வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2016 00:00

ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லையா?

Rate this item
(6 votes)

பிறையும் புறக்கண்ணும் பகுதி : 30

விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை, மார்க்கமும் தெரியவில்லை. 'ஹிலால்' என்ற பதம் குறித்து அரபி அகராதியான காமூஸில் 'ஸின்னான்' என்று எழுதப்பட்டுள்ளதற்கு 'இரண்டு பற்கள்' என்று மொழி பெயர்த்துள்ளார்கள். மேலும் ஸூமூலி ருஃயத்திஹி என்று துவங்கும் ஹதீஸிலுள்ள 'ஹி' என்ற சொல் 'அஹில்லாஹ்' என்ற (பிறைகள் அனைத்தையும் குறிக்கும்) பன்மைச் சொல் என்றும் எழுதியுள்ளனர். இவை ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி ஞானம் கொஞ்சம்கூட இல்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

விளக்கம் :

மேற்படி வாதம் ஒரு நேர்மையற்ற வாதம் ஆகும். இஸ்லாமிய சமுதாயம் கண்ட மாபெரும் இமாம்களான இமாம் புகாரி (ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்), இமாம் திர்மிதி (ரஹ்), இமாம் அபூதாவூது (ரஹ்), இமாம் இப்னு மாஜா (ரஹ்), இமாம் நஸாஈ (ரஹ்), இமாம் தபரானி (ரஹ்), இமாம் பைஹகீ (ரஹ்) உட்பட அறிஞர்களில் பலர் அரபு மொழியைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்லர். அதில் பலர் அரபு தேசத்தில் பிறந்தவர்களும் அல்லர்.

அரபி, அஜமி என மொழியின் மீதிருக்கும் மோகத்தையும், பாகுபாட்டையும் இஸ்லாமிய மார்க்கத்தின் மூலம் வல்ல அல்லாஹ் குழிதோண்டி புதைத்து விட்டான். 'மொழியின் மீது மோகம் கொள்ளாமை' என்ற நிலை முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்லாஹ் அளித்துள்ள மாபெரும் பரிசாகும். இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த மகத்துவத்தைக்கூட விளங்காத இவர்களின் அரபுப் புலமையின் லட்சனத்தையும் நம் மக்கள் அறிந்தே வைத்துள்ளார்கள்.

இங்கு 'ஸின்' என்ற அரபுச் சொல்லுக்கு நேரடி பொருள் ஒரேயொரு 'பல்' என்பதாகும். இதன் இருமைச் சொல்லான 'ஸின்னான்' என்ற சொல்லுக்கு 'இரண்டு பற்கள்' என்றுதான் பொருள். அதன் பன்மைச் சொல்லான 'அஸ்னான்' என்றால் பல பற்கள் என்று பொருள்படும்.
மேற்படி விமர்சனத்தில் இடம்பெறும் 'ஸின்னான்' என்ற பதம் நேரடி மொழி பெயர்ப்பின்படி 'இரண்டு பற்கள்' என்றுதான் பொருள்படும். السنان الذي له شعبتان يصاد به الوحش என்ற முழுமையான வாக்கியத்தில் 'ஸின்னான்' என்ற பதம் கூர்மையான ஆயுதத்திற்கு உவமையாகக் கூப்பட்டுள்ளது என்பதை நாமும் அறிவோம்.

