட்டு அடிக்கலாம் நம்மை யார் கேட்பது?' என தைரியமாக இப்படி கூறுகிறார்கள் போலும்.

நிதானமாகச் சிந்தியுங்கள்! இங்கு ஸஹாபாக்களின் நம்பகத்தன்மையை குறித்தா நாம் விவாதிக்கிறோம். இந்த அறிவிப்பாளர் வரிசையில் விடுபட்டவர் யார்? அவரின் பெயர் என்ன? அவைகள் தெளிவாக குறிப்பிடப் படவில்லையே ஏன் என்றும், இங்கு விடுபட்டவர் ஸஹாபியா? தாபிஈயா? அல்லது யார் அவர்? என்றும் தானே நாம் விவாதிக்கிறோம். இதற்கு சரியான பதில் சொல்லாமல், அனைவரையும் திசைதிருப்பி, ஸஹாபாக்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என பதிலளிப்பது இல்லாத ஊருக்குச் செல்லாத வழியைக் காட்டுவதாக அமையாதா?

இமாம் நவவீ (ரஹ்) தம்முடைய குலாஸாவில் இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று கூறவில்லையா என்று போகிற போக்கில் இவர்கள் சொல்லிவிட்டால் அது நவவி இமாம் சொல்லியதாக அமைந்துவிடுமா? என்ன. நவவி இமாம் அவர்கள் என்ன கூறினார்கள் என்பதை தெளிவாக விளக்கி அதிலிருந்து இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்தான் என்பதை இவர்கள் நிரூபிக்க வேண்டாமா?

சரி இந்த வாகனக்கூட்டம் சம்பந்தமான ரிவாயத்துகளை நாங்கள் சுயமாகவா பலஹீனம் என்கிறோம்? ஹதீஸ்கலை அறிஞர்கள் மற்றும் இமாம்களின் ஆய்வுகளிலிருந்து அடுக்கடுக்கான ஆதாரங்களை அல்லவா சமர்ப்பித்துள்ளோம்.

ஹதீஸ்கலையைப் பொறுத்த வரையில், 'அறியப்பாடாதவர்கள், நம்பகத்தன்மை அற்றவர்கள் ஆதாரமாக மாட்டார்கள். அவர்களின் செய்திகளை ஆதாரமாக எடுக்கக்கூடாது எனக் கூறிய பல்வேறு இமாம்களில் குறிப்பாக இமாம் பைஹக்கீ (ரஹ்), இமாம் தஹபி (ரஹ்), இப்னு ரஜப் (ரஹ்), இமாம் இப்னு அப்துல்பர் (ரஹ்), இன்னும் இமாம் இப்னுல் கத்தான் (ரஹ்) முதலிய ஹதீஸ்கலை மாமேதைகளும் ஹதீஸ்கலையை சரியாக அறியவில்லை என்றுதான் தங்களின் வாதப்படி இவர்கள் சொல்ல வருகிறார்கள் போலும்.

அவ்வளவு ஏன் ஹதீஸ்கலையில் தமக்கென தனி இடத்தை பெற்றுள்ள சட்டமாமேதை இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் நிபந்தனைகளில் ஒன்றில்கூட இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பு தேறவில்லை. அப்படியானால்; ஹிஜ்ரி கமிட்டியினரை நோக்கிக் கூறும் இதேகூற்றினை இமாம் ஷாஃபியி (ரஹ்) அவர்களையும் நோக்கி, ஷாஃபிஈ இமாமுக்கும் ஹதீஸ் கலையும் தெரியவில்லை, அரபி மொழியும் தெரியவில்லை என பகிரங்கமாக இவர்கள் அறிவிக்கட்டும்.

இன்னும், நம்மை விமர்சிக்கிறோம் என்று கருதிக்கொண்டு, இந்த அறிவிப்பில் இடம் பெறும் உமூமத்து எனும் வார்த்தைக்கு அவரின் தந்தையின் சகோதரி என மொழி பெயர்த்துள்ளார்கள். இது தவறாகும். உமூமத் என்பது அம்மு என்ற வார்த்தையின் பன்மையாகும். அதன்படி அவரின் தந்தையின் சகோதரர்கள் என மொழி பெயர்க்கப்பட வேண்டும். அம்மு என்ற வார்த்தை பன்மையாக மாறியிருப்பதை அறியாமல் வெறும் தாவை மட்டும் வைத்து பெண்பாலாக மொழி பெயர்த்திருப்பது அரபு மொழியறிவிலும் பெரிய அளவில் இவர்களிடம் பின்னடைவு இருப்பதைக் காட்டுகிறது. என கூறி தங்களின் அரபிப் புலமையை வெளிப்படுத்துகின்றனர்.

மறைக்கப்பட்ட அறிவிப்பாளர் ஆணா? பெண்ணா? என்பதையும் ஒரு நபரால் அறிவிக்கப்பட்டதா? பல நபர்களால் அறிவிக்கப்பட்டதா? என்பது உறுதியான பிறகுதான் உமூமத் என்ற பதத்திற்கு அவர் தந்தையுடைய சகோதரர் அல்லது சகோதரி அல்லது சகோதரர்கள் என்று இந்த இடத்தில் சரியான பொருளைக் கொடுக்க முடியும்.

உமூமத் என்ற சொல்லிற்கு எந்தப் பொருளைக் கொள்ள வேண்டும் என்பதையும், இதுதான் சரியான அர்த்தம் என்பதையும் குர்ஆன் சுன்னா வழியில் நிரூபிப்பது இந்த அறிவிப்பை சரிகாண்பவர்களின் கடமையாகும் என்று ஏற்கனவே நாம் கூறிவிட்டோம். மேலும் தற்போது இவர்கள் உமூமத் என்ற பதத்திற்கு அவர் தந்தையுடைய சகோதரர்கள் என்று மட்டும் மொழி பெயர்த்துள்ளதால் இவர்களின் மொழிபெயர்ப்பு மட்டுமே சரியானது என்பதற்கு நேரடியான ஸனதை அவர்கள்தான் தரவேண்டும். தருவார்களா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.!

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தன்னுடைய ஃபத்ஹுல் பாரியில் அபூஉமைரைப் பற்றி கூறும்போது, அபூதல்ஹா (ரழி) அவர்களுடைய மனைவி உம்மு சுலைம் (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்திருக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் தந்தையின் சகோதரி என்று நாம் மொழிபெயர்த்தோம். இது தவறு என அவர்கள் அறியாமையில் கூறியதால், இப்போது நாம் சகோதரர் என மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். ஏனெனில் அல் முஹ்சின் அல் அப்பாத் அவர்கள் சுனன் அபிதாவூதிற்கு விளக்கம் அளிக்கும்போது அபூஉமைர் உமூமத் எனக் கூறும் மறைக்கப்பட்ட நபர், ஒரு நபராகவே இருக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

]عن عمومة له من الأنصار]. لا أعرف من هم، ولكن ذلك لا يؤثر؛ لأنه غالباً يكون المقصود أنهم صحابة، وقوله: [عن عمومة له ..] المقصود به ابن أنس بن مالك، فهم صحابة وهو تابعي ابن صحابي. وكأنه يعني بالعمومة شخصاً واحداً من أعمامه. (شرح سنن أبي داود ـ عبد المحسن العباد – الجزء : 3  الصفحة :  329(.

(அபுஉமைரின் அன்சாரி தந்தையின் சகோதரரிடமிருந்து) எனக்கு அவர்கள் யார் என தெரியவில்லை, ஆனால் அந்த அறியப்படாதது பாதிக்காது. ஏனெனில் அதன் நோக்கம் பெரும்பாலும் நபித்தோழர்களாக இருக்கவேண்டும்;. மேலும் அவர் உமுமத் எனக் கூறுவதன்; நோக்கம், அனஸ் பின் மாலிக் அவர்களின் மகனாக இருக்கலாம். எனவே அவர்கள் நபித்தோழர்கள், மேலும் அவர் நபித்தோழரின் மகன் தாபிஈ ஆவர். மேலும் அதன் மூலம், அதாவது தந்தையின் சகோதரர் என்று கூறுவதன் மூலம் அவருடைய சித்தப்பாக்களில் ஒர் நபராக இருக்கவேண்டும். (ஸுனன் அபி தாவூதின் விரிவாக்கம் எழுதிய அப்துல் முஹ்ஸின் அல் அப்பாது அவர்கள்- 3/329).

மேற்கண்ட இரண்டு கூற்றுகளும் தவறு என வாதிடும் இவர்கள் எவ்வித விளக்கமுமின்றி ஆதாரமுமின்றி தந்தையின் சகோதரர்கள் என்று பன்மையில் மட்டுமே மொழிபெயர்க்க வேண்டும் எனக் கூறி மக்களை குழப்புகிறார்கள்.

ஒரு மொழியில் ஒரு சொல்லிற்கு பல பொருட்கள் இருக்கும் போது, அவற்றில் எதையாவது ஒரு பொருளை கையாண்டால் அவர்களை நோக்கி மொழி அறியாதவர்கள் எனக் கூறுவது அறியாமையினால் ஏற்பட்ட அகங்காரத்தின் உச்சகட்டம் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம் தானே!

நபி (ஸல்) அவர்கள், மக்கத்து குறைஷி ஆலிம்களின் தலைமைப்பீடமான இருந்த தாருந்நத்வா அறிஞர்களிடம் இஸ்லாம் என்னும் இறைச்செய்தியை எடுத்துரைத்தபோது அதன் ஆலிம்களாக வீற்றிருந்த அபூஜஹிலும் அவனுடைய கூட்டாளிகளும் நபிகளாருக்கு சவால்விட்டு இதே அரபிமொழி இலக்கணப் பெருமையைத்தான் பேசினார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். உண்மையை மறைத்து பல பொய்களை இட்டுக்கட்டி சத்தியத்தை எதிர்த்ததால் அவர்கள் அனைவரும் அழிந்தொழிந்தனர் என்பது மறக்கவியலாத வரலாறு. மொழிவாதம் பேசும் இவர்களின் வாதத்திற்கு இதையே பதிலாக அளிக்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தொடர்ந்து படிக்க : வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா??

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

பாகம் 21, பாகம் 22,

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply