செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன?

Rate this item
(1 Vote)

ஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும்

அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2

இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன?

இஸ்லாமிய அடிப்படையில் நாட்காட்டி அமைய வேண்டிய அடிப்படையை சிந்திக்காமல் அறிஞர்களில் பலர் பிறை விஷயத்தை மையப்படுத்தி சண்டையிட்டு பிரிந்து விடுகின்றனர். குர்ஆன் சுன்னாவை சரியான கோணத்தில் திறந்த மனதோடு ஆய்வு செய்தால் ஒரு நாட்காட்டியை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் இஸ்லாம் கற்றுத் தந்துள்ளதை நாம் நிதர்சனமாக உணரலாம். துல்லியமான நாட்காட்டியை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களைப் பற்றியும் நமது இஸ்லாமிய மார்க்கம் கற்றுத் தந்துள்ளதை விரிவாகவும், நிதானத்துடனும் பார்ப்போம் - இன்ஷா அல்லாஹ்.

நாம் வாழுகின்ற இந்த பூமி உருண்டை வடிவம் கொண்டதாக இருப்பதால், பூமி சுற்றத் துவங்கிய இடத்திலிருந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்தால்தான் பூமி ஒரு முறை சுற்றிவிட்டது என்பதை நாம் கணக்கிட முடியும்.

பூமி ஒரு முறை சுற்றி வரும் கால அளவை ஒரு நாள் என கணக்கிட்டு, தினமும் ஒரு நாள், இரண்டு நாட்கள், என ஒவ்வொரு நாளையும் கூட்டிக் கொண்டே செல்லலாம்.

இவ்வாறு வெறுமனே நாட்களைக் கூட்டிக் கொண்டே வந்தால் (இவ்வுலகம் அழியும்வரை) பல கோடி நாட்களையும் தாண்டி, அந்நாட்களின் எண்ணிக்கை முற்றுப் பெறாமல் செல்லும்.

எனவே இந்த சிக்கலை சரிசெய்வதற்காக ஒரு திட்டவட்டமான ஒழுங்குமுறையை வல்ல அல்லாஹ் தனது திருமறை குர்ஆன் மூலம் மனித சமூகத்திற்குக் கற்றுத் தந்துள்ளான்.

அதாவது உலகைப் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு என அல்லாஹ் அல்குர்ஆன் (9:36) வசனத்தின் மூலம் தெளிவுபடுத்தி விட்டான். இதன்மூலம் ஒரு வருடம் என்பதற்கு 12 மாதங்கள் என்பதையும் வரையறுத்துக் கற்றுக் கொடுத்து விட்டான். இது துல்லியமான நாட்காட்டியைத் தயாரிப்பதற்காக இஸ்லாம் கற்றுத் தந்துள்ள முதல் அடிப்படை அம்சமாகும்.

இன்னும் எத்தனை நாட்களை கூட்டி ஒரு மாதத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பதையும் அல்லாஹ் தனது தூதர் நபி (ஸல்) அவர்கள் மூலமாக வழிகாட்டியுள்ளான். அதாவது மாதம் என்பது 29 நாட்களாக இருக்கும் அல்லது 30 நாட்களாக இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டதால் ஒரு மாதத்தின் நாட்களும் வரையறை செய்யப்பட்டு விட்டன.

அப்படியென்றால் 12 மாதங்களில் உள்ள ஒவ்வொரு மாதமும் எத்தனை நாட்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை மனிதன் சுயமாக முடிவு செய்து கொண்டு செயல்பட இயலாது என்பது இங்கு திட்டவட்டமாக நிறுவப்படுகிறது. இது துல்லியமான நாட்காட்டியைத் தயாரிப்பதற்காக இஸ்லாம் கற்றுத்தந்துள்ள இரண்டாவது அடிப்படை விஷயமாகும்.

ஒரு மாதத்திலுள்ள நாட்களின் எண்ணிக்கை விஷயத்தில் எந்த மனிதனும் தன் சுய விருப்பப்படி அல்லாஹ்வின் வரையறைக்கு மாற்றமாக செயல்பட முடியாது என்பதை உறுதி செய்யும் முகமாக தன்னுடைய தூதரின் மூலம் மாதம் என்பது 29 நாட்களைக் கொண்டதாகவும், 30 நாட்களைக் கொண்டதாகவும் இருக்கும் என்பதைக் கூறியதோடு மட்டுமல்லாது, சந்திரனின் படித்தரங்களை ஒவ்வொரு நாளுக்குரிய தேதியாக ஆக்கியுள்ளதை வல்ல அல்லாஹ் தனது திருமறையில் (2:189) தெளிவுபடுத்தியும் உள்ளான். ஆக அந்தந்த மாதத்திலுள்ள கிழமைகள் சந்திரனின் படித்தரத்தோடு ஒத்துப் போகவேண்டும் என்ற கட்டளையேயாகும். இது நாட்காட்டி தயாரிப்பு பற்றிய இஸ்லாம் கற்றுத் தந்துள்ள மூன்றாவது அடிப்படையாகும்.

ஆக ஒரு வருடம் என்பது 12 மாதங்கள்தான் என்பதும், ஒவ்வொரு மாதத்திற்கும் 29 அல்லது 30 நாட்கள் உள்ளன என்பதும், ஒவ்வொரு நாட்களுக்கும் சந்திரனின் படித்தரங்கள் தேதிகளை சரியாகக் காட்டும் என்பதையும் வல்ல அல்லாஹ் கற்றுத்தந்துவிட்டு, இதை மாற்றம் செய்வது குஃப்ரு அதாவது இறைநிராகரிப்பில் கொண்டு சேர்க்கும் என்றும் அல்குர்ஆன் (9:37) வசனத்தின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளான். ஆக சந்திரனின் படித்தரங்கள் தெரிவிக்கும் தேதிக்கு மாற்றம் செய்யக் கூடாது என்பது இஸ்லாம் கற்றுத்தந்த மற்றொரு அடிப்படை விஷயமாகும்.

இவ்வாறு அல்லாஹ் கணக்கிடும்படி படைத்துள்ள சந்திரனின் படித்தரங்களின் அடிப்படையிலேயே நீங்கள் கிழமைகளை எண்ணிக் கணக்கிட வேண்டும். அவ்வாறு கணக்கிட்டு 29 நாட்கள் கொண்ட மாதத்தையும், 30 நாட்கள் கொண்ட மாதத்தையும் சரியாக முடித்து வருடங்களை கணக்கிட வேண்டும். மேலும் ஒவ்வொரு வருடத்திலுள்ள மாதங்களில் நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். இன்னும் மாதங்களை முன்னும் பின்னும் மாற்றி குளறுபடிகள் செய்வது குஃப்ரை அதிகப்படுத்தும் செயலே அன்றி வேறில்லை எனவும் வல்ல அல்லாஹ் தனது வேதமான திருமறை குர்ஆனின் மூலம் உலக மக்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டான்.

சந்திரனின் படித்தரங்களின் அடிப்படையில்தான் மாதங்களை அமைக்க வேண்டும் என்பதால் நம்மால் முன்கூட்டியே சந்திரனின் படித்தரங்களைக் கணக்கிட்டு அறிந்து கொண்டு நாட்காட்டியை தயார் செய்ய முடியாதா? என்ற கேள்வி பிறப்பது நியாயமானதே. அதற்குத் தீர்வாக அல்லாஹ் அல்குர்ஆன் (10:5) வசனத்தில் பல வருடங்களின் கணக்கை நீங்கள் சந்திரனின் படித்தரங்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று கூறுகிறான். இன்னும் அறிந்து கொள்ளும் மக்களுக்கு தன்னுடைய அத்தாட்சிகளை விவரிப்பதாகவும் கூறிவிட்டான்.

மேலும் அல்குர்ஆன் (55:5) வசனத்தில் சூரியனும் சந்திரனும் கணக்கின் படியே உள்ளன என்பதையும் கூறி கணக்கிடுதலின் முக்கியத்துவத்தையும் உணர்த்தி விட்டான். நாட்காட்டி தயாரிப்பு பற்றி அடிப்படை விஷயங்களைப் பற்றி கற்றுத்தந்த இஸ்லாம் நாட்காட்டியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. எனவே அந்த சந்திரனின் படித்தரங்களை கணக்கிட்டு அறிந்து கொண்டு நாட்காட்டியை தயார் செய்வது இந்த முஸ்லிம் உம்மத்தின் பொறுப்பு என்பதை உணரலாம்.

பூமி சுழன்று கொண்டே இருக்கின்ற காரணத்தினால், சந்திரனின் படித்தரங்களான பிறைகளும் எப்போதுமே உலகில் காட்சியளித்துக் கொண்டே இருக்கும். பூமியின் சுழற்சியினால் நாம் எவ்வாறு சூரியனை தினமும் பகல் அல்லாத மறுபாதி நாளில் காண முடியாமல் போகின்றதோ, அதே போல் சந்திரனும் எப்போதுமே வானில் காட்சியளித்துக் கொண்டிருந்தாலும், பூமியின் சுழற்சியினால் நமது பார்வையை விட்டும் அது மறைந்து விடுகிறது.

மேலும் சூரியனில் இருந்தே அனைத்து கோள்களுக்கும் ஒளி கிடைக்கின்றது. சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வரும் நமது பூமிக்கும் சூரியனிலிருந்தே ஒளி கிடைக்கிறது. இதனால் நாம் பார்க்க முடிகின்ற போதெல்லாம் சூரியனின் உருவம் வட்ட வடிவத்திலேயே காட்சியளிக்கிறது. வட்ட வடிவத்தைத் தவிர வேறு வடிவ நிலைகள் சூரியனுக்கு இல்லை.

நமது பூமியைச் சுற்றிவரும் சந்திரனும் சூரியனில் இருந்துதான் ஒளியைப் பெருகிறது. சூரியனில் இருந்து கிடைக்கும் ஒளியானது சந்திரனில் பட்டு பிரதிபலிப்பதுடன், சந்திரனும், சூரியனும் இருக்கும் கோண விகிதத்திற்கு தகுந்தாற்போல் சந்திரனுக்கு வடிவங்கள் தினமும் ஏற்பட்டு ஒவ்வொரு கிழமையின் தேதியைத் துல்லியமாக அறிவித்து வருகின்றது.

 

இவ்வாறு சந்திரன் பூமியைச் சுற்றிவரும் நிலைகளில் ஒரு நிலையில் மட்டும் சூரியனில் இருந்துவரும் ஒளி சந்திரனில் பட்டு பூமிக்கு வராமல் மீண்டும் ஆகாயத்திலேயே பிரதிபலித்து விடுகிறது. பூமியில் வசிக்கும் நாம் அந்தக் குறிப்பிட்டக் கிழமையில் மட்டும் சந்திரனைப் புறக்கண்களால் பொதுவாக பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.

ஒரு மாதத்தில் சந்திரனின் படித்தரங்களை தினமும் கவனித்து வந்த நமக்கு ஒரு கிழமையில் மட்டும் பூமிக்கு அது தென்படாமல் போகும் நிலை ஏற்படக் காரணம் உள்ளது. சூரியன், சந்திரன், மற்றும் பூமி ஆகிய இம்மூன்றும் ஒரு கோட்டில் வருகின்ற காரணத்தால் நாம் சந்திரனைப் பார்க்க முடியாமல் போகிறது. இந்த நிகழ்வைத்தான் (Geocentric Conjunction) புவிமைய சங்கமம் என்று அறிவியில் கூறுகின்றது.

 

புவிமைய சங்கமம் என்ற இந்நிகழ்வு ஒவ்வொரு சந்திர மாதத்தின் இறுதி நாளில் ஒரேயொரு கிழமையில் மட்டும்தான் ஏற்படும். எப்போதும் உலகில் இருகிழமைகள் (இருதேதிகள்) இருந்து கொண்டிருந்தாலும், இந்த புவிமைய சங்கமம் ஏற்பட்டு சந்திரனின் ஒளி பூமிக்கு வராத நிலை ஒரு கிழமையில் மட்டும்தான் ஏற்படும் என்பதுதான் சந்திரனின் அறிவியலாக அல்லாஹ் ஆக்கியுள்ளான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிரூபிக்கப்பட்ட இத்தகைய அறிவியல் உண்மைகளை அறிவியலின் வாடையைக்கூட நுகரமுடியாத அக்காலத்தில் அல்லாஹ்வின் வஹியோடு தொடர்புடைய இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கும்ம, கும்மிய, உஃமிய, கபி(F), க(G)ம்மிய, ஹஃபிய மற்றும் குபிய போன்ற ஆழமான கருத்துக்கள் நிறைந்த சொற்களால் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்கள்.

இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படைகளைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்கிறோம். 'பிறை மறைக்கப்படும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த நிகழ்வை எந்த நாளுக்கு? எந்தக் கிழமைக்குப் பொருத்த வேண்டும்? என்பதை உலமாக்கள் அறிய முற்பட்டாலே அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் வலியுறுத்தியுள்ள ஹிஜ்ரி அடிப்படையிலான சந்திர நாட்காட்டி உலகில் நடைமுறைப் படுத்தப்பட்டுவிடும் இன்ஷா அல்லாஹ்.

மேற்கண்ட கட்டளைகளுக்கும், விதிமுறைகளுக்கும் மாற்றமாக கிருஸ்துவ மதப்போதகர் போப் கிரிகோரியன் தயாரித்த கிரிகோரியன் நாட்காட்டி அமைந்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். குளறுபடிகள் பல நிறைந்த, பல்வேறு மாறுதல்களுக்கும் உட்பட்ட அந்த கிரிகோரியன் நாட்காட்டியைப் பின்பற்றினால் தவறு இல்லை என்று பிரச்சாரம் செய்பவர்களுக்கு மத்தியில் (வீடியோ ஆதாரம் பார்க்க) நாமும் வாழ்ந்து வருகிறோம். ஒரு மாதத்திலுள்ள நாட்களின் எண்ணிக்கையை 29 அல்லது 30 என்ற நபி (ஸல்) அவர்கள் கட்டளைக்கு முரணாக 28 நாட்கள் என்றோ, 31 நாட்களாகவோ தீர்மானிக்கக் கூடாது. அப்படி தீர்மானிப்பது அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வுடைய தூதருடைய கட்டளைக்கும் எதிரானது என்பதை இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை விஷயங்களாக சற்று முன்னர் படித்தோம்.

எனவே இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படைக்கு மாற்றமாக உருவாக்கப்பட்டுள்ள ஆங்கில நாட்காட்டியின் அபாய நிலைகளை உணர்ந்து கொள்வோம். 'ஆங்கில நாட்காட்டி', 'மேற்கத்திய நாட்காட்டி', 'கிருஸ்துவ நாட்காட்டி' அல்லது 'கிரிகோரியன் நாட்காட்டி' என்றும் மக்கள் விளங்கியுள்ள பிழைகள் நிறைந்த மேற்படி காலண்டரை நம் முஸ்லிம் சமுதாயம் முற்றிலுமாகப் புறக்கணிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இஸ்லாம் வலியுறுத்தும் துல்லியமான சந்திர நாட்காட்டியின் அடிப்படையை தெளிவாக அறிந்து கொண்ட காரணத்தினாலேயே மிக உறுதியுடன் இவ்வாறு நாம் பிரகடனம் செய்கிறோம். தவிர கிருஸ்துவ மதப்போதகர் போப் கிரிகோரியன் அவர்களுக்கோ, அவரது நாட்காட்டியை சரிகாண்பவர்களிடமோ நமக்கு சொந்தப் பகைமையோ, பிரச்சனைகளோ நிச்சயமாக இல்லை.

சிலர் நாங்கள் நோன்பு ஹஜ் போன்ற கிரியைகளை இஸ்லாமிய அடிப்படையில் சந்திரனைப் பார்த்தே செயல்படுகின்றோம். எனவே நாங்கள் கிரிகோரியன் நாட்காட்டியை இபாதத்திற்கு பின்பற்றவில்லை என்றும் கூறுகின்றனர். இக்கருத்தை வலியுறுத்துபவர்கள் கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தலாம் என்று அதற்கு ஆதரவாக மக்களிடம் பிரச்சாரம் செய்வதையும் கூடுதல் விபரமாகத் தருகிறோம். (பார்க்க : வீடியோ லிங்க்)

எனவே துல்லியமான நாட்காட்டியை உறுவாக்குவதற்குத் தேவையான அனைத்தையும் பற்றி இஸ்லாம் விவாதித்துள்ளதை சுருக்கமாக அறிந்து கொண்டோம். அதன் சுருக்கம்...

அ)பல வருடங்களின் கணக்கை சந்திரனின் படித்தரங்களைக் கணக்கிட்டு அறிந்து கொண்டு நாட்காட்டியை தயார் செய்வதற்கு அல்குர்ஆன் (10:5) வலியுறுத்துகிறது.

ஆ) சூரியனும், சந்திரனும் கணக்கின் படியே உள்ளன (55:5) என்று அல்குர்ஆன் கணக்கிடுதலின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.

இ) உலகைப் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு என்ற அல்குர்ஆன் (9:36) வசனத்தின் மூலம் நாட்காட்டியின் ஒரு வருடத்திற்குரிய மாதங்களின் எண்ணிக்கை வரையறுக்கப் பட்டுவிட்டன.

ஈ) மாதம் என்பது 29 நாட்களைக் கொண்டதாகவும், 30 நாட்களைக் கொண்டதாகவும் இருக்கும் என்ற இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் போதனைபடி ஒரு மாதத்திற்கு இருக்க வேண்டிய நாட்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு விட்டன.

உ) ஒவ்வொரு நாட்களுக்கும் சந்திரனின் படித்தரங்கள் தேதிகளைச் சரியாக காட்டும். அதில் மாற்றம் செய்வது குஃப்ரு அதாவது இறைநிராகரிப்பில் கொண்டு சேர்க்கும் (9:37) என்கிறது அல்குர்ஆன்.

ஊ) புவிமைய சங்கமம் ஏற்பட்டு சந்திரனின் ஒளி பூமிக்கு வராத நிலைபற்றி இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கும்ம, கும்மிய, உஃமிய, கபி(F), க(G)ம்மிய, ஹஃபிய மற்றும் குபிய போன்ற ஆழமான கருத்துக்கள் நிறைந்த சொற்களால் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்கள்.

எ)ஒரு மாதத்திலுள்ள நாட்களின் எண்ணிக்கையை 29 அல்லது 30 என்ற நபி (ஸல்) அவர்கள் கட்டளைக்கு முரணாக 28 நாட்கள் என்றோ, 31 நாட்களாகவோ தீர்மானிக்கக் கூடாது என்பதே அல்லாஹ்வுடைய, அல்லாஹ்வின் தூதருடைய கட்டளையாகும்.

தொடர்ந்து படிக்க :  பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04.

 இன்ஷா அல்லாஹ் தொடரும்....

Read 2255 times Last modified on திங்கட்கிழமை, 22 ஜூன் 2015 13:46