உதாரணமாக ஒருவருடைய பற்கள் சுத்தமாக வெண்மையாக இருப்பதை சிலாகித்துச் சொல்லும் போது Shining Teeth, Lightning Teeth என்று புகழ்வர். மேற்படி உவமையின் பொருள் பற்கள் சுத்தமாக வெண்மையானதாக இருப்பதைக் கூறுகிறது என்பதை பாமரரும் புரிந்து கொள்வர். இதே உவமைதான் அனைத்து மொழிக்கும் பொருந்தும். இருந்தாலும் Shining என்ற சொல்லுக்கு நேரடி பொருள் 'பிரகாசிக்கும்' என்று பொருள். அதுபோல Lightning என்ற சொல்லுக்கு 'மின்னல்' என்பதே நேரடி பொருளாகும். இந்த உவமையான சொல்லாடலை வைத்து 'மின்னும் பற்கள்' என்றோ, 'பிரகாசிக்கும் பற்கள் ' என்றோ யாரும் கூறினால் அவருக்கு ஆங்கில மொழிப் புலமை இல்லை என்று யாராவது கூறுவார்களா? - அப்படி கூற மாட்டார்கள். காரணம் பற்கள் மின்னலைப் போல மின்னுவதுமில்லை, பிரகாசமாக ஒளிர்வதும் இல்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதன் வெண்மையான நிறத்தைத்தான் இவ்வாறு சிலாகித்துக் கூறப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்வோம். அதுபோல நேரடிப் பொருளை கையாண்டு 'வெண்ணிறப் பற்கள்' என்று கூறினாலும் அதன் பொருள் மாறுபடுவதில்லை. அப்படி நேரடியாகக் கூறுபவர்களை நோக்கி பார்த்தீர்களா ' மின்னும் பற்கள்' என்றோ, 'பிரகாசிக்கும் பற்கள்' என்று உவமையாகக் கூறத் தெரியவில்லை, இவருக்கு தமிழ் மொழியறிவுகூட இல்லை என்று எவரும் வாதம் வைத்தால் அவரை பற்றி நாம் எப்படி புரிந்து கொள்வோம். இதுபோன்ற ஒரு விமர்சனம்தான் இந்த ஸின்னான் பற்றிய மாற்றுக் கருத்துடையோரின் விமர்சனம்.

ஒரு சொல்லுக்கு நேரடி அர்த்தத்தையும், உவமையான அர்த்தத்தையும் கொள்ள முடியும் நிலையில் மொழி பெயர்ப்பாளர் ஏதேனும் ஒரு பொருளை கையாண்டால் அவருக்கு அந்த மொழியே தெரியவில்லை என்று பேசித்திரிவது நியாயமாகுமா? இது காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறென்ன?. அரபு மொழி அகராதிகள் மார்க்க ஆதாரங்கள் போன்றும், அது அல்லாஹ்விடமிருந்து வஹியாக இறங்கியதைப் போன்றும் நினைத்துக் கொண்டு 'அரபி அரபி' என்று இவர்கள் புலம்பித் திரிவதைப் பார்த்தால் நமக்கு பரிதாபமாகத்தான் உள்ளது. அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் ஒரு சொல்லை பயன்படுத்தி இருக்கையில், அதை மனிதன் இயற்றிய இலக்கணத்தோடு உரசிப் பார்க்கும் அளவிற்கு இவர்களின் அரபு மொழி அகந்தை சென்று விட்டதைப் பார்க்கிறோம். இவர்களுக்கு அல்லாஹ்தான் நேர்வழி காட்ட வேண்டும்.

பிறையும் புறக்கண்ணும் என்ற தலைப்பில் அமைந்த சுமார் 350 பக்கங்களைத் தாண்டிய இந்த ஆய்வு நூலில் பிறைகள் குறித்து பல்வேறு விஷயங்களை நாம் ஆய்வுசெய்து தெரிவித்துள்ளோம். இந்நிலையில் 'ஸின்னான்' என்ற சொல்லுக்கு பொருள் வைக்கும் விஷயம்தான் பெரிய பிரச்சனையாக மேற்படி மௌலவிகளுக்கு தெரிந்துள்ளது. இவர்களுக்கு பல் விஷயம்தான் பெரிதாகத் தெரிந்துள்ளது போலும். ஏற்கனவே பிறைகள் விஷயத்தில் பல அபத்தக் கருத்துக்களை முன்வைத்ததிலும், பலஹீனமான செய்திகளை ஹதீஸ் என்று மக்களிடம் போதித்ததிலும் மூக்கறுபட்டவர்கள் இப்போது பற்கள் பற்றி இழுத்துள்ளார்கள். இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி பற்றியும் பிறைகள் குறித்தும் நாம் எடுத்து வைத்துள்ள தெளிவான ஆதாரங்களையும், ஆணித்தரமான வாதங்களையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. அவர்களின் புறக்கண் பிறை நிலைப்பாடுகள் மீண்டும் மீண்டும் தோல்வியுற்றதை ஒப்புக் கொண்டதைத்தான் இவர்களின் மேற்படி 'ஸின்னான்' வாதம் தெளிவாகக் காட்டுகிறது.

ஆக 'ஸின்னான்' என்ற சொல்லை அதன் நேரடியாக மொழிபெயர்ப்பான 'இரண்டு பற்கள்' என்று எவரும் கூறினால் அவருக்கு அரபுமொழி தெரியவில்லை என்று ஆகிவிடாது. அதுபோல 'ஸின்னான்' என்ற சொல்லை இருமுனைகள் கொண்ட கூர்மையான ஆயுதத்திற்கு உவமையாக மொழிபெயர்த்தால், அவர் அரபு மொழியை கரைத்துக் குடித்தவர் என்றும் ஆகிவிடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.

'ஸின்னான்' என்ற சொல்லைப் பிடித்துக் கொண்டு அரபுப் புலமை தங்களுக்கே உள்ளதாக ஆர்ப்பரிக்கும் மேற்படி மௌலவிகள் இதுவரை பிறைகள் பற்றிய தங்களின் நிலைப்பாடுகளை தலைப்பு வாரியாக மக்களுக்கு சமர்ப்பிக்க வில்லையே அது ஏன்?. ஹிஜ்ரி கமிட்டியினருக்கு 'அரபி தெரியவில்லை', 'அரபி தெரியவில்லை' என்று கூச்சலிடுகின்றனர். 'அரபி' என்றால் 'அரபு நாட்டைச் சார்ந்தவர்' என்று பொருள். அரபுநாட்டுக்காரரை எங்களுக்கு ஏன் தெரிய வேண்டும்? மார்க்கத்தைச் சொல்வதற்காக அரபிகளிடம் கூலி வாங்குபவர்கள் நாங்கள் இல்லையே!. அரபுக்கும், அரபிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் நம்மை நைய்யாண்டி செய்வது மிகப் பெரிய வேடிக்கையாக இல்லையா?

அடுத்ததாக 'ஸூமூலி ருஃயத்திஹி என்று துவங்கும் ஹதீஸிலுள்ள 'ஹி' என்ற சொல் 'அஹில்லாஹ்' என்ற (பிறைகள் அனைத்தையும் குறிக்கும்) பன்மைச் சொல் என்றும் எழுதியுள்ளனர், இவர்களுக்கு ஆண்பால் பெண்பால் என்ற வித்தியாசம் கூட தெரியவில்லை' என்று வாதம் வைத்துள்ளதையும் பார்ப்போம். முதலில் 'ஸூமூலி ருஃயத்திஹி' என்ற சொற்றொடர் இடம்பெறும் ஹதீஸை இவர்கள் முழுமையாக படித்துவிட்டு பிறகு பிரச்சாரம் செய்ய வேண்டுகிறோம். அந்த ஹதீஸ் பின்வருமாறு

عبد الرزاق عن عبد العزيز بن أبي رواد عن نافع عن بن عمر قال قال رسول الله صلى الله عليه و سلم إن الله جعل الأهلة مواقيت للناس فصوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فعدوا له ثلاثين يوما . مصنف عبد الرزاق -

''நிச்சயமாக அல்லாஹ் பிறை(யின் படித்தரங்க)ளை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள். அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.'' அறிவித்தவர் இப்னு உமர் (ரழி). நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306)

தற்போது 'ஹி' என்ற சொல் இடம் பெறும் நிலையில் பிறையின் படித்தரங்கள் என்று பன்மைப் பொருளை அது எவ்வாறு குறிக்கும்? பன்மைக்கு 'ஹா' அல்லவா வரும்? என்பதே அவர்களின் கேள்வி. ஸூமூலி ருஃயத்திஹி என்ற சொற்றொடர் குறிப்பது என்ன? என்பதை சற்று நிதானமாக அவர்கள் சிந்தித்திருந்தால் இந்த அளவிற்கு தடுமாற்றங்கள் அவர்களுக்கு வந்திருக்காது.

முதலில் இந்த ஹதீஸை ரிவாயத்து செய்தது யார்? ஸூமூலி ருஃயத்திஹி என்று சொன்னது யார்? ஹிஜ்ரி கமிட்டியினரா? இல்லையே!. நபி (ஸல்) அவர்கள் இப்படி கூறியுள்ளார்கள் என்றால் நபி (ஸல்) அவர்கள் இதுபோன்ற இலக்கணப் பிழைகளோடு பேசுவார்களா? என்று இவர்கள் சிந்திக்க மறந்தது ஏன்?

தமிழ் மொழியில்கூட ஒருமை, பன்மை, உயர்தினை, அஃரினை, நேரடி பேச்சு, மறைமுகப் பேச்சு, உவமானம், உவமேயம், உவம உறுபு போன்ற தமிழ் இலக்கணங்களை இவர்கள் இன்னும் அறியாமல் இருப்பதை இவர்களின் மேடைப் பேச்சிலிருந்தே தெரிந்து நாம் கொள்ளலாம். இந்நிலையில் அரபு இலக்கணத்தைப் பற்றி இவர்கள் வாதிப்பது நகைப்புக்குரியதே. ஒருவேளை அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களும் இலக்கண விஷயத்தில் இவர்களைப் போலத்தான் இருந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டார்கள் போலும். அப்படி அல்ல நபி (ஸல்) அவர்கள் மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறார்கள்.

அதாவது மேற்கண்ட ஹதீஸில் 'பிறைகள்', அல்லது 'பிறையின் படித்தரங்கள்' என்று பொருள்படும் 'அஹில்லாஹ்' என்ற அரபுச் சொல் பெண்பால் ஆகும். மேலும் அது பன்மைச் சொல்லுமாகும். இருப்பினும் பிறையின் படித்தரங்கள் என்று அழைக்கப்படுகின்ற அஹில்லாஹ்வானது சந்திரன் (கமர்) என்ற ஒருமையான ஒரு கோளின் பல வடிவ நிலைகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் ஸூமூலி ருஃயத்திஹி - ('ஹி') என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

'கமர்' என்று அரபுமொழியில் அழைக்கப்படும் அந்த சந்திரன், அரபு மொழி இலக்கியத்தின் படி ஆண்பால் ஆகும். மேலும் அது ஒருமையான சொல்லுமாகும். ஆண்பாலைக் குறிப்பதற்கு ' ஹி ' என்ற சொல்லும், பெண்பாலைக் குறிப்பதற்கு ' ஹா ' என்ற சொல்லும் பயன்படுத்தப்படுவது அரபு மொழி இலக்கணத்தின் ஆரம்ப அடிப்படை என்பதை அனைவரும் அறிவர். எனவேதான் நபி (ஸல்) அவர்கள், சந்திரன் (கமர்) என்ற ஒருமையான ஒரு கோளின் பல வடிவ நிலைகளின் காட்சிகளை கவனித்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். மேலும் அந்த வடிவநிலை மாதத்தின் இறுதிநாள் மறைக்கப்படுவதைப் பற்றியும் ரத்தினச் சுறுக்கமாக விளக்கியுள்ளார்கள். எனவே ஸூமூலி ருஃயத்திஹி என்ற சொற்றொடரில் இடம்பெறும் 'ஹி ' என்ற எழுத்து அதற்கு முன்னதாக இடம்பெறும் ''இன்னல்லாஹ ஜஅல்லல் அஹில்லத மவாகீத்து லின்னாஸ்..'' என்ற வாக்கியத்திலுள்ள 'அஹில்லாஹ்' என்பதைக் குறிக்கும் என்று ஹிஜ்ரி கமிட்டி சொன்னதுதான் சரியான என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.

இன்னும் நாம் முன்னர் குறிப்பிட்டுள்ள இப்னு ஹூசைமாவில் 1789-வது ஹதீஸாக இடம்பெறும் ''ஃபஇதாரய்துமூஹூ'' என்ற சொற்றொடரிலுள்ள 'ஹூ' என்ற ஓரெழுத்துச் சொல்லும் இதுபோன்றுதான் பொருள்படும். மேற்படி 'ஹி ' என்ற சொல் 'ஹிலால்' என்று ஒருமையைத்தான் குறிக்கும் என்றும் அதை புறக்கண்களால் பார்ப்பதற்குத்தான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றும் நாக்கூசாமல் பேசியுள்ளார்கள். ஒரு வாதத்திற்காக 'ஹிலால்' என்றே வைத்துக் கொள்வோம். ஒருரேயொறு நாளில் தென்படும் சந்திரனின் படித்தரத்தையா இந்த 'ஹிலால்' என்ற சொல் குறிக்கிறது? ஹிலால் என்பது ஒரு சந்திர மாதத்தின் சுமார் 14 படித்தரங்கள் வரை குறிக்கும் என்பதை காமூஸுல் முஹீத், தாஜுல் உருஸ், லிஸானுல் அரப், ஸிஹ்ஹா ஃபில் லுஹா போன்ற அரபு இலக்கண, இலக்கிய அகராதிகளிலிருந்து அடுக்கடுக்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம்.

இதை இன்னும் விரிவாகப் புரிந்து கொள்வதற்கு மேற்படி அதே 'அஹில்லாஹ்' என்ற சொல் இடம்பெறும் குர்ஆன் வசனத்தை படியுங்கள்

يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ

பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களுக்குக் காலம் காட்டியாகவும், இன்னும் ஹஜ்ஜூக்கும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)

மேற்படி குர்ஆன் வசனத்தில் இடம்பெறும் 'ஹிய' என்ற சொல், பெண்பால் ஒருமைக்கும், பெண்பால் பன்மைக்கு பொருந்தும் பொதுவான ஒரு சொல்லாகும். சந்திரன் (கமர்) என்ற சொல் ஆண்பாலாகவும், ஒருமையாகவும் உள்ள நிலையில், அதிலிருந்து பிறந்த சந்திரனின் வடிவநிலைக்கு (அஹில்லாஹ்) பெண்பாலில் குறிப்பது சரியாகுமா? என்ற மேற்படி மௌலவிகள் இந்த குர்ஆன் ஆயத்திற்கும் கேள்வி கேட்கலாம். ''யஸ் அ லூனக அனில் அஹில்லாஹ் குல் ஹிய...'' என்று வரும் இந்த குர்ஆன் ஆயத்திற்கு விளக்கமாகத்தான் முஸன்னஃப் அப்துர்ரஸாக் கிரந்தத்தின் 7306-வது ஹதீஸ் உள்ளது. ஆக அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கு அரபு மொழி இலக்கணம் தெரியவில்லை என்று சொல்ல வருகிறார்கள் போலும் (நவ்வூதுபில்லாஹ்) - அல்லாஹ் நம்மைப் பாதுகாக்கட்டும்.

அரபு மொழிப் புலமை இல்லாத தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களிடம் பேசும்போது, ஆடையிலும் பேச்சு வழக்கிலும் அரபு நாட்டவரைப் போல இவர்கள் காட்சியளிக்கின்றனர். மேற்படி மௌலவிமார்களே! நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற அரபுமொழிப் புலமையைக் காட்டிவிட்டால், பிறை விஷயத்தில் நீங்கள் விட்டு அடிக்கும் அனைத்தும் மார்க்கம் என்று ஆகிவிடாது. உங்கள் தற்பெருமை இறுதியில் அல்லாஹ்வுக்கு, தூதருக்கு எதிரான ஒரு நிலையை உங்களைக் கொண்டு சேர்க்கும். பொதுமக்களும் உங்கள் அரபு மொழி அகம்பாவத்தை அறிந்து அதை குப்பையில் வீசி எறிந்துவிட்டு குர்ஆன் சுன்னா வலியுறுத்தும் பிறை கணக்கீட்டு கொள்கைக்கு அணி திரள்வார்கள் என்பதை சொல்லி வைக்கிறோம்.

மக்களே! மேலும் அரபுப் புலமை தங்களுக்கே உள்ளதாக தம்பட்டம் அடிக்கும் மேற்படி மௌலவிகள் பிறைகள் பற்றி இதுவரை கூறியுள்ளது என்ன தெரியுமா?

• ஒரு மாதத்தின் 29-வது நாள் மேற்கு திசையில் நோக்கி மஃரிபு வேளையில் பிறை பார்க்க வேண்டும் என்கின்றனர்.
பிறை மேக மூட்டத்தினால் மறைக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டுதான் இஸ்லாமிய மாதங்கள் துவங்குவதுபோல பிரச்சாரம் செய்கின்றனர்.
• நாம் பார்ப்பது மூன்றாம் பிறைதான் ஆனால் அதுதான் முதல் பிறை என்று கூறுகின்றனர்.
• பிறந்த பிறையைப் பார்த்த தகவல் எவ்வளவு தூரத்திலிருந்து வந்தால் ஏற்றுக் கொள்வது போன்ற கற்பனை சட்டத்திலேயே காலம் கழித்து வருகின்றனர்.
• பிறை பார்த்தத் தகவல் எவ்வளவு தாமதமாக வந்தாலும் அந்த அடிப்படையில் செயல்படலாம் என்று இல்லாத வாகனக்கூட்ட அறிவிப்பை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
• பெருநாள் தினத்தை விட்டுவிட்டு அடுத்த நாளிலும் பெருநாள் தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.
• எங்கு பிறை பார்த்தீர்களோ அங்கு போய் பெருநாள் தொழுகை தொழுது கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அவர்கள் மீது இட்டுக்கட்டுகின்றனர்.

இவ்வாறு பிறைகள் விஷயத்தில் அரபுப் புலமை வாதம் பேசுவோரின் நிலை இந்த அளவிற்கு படுபாதாளத்தில் உள்ளது. இவற்றில் ஒவ்வொரு மௌலவிகளும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் இருப்பதும் தெரிகிறது. ஆக மொத்தத்தில் நாம் அறிந்தவரை பிறைகள் பற்றிய உருப்படியான ஆய்வுகளை ஹிஜ்ரி கமிட்டியினரைத் தவிர வேறு எவரும் செய்ததாகத் தெரியவில்லை. இதுதான் உண்மையும் கூட.

ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் அரபு மொழிக்கு எதிரானவர்கள் அல்லர். அரபு மொழியை நன்றாகப் படித்தவர்களிலும் மார்க்கத்தை விளங்காதவர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாத ஒன்றுமல்ல. அதுபோல அரபு மொழி தெரியாத முஸ்லிம்களில் சிறந்த சிந்தனையாளர்கள் கணிசமாக இருக்கின்றனர் என்பதையும் ஒப்புக் கொள்ளுங்கள் என்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள், மக்கத்து குறைஷி ஆலிம்களின் தலைமைப் பீடமாக இருந்த தாருந்நத்வா அறிஞர்களிடம் இஸ்லாம் என்னும் இறைச்செய்தியை எடுத்துரைத்தபோது அதன் ஆலிம்களாக வீற்றிருந்த அபூஜஹிலும், அவனுடைய கூட்டாளிகளும் நபி (ஸல்) அவர்களுக்கு சவால் விட்டு இதே அரபு மொழி இலக்கணப் பெருமையைத்தான் பேசினார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். உண்மையை மறைத்து பல பொய்களை இட்டுக்கட்டி சத்தியத்தை எதிர்த்ததால் அவர்கள் அனைவரும் அழிந்தொழிந்தனர் என்பது மறக்கவியலாத வரலாறு. மொழிவாதம் பேசும் இவர்களின் வாதத்திற்கு இதையே பதிலாக அளிக்கிறோம்.

Read 1512 times Last modified on வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2016 12:30