நாங்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டோம். பதுனுநக்லா என்ற இடத்தில் இறங்கினோம். அப்போது பிறையைக் கவனித்தோம்;. அக்கூட்டத்தில் சிலர் இது மூன்றாவது நாளுக்குரியது (இப்னு ஃதலாஃத்) என்றனர். மற்றும் அக்கூட்டத்தில் சிலர் இரண்டாவது நாளுக்குரியது (இப்னு லைலத்தைன்) என்றனர். அப்பொழுது நாங்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. நாங்கள் நிச்சயமாக பிறையை கவனித்தோம் சில நபர்கள் அது மூன்றாம் நாளுக்குரியது என்றும் மேலும் சில நபர்கள் அது இரண்டாம் நாளுக்குரியது என்றும் கூறினோம். அதற்கவர்(இப்னு அப்பாஸ் ரழி) நீங்கள் எந்தக் கிழமையில் கவனித்தீர்கள்? என்று கேட்டார்கள். நாங்கள் இன்ன இன்ன கிழமைகளில் கவனித்தோம் என்று விடையளித்தோம். அதற்கவர்கள்(இப்னு அப்பாஸ் ரழி), நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள். அறிவித்தவர் : அபுல்பக்தரீ, (நூல்: முஸ்லிம் 1885)
- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ سَمِعْتُ أَبَا الْبَخْتَرِىِّ قَالَ أَهْلَلْنَا رَمَضَانَ وَنَحْنُ بِذَاتِ عِرْقٍ فَأَرْسَلْنَا رَجُلاً إِلَى ابْنِ عَبَّاسٍ - رضى الله عنهما - يَسْأَلُهُ فَقَالَ ابْنُ عَبَّاسٍ - رضى الله عنهما - قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ اللَّهَ قَدْ أَمَدَّهُ لِرُؤْيَتِهِ فَإِنْ أُغْمِىَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ».( صحيح مسلم 2582 - (3 / 127)
நாங்கள் தாதுஇரக் எனும் இடத்தில் ரமழான் பிறையைப் பார்த்தோம். அதுபற்றிய விளக்கம் பெறுவதற்காக ஒருவரை இப்னு அப்பாஸ் (ரழி) யிடம் அனுப்பினோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்கள். அறிவித்தவர் : அபுல்பக்தரீ, (நூல்: முஸ்லிம் 2582).
மேற்கண்ட இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறும் முதலாவது அறிவிப்பில் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்றும், இரண்டாவது அறிவிப்பில் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அது உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்கள்.
மேற்கண்ட இவ்விரு ஹதீஸ்களிலும் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பிறகே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றோ, 29-வது நாள் பின்னேரம் 30-வது இரவு என்ற ஒரு நாளில் மட்டும் பிறையை பார்க்க வேண்டும் என்றோ கூறப்படவில்லை என்பதை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுகிறோம்.
ஒவ்வொரு கிழமைக்குறிய பிறையும் அந்தந்த கிழமையின் தேதியைக் குறிக்கும் என்பதையும், இன்று மஃரிபு வேளையில் மேற்குத்திசையில் பார்க்கும் பிறை அடுத்த நாளுக்குறியது அல்ல என்பதையும் தெளிவாக விளக்கும் முகமாகத்தான் எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்ற இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் இரத்தினச் சுருக்கமான வார்த்தையிலிருந்து புலனாகிறது.
மேலும் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் கும்மாவுடைய நாள் என்னும் புவிமைய சங்கமதினம் - (Geocentric Conjunction Day) இருபத்து ஒன்பதாவது நாளிலோ, முப்பதாவது நாளிலோ இருப்பின் பிறை புறக்கண்களுக்குத் தெரியாத அந்த 'கும்மா'வுடைய நாளையும் மாதத்தோடு சேர்த்து பூர்த்தி செய்ய வேண்டும் என்று நாம் முன்னர் கூறியுள்ளதை நினைவு படுத்தும் முகமாக நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்ற சொற்றொடர் அமைகிறது என்பதையும் கவனிக்க வேண்டுகிறோம்.
முஸ்லிம் கிரந்தத்தில் 1885-வது ஹதீஸாக வரும் பதுனுநக்லா என்ற இடத்தில் பிறை பார்க்கப் பட்டது சம்பந்தமாக அபுல்பக்தரீ அவர்கள் அறிவிக்கும் மேற்படி ஹதீஸ், நபி(ஸல்) அவர்கள் காலத்து மக்கள் அனைத்து நாட்;களும் பிறையைப் பார்க்கும் வழக்கத்தைத்தான் கொண்டிருந்தார்கள் என்பதற்கு மிகத் தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது.
இன்னும் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள் என்ற வாசகத்தை வைத்து, எந்தக் கிழமையில் பிறை பார்க்கப்படுகின்றதோ அது அந்தக் கிழமைக்குரிய பிறை என்ற பிறைசார்ந்த விஞ்ஞான உண்மையையும் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது பிறை முதல் தேதியைக் காட்டினால் மாதத்தின் முதல் நாளில் நாமும் இருக்கவேண்டும். பிறை ரமழானின் ஏழாவது நாளைக் காண்பித்தால் நாமும் ஏழாவது நோன்பை பிடித்திருக்க வேண்டும் என்று நாம் முன்னர் கூறியதை இங்கு நினைவு படுத்துகிறோம். இதைத்தான் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் மேற்காணும் ரிவாயத்தும் உறுதிப்படுத்துகிறது.
எனவே இவை பிறைகளின் அனைத்துப் படித்தரங்களையும் கவனித்துக் கணக்கிட்டு வரவேண்டும் என்ற ஹிஜ்ரி கமிட்டியின் பிறைநிலைப்பாட்டை தெரிவிக்கும் ஆதாரங்களே அல்லாமல் பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்ப்பதற்கு ஆதாரமாக அமையவில்லை என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல அறியலாம்.
'லைல்' என்ற அரபிச் சொல்தான் இரவு என்பதைத் தனித்துக் குறிக்கும் சொல்லாகும். 'லைலத்' (லைலஹ்) என்றால் இரவு பகல் கொண்ட ஒரு முழுநாளையும் குறிக்கும் அரபிப் பதமாகும். மேற்கண்ட பதுனுநக்லா சம்பவத்தில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறும் அந்த செய்தியில் ஃபஹூவ லி லைலதின் ரஅய்த்துமூஹு (فهو لليلة رأيتموه) என்ற சொற்றொடருக்கு எந்தக் கிழமையில் பிறை பார்க்கப்படுகின்றதோ அது அந்தக் கிழமைக்குரிய பிறை என்பதை விளங்கி பிரித்தறியாமல், அதிலுள்ள 'லைலத்' என்ற பதத்திற்கு கிழமை, நாள் என்ற பொருள் இருக்க அதை இரவு என்று தவறாக மொழிபெயர்த்து பிரச்சாரம் செய்கின்றனர்.
லைலஹ் (லைலத்) என்ற பதம் எண்ணிக்கை மற்றும் கிழமைகள் குறித்த சொற்களுடன் சேர்ந்து வரும் போது, பகலும் இரவும் கொண்ட முழுமையான நாளையே குறிக்கும். இன்னும் லைலஹ் என்ற பதம் 'யவ்ம்' என்ற பதத்துடன் இணைந்து வரும் இடங்களில் மட்டும்தான் லைலஹ் என்பதற்கு இரவு என்றும், 'யவ்ம்' என்ற பதத்திற்கு பகல் என்றும் மொழிபெயர்க்கப்படும். பொதுவாக அரபி மொழிவழக்கில் இரவிற்கு லைல் என்ற பதமே பயன்படுத்தப்படும் என்பதையெல்லாம் குரைப் சம்பவத்தில் நாம் முன்னரே விளக்கியுள்ளோம்.
குரைபுடைய சம்பவத்திற்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் எவ்வித நேரடித் தொடர்பும், சம்பந்தமும் இல்லாத நிலையிலும், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் எங்களுக்குக் கட்டளை இட்டார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக வந்துள்ள வாசகத்தைப் பிடித்துக் கொண்டு அந்த குரைபு சம்பவத்தை ஹதீஸ்தான் என்று அடம்பிடிப்பவர்கள், ஸஹீஹூ முஸ்லிம் 1885-வது ஹதீஸாக இடம்பெற்றுள்ள மேற்படி நபிமொழியில் 'அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்' என்ற இந்த சொற்றொடரை கண்டும் காணாமல் இருப்பது ஏனோ? இதை மக்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லி விட்டால் ஹிஜ்ரி கமிட்டியின் பிறை நிலைப்பாட்டை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள் என்ற அச்சம்தான் காரணமா? யாமறியோம்.
மேலும் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கியுள்ளான் என்பதை பிறையைப் பார்க்கும் வரை மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று தவறான பொருளில் மாற்றுக் கருத்தடையோர் புரிந்து கொண்டனர். அதன் காரணமாக அவர்கள் பின்வருமாறு கூறுகின்றனர். அதாவது, வானில் பிறை இருப்பதோ, கணிக்கப்படுவதோ, அல்லது வேறு எங்கோ பார்த்ததாகத் தகவல் கிடைப்பதோ பிறையைத் தீர்மானிக்க உதவாது. மாறாக நாளைத் தீர்மானிக்க நமது பார்வையில் தென்படுவது மட்டுமே ஒரே அளவு கோல் என்று இந்த ஹதீஸ் மிகத் தெளிவாகப் பறை சாற்றுகிறது. பிறையைப் பார்க்கும் வரை மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்? என்ன அற்புதமான வாசகம் என்று பாருங்கள். இப்படி அவர்களின் வேடிக்கையான ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' (إن الله مده للرؤية) என்பதற்கு மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று தவறான பொருளை மாற்றுக் கருத்துடையோர் தெரிவிக்கின்றனர். சரி 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்பதை நீட்டியுள்ளான் என்று ஒரு வாதத்திற்கு பொருள் கொள்வோம். மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று அவர்களே கூறும் சொற்றொடரின் உட்பொருள் என்ன என்பதையாவது மாற்றுக் கருத்துடையவர்கள் விளங்க முற்பட்டார்களா என்றால் அதுவுமில்லை.
இதை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால், அல்லாஹ் நமக்கு பிறைகளின் படித்தரங்களை தேதிகளுக்காக நிர்ணயித்து விட்டான் என்பதையும், அவற்றைக் கணக்கிட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ள நபி (ஸல்) அவர்கள் ஒருமாதம் என்பதற்கு 29 அல்லது 30 நாட்களே இருக்கும் என்றும் தெளிவுபடுத்தி விட்டார்கள். இந்நிலையில் அதற்கு நேர் எதிரான கருத்தில் பிறையைப் பார்க்கும் வரை மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் பொத்தாம் பொதுவாகச் சொல்வார்களா? என்பதை சற்று சிந்திக்க வேண்டும். சரி நீட்டியுள்ளான் என்றால் ஒருமாதம் என்பதற்கு 29 அல்லது 30 நாட்களே இருக்கும் என்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில், தனது தூதரை உண்மைப்படுத்திடும் வண்ணம் அந்த முப்பது நாட்களுக்கு அதிகமாக வல்ல அல்லாஹ் ஒரு மாதத்தின் நாட்களை நீட்டிடவே மாட்டான் என்று முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
இன்னும், தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவரும் இப்பூமியின் துணைக்கோளே சந்திரன். இந்த சந்திரன் என்னும் துணைக்கோள் பூமியைச் சுற்றிவருவதால்தான் ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனியான வடிவநிலைகளின் பிறைகள் பூமிக்கு காட்சியளிக்கிறது. இதையே அந்தந்த கிழமைக்குரிய தேதிகளைக் காட்டும் பிறையின் படித்தரங்கள் என்கிறோம். அல்லாஹ் நமக்கு பிறைகளின் படித்தரங்களை தேதிகளுக்காக நிர்ணயித்து விட்டான். அவற்றைக் கணக்கிட்டுக் கொள்ளுமாறு மார்க்கம் நமக்குத் தெளிவாக வலியுறுத்துகிறது.
நமது பூமியானது தன்னைத்தானே ஒருமுறை சுற்றி முடிவதற்கு ஆகும் நேரமான 24 மணிநேரத்தைக் கணக்கிட்டு நாம் ஒரு நாள் என்கிறோம். இந்நிலையில் ஒரு மாதம் என்றால் என்ன என்பதற்கு அந்த சூரியனைச் சுற்றிவரும் பூமியும், பூமியைச் சுற்றிவரும் துணைக்கோளான சந்திரனும், இந்த பூமியும் ஒருநேர்கோட்டில் சங்கமித்து பின்னர் அதேபோல மற்றொருமுறை அம்மூன்றும் சந்திப்பதற்கு ஆகும் நாட்களின் கூட்டு எண்ணிக்கையே ஒரு மாதம் என்கிறோம். இவ்வாறு அந்த முக்கோளங்களின் சந்திப்பான சங்கம நிகழ்வு வருடத்திற்கு 12 தடவைகள் ஏற்பட்டு, இவ்வுலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து மாதம் என்பது பன்னிரண்டுதான் என்ற அல்குர்ஆன் வசனத்தை (9:36) நிரூபித்துக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனியான வடிவநிலைகளை பூமிக்கு காட்சியளித்து அந்தந்த கிழமைக்குரிய தேதிகளைக் காட்டும் சந்திரன், மேற்படி புவிமைய சங்கம தினத்தில் மட்டும் பூமிக்கு காட்சியளிப்பதில்லை. காரணம் சூரியன் உதயமாகும் கோணவிகிதத்திற்கு சமமான அளவில் சந்திரனும் உதிப்பதால், சந்திரனின் மெல்லிய காட்சி சூரியனின் பிரம்மாண்டமான ஒளிச் சிதறலில் நம் புறக்கண்களுக்கு மறைக்கப்பட்டு விடுகிறது. அந்த நாளைத்தான் நாம் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction Day) என்கிறோம். இந்த புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நிகழ்வு ஒருமாதம் 30 நாட்களாக இருந்தால் அந்த இறுதி நாளான 30-வது நாளிலும், ஒருமாதம் 29 நாட்களாக இருந்தால் அந்த இறுதிநாளான 29-வது நாளிலும் தவறாமல் நடைபெறும் நிகழ்வாகும். புவிமைய சங்கமம் (Geocentric Conjunction Day) நிகழ்வை நாம் எப்படி கணக்கிடுகிறோம் என்றால் சூரியன், சந்திரன், பூமி ஆகிய இவை மூன்றும் ஒருமுறை சங்கமித்து மறுபடியும் ஒரு கோட்டில் சங்கமித்து சந்திரனின் வடிவநிலை முற்றிலுமாக மறைக்கப்படும் நிலையை வைத்தே முடிவு செய்கிறோம். இதுவே நமது மார்க்கமும் விஞ்ஞானமும் கற்றுத்தரும் பாடமுமாகும்.
இப்படி சந்திரன் மறைக்கப்படும் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction Day) நிகழ்வை மையமாக வைத்து மாதத்தை அளவிடும் முறைக்கு சினோடிக் மாதம் (Synodic Month) என்று அழைக்கப்படுகிறது. இந்த சினோடிக் மாதமானது 29.53 நாட்களைக் கொண்டதாகும். அதாவது சூரியன், அந்த சூரியனைச் சுற்றிவரும் பூமி, மற்றும நமது பூமியைச் சுற்றிவரும் துணைக் கோளான சந்திரன், இம்மூன்றும் ஒரு நேர்கோட்டில் சங்கமித்து பின்னர் அதேபோல அம்மூன்றும் மீண்டும் சந்திப்பதற்கு ஆகும் மொத்த நாட்களாகும். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதத்திற்கு 29 அல்லது 30 நாட்களே என்பதை வரையறுத்து விளக்கியுள்ளதை, வானவியல் (Astronomy) கூறும் சந்திரனை மையமாக வைத்து அளவிடப்படும் (Synodic Month) சினோடிக் மாதக்கணக்கீடு மிகத்துல்லியமாக நிரூபிப்பதை இதிலிருந்து அறியலாம்.
இதுவல்லாமல் சிடேரியல் மாதம் (Sidereal Month) என்ற பெயரில் மற்றொரு மாதக் கணக்கீட்டு முறையும் உள்ளது. அதாவது சூரியன், சந்திரன், பூமி ஆகிய இவை மூன்றும் ஒருமுறை சங்கமித்து மறுபடியும் ஒருகோட்டில் (அல்லது ஒரே நேர்கோட்டில்) சங்கமித்து சந்திரனின் வடிவநிலை முற்றிலுமாக மறைக்கப்படும் நிலையை வைத்து மாதத்தை கணக்கிட்டு முடிவுசெய்யாமல், அம்மூன்று கோள்களும் தொலைதூரத்திலுள்ள ஒரு நட்சத்திரத்திற்கு நேராக வரும் பட்சத்தில் ஒரு மாதத்தின் நாட்களை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த கணக்கு முறையாகும். இவ்வாறு நட்சத்திரத்தை மையமாக வைத்து அளவிடப்படும் (Sidereal Month) சிடேரியல் மாதமானது 27 நாட்களை மட்டுமே கொண்டது. காரணம் சூரியன், சந்திரன், பூமி ஆகிய இவை மூன்றும் ஒருமுறை சங்கமித்து மறுபடியும் ஒரு கோட்டில் (அல்லது ஒரே நேர்கோட்டில்) சங்கமிக்கும் முன்னரே அந்த தொலைதூர நட்சத்திரத்திற்கு நேர்கோட்டில் வந்துவிடும். இது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த ஒருமாதம் 29 அல்லது 30 நாட்களாக இருக்கும் என்பதற்கு இது முரணானதாகும். இவ்வாறு பிறைகளின் படித்தரங்கள் அல்லாத, நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைந்த (நுஜூமிய்யா) சுமார் இரண்டு நாட்கள் வித்தியாசப்படும் (ளனைநசநயட ஆழவொ) இந்த சிடேரியல் மாதக்கணக்கை ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் புறக்கணிக்கிறோம், அந்த நுஜூமிய்யா கணக்கை எதிர்க்கிறோம்.
இந்நிலையில் சந்திரனை மையமாக வைத்து அளவிடப்படும் (Synodic Month) சினோடிக் மாதமானது 29.53 நாட்களைக் கொண்டது என்பதை அறிந்தோம். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதத்திற்கு 29 அல்லது 30 நாட்களே என்பதை வரையறுத்து விளக்கியுள்ளதை (Synodic Month) சினோடிக் மாதக் கணக்கீடு மிகத் துல்லியமாக நிரூபிப்பதை நிதர்சனமாகக் காண்கிறோம்.
நாம் ஆய்வுசெய்து கொண்டிருக்கும் மேற்படி நபிமொழிக்கும் (Sidereal Month) இந்த சிடேரியல், (Synodic Month) சினோடிக் மாதக் கணக்கீட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். சம்பந்தம் இருக்கவே செய்கிறது. 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' (إن الله مده للرؤية) என்பதை மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று பொருள் வைத்தால் கூட சுமார் 27 நாட்களை மட்டும் கொண்ட (Sidereal Month) சிடேரியல் மாதக்கணக்கீடு என்ற தவறான நிலையில் இருந்து, குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமைந்த 29.53 நாட்களைக் கொண்ட (Synodic Month) சினோடிக் மாதத்தை முஸ்லிம்கள் அறிந்து கொள்வதற்காகவே வல்ல அல்லாஹ் சிடேரியல் மாதத்திலிருந்து சுமார் இரண்டு நாட்களை நீட்டியுள்ளான் என்று மாற்றுக் கருத்துடையவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்களைப் பொருத்தவரை ஜவாமிவுல் கலாம் - அதாவது இரத்தினச் சுருக்கமான வார்த்தைகளைக் கொண்டு மிகப்பெரும் பொருளை தெரிவிக்கும் ஆற்றலை தனது தூதருக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான் என்று நாம் அனைவரும் உறுதியாக நம்புகிறோம். எனவே இன்னல்லாஹ மத்தஹூ லி ருஃயா (إن الله مده للرؤية) என்ற ரத்தினச் சுறுக்கமான வார்த்தைகளைக் கொண்டு இவ்வளவு அறிய விஞ்ஞான அறிவை இந்த முஸ்லிம் உம்மத்திற்கு வல்ல அல்லாஹ் தனது தூதர் மூலம் வழங்கியுள்ளான் என்பதை அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.
சரி மேலே கூறியுள்ள விளக்கங்களின் படி மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்ற மாற்றுக் கருத்துடையோர் கொண்ட பொருள்தானே விஞ்ஞான உண்மையை பறைசாற்றுவதாக உள்ளது பிறகு நீங்கள் ஏன் 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்று பொருள் கொள்கின்றீர்கள்? என்ற கேள்வியும் எழலாம். நமது விளக்கங்களை சற்று நிதானமாக மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தால் 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்று நாம் பொருள் கொண்டது மிகவும் சரியானதாகவே தோன்றும்.
1. அதாவது ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் எனில் 'உர்ஜூனில் கதீம்' என்ற பிறையின் இறுதி வடிவம் 29-ஆம் நாளன்றும், ஒரு மாதத்திற்கு 29 நாட்கள்தான் என்றால் 28-ஆம் நாள் அன்றும் கிழக்குத் திசையில் ஃபஜ்ர் வேளையில் காட்சியளிக்கும்;. சுமார் 27 நாட்களை மட்டும் கொண்ட தவறான (Sidereal Month) சிடேரியல் மாதக் கணக்கீட்டின்படி இறைவசனம் 36:39 கூறும் உலர்ந்த வளைந்த பழைய பேரீத்த பாளை எனும் 'உர்ஜூனில் கதீம்' என்ற இறுதி படித்தரத்தின் காட்சியை கவனிக்கும் வாய்ப்பை இழப்போம். இதைவிட்டும் நமக்கு உதவிசெய்யும் முகமாகத்தான் பிறைகளை மையமாக வைத்து மாதத்தை அளவிடும் சினோடிக் மாதத்தை (Synodic Month) அளித்து 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்று பொருள் கொள்ள முடியும்.
2. 'உர்ஜூனில் கதீம்' என்ற இறுதிப் படித்தரத்திற்கு அடுத்தநாள் அம்மாதத்தின் இறுதிநாளான புவிமைய சங்கமம் (Geocentric Conjunction Day) உடைய தினமாகும். சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் ஒரு கோட்டில் அல்லது ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கும் நிகழ்வாகும். அதாவது ஒரு மாதத்திற்கு 30 நாட்கள்தான் எனில் அந்த புவிமைய சங்கமதினம் இறுதிநாளான 30-வது நாளிலும், ஒரு மாதத்திற்கு 29 நாட்கள் எனில் 29-வது நாளிலும் ஏற்பட்டு அந்த மாதத்தின் முடிவை அறிவிக்கும் நிகழ்வாகும். அவ்வாறு சூரியன், சந்திரன், பூமி ஆகிய அம்மூன்றும் ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கும் போது சூரியக்கிரகணம் ஏற்படும். சுமார் 27 நாட்களை மட்டும்
கொண்ட தவறான சிடேரியல் மாதக்கணக்கீட்டின்படி மாதத்தின் இறுதிநாளில் (Sidereal Month) புவிமைய சங்கமத்தை அறியும் வாய்ப்பையும், சூரியக்கிரகணத்தின் காட்சியை கவனிக்கும் வாய்ப்பையும் இழப்போம். எனவே அதைவிட்டும் நமக்கு உதவிசெய்யும் முகமாகத்தான் 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்றும் பொருள் கொள்ள முடியும்.
3. அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் இறுதிநாள் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படுவதை மறைக்கப்படும்போது, மறைந்து இருக்கும்போது, மங்கும்போது, புலப்படாதபோது போன்ற பதங்கள் பயன்படுத்தி விளக்கியுள்ளார்கள். சுமார் 27 நாட்களை மட்டும் கொண்ட தவறான சிடேரியல் மாதக்கணக்கீட்டின்படி (Sidereal Month) பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் அந்தநாள் உட்பட வளர்பிறைகளின் நிலை (Waxing Crescents), முதல் கால் பகுதி நிலை (First Quarter), முழு நிலவை எதிர் நோக்கி வளரும் நிலை (Waxing Gibbous), முழு நிலவு நிலை (Full Moon), தேய் பிறையை எதிர் நோக்கி தேயும் நிலை (Waning Gibbous), இறுதி கால் பகுதி நிலை (Last Quarter), தேய் பிறைகளின் நிலை (Waning Cresents) போன்றவை அனைத்தும் ஒவ்வொரு மாதங்களுக்கும் வௌ;வேறு நாட்களில் அமைந்து பிறைகளின் சீரான படித்தரத்திற்கும் நாட்;காட்டியின் தேதிகளுக்கும் சம்பந்தமில்லாத நிலை ஏற்படும். இத்தகைய அவல நிலையை விட்டும் மனிதகுலத்திற்கு நேரான வழிகாட்டி உதவிடும் முகமாகத்தான் 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்று ஏன் பொருள் கொள்ள இயலாது?
4. இன்னும் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction Day) உடைய நாளுக்கு அடுத்த நாள் சூரியனுக்குப் பின்னால் சந்திரன் கிழக்குத் திசையில் தோன்றி (உதித்து) அந்தநாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் முதல்பிறை மேற்கு திசையில் அது மறையும் போது காட்சியளிக்கும். சுமார் 27 நாட்களை மட்டும் கொண்ட தவறான சிடேரியல் மாதக்கணக்கீட்டின்படி (Sidereal Month) அந்த முதல்நாளின் காட்சியை கவனிப்பதில் குழப்பமே ஏற்படும். எனவே அக்குழப்பத்தைப் போக்கும் முகமாக நமக்கு உதவிசெய்யும் பொருட்டு 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்று பொருள் கொள்ள முடியும்.
மேற்கண்ட இந்த ஐந்து விளக்கங்கள் திருப்தி அளிக்காமல் போனாலும் வல்ல அல்லாஹ்வின் வாக்கான கீழ்க்காணும் இறைவசனங்கள் இன்னல்லாஹ மத்தஹூ லி ருஃயா (إن الله مده للرؤية)
என்ற ரத்தினச் சுறுக்கமான வார்த்தைக்கு மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்ற மாற்றுக் கருத்துடையோரின் பொருள் தவறானது என்பதற்கும் 'நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான்' என்ற பொருளே சரியானது என்பதற்கும் சிறந்த ஆதாரமாக அமையும்.
''மேலும், நீங்கள் அறிந்தவற்றை (உங்களுக்கு) வழங்கியவனை அஞ்சுங்கள். அவன் உங்களுக்கு கால்நடைகளையும், பிள்ளைகளையும் வழங்கினான்.' (அல்குர்ஆன் 26 : 132, 133)
أَلَمْ تَرَ إِلَىٰ رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّ وَلَوْ شَاءَ لَجَعَلَهُ سَاكِنًا ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَيْهِ دَلِيلًا
உம்முடைய இரட்சகனை நீர் கவனிக்கவில்லையா? நிழலை எப்படி (உங்களுக்கு) வழங்கியுள்ளான் என்பதை! மேலும் அவன் நாடியிருந்திருந்தால் அதனை நிலைபெற்றிருக்க செய்திருப்பான். பிறகு சூரியனை - நாம்தாம் நிழலுக்கு காரணமாக ஆக்கினோம். (அல்குர்ஆன் 25 : 45)
எனவே மேற்கண்ட இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறும் முதலாவது அறிவிப்பில் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்றும், இரண்டாவது அறிவிப்பில் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ள மேற்கள்ட நபிமொழிகள் ஒரு மாதத்தின் 29 நாள் மஃரிபுக்குப் பின்னர் பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதற்கோ, மஃரிபில் பார்க்கப்படும் பிறை நாளைக்குரியது என்ற நம்பிக்கைக்கோ, அவரவர்கள் தங்களின் சுயவிருப்பப்படி, பல கிழமைகளிலும், தேதிகளிலும் மாதங்களைத் துவங்குவதற்கோ ஒருபோதும் ஆதாரமாகாது.
மாறாக எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள் என்ற வாசகத்தை வைத்து எந்தக் கிழமையில் பிறை பார்க்கப் படுகின்றதோ அது அந்தக் கிழமைக்குரிய பிறை என்பதையும், பிறை முதல் தேதியை காட்டினால் மாதத்தின் முதல் நாளில் நாமும் இருக்க வேண்டும், பிறை ரழானின் ஏழாவது நாளைக் காண்பித்தால் நாமும் ஏழாவது நோன்பை பிடித்திருக்க வேண்டும் என்ற குர்ஆன் சுன்னாவின் கூற்றை மெய்ப்படுத்தும் ஹிஜ்ரி கமிட்டியின் பிறை நிலைப்பாட்டிற்கே தக்க ஆதாரமாக அமைகிறது என்பதையும் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
தொடர்ந்து படிக்க : பிறையும் புறக்கண்ணும்!!!
பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,
பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,
பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,
பாகம் 16, பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,