வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00

பிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா?

Rate this item
(8 votes)

பிறையும் புறக்கண்ணும் பகுதி : 29

விமர்சனம்:
ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை புறக்கண்களால் பார்க்க வேண்டும், பிறை பார்த்த தகவலைப் பெறவேண்டும், மேகமூட்டம் ஏற்பட்டால் மாதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றது. இது தவிர்த்து நான்காவது நிலை என்று ஒன்றுமில்லை.

விளக்கம்:

மேற்கண்ட மூன்று நிலைபாடுகள்தாம் மார்க்கம் என்பதற்கும், அவற்றைத் தவிர்த்து நான்காவது நிலைபாடு ஏதும் இல்லை என்பதற்கும் குர்ஆன் சுன்னாவிலிருந்து நேரடி ஆதாரங்களைத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம். இன்றுவரை நமது கேள்வி கிணற்றில் போட்ட கல்லாகத்தான் கிடக்கிறது.

ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறந்த பிறையை மஃரிபு வேளையில் புறக்கண்களால் பார்த்த பிறகுதான் அமல் செய்ய வேண்டும் என்பது மார்க்கத்தின் பெயரால் மக்களிடையே போதிக்கப்பட்டுள்ள தவறான சிந்தனை என்பதை நாம் பலமுறை விளக்கி விட்டோம்.

ஒரு கிழமைக்கான தேதியை மாற்றும் சக்தியை அல்லாஹ் மேகமூட்டத்திற்கு வழங்கவில்லை. மேலும் 'ஃபஇன்கும்ம' என்ற அரபுப் பதத்திற்கு 'மேக மூட்டம்' என்றும் பொருளில்லை. இவற்றை திரும்பத் திரும்ப நாம் விளக்கியும் இவர்கள் அடம் பிடிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அப்படியானால் மேகமூட்டம்தான் பிறையையும், மாதத்தையும் தீர்மானிக்கிறது என்றால் தமிழகப்பிறை, தேசியப்பிறை மற்றும் சர்வதேசப்பிறை என்ற பெயர்களில் அவரவர்கள் தங்களின் நிலைப்பாட்டை அடையாளப்படுத்தக் கூடாது. மாறாக மேகமூட்டப்பிறை அல்லது மேகப்பிறை நிலைப்பாடு என்றுதான் அவர்கள் கூறவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தைச் சரியாகத் துவங்குவதற்காக, ஷஃஅபானுடைய நாட்களை மனனமிடும் அளவிற்கு கவனிப்பார்கள் என்பது யாரும் மறுக்கவியலாத ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும் (அபூதாவூது 1993). ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும்? என்பதை ஒரு வாரத்திற்கு முன்னரே நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் அறிந்து வைத்திருந்தனர் (பைஹகீ-8018, இப்னு குஜைமாஹ்-2024). இவ்வாறு துல்லியமாக மாதங்களைத் துவங்கி சரியான தினத்தில் மாதத்தை முடிக்கும் பழக்கத்தில் நபி (ஸல்) அவர்களும், அன்றைய ஸஹாபாக்களும் இருந்துள்ளார்கள். இந்நிலையில் தங்கள் நடைமுறைக்கு மாற்றமாக மேகமூட்டம் ஏற்பட்டால் அந்த மாதத்தில் ஒருநாளைக் கூட்டி முப்பதாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்களா? என்பதை சிந்தியுங்கள்.

'மேகமூட்டம் ஏற்பட்டால் அந்த மாதத்தில் ஒருநாளைக் கூட்டி முப்பதாக ஆக்கிக் கொள்ளுங்கள்' என்பதே நபி (ஸல்) அவர்களின் கட்டளை என்று இன்றைய மௌலவிகள் கூறித்திரிவது நபி (ஸல்) அவர்கள் தங்களின் சொந்த நடைமுறைக்கு முரணாக கட்டளை இட்டார்கள் என்று அவர்கள்மீது அவதூறு சுமத்துவதாகும்.

மேற்கண்ட மூன்று நிலைபாடுகளைத் தவிர்த்து நான்காவது நிலைப்பாடு இல்லை என்றால், சவுதி தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்து அவர்களின் பிறை அறிவிப்புக்காக காத்திருப்பது என்ன நிலைபாடு? நபி (ஸல்) அவர்கள் பிறைத் தகவலை சவுதி தொலைக்காட்சி மூலம் பெறுவதற்கு ஏதும் சிறப்பு அனுமதி அளித்துள்ளார்களா?

மேற்கண்ட மூன்று நிலைபாடுகள்தான் மார்க்கம் என்றால் அதை பிரச்சாரம் செய்யும் மேற்படி இயக்கத் தலைவர்கள் தங்கள் தொண்டர்களுக்கும், தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளுக்கும் ரமழான் துவக்கம், முடிவு பற்றி கடிதம் எழுதுவதேன்? இது என்ன நிலைபாடு என்று விளக்குவார்களா?

இன்று உலகில் சுமார் 150 கோடிக்கும் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறோம். இஸ்லாமிய நாட்காட்டியில் ஒரு கிழமைக்கு மூன்று தேதிகளும், ஒரு தேதிக்கு மூன்று கிழமைகளும் ஏற்படுத்தப்பட்டு நாட்காட்டியின் அடிப்படையே தகர்க்கப்பட்டு விட்டது. இதனால் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளை சுட்டிக்காட்டி மேற்படி நாளில் வருகை தாருங்கள் என்று யாரையும் அழைக்கக்கூட இயலாத துர்பாக்கிய நிலை உலக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாம் கேட்பது என்னவெனில் இத்தகைய அவல நிலையைப் போக்கிட முரண்பாடற்ற, துல்லியமான, குர்ஆன் சுன்னா அடிப்படையில் அமைந்த ஒரு இஸ்லாமிய சந்திர நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசியமான ஒன்றா இல்லையா?

அவ்வாறு துல்லியமான இஸ்லாமிய நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசர அவசியம்தான் என்றால், மஃரிபு வேளையில் மறையும் பிறையை புறக்கண்களால் பார்த்து விட்டு அடுத்த நாளை முதல் நாளாகக் கொள்ளும் பிறை நிலைபாடுகளை வைத்துக் கொண்டு அத்தகைய நாட்காட்டியை ஏற்படுத்திட இயலுமா?

துல்லியமான இஸ்லாமிய நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசியமில்லை என்று கருதினால், நாட்காட்டியையும், அதை கணக்கிடுவதையும் வலியுறுத்தும் 2:189, 10:5, 55:5, 17:12, 9:36,37, 36:39,40, 6:96 போன்ற பல இறை வசனங்கள் வலியுறுத்துவது என்ன? பதில் சொல்வார்களா? இஸ்லாம் பரிபூரண மார்க்கம் என்று அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். அத்தகைய பரிபூரண மார்க்கத்தில் நாட்காட்டி என்பதும் உள்ளடங்கியதா இல்லையா? அல்லது நாட்காட்டியைப் பற்றிய இஸ்லாம் ஒன்றும் தெளிவுபடுத்திட வில்லை என்று கூற வருகிறார்களா?

குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டுதல்படி பிறைகளைத் துல்லியமாகக் கணக்கிடலாம் என்பதையும், பிறைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு இஸ்லாமிய நாட்காட்டியை இந்த மனித சமுதாயத்திற்கு வழங்கிடவும் வேண்டும் என்றும் நாம் கூறுகிறோம். இதற்கு குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் நேரடி ஆதாரங்களை அடுக்கடுக்காக எடுத்து வைத்துப் பிரச்சாரம் செய்கிறோம். அவற்றை மறுத்து வாதங்களை வைக்க முடியாதவர்கள் 'மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றது' என்கின்றனர். இன்னும் 'மேகமூட்டம் மறைத்தால் அந்த மாதத்தில் ஒரு நாளைக்கூட்டி முப்பதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்' என்றும் கூறுகின்றனர். இவ்வாறு இவர்கள் கூறித்திரிவது பிறை விஷயத்தில் அவர்களின் நிலைபாடுகள் தோல்வியைத் தழுவியதைத் தெளிவாக பறை சாற்றுகின்றன.

Read 1111 times Last modified on வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 05:11