வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 14

Super User
Super User
Offline
0

بسم الله الرحمن الرحيم

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?

பகுதி :14

இப்னு முன்திர் இந்த அறிவிப்பை ஸஹீஹ் என்றார்களா?

ஆலையே இல்லாத ஊருக்கு இழுப்பை பூ சக்கரை என்பார்கள், அந்த கதைபோலதான் இருக்கிறது இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை தூக்கிபிடிப்பவர்களின் வாதங்களும். அறியப்படாத அபூஉமைரை தூக்கி நிறுத்த இப்னு முன்திர் போன்றோர்தானா இவர்களுக்குக் கிடைத்தார்கள்?. இனம் காணப்படாத அபூஉமைரை நியாயப்படுத்திட, அவரை சரிகண்டு இந்த அறிவிப்பை பலமானதுதான் என்று நிறுவிட, விமர்ச்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு அறிஞரின் கூற்றுகூட ஆதாரமாக இல்லையே என்பதை நினைக்கும் போது நமக்கே பரிதாபமாகத்தான் இருக்கிறது.

அபூபக்கர் என்ற இப்னு முன்திர் அவர்களைப் பற்றி முந்தையகால அறிஞர்கள் எவ்வளவு கடுமையாக விமர்சித்துள்ளனர் என்பதையும், ஹதீஸ்கலையில் இப்னு முன்திர் அவர்களின் மிக பலஹீனமான நிலையையும் இவர்கள் உண்மையிலேயே அறிந்திருந்தால் இப்படி ஒரு வாதத்தை நிச்சயமாக வைத்திருக்க மாட்டார்கள். உதாரணத்திற்காக ஒருசில விஷயங்கள்.

مسلمة بن قاسم الأندلسي كان لا يحسن الحديث ونسب الى العقيلي انه كان يحمل عليه وينسبه الى الكذب وكان يروي عن الربيع بن سليمان عن الشافعي ولم ير الربيع ولا سمع منه. (لسان الميزان - (5 / 27)).

இப்னு முன்திர் அவர்கள் ஹதீஸ்களை சரியாக ஆய்வு செய்வது கிடையாது. இவர் பொய் சொல்பவர் என்று அகீலி அவர்கள் இவரை விமர்சனம் செய்துள்ளார்கள். இன்னும் இப்னு முன்திர், ரபீஃ பின் சுலைமான் அவர்கள் இமாம் ஷாஃபிஈ அவர்களிடமிருந்து அறிவித்தார் என்று சில விஷயங்களைக் கூறுவார். ஆனால் உண்மையில் ரபீஃ பின் சுலைமான் ஷாஃபிஈயை பார்த்ததுமில்லை அவர்களிடமிருந்து எதையும் செவியேற்றதுமில்லை. இவ்வாறு முஸ்லிம் பின் காஸிம் அன்டுலிஸி அவர்கள் இப்னுமுன்திர் அவர்களைப் பற்றி விமர்சித்துள்ளார்கள்.

وقال مسلمة بن قاسم أول ما ذكره كان فقيها جليلا كثير التصنيف وكان يحتج في كتبه بالضعيف على الصحيح وبالمرسل على المسند ونسب في كتبه إلى مالك والشافعي وأبي حنيفة رحمهم الله تعالى أشياء لم توجد في كتبهم وألف كتابا تشريف الغني على الفقير . ميزان الاعتدال 3: 450 ـ 451/7123.

இப்னு முன்திர் அவர்கள் சிறந்த அறிஞராகவும் அதிக புத்தகங்கள் எழுதியவராகவும் இருந்தார். அவருடைய புத்தகங்கள் ஸஹீஹான ஹதீஸ்களின் மீது ழயீபான ஹதீஸ்களையும், முஸ்னதான ஹதீஸ்களில் மீது முர்ஸலான ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொள்வார். இன்னும் அவருடைய புத்தகத்தில் இது இமாம் ஷாஃபிஈ (ரஹ்) உடைய கூற்று, இது இமாம் அபூ ஹனிபா (ரஹ்) கூற்று, இமாம் மாலிக் (ரஹ்) இவ்வாறு கூறினார்கள் என்றும் கூறுவார். ஆனால் இமாம் ஷாஃபிஈ, இமாம் அபூ ஹனிபா, இமாம் மாலிக் போன்றோர் அவ்வாறு கூறினார்களா என்று நாம் ஆய்வுசெய்கையில் அத்தகைய இமாம்கள் எவரும் இப்னு முன்திர் கூறியதைப்போன்று அவ்வாறு சொல்லியிருக்கவே மாட்டார்கள். பக்கீர் (ஏழை) மீது பணக்காரனின் சிறப்பு என்றுகூட ஒரு நூலை இப்னுமுன்திர் எழுதியிருக்கிறார் என்று முஸ்லிமா பின் காஸிம் அவர்கள் மீஜானுல் இஃதிதால் என்ற நூலில் மிக்க கடுமையாக விமர்சிக்கின்றார்கள்.

ஆக இப்னு முன்திர் அவர்களே கடுமையான, சீரியஸான விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், அவர்கள் வாகனக்கூட்ட அறிவிப்பை ஆதாரப்பூர்வமானது என்று கூறிவிட்டார்கள் என்ற மாற்றுக்கருத்;துடையவர்களின் வாதத்தின் லட்சனத்தையும், இப்னுமுன்திர் அவர்கள் அவ்வாறுதான் கூறினார்களா என்பதையும் நாம் ஆய்வு செய்யக் கடமைப் பட்டுள்ளோம்.

இப்னு முன்திர் அவர்கள் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பு பற்றி கூறியதாக சொல்லப்படும் விஷயம் இதுதான்...

الأوسط لابن المنذر - (6 / 498):  ذكر القوم لا يعلمون بيوم الفطر إلا بعد الزوال

·         قال أبو بكر : اختلف أهل العلم في الطائفة تشهد يوم ثلاثين من هلال شهر رمضان أن الهلال رئي بالأمس

·         فقالت طائفة : إن عدلا قبل الزوال صلى الإمام بالناس صلاة العيد ، وإن عدلا بعد الزوال لم يكن عليهم أن يصلوا يومهم بعد الزوال ولا من الغد ، لأنه عمل في وقت إذا جاوز ذلك الوقت لم يعمل في غيره ، هذا قول الشافعي ، وأبي ثور ، وقال أبو ثور : لو ثبت الحديث قلنا به ،

·         وحكي عن مالك أنه قال : قد ذهب العيد لأول وقته أول نهارهم من يوم الفطر فإذا ذهب يوم الفطر فقد ذهب يومه .

·         وقالت طائفة : إن شهدت بينة قبل نصف النهار خرجوا وأفطروا ، وإن شهدت بعد نصف النهار أفطروا وخرجوا إلى العيد من الغد ، هذا قول الأوزاعي ، وبه قال الثوري ، وأحمد ، وإسحاق ، واحتج أحمد بحديث أبي عمير بن أنس .

·         قال أبو بكر : وحديث أبي عمير بن أنس ثابت والقول به يجب.

இப்னு முன்திர் அவர்கள் கூறுகிறார்கள் : ரமழான் மாதத்தில் பிறையை நேற்று பார்க்கப்பட்டது பற்றி

அறிஞர்களின் ஒரு கூட்டம் கருத்து வேறுபாடு கொண்டது. அதாவது ரமழானுடைய மாதத்தில் 30 வது நாளில் நோன்பு நோற்றிருக்கும் போது முந்தைய நாளில் பிறை செய்தி அந்த 30-வது நாளின் ஜவாலுக்குப் பிறகு (நன்பகலுக்குப்பின்) சொல்லப்பட்டது என்றால் என்ன செய்வது? என்பது பற்றிய கருத்து வேறுபாடே அது.

அப்பிறை தகவல் ஜவாலுக்கு முன்பு வந்தால் ஈத் தொழுகையை இமாம் மக்களுடன் சேர்ந்து தொழவேண்டும் என்றும் ஜவாலுக்கு பிறகு அத்தகவல் வந்தால் தொழத்தேவையில்லை என்றும்  கூறினர். மேலும் ஜவாலுக்குப் பிறகு வந்தால், பெருநாள் தொழுகையை அந்த நாளும் தொழக்கூடாது, அடுத்தநாளும் தொழ வேண்டாம். காரணம் தொழுகைக்கான வக்து போய்விட்டதால் அந்தத் தொழுகையை அடுத்த நாள் தொழக்கூடாது என்றனர். இதுவே இமாம் ஷாஃபிஈ மற்றும் இமாம் அபூ ஸவ்ர் அவர்களுடைய கூற்றுகளாகும்.

இந்த ஹதீஸ் (அதாவது அபூஉமைர் அறிவிக்கும் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பு) நிரூபனமானால் அதன்படி சொல்வோம் (அதாவது அடுத்தநாள் தொழுகைத் திடலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்வோம்.) என்று அபூ ஸவ்ர் அவர்கள் சொன்னார்கள்.

இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் சொல்லியதாக அவர்களிடமிருந்து கூறப்பட்டது என்னவென்றால், பெருநாளின் முதல் வக்தானது போய்விட்டது என்றால் பெருநாள் தினம் என்ற அவர்களுடைய நாள் போய்விட்டது என்பதாகும்.

இன்னும் நன்பகலுக்கு முன்பு இந்தத் தகவல் வந்தால் தொழுகை தொழுவார்கள், நன்பகலுக்கு பின்பு வந்தால் மறுநாள்தான் தொழுவார்கள் என்று அவ்ஜயி, தவ்ரி, அஹ்மது, இஷ்ஹாக். அஹ்மது போன்றோர் அபூஉமைரின் அறிவிப்பை எடுத்துக் காட்டுகிறார்கள்.

இன்னும் இப்னு முன்திர் சொல்கிறார் : அபூ உமைரின் அறிவிப்பு நிரூபனமாயிற்று அதன்படிதான் நீங்கள் சொல்ல வேண்டும்.

பிறைபற்றிய ஒரு கூட்டத்தாருக்கு மத்தியில் நிலவிய கருத்துவேறுபாடுகளைப் பற்றி இப்னு முன்திர் அவர்கள் கூறும்போது அபூ உமைரின் அறிவிப்பு நிரூபனமாயிற்று என்ற இந்த வாக்கியத்தை வைத்துதான் இப்னு முன்திர் அவர்கள் இதை ஆதாரப்பூர்வமானது என்று சொன்னதாக வாதம் வைக்கின்றனர்.

மேற்கண்ட கருத்துப்பதியின் மூலம் இப்னு முன்திர் அவர்கள் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை ஸஹீஹ் என்றா சொல்லியுள்ளார்கள். இந்த ஹதீஸ் நிரூபனமானால் அடுத்தநாள் பெருநாள் திடலுக்கு போகச் சொல்வோம் என்று எவ்வாறு இமாம் ஷாஃபிஈ அவர்களும், இமாம் ஸவ்ரி அவர்களும் சந்தேகமான வார்த்தைகளைக் கொண்டு தங்கள் சொந்தக் கருத்தைக் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறதோ, அதுபோலத்தான் இப்னு முன்திர் அவர்களின் மேற்படி கூற்றும் அவர்களின் சொந்தக் கூற்றாகத்தான் வந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இன்னும் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களும், இமாம் ஸவ்ரி (ரஹ்) அவர்களும் இதை ஸஹீஹ் என்றோ, சரியான அறிவிப்பு என்றோ கூறிடவில்லை என்பதையும் இதே இப்னு முன்திர் அவர்களின் கருத்திலிருந்து தெளிவாக அறியலாம்.

இன்னும் மேற்படி செய்தியில் இப்னு முன்திர் அவர்களின் சொந்தக் கூற்றை பார்வையிட்டவர்கள், இந்த அறிவிப்பு நிரூபனமாகவில்லை என்ற பொருளில் அமைந்த, இந்த ஹதீஸ் நிரூபனமானால் என்ற இமாம் ஷாஃபியி (ரஹ்) மற்றும் இமாம் ஸவ்ரி (ரஹ்) அவர்களின் கூற்றை ஏன் கண்டுகொள்ளவில்லை?

ஷாஃபிஈ மத்ஹபு என்ற கோட்பாடை நிறுவுவதற்காக பாடுபட்ட கத்தாபி போன்றோரின் வரிசையில்தான் இந்த இப்னு முன்திரும் உள்ளார். அபூ உமைரின் அறிவிப்பு நிரூபனமாயிற்று அதன்படிதான் நீங்கள் சொல்ல வேண்டும் என்ற இப்னு முன்திரின் கூற்றை நியாயப்படுத்தி வலியுறுத்தினால், அது இமாம் ஷாஃபியி (ரஹ்) அவர்களின் இந்த ஹதீஸ் நிரூபனமானால் என்ற கூற்றிற்கு அவர் பதில் கொடுத்துள்ளதாகத்தான் அமையும். பின்னர் ஷாஃபி மத்ஹபிற்காக பாடுவபட்டவரே இமாம் ஷாஃபிஈயை எதிர்த்து கருத்து சொன்னதாக மக்கள் விளங்கிக் கொள்வர். இருக்கின்ற பிரச்சனைகள் காணாதென்று இந்த அபூ உமைரால் தேவையில்லாத மத்ஹபு பிரச்சனையும் வரவேண்டுமா என்ன?

மேலும் இப்னு முன்திர் அவர்கள் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை அறிந்திருந்தும், அபூ உமைரைப் பற்றி எந்தத் தகவலும் கூறவில்லை. அந்த ரிவாயத்தில் இடம்பெறும் எந்த அறிவிப்பாளரைப் பற்றியும் எத்தகைய விபரங்களும் கூறவில்லை. இன்னும் அதன் ஸனது பற்றி ஸஹீஹ் என்றோ வேறு எந்த ஆய்வுகளையோ தெரிவிக்கவில்லை. அப்படி அவர்கள் கூறினாலும் அவருடைய கூற்றின் தரம் எவ்வாறு இருக்கும் என்பதற்கு நாம் மேற்சொன்ன மீஜானுல் இஃதிதாலில் இடம் பெறும் விமர்சனங்களே போதுமான சான்றாகும்.

அபூ உமைரின் அறிவிப்பு நிரூபனமாயிற்று என்று அவர் சொல்வதில் அது எப்படி நிரூபனமாகியது? ஏன் நிரூபனமாகியது? எந்த அடிப்படையில் நிரூபனமாகியது என்று விளக்க வேண்டும். போகிற போக்கில் நிரூபனமாகிற்று என்றால் உமூமத் பிரச்சனைகள், அபூ உமைர் பற்றிய விமர்சனங்கள் எல்லாம் நிரூபனமாகிவிட்டதா என்பதை அவர்கள் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு எந்தத் தகவலும் மேற்சொன்ன செய்தியில் இல்லை. இவ்வாறு எதையுமே விளக்கிடாமல் வெறுமனே நிரூபனமாயிற்று என்று அவர் கூறியுள்ளது இஸ்லாத்தில் எந்த அங்கீகாரங்களும் பெறாத ஒரு கூற்றே ஆகும்.

இப்னு முன்திர் அவர்கள் பதிவு செய்துள்ள மேற்படி கருத்து வேறுபாடுகளிலுள்ள வாசகங்களை வைத்தும், வாகனக்கூட்டம் சம்பந்தமாக வரும் அனைத்து ரிவாயத்துகளைப் பார்க்கும் போதும் ஒரு விஷயம் நமக்கு தெளிவாகப் புலப்படுகிறது. அது என்னவெனில், முப்பது தினங்கள் கொண்ட ஒரு ரமழான் மாதத்தில், 29-வது தினத்தில் உர்ஜூஃனில் கதீம் என்ற புறக்கண்ணால் பார்க்கவியலும் பிறையின் இறுதி படித்தரத்தை மக்கள் பார்த்துள்ளார்கள். அவ்வாறு பார்த்த மக்கள் பயணம் செய்து அடுத்தநாள் அதாவது ரமழான் முப்பதாவது தினத்தில் பகலின் இறுதிப் பொழுதில், நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் வருகை தந்து அவர்கள் உர்ஜூஃனில் கதீமை பார்த்ததை சாட்சியம் அளித்துள்ளார்கள். நோன்பு திறப்பதற்கு சில மணித்துளிகளே எஞ்சியிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து இப்தார் செய்யுமாறும், நாளை ஷவ்வால் முதல்நாள் நோன்புப் பெருநாள் தினம் என்பதால் காலையில் அனைவரும் திடலுக்கு விரையுமாறும் கட்டளையிட்டுள்ளார்கள் என்பதை தெளிவாக விளங்க முடிகிறது.

இன்னும் நபி (ஸல்) அவர்களின் உம்மத் கணக்கின் அடிப்படையில் இருந்துள்ளதைத்தான் இது காட்டுகிறது. காரணம் உர்ஜூஃனில் கதீம் பற்றிய தகவல் 30-வது நாளில் அவர்களுக்குக் கிடைத்ததும், 30-வது நாளுக்குறிய நோன்பின் இப்தாரையும் முடித்துவிட்டு, காலையில் மக்களை பெருநாளைக்கு தயாராகும்படி நபி (ஸல்) அவர்கள் அறிவிப்பு செய்துள்ளனர். மேலும் 30-வது நாளன்று உர்ஜூஃனில் கதீம் என்ற பிறையின் இறுதி நிலை பற்றிய தகவல் கிடைக்கும் பட்சத்தில், அந்த 30-வது நாளின் நோன்பை பூர்த்தி செய்யவேண்டும் என்பதற்கும் ஷக்குடைய நாள் என்ற ஒருமாய நாள் இஸ்லாத்தில் இல்லை என்பதற்கும் இது சாட்சியாக இருக்கிறது.

எனவே இந்த வாகனக்கூட்டம் போன்ற ரிவாயத்துகள் இந்திய ஹஜ்ரி கமிட்டியின் பிறைநிலைபாட்டிற்கும், பிறைகளை கணக்கிடுவதற்கும்தான் ஆதாரமாக அமையுமே அல்லாமல், இன்று மஃரிபு வேளையில் மறையும் பிறையை பார்த்துக்கொண்டு அது நாளைக்குரிய பிறை என்று கூறுவதற்கோ, பிறைத்தகவலைப் பெறுவதற்கோ ஆதாரமாகாது என்பதே உண்மையாகும். மேற்கண்ட இப்னுமுன்திரின் கூற்றை வைத்து வாகனக்கூட்டம் அறிவிப்பு நிரூபனமாகிற்று என்று மாற்றுக்கருத்துடையோர் இனியும் வாதிட்டால், அது இந்திய ஹிஜ்ரி கமிட்டியின் பிறை நிலைபாடு நிரூபனமாகிவிட்டது என்பதாக புரிந்து கொள்ளுங்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தொடர்ந்து படிக்க : வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா??

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

பாகம் 21, பாகம் 22,

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply