பிறையும் புறக்கண்ணும் பகுதி : 35
ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை வணங்குவோர்) கணக்கீட்டு முறையையும் பின்பற்றுகின்றனர். அந்த யூதர்களை பின்பற்றிய ஷியாக்கள், ராபிளாக்களின் வழிமுறையைத்தான் ஹிஜ்ரி கமிட்டியினர் பின்பற்றுகின்றனர். மேலும் ஹிஜ்ரி கமிட்டியினர் 'மஆஸியத்துர் ரஸூல்' - ரஸூலுக்கு மாறு செய்பவர்கள் என்றும் விமர்சிக்கப்படுவது பற்றி உங்கள் கருத்தென்ன?
விளக்கம்:
மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் சிலர் நம்மை நோக்கி, மேற்கண்ட வசை மொழிகளை வரம்பை மீறி அள்ளி வீசுகின்றனர். அவர்கள் பிறைகள் குறித்து ஆதாரமில்லாதவற்றை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து தற்போது மாட்டிக் கொண்டதால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடுதான் மேற்கண்ட வசை மொழிகள். முஸ்லிம்கள் ரமழான் மாதத்தில் ஒரு நோன்பை நோற்காமல் விட்டுவிட்டால் அது உம்மத்திற்கு ஈடு இணையற்ற பேரிழப்பு என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளதால் இவை போன்ற அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் பொருமையுடன் பதில் அளிக்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ்.
இறைவேத வரிகளையும், இறைத்தூதர் மொழிகளையும் ஆதாரமாக சமர்பித்து, இம்மார்க்கப் பணிக்கு யாரிடமும் எந்தவித கூலியையும் வாங்கிடாமல், மக்களிடம் 'ஹிஜ்ரி நாட்காட்டி' குறித்த சத்தியத்தை எடுத்துச் சொல்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ். அத்தகைய நம்மைப் பார்த்து 'மஆஸியத்துர் ரஸூல்' – 'ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்பவர்கள்' என்று துணிந்து விமர்சிக்கின்றனர். ஆடையிலும் வெளித்தோற்றத்திலும் அரபு நாட்டவரைப் போல காட்டிக் கொள்ளும் இம்முல்லாக்களுக்கு இறையச்சம் சிறிதேனும் இருந்தால் எம்மை வரம்பு மீறி விமர்ச்சித்ததற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பை கோரட்டும். அல்லாஹ்வின் கோரப்பிடிக்கும், தண்டனைக்கும் அஞ்சிக் கொள்ளட்டும்.
இன்னும் யூதர்கள் என்றும், 'மஜூஸிகள்' - நெருப்பை வணங்குவோர் என்றும் நம்மை இவர்கள் விமர்சித்து விட்டதால் பதிலுக்கு நாமும் இவர்களை போன்று தரம் தாழ்ந்து விமர்சிக்க மாட்டோம். காரணம் சக முஸ்லிம்களின் கண்ணியத்தைப் பேண வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். மார்க்கப் பணி செய்கிறேன் பேரிவழி என்று கூலிக்கு மாறடிக்கும் மேப்படியார்களுக்கு, இவ்வுயர்ந்த உணர்வுகள் இல்லாமல் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
சூரியன் எப்போது உதயமாகிறது? எப்போது மறைகிறது? போன்ற நேரக் கணக்குகள் இஸ்லாமிய கடமையான தொழுகைக்கும், நோன்புக்கும் இன்றியமையாதவை. மேற்படி சூரியன் உதயம் மற்றும் அஸ்தமன நேரங்களைக் கணக்கிட்டவர்கள் யார்? இவர்களின் இயக்கத்தில் ஏதும் விஞ்ஞானிகள் இருந்து அவர்கள் கணக்கிட்டுச் சொன்னார்களா? ஹிஜ்ரி நாட்காட்டியின் கணக்கு யூதர்களின் கணக்கு என்றால், பள்ளிவாயில்கள் தோறும் பின்பற்றப்படும் தொழுகை நேர அட்டவணை யாருடைய கணக்கு? என்பதை இவர்கள் மக்களுக்கு விளக்கிட தயாரா? மேலும் இவர்களின் இயக்கங்களின் பெயரால் அச்சிடப்படும் கிரிகோரியன் நாட்காட்டியின் தேதிகளும், அதன் கணக்கு முறையும் முஸ்லிம்களின் கணக்குதானா? இவற்றை நமக்கு விளக்கிவிட்டு பின்னர் ஹிஜ்ரி கமிட்டியினரைப் பற்றி இவர்கள் கவலை கொள்ளட்டும்.
பிறைகள் விஷயத்தில் மக்கள் விழித்துக் கொண்டு ஹிஜ்ரி கமிட்டி வெளியிட்டு வரும் பிறைகள் குறித்த சிற்றேடுகளை கையில் ஏந்தி, அதிலிருந்து கேள்விக் கணைகளை மேற்படி மார்க்கப் பிழைப்பு நடத்தும் மௌலவிகளை நோக்கி கேட்க ஆரம்பித்து விட்டனர். அக்கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் திக்குமுக்காடி வரும் மேப்படியார்கள், இதற்கு ஹிஜ்ரிகமிட்டியினரே காரணம் என்பதால் கோபங் கொண்டு படுபயங்கர ஃபத்வாக்களை நமக்கெதிராக வீசி எறிகின்றனர். அதனால்தான் ஹிஜ்ரி கமிட்டியினர் 'மஆஸியத்துர் ரஸூல்' – அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்பவர்கள் என்றுகூட நாக்கூசாமல் விமர்சிக்கின்றனர்.
மக்களின் பார்வையிலிருந்து தங்களின் தவறை திசை திருப்பும் முயற்சியே மௌலானா மௌலவிகளின் வரம்பை மீறிய வசை மொழிகளின் பிண்ணனியாகும். எனவே அவர்களையும், அவர்களது தரம்தாழ்ந்த விமர்சனங்களையும் அலட்சியம் செய்ய வேண்டுகிறோம்.