வியாழக்கிழமை, 23 ஜனவரி 2014 06:15

அல்ஜன்னத் பத்திரிகையின் அவதூறும், HCI யின் மறுப்பும்

Rate this item
(0 votes)
அல்ஜன்னத் பத்திரிகையின் அவதூறும், HCI யின் மறுப்பும்

கேள்வி : அல் ஜன்னத் பிப்ரவரி 2010 இதழில் பிறைபற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளிக்கும் போது கணக்கின் அடிப்படையில்  பின்பற்றுவதை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள் அதற்கு தங்களின் பதில் என்ன ?       நாசர் கோவை .

 பதில் : நீங்கள்  சுட்டிக்காட்டிய பதிலை  நாமும் பார்த்தோம். யாரையோ திருப்திபடுத்தி அதன் மூலம் சில அற்ப உலக ஆதாயம் அடைவதற்காக  அப்படி  ஒரு பதில் அளிக்கப்பட்டுள்ளது.  நாம் இப்படி கூறுவது  யூகத்தின் அடிப்படையில்  அல்ல. ஏனென்றால் அதன் ஆசிரியர் கோவையில்  நடந்த JAQH தாயிகள் கூட்டத்தில் என்னுடைய ஆய்வின்படி பிறையில் கணக்கின் அடிப்படையில் செயல்படுவதுதான் சரி என்று கூறினார். (வீடியோ ஆதாரம் நம்மிடம் உள்ளது )

மேலும் கோவையில் KNM ஜமாத்தோடும், சென்னையில் அஹ்லே ஹதிஸ் அறிஞர்களோடும்  கணக்கை  வலியுறுத்தி விவாதத்திற்கு சென்றார்.  அந்த வரிசையில்  இதே அல் ஜன்னத் பத்திரிக்கையில் கணக்கை பின்பற்றுவது குர்ஆன் ஹதிஸுக்கு எதிரானதா ? என்ற தலைப்பில்   கணக்கின் அடிப்படையில் செயல்படுவதை ஆதரித்து JAQH  மாநில துணை தலைவர் மவ்லவி S. செய்யது அலி பைஜி அவர்கள் எழுதிய   கட்டுரையை  இடம்பெறச்செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாக  இரண்டு வருடங்களுக்கு முன்னால் ரமலான் நோன்பு ஆரம்பிப்பதற்கு பதிமூன்று நாட்களுக்கு முன்னரே  ரமலான் முதல் நாளை தீர்மானித்து JAQH ன் அனைத்து கிளைகளுக்கும் கடிதம் அனுப்பினார்  இப்படியெல்லாம் கணக்கின்  அடிப்படையில் செயல்படுவதை சரிகண்டவர்  இப்போது மாற்றி பேசுகிறார் என்றால் நாம் மேலே கூறிய  காரணம் தான் என்பதில் சந்தேகமில்லை . அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான்.

அவர்களின் விமர்சனத்திற்கு வருவோம்

// இவர்களுக்கு  கணக்குபற்றிய ஞானம் அதாவது முன்கூட்டியே சொல்லக்கூடிய அறிவு கிடையாது மற்றவர்கள் சொல்வதை கேட்டு அப்படியே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகின்றனர். அல் ஜன்னத் பக்கம் 44 //

பிறை விசயத்தில் கணக்கை பின்பற்றக்கூடிய  நமக்கு கணக்கை பற்றிய ஞானம் கிடையாது மற்றவர்கள் சொல்வதை அப்படியே பின்பற்றுகிறோம் என்று குற்றம் சாற்றுகிறார். அவரின் வாதப்படி நமக்கு கணக்கு தெரியவில்லை என்றே வைத்துக்கொள்வோம் கணக்கு தெரியவில்லை என்பதற்காக அதை பின்பற்றக்கூடாதா ? அப்படியென்றால் இவரை  பார்த்து நாம் கேட்பது, தொழுகைக்கான நேரத்தை  முன்கூட்டியே  கணக்கிட்டு தொழுகையை   அமைத்துகொள்கிறீர்களே, உங்களுக்கு அந்த விஞ்ஞான அறிவு இருக்கிறதா ? . பின் எப்படி தொழுகைக்கான நேரத்தை முன்கூட்டியே தீர்மானித்தீர்கள்  ஆகவே நிரூபிக்கப்பட்ட அறிவியலை குர்ஆன்  ஹதீஸிற்கு  முரணில்லாத வகையில்  ஏற்று செயல்படுவதில் தவறில்லை .

// கணக்கின் அடிப்படையில் முன்கூட்டியே யார் சொன்னாலும் அது யூகத்தின் அடிப்படையிலே இருக்க வேண்டுமே தவிர திட்டவட்டமாகச்  சொல்வது இஸ்லாமிய அடிப்படை கொள்கைக்கு எதிரானதாகும் . காரணம் எதிர்காலத்தில் எது எப்படி எப்போது நடக்கும் என்பதையெல்லாம்  திட்டவட்டமாக தெரியக்கூடியவன்  அல்லாஹ் ஒருவன் மட்டும் தான் . ஒருவன் எதிர்காலத்தில் இப்படித்தான் நடக்கும் என்று திட்டவட்டமாக நானும் சொல்வேன் என்று சொல்லும் போது அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமான எதிர்காலத்தில் நடப்பதை அறிதல் என்ற தன்மையில் போட்டி போடுவதாகக் கருதப்படும் . எனவே இது விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளவேண்டும் . நமக்கு சரியான ஞானமில்லாத விசயத்தில் தலையிடுவது கூடாது. அல் ஜன்னத் பக்கம் 44 //

இவர் இப்படி கூறுவதிலிருந்து இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றான மறைவான ஞானம் பற்றிய மார்க்க அறிவு இவருக்கு அறவே கிடையாது என்பது தெளிவாகிறது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். நிச்சயமாக (இறுதித் தீர்ப்பிற்குரிய) அந்த நேரத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கிறான். (பெண்களின்) கருவறைகளில் இருப்பவற்றையும் அவனே அறிவான். எந்தமனிதனும், அவன் நாளை என்ன சம்பாதிக்கப்  போகிறான்  என்பதை அறிவதில்லை. தாம் எந்த இடத்தில் மரணிப்பார் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. நிச்சயமாக, அல்லாஹ்தான் (யாவற்றையும்) நன்கு அறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.

அறிவித்தவர் : அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)

ஹீஹுல் புகாரி   ஹதீஸ் எண் : 4627

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.

திருக்குர்ஆன் 31:34

மேற்கண்ட குர்ஆன் வசனத்திலிருந்தும், ஹதீஸிலிருந்தும்  மறைவான ஞானத்திற்கு  உட்பட்ட விசயங்கள் என்னென்ன என்பதை தெளிவாக அறிந்துகொள்ளலாம்.  பிறை விசயத்தில் நாம் கூறும்  தேதி பற்றிய கணக்கு மறைவான ஞானத்திற்கு உட்பட்டதல்ல மாறாக அல்குர்ஆன்  55 : 5 வசனத்தில் அல்லாஹ் கூறியுள்ள கணக்கைத்தான்  நாம் ஏற்று செயல்படுகிறோம்

சூரியனும் , சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப்பெற்ற ) கணக்கின்படியே இருக்கின்றன .

அல்குர்ஆன் 55: 5

அந்த கணக்கை நீங்கள் அறிந்துகொள்ள முடியும் என்று 10: 5 வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்

அவன்தான் சூரியனைச் (சுடர்விடும் ) பிரகாசமாகவும் , சந்திரனை  ஒளியுள்ளதாகவும் ஆக்கினான் . ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு (சந்திரனாகிய ) அதற்கு (மாறிமாறி) வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான் ; அல்லாஹ் உண்மை (யாக தக்க காரணம் ) கொண்டேயல்லாது இவற்றைப்  படைக்கவில்லை ; அவன் அறியக்கூடிய சமுதாயத்திற்கு தன் அத்தாட்சிகளை (இவ்வாறு) விவரிக்கின்றான் .

அல்குர்ஆன் 10: 5

ஒரு வாதத்திற்கு அவர் கூறுவதுபோல   மறைவான  ஞானத்திற்கு உட்பட்டது என்றால் இந்த கணக்கை JAQH ஃபத்வா  குழு எப்படி ஏற்றுகொண்டது. JAQH ஃபத்வா  குழு அளித்த தீர்ப்பை  தங்களின் பார்வைக்கு தருகிறோம்.

// பிறை விசயத்தில் கணக்கை ஏற்று செயல்படுவது குர்ஆன் ஹதீஸின்படி சரியாக இருந்தாலும் சில நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு தற்காலிகமாக தகவலை ஏற்று செயல்படுமாறு கேட்டுகொள்கிறோம். JAQH ஃபத்வா  குழு //

மேலும் அவர்கள் வெளியிட்ட காலண்டரில் பிறைக்கணக்கையும் ஒரு ஆண்டுக்கான தொழுகைக்கான நேரத்தையும் முன்கூட்டியே அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்களே அப்படியானால் மறைவான ஞானத்தை அறிந்து கொண்டார்களா ? ஆகவே அறிந்துகொண்டே மக்களை குழப்புகிறார்.

//கணிப்பிற்கு அடிமையாகி இருக்கின்ற சிலர் அல்லாஹ்வுடைய தூதர் விஷயத்தில் வரம்பு மீறி நடந்து கொள்கின்றனர் . நபியின் இயலாமை காரணத்தினால் தான் இது விஷயத்தில் சரியான இலக்கை அவர்களால்  அடைய முடியவில்லை என்று கூறி நபியை மட்டம் தட்டும் அளவிற்கு கிழே இறங்கிச் சென்றுவிட்டனர். அல் ஜன்னத் பக்கம் 44 //

நபியின் காலத்தில் இன்றைக்கு இருக்கும் அறிவியல் முன்னேற்றமோ நவீன கருவிகளோ இல்லை என்பதை நபி  (ஸல்) அவர்கள் நாம் உம்மி சமுதாயமாக இருக்கிறோம் என்று கூறிய ஹதிஸின் படி அந்த கால மக்களுடைய இயலாமை என்று நாம் கூறியதை திரித்து கூறுகிறார். மீலாது விழா மார்க்கத்தில் இல்லை அதை கொண்டாடக்கூடாது என்று நாம்  சொன்னபோது இவர்கள் நபியை  புகழக்கூடாது என்று கூறுகிறார்கள் என்று சுன்னத் ஜமாத்தினர் ? எப்படி  பொய் பிரச்சாரம் செய்தார்களோ அதே பாணியில் இவர்களும் இறங்கிவிட்டார்கள்.

பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.  திருக்குர்ஆன் 3 : 61

// இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆனும் சுன்னாவும் தான் என்று தான் நாம் மக்களுக்கு கூறி பிரச்சாரம் செய்து வந்தோம். ஆனால் இவர்கள் இடத்தில் மூன்றாவது ஒரு அடிப்படையும்  இருப்பதாக நம்புகின்றனர்.அதாவது குர்ஆன், ஹதீஸ்,அறிவு என்ற மூன்று அடிப்படைகள் எனக்கூறுகின்றனர். அல் ஜன்னத் பக்கம் 44 //

நாம் குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் அடிப்படை என்ற விசயத்தில் இருந்து கொஞ்சம் கூட மாறவில்லை, இன்ஷா அல்லாஹ் மரணிக்கும்வரை மாறமாட்டோம். ஆனால் அவர்கள் தான் தடம்புரண்டுவிட்டர்கள். குர்ஆன் ஹதீஸை மூத்த அறிஞர்கள் விளங்கியது போலவே நாமும் விளங்கவேண்டும் என மூன்றாவது அடிப்படையை  தொடர்ந்து அல்ஜன்னத் பத்திரிகையில் சமீபகாலமாக எழுதி வருகிறார். பிறை விஷயத்தில் நான் எடுக்கும் முடிவுக்கு நீங்கள் கட்டுப்படுங்கள்  தவறாக இருந்தால் நான் அல்லாஹ்விடம் பொறுப்பு ஏற்கிறேன் என்று கூறியவர் தான் இதன் ஆசிரியர். இதற்கு குர் ஆன் ஹதீஸில் எங்கிருந்து ஆதாரம் எடுத்தார் என்று தெரியவில்லை. மேலும் அவரது சக மதனி ஒருவர் சென்னை ஜும்மா குத்பாவில் குர் ஆன்  ஹதீஸை மட்டும் பின்பற்றக்கூடாது சஹாபாக்கள் தாபியீன்களையும் பின்பற்றவேண்டும் என்று கூறியிருக்கிறார்.ஆகவே அவர்கள்தான் மாறிவிட்டார்கள்.

//மனித குல காலண்டர் ஏற்றுச்  செயல்படாதவர்களை  எல்லாம் வழிகேடர்கள் என்று இவர்கள் கூறிவருகிறார்கள் என்பது  உண்மை தான். அல் ஜன்னத் பக்கம் 45 //

நாம் எங்குமே இது போன்ற வார்த்தைகளை  உபயோகித்ததே இல்லை. நாம் முன்னர் கூறியதையே  மீண்டும் எச்சரிக்கின்றோம்.

பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். திருக்குர்ஆன் 3 : 61

// 9:37 வசனத்தின் வரலாற்று பின்ணனியை இருட்டடிப்பு செய்துவிட்டதாக குற்றம் சாட்டுகிறார்.//

ஒரு சந்தர்ப்பத்தில் இறங்கிய வசனத்தை அது போன்ற வேறு சந்தர்ப்பத்தில் பயன்படுத்தக்கூடாது என்பதை அவர் தெளிவு படுத்த வேண்டும். பயன்படுத்தலாம் என்பதை அவர் நேரடியாக விவாதத்திற்கு வந்தால் நாங்கள் நிரூபிக்க தயாராக இருக்கிறோம் .

மேலும் இவரின் தடுமாற்றங்களையும், மக்களை ஏமாற்றுவதையும், இன்ஷாஅல்லாஹ்  விரைவில் வீடியோ உடன் கூடிய தொகுப்பாக வெளியிட இருக்கிறோம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

இப்படிக்கு

இந்திய ஹிஜ்ரா கமிட்டி

தமிழ்நாடு

Read 2226 times Last modified on வெள்ளிக்கிழமை, 14 பிப்ரவரி 2014 16:00