வியாழக்கிழமை, 23 ஜனவரி 2014 00:00

த.த.ஜ குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் பதில்

Rate this item
(2 votes)

அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் பெயரால்...

த.த.ஜ குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் பதில்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்........

நெல்லை ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்தும், ஓரிறைக் கொள்கை அடிப்படையில் அதோடு சேர்ந்து செயல்படும் அதிகமான கொள்கை சகோதரர்களும், பிறைவிஷயத்தில் குர்ஆன் கூறும் கணக்கின் அடிப்படையில் அமைந்த சந்திர நாட்காட்டியை உறுதியாக நடைமுறைபடுத்தி வருகின்றனர். மேலும், அந்த ஜமாஅத் மற்றும் அதோடு இணைந்து செயல்படும் சகோதரர்களின் கட்டுக்கோப்பை எப்படியாவது சீர்குலைத்திடவேண்டும் என்று பலமுறை முயற்சித்தும், அதில் படுதோல்வி அடைந்து கொண்டேயிருக்கும் மேற்படியார்களின் உச்சகட்ட விரக்தியின் வெளிப்பாடுதான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் TNTJ (த.த.ஜ) ஏர்வாடி கிளை சார்பாக வெளியிடப்பட்ட பிறை ஓர் விளக்கம் என்ற பிரசுரம். அதில் 'ஹிஜ்ரா கமிட்டி என்ற மூளை வரண்ட கூட்டத்தினருக்கு பதில்' என்று உப தலைப்பிட்டு ஹிஜ்ரி 1434 ரமளான் மாதம் அவதூறு பிரசுரமாக வெளியாகியது.  அதற்கு ஹிஜ்ரி கமிட்டியின் பதில்கள் பின்வருமாறு:-

மூளையை அதிகமாக உபயோகித்தால் மூளை வரண்டு போகுமா?  அல்லது மூளையை உபயோகப்படுத்தாமல் இருந்தால் மூளை வரண்டு போகுமா?  என்பதை ஆய்வு செய்து  நாம் உண்மையை எழுதினாலும் கூட இவர்கள் நாம் என்ன ஆய்வு செய்துள்ளோம் என்பதை சிந்திக்க மாட்டார்கள்.  ஏனென்றால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத் தலைவர் ஒவ்வொரு விஷயத்திலும் எப்படி விளங்க வேண்டும் என கூறியுள்ளாரோ அதற்கு மாற்றமாக இவருடைய முகல்லிதுகள் எதையும் விளங்க மாட்டார்கள். இந்நிலையில் இவர்கள் பிறறைப் பார்த்து சிந்தித்து செயல்படு என கூறுவது வேடிக்கையிலும் வேடிக்கைதான். அதனால் யாருக்கு மூளை வரண்டுவிட்டது என்பதைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்காமல் அவருடைய முகல்லிதுகள் (தலைவரை கண்மூடி பின்பற்றுபவர்கள்) தலைவரின்  இணையத்தளத்தில் இருந்து அப்படியே காப்பியடித்து நம்மிடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.  அதற்கான பதில்களை மட்டும் தற்போது பார்ப்போம்.

4:59 வசனத்தை குறிப்பிட்டு உதாரணமாக என்ற வார்த்தையுடன் பிரசுரத்தை நேரடியாக ஆரம்பித்துள்ளனர்.  ஒரு விஷயத்தை கூறிவிட்டு அதற்கான உதாரணத்தை கூறுவதுதான் மனித இயல்பு.  இவர்கள் உதாரணம் என்று கூறி பிரசுரத்தை ஆரம்பித்திருப்பது விந்தைதான்.

//உதாரணமாக தொழுது கொண்டு இருக்கும் போது காற்று பிரிந்து விட்டால் மீண்டும் உளு செய்து தொழ வேண்டும். அப்போதுதான் தொழுகை அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப் படும்.  ஒருவர் சிந்தித்து உளு செய்வதை விட காற்று பிரிந்த இடத்தை கழுவுவதுதான்  சிறந்தது என்று முடிவு செய்து மீண்டும் தொழுதால் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படுமா?  உலக அளவில் இது சரிதான்.  ஆனால் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது. // த.த.ஜ முகல்லிதுகளின் உதாரணம் 1

ஹிஜ்ரி கமிட்டியின் பதில்

தொழுது கொண்டிருக்கும் போது காற்று பிரிந்தால் மீண்டும் ஒளு செய்வதா? காற்று பிரிந்த இடத்தை கழுவுவதா? என்ற முரண்பாடும், மூளை வரண்ட சிந்தனையும் இதுவரை யாருக்கும் தோன்றியது இல்லை.  ஒரு வேளை தத்தமது பகுதி, மாவட்ட பிறை, மண்டலப்பிறை, மாநிலப்பிறை என்று தன்னுடைய பிறை நிலைபாட்டை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கும் த.த.ஜ தலைவருக்கும் அவருடைய முகல்லிதுகளுக்கும் காற்று பிரியும் விஷயத்திலும் முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம்.

மேலும், புரிந்து கொள்வதற்கு ஒரு உதாரணமாக மேற்படியாரின் அரைக்கால் டவுஸர் ஃபத்வாவை இங்கு நினைவூட்டுகின்றோம். அதாவது தொழுகையில் தனது தொடை தெரியுமளவிற்கு டவுஸர் போட்டு தொழலாம், அவ்வாறு தொழுதால் தொழுகை கூடும் என்பது சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்படியார் ஆய்வுசெய்து (!) கண்டுபிடித்ததாகும். மேற்படியாரின் ஆய்வு வாய்வுகளைப் பற்றி நாம் இங்கு குறிப்பிடவில்லை. மார்க்கத்தின் சட்டமாக ஒரு விஷயத்தை மக்களுக்கு பிரச்சாரம் செய்தால் அதை முதலில் அவரோ அல்லது அந்த ஆய்வை சரிகாண்பவர்களோ அதை நடைமுறைப்படுத்திக் காட்டவேண்டும் என்பதே அவரது கொள்கை.

மேற்படியாரோ அல்லது அந்த ஆய்வை சரிகாணும் அவரின் முகல்லிதுகளோ (தக்லீத் வாதிகள்) என்றாவது தங்களது தொடை தெரியுமளவிற்கு அரைக்கால் டவுஸர் போட்டு தொழுது காட்டியுள்ளார்களா? சற்று எண்ணிப்பாருங்கள். இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் முதலில் இந்த ரமழானிலேயே இரவுத் தொழுகையிலாவது இவ்வாறு டவுஸரோடு தொழுது காட்டட்டும். அதன் பிறகு பிறை ஆய்வை பற்றி பேசட்டும். நெல்லை ஏர்வாடி பிறை விவாதத்தில் மக்கள் கேட்ட கேள்வியால் ஏற்கனவே கழன்ற டவுஸரை இன்னும் சரிசெய்யாத நிலையில், பிறையை புறக்கண்களால் பார்த்துவராத, பிறைபற்றிய அறிவு கொஞ்சம்கூட இல்லாத இவர்கள், பிறை ஓர் விளக்கம் என்று பிரசுரம் வெளியிட்டு பிறைபற்றி  மக்களுக்கு விளக்க நினைத்தது இந்த நூற்றாண்டின் நகைச்சுவைதானே.

இஸ்லாமிய சட்ட அடிப்படையில், ஒருவன் மலஜலம் கழித்துவிட்டு, கழுவிவிட்ட பிறகும் கூட ஒளு செய்தால் தான் அவனுக்கு தொழுகை கூடும் என்ற அடிப்படை அறிவே இல்லாதவர்கள் தான் இது போன்ற உதாரணங்களை கூறி மக்களை முட்டாளாக்கப் பார்க்கின்றார்கள். மேலும் அவர்களுடைய ஃபத்வாவைப்பாருங்கள்.  உலக அளவில் ஒருவனுக்கு காற்றுப் பிரிந்தால், காற்றுப்பிரியும் இடத்தை மட்டும் கழுவிவிட்டு தொழுவதுதான் சரி எனவும் அவர்கள் கூறிவிட்டு, அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதாலேயே நாங்கள் ஒளு செய்கின்றோம் எனவும் கூறியுள்ளனர்.

அவர்கள் இவ்வாறு கூறுவதிலிருந்து, காற்று பிரியும் விஷயத்தில் ஒளு செய்ய சொல்லும் அல்லாஹ்வின் சட்டம் உலக அளவில் தவறானதுதான் இருந்தாலும் அல்லாஹ் சொல்லிவிட்ட தால் நாங்கள் செய்கின்றோம் என அல்லாஹ்விற்கே பாடம் சொல்லி கொடுக்கின்றார்கள். நவூது பில்லாஹ்.

அவர்கள் கூறும் 4:59 வசனத்தின் படி ஹிஜ்ரி கமிட்டி அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மட்டுமே கட்டுப்பட்டு செயலாற்றுகிறது என்பதை எங்கள் ஆய்வுகளை WWW.MOONCALENDAR.IN என்ற எங்கள் இணையத்தளத்தில் பார்த்து விளங்கிக்கொள்ளலாம். ஆனால் இவர்களோ தன்னுடைய தலைவர் பிறை விஷயத்தில் தவறு செய்கின்றார் என்று தெளிவாக தெரிந்தும் 4:59 குர்ஆன் வசனத்திற்கேற்ப அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படாமல், அதிகாரமில்லாத தங்கள் இயக்கத்தினுடைய தலைவருக்கு மட்டும் கட்டுப்படுவது எவ்வாறு அந்த வசனத்தை பின்பற்றுவதாகும்?

ருஃயத் என்பது சந்திரனின் காட்சியை அடிப்படையாக கொண்டு கண்ணால் தகவலால் அறிவால் ஆய்வால் கணக்கீட்டால் அறிந்து கொள்வது போன்ற விரிவான பொருளை தரும் பதம்தான் என்று நமது பிரசுரத்தில் வெளியிட்டிருந்தோம். அதற்கு அவர்களின் இரண்டாவது உதாரணமான ஊசி போன கதையைப் பார்ப்போம்.

//உதாரணமாக ஊசி என்ற பொருள் உள்ளது. இந்த ஊசிக்கும் பல நிலை உள்ளது. ஒரு மருத்துவரிடம் சென்றால் அவர் பயன்படுத்தும் ஊசி வேறு ஒரு டெய்லரிடம் சென்றால் அவரிடத்தில் அந்த ஊசி வேறு.  ஒரு சாக்கு தைப்பவரிடம் சென்றால் அவரிடத்தில் அந்த ஊசி வேறு. இவ்வாறு ஊசிக்கு பல பயன்பாடு உள்ளது. இப்போது மருத்துவர் என்றால் இந்த மாதிரி ஊசியைத்தான் பயன்படுத்துவார்.  டெய்லர் என்றால் இந்த மாதிரி ஊசியைத்தான் பயன்படுத்துவார் என்பதை விளங்கிக் கொள்வோம்.  அதுபோல் ருஃயத் என்பதற்கு நபி(ஸல்) அவர்கள் என்ன பொருள் கொடுத்தார்கள் என்பதை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும்.// த.த.ஜ முகல்லிதுகளின் உதாரணம் 2

ஹிஜ்ரி கமிட்டியின் பதில்

ஊசி கதையில் மூன்று நபர்களைப்பற்றி குறிப்பிடுகின்றார்கள்.  மூன்றும் ஊசிதான் ஆனால் அவர்கள் பயன்படுத்தும் விதம் வெவ் வேறு என கூற வருகின்றார்கள்.   ஆனால் அவர்கள் மூன்று நபரும் ஊசியை கொண்டு குத்தியே தங்கள் காரியத்தை முடிக்கின்றனர்.  மருத்துவர் உடலில் குத்துவார்.  டெய்லர் துணியில் குத்துவார்.  சாக்கு தைப்பவர் சாக்கில் குத்துவார்.  மூன்று ஊசியும் இங்கே குத்தும் வேலைத்தான் செய்கின்றது.  அதுபோல் ருஃயத் என்ற பதம்  சந்திரனின் காட்சியை அறிந்து படித்தரங்களான தேதியை முடிவு செய்ய வேண்டும் என்ற ஒரே வேலையை செய்வதற்காகத்தான் அல்லாஹ் படைத்ததாக கூறுகின்றான்.  ஊசியை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்ப ஊசியின் பருமன் வித்தியாசப்பட்டாலும்  ஊசியின் பணி குத்தும் பணிதான். அதைக்கொண்டு வேறு பணியாற்ற முடியாது.

எனவே  கண்ணால் தகவலால் அறிவால் ஆய்வால் கணக்கீட்டால் அறிந்து சரியான தேதியை கண்டுபிடிக்கும் பணியைத்தான் சந்திரனின் ருஃயத் (காட்சி)  மூலம் நாம் செய்ய முடியும்.

த.த.ஜ. வின் ஹதீஸ் 1. 

حدثنامسدد،وخلفبنهشامالمقرئ،قالا : حدثناأبوعوانة،عنمنصور،عنربعيبنحراش،عنرجل،منأصحابالنبيصلىاللهعليهوسلمقال : اختلفالناسفيآخريوممنرمضان،فقدمأعرابيان،فشهداعندالنبيصلىاللهعليهوسلمباللهلأهلاالهلالأمسعشية،فأمررسولاللهصلىاللهعليهوسلمالناسأنيفطروا “ *. سننأبيداود  - كتابالصومبابشهادةرجلينعلىرؤيةهلالشوال - حديث : 2005

ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது இரு கிராம வாசிகள் வந்து நேற்று மாலை பிறைப்பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் பெருநாள் தொழுகை தொழும் திடலுக்கு செல்லுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டனர்.   அறிவிப்பவர் : ரிப்யீ பின் ஹிராஷ்  நூல்: அபுதாவூத் த.த.ஜ வின் ஹதீஸ் 1 லிருந்து த.த.ஜ முகல்லிதுகள் எழுப்பும் கேள்விகள்

கேள்வி 1. ருஃயத்  என்ற பதத்திற்கு கணக்கிடுதல் என்ற பொருள் இருந்தால் ஏன் மக்களிடம் கருத்து வேறுபாடு வரவேண்டும். அவர்கள் அழகான முறையில் கணக்கிட்டு தொழுது இருக்கலாமே? என கேள்வி எழுப்புகின்றனர்.

கேள்வி 2. நேற்றுமாலை பிறை பார்த்தோம் என நபி(ஸல்) அவர்களிடம் கூறியதால் அவர்கள் கண்ணால் பிறை பார்த்தார்கள் என்பது தானே ருஃயத்திற்கு அர்த்தமாகும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

த.த.ஜ ஹதீஸ் 1 க்கு ஹிஜ்ரி கமிட்டியின் பதில்

இவர்கள் எடுத்து வைக்கும் ரிப்யீ பின் ஹிராஷ் அறிவிக்கும் இந்த செய்தி முர்ஸல் என்ற வகையை சேர்ந்ததாகும்.  முர்ஸல் என்றால்  நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட நபரை மறைத்து நபியவர்களிடம் நேரடியாக கேட்காத நபர் அறிவிப்பதாகும்.  மேலும் ஸஹாபாக்கள் மற்றும் தாபியீன்களின் கூற்று மார்க்க ஆதாரமாகாது என்று மேடைக்கு மேடை முழங்கும் இவர்கள் தலைவர், சரியான அறிவிப்பாளர்கள் வரிசையைக் கொண்ட ஸஹீஹான ஹதீஸ்களைக்கூட தமது சிந்தனைக்கு ஒத்துவரவில்லை என்ற காரணத்தைச் சொல்லி ழயீஃப் என்று சுலபமாக தட்டிவிடும் நிலையில், பிறை விஷயத்தில் மட்டும் இந்த முர்ஸலான அறிவிப்பு உட்பட பல பலஹீனமான அறிவிப்புகளைக் கூட தமது பிறைநிலைபாட்டிற்கு தக்க ஆதாரங்களாகத் தூக்கிப் பிடிக்கும் இரகசியம்தான் என்ன? என்பதைப்பற்றி மக்களே  இவர்களிடம் நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதை ஒரு வாதத்திற்காக ஆதாரமாக கொள்ளலாம் என்று வைத்துக்கொண்டாலும் கூட இது கணக்கை வலியுறுத்தும் செய்தியாகவே உள்ளது.

அவர்கள்  எடுத்து வைக்கும் ஹதீஸ் ஆதாரத்தில் அவர்கள் கூறுவது போல் ருஃயத் என்ற பதமே இல்லை. அவர்களின் ஹதீஸ்  ஆதாரத்தை நாங்கள் இப்பிரசுரத்தில் அரபு மூலத்துடனும், அவர்கள் பிரசுரத்தில் உள்ள மொழிபெயர்ப்பையும் கொடுத்துள்ளோம்.   ருஃயத் என்ற பதம் அவர்களுடைய ஆதாரத்தில் எங்குள்ளது என்பதை அவர்கள் தான்  மக்களிடம் காட்டி கொடுக்க வேண்டும்.

கணக்கிடுதல் என்ற பொருள் ருஃயத்திற்கு இருந்தால், கருத்துவேறுபாடு ஏன்வந்தது என்ற கேள்வியை இவர்கள் தற்போது எழுப்புகின்றார்கள்? உண்மையில் இந்த கேள்வியை நாங்கள்தான் அவர்களிடம் கேட்டுவருகின்றோம். நபி(ஸல்) அவர்கள் பிறை பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள் என்று கூறிவிட்டார்கள். எனவே நாங்கள் பிறையை பார்த்தே நோன்பு நோற்போம் பெருநாள் கொண்டாடுவோம் என்று கூறுபவர்கள் மத்தியில் ஏன் கருத்து வேறுபாடு வரவேண்டும்? என ஹிஜ்ரி கமிட்டி ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு இதுவரை யாரும் பதில் தரவில்லை.

எனவே அவர்களிடம் நாம் மீண்டும் கேட்கின்றோம்.  பிறை பார்க்காவிட்டால் முப்பதாவது நாள் என முழுமைப்படுத்த நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் என கூறும் த.த.ஜ வினர் தான், அவர்கள் பதிந்துள்ள அறிவிப்பில் வரும்  அந்த மக்கள் ஏன் நபியின் சொல்லை புறக்கணித்து தங்கள் மத்தியில் கருத்துவேறுபாடு கொண்டிருந்தனர் என்பதை மக்கள் மன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என ஹிஜ்ரி கமிட்டி த.த.ஜவினரைப் பார்த்து கேட்கின்றது?

அந்த செய்தியில் உள்ள கருத்துவேறுபாடு கொள்ளும் மக்களுக்கு  முன்கூட்டியே இன்று முதல் நாள் தான் என்பது எவ்வாறு தெரிய வந்தது?   ஒரு சாரார் இன்று மாதத்தின் முதல் நாள்தான் என்று கூறியிருந்தால் தானே அங்கு கருத்து வேறுபாடு வரமுடியும் ? முன்கூட்டியே மாதம் முடியும் கணக்கை ஒரு சாரார் அறிந்திருந்ததாலேயே மற்றொரு சாராருடன் கருத்துவேறுபாடு கொண்டிருக்க முடியும்?

அவர்கள் பதிந்துள்ள இந்த செய்தியில் வரும் நேற்று மாலை பிறை பார்த்தோம் என்ற பதமே இவர்களுடைய நாளின் ஆரம்பம் மஃரிப் தான் என்ற கொள்கையை தவிடு பொடியாக்குகின்றது என்பதை நாளின் ஆரம்பம் பஜ்ர் தான் என்பதைப்பற்றி த.த.ஜவினர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூறும் போது விரிவாக காணலாம்.

த.த.ஜ ஹதீஸ் 2

சந்தேகத்துக்குரிய நாளில் (ஷஃபான் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கின்றாறோ  அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார்.  அறிவிப்பவர்: அம்மார் ரழி நூல்: ஹாக்கிம்.

த.த.ஜ ஹதீஸ் 2 க்கு ஹிஜ்ரி கமிட்டி பதில்

இவர்கள் பதியும் ஹாகிம் என்ற கிதாபில் உள்ள இந்த செய்தி பலஹீனமான செய்தியாகவே இருந்தும், இவர்கள் எவ்வாறு ஆதாரமாக கொள்கின்றார்கள் என்பதை அவர்கள் விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்.  மேலும்,  இதில் ஷஃபான் முப்பதாம் நாளில் என்று மொழியாக்கம் செய்து அடைப்புக் குறிக்குள் கொண்டுவந்துள்ளார்கள். முப்பதாம் நாள் என்ற வார்த்தையை நுழைத்து இந்த செய்தியை திசை திருப்ப முயற்சி செய்துள்ளார்களா? திசைதிருப்ப மட்டும் சுயஅறிவை பயன்படுத்த வேண்டுமா? என்பதை த.த.ஜ வினர் தெளிவுபடுத்த வேண்டும்.   இவர்கள் அல்லாஹ்வின் சந்திர நாட்காட்டியை பொய்ப்படுத்துவதற்காக, பொய்யாக புனையப்பட்ட, பலஹீனமான செய்திகளை, தவறாக மொழிபெயர்த்து, தங்களுடைய தவறான நிலைபாட்டிற்காக மக்கள் மீது திணிக்கின்றனர்.

மேலும் அவர்களுடைய பிரசுரத்தில் வெளியிட்டுள்ள முதல் இரண்டு  அறிவிப்புகளையும் நாம் உற்று நோக்கும் போது அதில் ' ருஃயத் ' என்ற பதமே இல்லை என்பதோடு அதன் மூலச் சொல்லில் இருந்து உருவான பதங்களும் கூட அந்த செய்திகளில் இல்லை.  எனினும் அவர்கள்  ருஃயத் என்ற பதம் அந்த செய்தியில் உள்ளதாக நினைத்து ருஃயத்தைப்பற்றி அறியாமையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்தோ பரிதாபம். தக்லீத் வாதிகளான இந்த முகல்லிதுகளின் நிலை மிகவும் வருந்தத்தக்கதாகவே உள்ளது.

எனவே நாம் சொல்வதையாவது சுயஅறிவைக்கொண்டு சிந்திப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ருஃயத் என்ற பதத்திற்கு அறிவால் ஆய்வால் தகவலால் என்ற அர்த்தங்களை நாம் சுயமாக கூறவில்லை.  ருஃயத் என்ற மூலச் சொல்லில் இருந்து பிறந்த ரஆ, தரா போன்ற சொற்கள் சுமார் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பதங்களை அல்லாஹ் எந்த அர்த்தத்துடன் பயன்படுத்தி யிருக்கின்றானோ அந்த பொருளையே நாமும் இந்த பதத்திற்கு வைக்கின்றோம். மேலும் ருஃயத்  (காட்சி) பற்றி தெளிவாக அறிந்துகொள்ள நமது இணையத்தளமான றறற.அடிடிஉயடநனேயச. ல்  பிறையும் புறக்கண்ணும் என்ற தலைப்பிடப்பட்ட கட்டுரையை படித்துப்பார்க்கவும்.

ஆகவே ருஃயத் என்ற பதத்திற்கு அறிவால் ஆய்வால் தகவலால் என்ற அர்த்தங்கள் கொடுக்கக் கூடாது என்று கூறிய இவர்களால் எந்த குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தையும் அவர்கள் பிரசுரத்தின் மூலமாக சமர்ப்பிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

அடுத்து நமது பிரசுரத்தில் 'கும்ம' என்ற பதம் மறைக்கும் பொழுது என்ற பொருளை கொண்டுள்ளது  என கூறியிருந்ததை தவறு என வாதிட்டு த.த.ஜவினர் என்ன பதில் கூறியுள்ளார்கள் என்பதையும், என்னென்ன கேள்விகளை எழுப்பியுள்ளார்கள் என்பதையும் பார்ப்போம்.

த.த.ஜ வினர் 'கும்ம' என்ற பதத்திற்கு மறைக்கும் பொழுது என நாம் கூறியுள்ளதை மறுத்து எழுப்பியுள்ள கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் கீழ்வருமாறு:- 

த.த.ஜ குற்றச்சாட்டு. 1 ஹிஜ்ரி காலண்டர் என்று பார்க்க ஆதாரமில்லாத ஒன்றை நிலைநாட்டும் இந்த கூட்டத்தினர் வெறும் கேள்விகளாகவே கேட்பார்கள் இதற்கு இதுதான் அர்த்தம் என்று ஆதாரத்துடன் வாதத்தை எடுத்து வைக்க மாட்டார்கள்.

ஹிஜ்ரி கமிட்டியின் பதில்:

குர்ஆனிலும் ஹதீஸ் கிதாபிலும் இருந்து எடுத்துவைத்த நமது ஆதாரங்களை கண்டு மிரண்டு போய்தானே நமக்கு எதிராக ஆதாரமற்ற ஹதீஸ்களையும்,  பிறைக்கு சம்மந்தமில்லாத குர்ஆன் வசனங்களையும் பிரசுரித்து மக்களை திசை திருப்பும் நோக்கில் அவசர அவசரமாக ஒரு பிரசுரத்தை இறக்கினார்கள். மேலும் நாம் எடுத்து வைத்த ஆதாரங்களை நடுநிலையோடு ஆய்வு செய்துப் பார்த்திருந்தால் ஹிஜ்ரி காலண்டர் என்று பார்க்க ஆதாரமில்லாத ஒன்றை நிலைநாட்டுகின்றோம் என்ற மழுப்பல் வாதத்தை இவர்கள் வைத்திருக்கவே முடியாது.

ஹிஜ்ரி கமிட்டியினராகிய நமது நிலைபாட்டை இதுவரை நாம் வெளியிட்ட அனைத்து பிரசுரங்களிலும், நமது இணையத் தளமான www.mooncalendar.in இலும், தெளிவான ஆதாரத்தோடு தான் வெளியிட்டுள்ளோம்.  மேலும் எங்களின் ஆதாரத்தில் ஏதாவது பலஹீனமான செய்திகளையோ, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையோ ஸஹாபாக்கள் காலத்தில் நடந்த சம்பவங்களையோ அல்லது தவறான  மொழிபெயர்ப்புகளையோ  எங்களை அறியாமல் தந்திருந்து, நாங்கள் அதை தவறு என அறிந்து கொண்டாலோ அல்லது சுட்டிக்காட்டப்பட்டாலோ உடனடியாக எங்களை திருத்திக்கொள்ளும் பக்குவத்தில் நாங்கள் இன்றுவரை இருக்கின்றோம் என்பதை அல்லாஹ்வே நன்கறிவான்.

ஒரு நிலைபாட்டில் உள்ளவர்களிடம் அது சார்ந்த கேள்விகளை கேட்டால், அந்த நிலைபாட்டில் அவர்கள் உண்மையானவர்களாகவும் உறுதியானவர்களாகவும் இருந்தால், அதற்கான பதிலை அறிவுப்பூர்வமான முறையிலும் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸிற்கு உட்பட்ட நிலையிலும் பதில் அளிப்பது அவர்களின் மீது கடமை.  அவர்களுடைய நிலைபாடு தவறானதாகவும், உறுதியற்ற நிலையையும் கொண்டதாகவே இருப்பதாலும், நமது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இது போன்று அவர்கள் வசைபாடி பிரசுரம் வெளியிட்டு வருகின்றார்கள். இதுவே தக்லீதுவாதிகளின் இனிய பண்பு (?)

'கும்ம' என்ற பதத்தை பற்றிய த.த.ஜ வின் கேள்விக்கு ஹிஜ்ரி கமிட்டியின் பதில்: 'கும்ம' என்ற பதத்திற்கு மேகமூட்டம் என்றுதான் மொழிபெயர்க்க வேண்டும் என கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக நான்கு வசனங்களை குறிப்பிட்டுள்ளனர். 2:57, 7:160, 25:25, 2:201 அவர்கள் எடுத்து வைக்கும் குர்ஆன் வசனங்களில்  அவர்கள் கூறும் 'கும்ம'  என்ற பதம் இல்லையென்பதை தெளிவாக அறிந்தும் மக்களை ஏமாற்றி திசை திருப்புவதற்காகவே இந்த பிரசுரத்தை அவசர அவசரமாக வெளியிட்டுள்ளதை நாம் அறிய முடிகின்றது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2:201 வசனத்தில் அவர்கள் தவறாக விளங்குவதற்கு கூட வாய்ப்பில்லாத அளவிற்குரிய வசனமாகும். ஏனென்றால், மற்ற மூன்று வசனங்களில் 'ஙமாம்' என்ற சொல் உள்ளது. சத்தியத்தை மக்கள் அறிந்து அவர்களிடம் கேள்வி எழுப்பும் போது 'கும்ம' என்ற பதம் வேறு 'ஙமாம்' என்ற பதம் வேறுதான், நாங்கள் தவறுதலாக மொழியாக்கம் செய்து விட்டோம் என அவர்கள் நிலையில் இருந்து நழுவி விடுவார்கள். அது அவர்களுக்கு கைவந்த கலை தான் என்பதை அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம்.

அதே சமயம் த.த.ஜ வினர் பதிந்த 2:201 வசனமோ நாம் அல்லாஹ்விடம் அதிகமாக கேட்கும் ''ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா' என்ற துஆ சம்மந்தப்பட்ட வசனமாகும். இதில்  அவர்களுடைய ஆதாரமான 'ஙமாம்' என்ற பதம் உள்ளது என்று கூறி எவ்வாறு பதிவிட முடியும் என்று சிந்திக்கும்  சாதாரண அறிவு கூட அவர்களுக்கு இல்லையோ என்று நாம் நினைக்கும் அதே வேளையில், இவர்கள் இதுபோல்  சம்மந்தமில்லாத வசனங்களை கூட பதிந்து, மக்களை திசை திருப்ப முயற்சிப்பார்கள் என்பதை மட்டும் இதிலிருந்து தெளிவாக நாம் விளங்கிக் கொள்ளலாம்.

அரபியில் உள்ள வார்த்தையின் வேர்சொல்லைப்பற்றிய சாதாரண மொழி அறிவு கூட இல்லாத மௌலவிகள் இவர்கள் இயக்கத்தில் இருக்கின்றார்கள் என்பது அவர்களின் கேள்வியில் இருந்தும் குற்றச்சாட்டில் இருந்தும் நமக்கு நன்றாக புரிகின்றது.  ஏனெனில் ''கும்ம' என்ற பதத்திற்கு மறைத்தல் என்ற அர்த்தம் இருக்கின்றது என நாம் கூறினால்,  'ஙமாம்'(Gamaam)என்ற வார்த்தைக்கு மேகம் என்ற அர்த்தம் உள்ளது என்று கூறி 'ஙமாம்'; என்ற வார்த்தை வரும் வசன எண்களை அவர்கள் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளனர். கும்ம (Gamaam) என்ற பதத்திற்கும் 'ஙமாம்' என்ற பத்தத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லாத போது இதை ஆதாரமாக காட்டுகின்றார்களே இவர்களின் ஆய்வுத்திறமை மக்களை மெய்சிலிர்க்க வைக்கின்றது. அந்தோ பரிதாபம்!

'ஙமாம்'என்ற பதம் 'கும்ம'  என்ற பதத்திலிருந்தோ 'கும்ம' என்ற பதம் 'ஙமாம்' என்ற பதத்திலிருந்தோ வந்தது என்று அரபி மொழி இலக்கணம் படித்த யாரும் சொல்லவே மாட்டார்கள்.  இதை ஒரு ஆதாரமாக இவர்கள் எவ்வாறு காட்ட முடிந்தது.  தவறான நிலைபாட்டை நியாயப்படுத்த இவர்கள் காட்டும் ஆதாரங்கள்தான் பலஹீனமாக இருக்கின்றது என்று நினைத்தால், இவர்களின் மொழியறிவும் கூட மிகவும் பலஹீனமானதாகவே இருக்கின்றது என்பதை இவர்கள் பிரசுரத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.  த.த.ஜவினருக்கு அல்லாஹ் நடுநிலையோடு சிந்திக்கும் ஆற்றலை தந்தருளட்டும்.

நாளின் ஆரம்பம் எப்போது? என்பதற்கு த.த.ஜ எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் பதில்.

நாளின்  துவக்கம் ஃபஜ்ர் என்று இவர்களாகவே ஒப்புக் கொண்டதை பாருங்கள்.  இவர்களின் நோட்டீஸ் பக்கம் 1 ல் ஆதாரமாக காட்டியுள்ள ஹதீஸ் 1  ல் ரிப்யீ பின் ஹிராஷ் இன் அறிவிப்பாக அபூதாவூதில் இடம்பெறும் முர்ஸலான செய்தியில் கிராம வாசிகள் வந்து நேற்று பிறையைப்பார்த்தோம் என்று சாட்சி சொன்னார்கள் என உள்ளது.

கிராம வாசிகள் நேற்று மாலை பிறை பார்த்தார்கள் என்றால் இவர்கள் நிலைப்பாட்டின் படி மஃரிப் நேரத்தில் பிறை பார்த்திருப்பர்.  நாளின் துவக்கம் மஃரிப் என்றால், நேற்று மாலை என்ற வாசகம் இடம் பெறக்கூடாது.  இன்று மாலை பிறைப் பார்த்தார்கள் என்றுதானே இடம்பெற்றிருக்க வேண்டும்.  எனவே இந்த ரிப்யீ பின் ஹிராஷ் என்ற செய்தியிலேயே நாளின் துவக்கம் ஃபஜ்ர் தான் என்று உறுதியாகின்றது.

அடுத்து நாளின் துவக்கம் மஃரிப் என்பதற்கு இவர்கள் காட்டும் ஆதாரங்களை பார்ப்போம்.

நாளின் துவக்கத்திற்கு த.த.ஜ காட்டும் ஹதீஸ் 1

லைலத்துல் கத்ர் இரவு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யார் விளக்கம் கேட்பது என்று பேசிக்கொண்டோம்.  இது ரமலான் மாதம் 21 ம் நாள் காலையில் நடந்தது நான் புறப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மஹ்ரிப் தொழுகையில் பங்கு கொண்டேன். லைலத்துல் கத்ர் பற்றி கேட்டுவர என்னை பனூ ஸலமா கூட்டத்தினர் அனுப்பியதைத் தெரிவித்தேன்.  இது எத்தனையாவது இரவு என்று கேட்டனர். 22 ஆம் இரவு என்று நான் குறிப்பிட்டேன் இது தான் அந்த இரவு என்று கூறினார்கள்.   பின்னர் திரும்பி வந்து அடுத்த இரவும் எனக் கூறி 23 ஆம் இரவைக் குறிப்பிட்டனர்.  

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரழி)   நூல்: அபூதாவூத் 1171

இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையில் ஆபித் பின் இஸ்ஹாக் மற்றும் இப்றாஹீம் பின் தஹ்மான் ஆகிய இருவரும் பலஹீனமானவர்கள் என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். எனவே இதுவும் முற்றிலும் பலஹீனமான செய்தியாகவே உள்ளது.

குறிப்பு: மேலும் இவர்கள் அரபி மொழியறிவிலும் குறையுடையவர்களாக இருப்பதால், லைலத் என்ற பதத்தை இரவு என இங்கு தவறாக மொழிபெயர்த்து மக்களை திசை திருப்புகின்றனர்.  இவர்கள் தலைவரே லைலத் என்ற பதத்திற்கு நாள் என்ற அர்த்தம் உள்ளது என்று கூறியதை கீழ்கண்ட இணைய இணைப்பில் சென்றுபார்க்கவும்.

http://mooncalendar.in/index.php?option=com_content&view=article&id=195:siraj-vs-pj-&catid=60:2012-03-31-13-49-52&Itemid=95

நாளின் துவக்கத்திற்கு த.த.ஜ காட்டும் ஹதீஸ் 2

ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படும் (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரழி)  நூற்கள்: அஹ்மத் 9883 அல் அதபுல் முஃப்ரத் (61)ஷீஅபுல் ஈமான் (7056)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஹஸ்ரஜ் பின் உஸ்மான் ஸஃதி  என்பவர் பலஹீனமானவர்.  ஆகவே இந்த செய்தி அறிவிப்பாளர் வரிசையில் உள்ள குறைபாட்டினால் ழயீஃப் ஆன அதாவது பலஹீனமான செய்தியாகும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஏர்வாடி கிளை என்ற பெயரிட்டுள்ள இயக்கம் தங்களுடைய கொள்கை பிரகடனமாக குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை கொண்டே செயல்படுகின்றோம் என கூறி வருகின்றனர்.  இவர்களின் பிரசுரத்தில் ஆதாரமாக காட்டியுள்ள குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ் ஆதாரங்களையும் ஆராய்ந்து  பார்க்கும் போதுகுர்ஆன் வசனங்களை முன்னுக்கு பின் மாற்றியும், பலஹீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் ஆதாரமாகக் கூறி  விளக்கம் கொடுத்து மக்களை வழிகேட்டிற்கு அழைத்து செல்லும் பணியைத்தான் செய்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

ஒரு  செய்தி  குர்ஆனுக்கு மோதுவதாக தன் அறிவுக்கு தென்பட்டால் அந்த செய்தி ஆதாரப்பூர்வமானதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என வாதிடும் இந்த த.த.ஜ வினர் இந்த பிறை விஷயத்தில் வரும் குர்ஆன் வசனங்களை ஆய்வுக்கே உட்படுத்தாமல், அதை கண்டும் காணாமல் விட்டுவிட்டு, பலஹீனமான   இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தன்னிலைப் பாட்டிற்கு எவ்வாறு ஆதாரமாக கொள்கின்றார்கள் என்பது சாதாரண மக்களுக்கு கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களுடைய நிலைபாட்டை நாம் ஆராயும் போது, த.த.ஜ உடைய  இயக்கத் தலைவரின்  நிலைபாடு தவறாக இருந்தாலும், அதை மழுப்பி மக்களை தங்கள் இயக்கத்தில் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கிலும், குர்ஆன்  ஹதீஸ் என்ற பெயரில் தங்களின் தவறான நிலைப்பாட்டை நியாயப்படுத்தவும் இவ்வளவு பெரிய ஹதீஸ் ஆய்வு மோசடியை செய்துள்ளனர் என்றே விளங்குகின்றது.

மேலும், இவர்களும் உடன்படும்  விஷயத்தில் கூட தமிழகத்தின் அனைத்து அமைப்புகளும் ஒன்று சேர்ந்து போராட அழைக்கும் போது நாங்கள் தனித்துவத்துவமான தவ்ஹீத் வாதிகள் எங்கள் போராட்ட களம் தனித்துவமாகவே இருக்கும் என்று கூறி மற்றவர்களுடன் சேர்ந்து போராட்டம் செய்ய மறுக்கும் இவர்கள்,  பெருநாள்கள் (பிறை) விஷயத்தில் மட்டும், இவர்களே வழிகேடர்கள், முஷ்ரிக்குள், காஃபிர்கள், என்று விமர்சிக்கின்ற  சுன்னத் வல் ஜமாஅத்தினரோடு ஒரே நாளில் பெருநாள் கொண்டாடும் மர்மம் தான் என்னவோ? டவுன் காஜிக்கும் இவர்களுக்கும் இடையில் உள்ள மறைமுக ஒப்பந்தம்தான் என்னவோ?  டவுன் காஜியின் அறிவிப்பிற்கு மாற்றமாக தனித்து ஒரு நாள் பெருநாள் கொண்டாடிய த.த.ஜ. அவர்களுடைய பெருநாள் திடலுக்கு தொழுகை நடத்த வந்தபோது, சுன்னத் வல் ஜமாஅத்தினர் யாருமே அவர்களுடைய பெருநாள் திடலிற்கு பெருநாள் தொழ வராததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.  அந்த பெருநாள் தினத்திற்கு பின் சுன்னத் ஜமாஅத்தினர் நமது பெருநாள் திடலுக்கு வராவிட்டால் நமது நிலைமை கவலைக்கிடமாகிவிடும் என்பதை த.த.ஜ வினர் உணர்ந்து  கொண்டனர். அந்த பெருநாள் தினத்தில்தான் அவர்களுடைய இயக்கத்தினர் எத்தனை பேர் த.த.ஜ இயக்க தலைவரின் பிறை நிலைபாட்டில் இருக்கின்றனர் என்பதையும் அறிந்து மேலும் அதிர்ச்சியடைந்தனர். ஆகவே இந்த நிலை தொடர்ந்து விட்டால் தங்களின் சாயம் வெளுத்துவிடும் என்ற பயத்தினால் ஒவ்வொரு வருடமும் பிறை அறிவிப்பு செய்வதற்கு காலதாமதம் ஏற்படுத்தி காஜி அறிவித்த பிறகே இவர்கள் பிறையைப்பற்றி அறிவித்து வருகின்றார்கள்.

அடுத்ததாக,  இவர்கள் குறிப்பிடும் 41:9-12 வசனங்களில் எந்த இடத்திலும்  நாளின் துவக்கம் மஃரிப் தான் என்று அல்லாஹ்  கூற வில்லை. அல்லாஹ் அந்த வசனத்தில்  சூரியனையோ சந்திரனையோ பகலையோ இரவையோ பற்றியும் குறிப்பிடவே இல்லை.

அவர்கள் குறிப்பிட்ட அந்த வசனத்திற்கும் இவர்கள் கொடுக்கும் விளக்கத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை அந்த வசனத்தை படித்துபார்ப்பவர்கள் நன்கு புரிந்து கொள்ளலாம்.

சூரியன் சந்திரன் பகல் இரவு பற்றி அல்லாஹ் கூறும் எத்தனையோ வசனங்கள் இருந்தும் அவைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இந்த வசனத்தை காட்டுவதின் நோக்கம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது.

மேலும் இரவு என்ற பதம் முன்னாலும், பகல் என்ற பதம் பின்னாலும் அமைக்கப்பட்ட ஒரு வசனத்தை அல்லாஹ்  இறக்கியதை வைத்து  இரவு தான் முன்னால் வந்துள்ளது அதனால் இரவில் இருந்துதான் நாளின் ஆரம்பம் என்று யாரும் கூறவே முடியாது.  ஏன்என்றால்,  ஒரு நாளை கணக்கிட்டால் தான் ஒரு மாதத்தை கணக்கிட முடியும், ஒரு மாதத்தை கணக்கிட்டால் தான் வருடத்தை கணக்கிட முடியும்.

ஒரு  நாளை எங்கிருந்து எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பதை அல்லாஹ்வே தெளிவுபடுத்தியதை நீங்கள் அல்குர்ஆனில் இருந்து  பார்த்தால் நாளின் ஆரம்பத்தை பஜ்ரிலிருந்துதான் கணக்கிட வேண்டும் என்ற ஹிஜ்ரி கமிட்டியின் நிலைபாடு சரியானது என்பதை மக்களே நீங்கள் விளங்கிக்கொள்ள இயலும். 

அல்லாஹ் என்ன கூறுகின்றான் என்பதை பாருங்கள்.

இரவையும், பகலையும் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம்.  இரவின் அத்தாட்சி மங்கிடச் செய்தோம்.  உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற் காகவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும்  நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் பகலின் அத்தாட்சியை பிரகாசமாக்கினோம். மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கின்றோம். அல்குர்ஆன் 17:12

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் அறிந்து கொள்வதற்காகவே பகலை பிரகாசமாக்கினோம் என கூறியுள்ளதிலிருந்து கணக்கிடும் முறைக்காக அல்லாஹ் ஒரு வசனத்தை நேரடியாகவே தந்துள்ளதை நாம் விளங்கிக்கொள்ளலாம்.   ஆண்டுகளின் எண்ணிக்கையும் கணக்கையும் அறிந்து கொள்ள ஒரு  நாளை எதிலிருந்து துவங்க வேண்டும் என்பதை அல்லாஹ் கூறியே ஆக வேண்டும் என்பதால் தான் அல்லாஹ் பகலில் இருந்து கணக்கை துவங்க நமக்கு உத்தர விட்டுள்ளான்.  எனவேதான் ஹிஜ்ரி கமிட்டி பகலின் ஆரம்பமான ஃபஜ்ர் நேரத்திலிருந்து நாட்களை துவங்கி, அதனடிப்படையில் மாதத்தையும், வருடத்தையும்  கணக்கிட்டு மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்து பிரச்சாரம் செய்து வருகின்றது.

நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் தான் என்பதற்கு ஹிஜ்ரி கமிட்டி சமர்ப்பிக்கும் ஹதீஸ் ஆதாரம்

உங்களில் ஒருவர் அறிந்த நிலையில் தன் மனைவியை அடிமையை அடிப்பது போல் அடிக்கின்றார். பின்னர் அந்நாளின் இறுதியில் அவளுடன் அவர் படுக்க நேரிடலாம். அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ ரழி  நூல் புஹாரி 4942  தாரமி 2123

மேற்கண்ட செய்தியில் மின் ஆகிரி யவுமிஹி என்ற வாசகத்தை நபி (ஸல்) பயன்படுத்தியுள்ளார்கள்.  இதற்கு அந்த நாளில் ஒரு பகுதியான இறுதியில் என்று பொருள்.  மின் என்னும் வார்த்தை ஒரு பகுதி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாளின் கடைசி பகுதி இரவுதான் என்பது தெளிவாகின்றது.  அப்படியானால் முதல் பகுதி பகல் இரண்டாம் பகுதி இரவு.  அதன் ஆரம்ப பகுதி பஜ்ர் ஆகும்.. ஃபஜ்ருதான் நாளின் ஆரம்பம் என்பதற்கு ஆதாரமாக சரியான தரத்ததில் அமைந்த இந்த செய்தி கூடுதல் வலு சேர்க்கின்றது.

த.த.ஜ பிரசுரத்தில் ஹிஜ்ரி கமிட்டியின் கேள்வி - 4  என குறிப்பிட்டு அவர்கள் எழுதிய பதிலுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் பதில்

மேலும் நாம்  சூரியனை கணக்கிட்டு தொழுகை நேரத்தை முன்கூட்டியே தீர்மானிக்கும் போது சந்திரனை கணக்கிட்டு நமது நோன்பு பெருநாட்களை ஏன் அமைத்துக்கொள்ளக்கூடாது என்பதை சந்திரனுக்கு ஒரு நிலைபாடு சூரியனுக்கு ஒரு நிலைபாடா என்று நாம் மேலும்  கேட்டிருந்தோம்.

சூரியன் விஷயத்தில் கணிக்கலாம் சந்திரன் விஷயத்தில் கணிக்க கூடாது என்ற முடிவை த.த.ஜ வினர் நபியின் வழிகாட்டுதலின் படியே எடுத்துள்ளதாக பதில் அளித்துள்ளனர்.  அவர்கள் நபியின் வழிகாட்டுதல் படித்தான் அந்த முடிவை எடுத்தார்களா? என்பதை அலசுவோம்.

முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். கணிப்பு என்பதும் கணக்கு என்பதும் ஒன்றல்ல.   கணிப்பு என்பது தோராயமானது கணக்கு என்பது சரியான துல்லியமான திட்ட மிடுதல். சூரியன் விஷயத்தில் இன்று யாரும் கணித்து தொழுவதில்லை கணக்கிட்டுதான் தொழுகின்றோம்.  இவர்கள் கூற்றுப்படி கணித்தல் என்று சொன்னால் உறுதி செய்யப்படாத தோராயமான நேரத்திலேயே தொழுகின்றோம் என்று தான் அர்த்தம்.

உதாரணத்திற்கு ஒரு ஆட்டை மேலோட்டமாக புறக்கண்ணால் பார்த்து இதில் இத்தனை கிலோ இறைச்சி இருக்கலாம் என்று சொல்வது கணிப்பு ஆகும். அதே ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை எடுத்து எடை போட்டு பின்னர் இது இத்தனை கிலோதான் என்று சொல்வது கணக்கீடு ஆகும். (நாம் கணக் கீட்டுக்கும் கணிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை பலமுறை எடுத்துக் கூறியும் திரும்ப திரும்ப கணிப்பு என்ற பதத்தையே த.த.ஜ வினர் வேண்டுமென்றே சொல்லியும், எழுதியும் வருகின்றனர் என்பதை தெரியப்படுத்துகிறோம்)

ஆகவே கணித்தல் (ழன்னுன்) என்று சொல்வது கணக்காகவே இருக்கமுடியாது ஏனென்றால் கணித்தல் என்பதே அனுமானம் தான். கணக்கு (அல்-ஹிஸாப்) என்பது துல்லியமாக கணக்கிடும் முறைக்கு கூறப்படும் வார்த்தையாகும். எனவே கணக்கு என்று கூறுவதே சரியான பொருளை தரும் பதமாகும்.  சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை துல்லியமாக அறிந்து கணக்கிட்டு கொண்டதின் அடிப்படையில் தான் முன்கூட்டியே தொழுகை நேர அட்டவணையை  தயார் செய்து இன்று நாம் தொழுது வருகின்றோம்.

சூரியனால் ஏற்படும் நிழலைப் பார்த்து தொழுத நேரத்தில் கூட முன்கூட்டியே கணக்கிட முடியாத நிலைதான் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தது. கணிக்க முடிந்த அதே கால கட்டத்தில் கூட அவர்களால் சூரியனின் நிழலைப்பெற முடியாத நிலை ஏற்பட்டபோது கணிக்க முடியாமலும் இருந்தார்கள் என்பதை நாம் பல செய்திகளின் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது.  தற்போது நாம் வாழும் காலத்தில் சூரிய நிழலைப் பார்த்து கணிக்க முடியும் போதும், முடியாத நிலை ஏற்படும் போதும், நாம் ஏற்கனவே பலவருடங்களுக்கு கணக்கிட்டு எழுதிவைத்துள்ள அட்டவணையில் உள்ள கணக்கை பார்த்து சரியான நேரத்தில் தொழுதுவருகின்றோம். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய நிழலைப் பார்த்து கணிக்க முடியாத  நாட்களில் எவ்வாறு தொழுதார்கள்?  நாம் இன்று முன்கூட்டியே கணக்கிட்ட தொழுகை நேர அட்டவணையைப் பார்த்து சரியான நேரத்தில் தொழுவது போல நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் தொழுதார்களா? என்பதற்கு த.த.ஜ சகோதரர்கள் பதில் தர வேண்டும்.

மேலும் நபி(ஸல்) அவர்கள் காலத்தில்  சூரியன் மறைந்திருந்த நேரத்தில் அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை கீழ்காணும் செய்திகள் நமக்கு விளக்குகின்றது.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் சூரியன் தென்பட்டது என அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்கள். நூல் புகாரி 1959

முன்கூட்டி கணக்கிட்டு நோன்பை நிறைவு செய்யும் இந்த காலகட்டத்தில் நமக்கு இப்படி ஒரு சம்பவம் ஏற்படுமா? மக்களே சிந்திக்க வேண்டும். இன்று சூரியனை மேகம் மறைத்திருக்கும் போது நாம் முன்கூட்டியே அவர்களைப் போல் நோன்பு நிறைவு செய்யலாமா?

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணத்தில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் ரமளான் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறையும் முன் ஒரு மனிதரிடம் நபி(ஸல்) அவர்கள், 'இறங்கிச் சென்று எனக்காக மாவு கரைப்பீராக!' என்று கூறினார்கள். அந்த மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் முடிவடையட்டுமே!' என்றார். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'இறங்கிச் சென்று மாவு கரைப்பீராக!' என்று கூறினார்கள். அதற்கவர், 'பகல் இன்னும் எஞ்சியிருக்கிறதே! மாலை நேரம் முடிவடையட்டுமே, இறைத்தூதர் அவர்களே!' என்றார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், 'இறங்கிச் சென்று மாவு கரைப்பீராக' என்று கூறினார்கள். மூன்றாம் முறையில் அவர் இறங்கிவந்து நபி(ஸல்) அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் அருந்தி விட்டுத் தம் கையால் கிழக்கு நோக்கி சைகை செய்தவாறு, ' இரவு இங்கிருந்து முன்னோக்கி வருவதை நீங்கள் கவனித்தால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யட்டும்' என்று கூறினார்கள் என அப்துல்லாஹ்  இப்னு அபீ அவ்ஃபா (ரழி) அறிவித்தார்கள். நூல்: புஹாரி 5297, முஸ்லிம் 2007

அதே போல் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரனின் படித்தரங்களின் காட்சியை அடிப்படையாகக் கொண்டு கிழமைகளுக்கு தேதிகளை நிர்ணயித்தார்கள். சந்திரனின் காட்சியை பெறமுடியாத நாட்களில்  அவர்கள் எவ்வாறு தேதிகளை நிர்ணயித்தார்கள்? என்பதையும் நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.  தொழுகை நேரத்தை கணக்கிட முடியாவிட்டாலும்  பகல் இரவு முடிந்து மீண்டும் பகல் வரும் போது நாள் மாறிவிட்டது என்பதை இலகுவாக எண்ணிக்கொண்டு வந்து மாதத்தை கணக்கிட முடியும்.  பல மாதங்கள் தொடர்ந்து  மழைக்காலமாக இருந்தால் கூட மீண்டும் சந்திரனின் காட்சியை பெறும்போது இன்று இன்ன தேதி என்பதை  சந்திரனின் படித்தரங்களில் இருந்து கணக்கிட்டு தேதியை சரி செய்து கொள்ளும் நிலையும் இருந்து வந்தது.

எனவே  பல வருடங்களுக்கு நாம் சூரியனை பார்க்க முடியா விட்டாலும் இன்று தொழுகை அட்டவணையை கொண்டு தொழுவதைப்போல்,  சந்திரனை பல மாதங்கள் பார்க்க முடியாவிட்டாலும், கணக்கிட்டு எழுதப்பட்ட பல வருடங்களின் நாட்காட்டி தரவுகளை (புள்ளிவிபரங்களை) கொண்டு நாம் மாதங்களை துல்லியமாக ஆரம்பிக்க முடியும் என்பதை இத்தருணத்தில் சுட்டிக்காட்டிக்கொள்கின்றோம்.

சூரியக் கணக்கை அறிந்து கொள்ள முடியும் என்றால், சூரிய கணக்கை அறிந்து கொள்ளக் கூடிய அதே காலக்கட்டத்தில் சந்திர கணக்கையும் அறிந்து கொள்ள முடியும் தானே என்பது கூட த.த.ஜ சகோதரர்களுக்கு புரியவில்லையா? அல்லது புரியாதது போல் நடிக்கின்றார்களா? அல்லாஹ் சூரியனும்  சந்திரனும் கணக்கின் அடிப்படையிலே இருக்கின்றன என்பதைத்தான்  55:5 அல்குர்ஆன் வசனத்தில் தெளிவுபடுத்துகின்றான்.

மேலும் சந்திரனின் படித்தரங்களை கொண்டு பல வருடங்களின் கணக்கை அறிந்து கொள்ள முடியும் என்பதை நாம் நம்முடைய சுய கருத்தாக இங்கே கூறவில்லை.  அல்லாஹ்வின் வார்த்தையின் அடிப்படையிலேயே சொல்கின்றோம். வசனம் எண்.10:5 வருடங்களின் எண்ணிக்கையும் கணக்கையும் நீங்கள் அதைக்கொண்டு கற்றுக் கொள்வதற்காக என்று சொல்கின்றான்.  அல்லாஹ் இவ்வாறு ஒரு வார்த்தையை சொல்லவில்லை என்றால் சந்திர கணக்கு என்ற இந்நிலைப்பாட்டை நாமும் எடுத்துக்கொண்டிருக்கவே மாட்டோம்.

எனவே சந்திரனை கணக்கிட்டு செயல்பட தெளிவான அல்லாஹ்வுடைய அனுமதி குர்ஆனில் இருந்தும், நாம் இந்த கணக்கை ஏற்காமல் இந்த கணக்கைப்பற்றி சிந்திக்காமல், பலஹீனாமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை வைத்துக் கொண்டு பிறைப்பார்த்து நோன்பு வைக்கவேண்டும் மேகமூட்டம் இருந்தால் முப்பதாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பன போன்ற தவறான மொழிபெயர்ப்பை கொண்ட பிறைக்கணக்கிற்கு மாற்றமான நிலைப்பாட்டில் இருந்து விலகாமல் இருந்தால், அல்லாஹ்வின் கோபப்பார்வைக்கு ஆளாக நேரிடும் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

//உதாரணமாக இந்தியாவில் சூரியன் மறையும் நேரத்தில்  சவூதியில் மாலை 4 மணியாக இருக்கும். இந்தியாவில் சூரியன்  மறைந்து விட்டது என்று சவூதியில் உள்ளவர்கள் நோன்பு திறப்பது கிடையாது.  நமது பகுதியில் சூரியன் எப்போது மறையும் என்பதை கவனித்தே நோன்பு திறக்கின்றோம், தொழுகின்றோம்  இதே அளவுகோலைத்தான் பிறை விஷயத்திலும் கொள்ள வேண்டும்//  த.த.ஜ  ஏர்வாடி கிளை

இந்தியாவில் உள்ள நாம் நோன்பு திறந்தபின் தான் சவூதி மக்கள் நோன்பு திறப்பார்கள் என்பது உண்மைதான்.  த.த.ஜ வின் கூற்று உண்மையானால் நாம்  கேட்கும் கேள்விக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்.   இவர்கள் நோன்பு திறப்பதற்கு அளவு கோலாக வைக்கும் அதே இரண்டரை மணிநேர வித்தியாசத்தில் தானே சவூதிக்கும் இந்தியாவிற்கும் மாதத்தின் முதல் நாள் ஆரம்பித்து இருக்க வேண்டும்.  அவ்வாறு ஆரம்பிக்காமல் சவூதி முதல் நாளை ஆரம்பித்து இருபத்தொன்றரை மணிநேரம் கழித்து தானே இந்தியாவில் உள்ள த.த.ஜ வினர் 1434 ரமளான் மாதத்தை ஆரம்பித்தனர்?  அதாவது  புதன்கிழமை (10.07.2013)அன்று சவூதி நோன்பை ஆரம்பித்தார்கள்.  த.த.ஜ வினர் வியாழக்கிழமை (11.07.2013)அன்று ஆரம்பித்தனர்.

இவர்கள் கூறிய நோன்பு திறப்பதற்குரிய இரண்டரை மணி நேர வித்தியாச அளவு கோலை நோன்பை ஆரம்பிக்க அவர்கள் ஏன் பயன்படுத்தவில்லை.  இவர்கள்   தங்களது கூற்றில் உண்மையாளர் களாக இருந்தால் சவூதிக்கு இரண்டரை மணிநேரம் முன்னதாகவே ரமளானின் முதல்நாளை ஆரம்பித்திருக்க வேண்டுமல்லவா?

மேலும், சவூதி நம்மைவிட இரண்டரை மணி நேரம் பின்தங்கி யுள்ளது என்பது உணமைதான்.  நாம் மஃரிபு தொழுத பிறகு தான் அவர்கள் மஃரிபு தொழுகின்றார்கள்.  நாம் நோன்பு திறந்த பிறகு தான் அவர்கள் நோன்பு திறப்பார்கள். ஆனால், நோன்பு மற்றும் பெருநாள்களின் விஷயத்தில் மட்டும் த.த.ஜவினரை விட அவர்கள் முந்திச் சென்று விடுகின்றனர். இவ்வாறு முந்திச் செல்வது  பூகோள ரீதியாகவும், குர்ஆன் சட்ட அடிப்படையிலும் மிகவும் தவறானதே.

ஏன்என்றால், நமக்கும் சவூதிக்கும் தொழுகை நேரத்தில் வித்தியாசம் உள்ளது உண்மைதான்.  அதை நாம் மறுக்கவில்லை.  அந்த வித்தியாசம் நேரத்தின் அடிப்படையில் தானே தவிர, நாட்களின் அடிப்படையில் அல்ல.   உதாரணமாக  3.8.2013 அன்று வெள்ளிக்கிழமை.  பகல் ஒரு மணிக்கு ஜூம்ஆ வை நாம் நிறைவு செய்து விட்டோம்.  நாம் அன்றைய தினம் 3:30 மணியை அடையும் போதுதான் சவூதியில் ஜூம்ஆ நடைபெறும்.   அந்த நாளில் சவூதியில் உள்ளவர்கள் ஜூம்ஆ தொழுவதற்கு பதிலாக வியாழக்கிழமை என்றோ சனிக்கிழமை என்றோ கூறி லுஹர் தொழுகையை தொழமாட்டார்கள்.  நமக்கு ஜூம்ஆ உடைய நாள் தான் (3.8.2013)சவூதிக்கும் ஜூம்ஆ உடைய நாள்.  உலகத்தின் அனைத்து நாடுகளுக்கும் ஜும்ஆ உடைய நாள் அதுதான்.  இன்று நமக்கும் நாளை சவூதிக்கும் நேற்று இலங்கைக்கும் ஜூம்ஆ உடைய நாள் வராது.   அதே போல் பிறை கணக்கீட்டின் படி எந்த நாளில் பெருநாள் தினமோ (புதன்கிழமை- 7.8.2013) அந்தநாள் தான் உலகம் முழுவதும் பெருநாள் தினமாகும்.  எனவே இரு நாடுகளுக்கிடையில் நேர வித்தியாசம் வருமே தவிர நாட்களின் வித்தியாசம் வரவில்லை.  இந்த அறிவு கூட அவர்களுக்கு இல்லையா?  அல்லது  தெரிந்து கொண்டே மறைக்கின்றார்களா? ஆகவே த.த.ஜவினர் நம்மை நோக்கி கேள்வியெழுப்பியதை போலவே தொழுகைக்கு கூறிய அதே அளவுகோலைத்தான் பிறை கணக்கிற்கும் நாங்கள் எடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். த.த.ஜ வினரோ தங்களின் அளவு கோலை வாயால் சொல்வதைத் தவிர செயல்பாட்டிற்கு வரும்போது முரண்பட்டு செயல்படுவார்கள். ஏன் அவ்வாறு செய்கின்றார்கள் என்பதை அல்லாஹ்வே மிக அறிந்தவன்..

இது உங்கள் ஆய்வின் பிழையா, அல்லது ஊரோடு அல்லது சுன்னத் வல் ஜமாஅத்தினருடன் சேர்ந்து  பெருநாள் கொண்டாடி ஒத்துப்போக வேண்டும் என்கின்ற உங்கள் இயக்கத்தின் மறைமுக கொள்கை உடன்பாடா?

ஆகவே மனோ இச்சையின் பிரகாரம் இவர்கள் கூறும், மாதத்தின் 30வது நாள் மேற்கு திசையில், மஃரிப் நேரத்தில், பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்ப்பது தான் தீர்வு என எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் கூறி, தானும் குழம்பி, மக்களையும் குழப்பி, தவறான நாளில் நோன்பை ஆரம்பித்து, பெருநாளை கொண்டாடி, மக்களை வழி கெடுக்கும் இந்த கும்பல் பிறை விஷயத்தில்  வரும் ஹதீஸ்களில் மிகப்பெரிய மோசடிகளை செய்துள்ளது என்பதை நாம் பல முறை சுட்டிக் காட்டிவிட்டோம்.  இவர்களை கண்மூடி பின்பற்றும் மக்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.

மார்க்கத்திற்கு முரணான ஒரு செயல்பாட்டை மக்களிடம் திணிப்பதற்காக தவறான செய்திகளையும், தவறான மொழி பெயர்ப்புகளையும் துணிச்சலாக ஆதாரமாக காட்டுகின்றனர் என்றால்,  இவர்கள் மற்ற மார்க்க விஷயத்தில் சொன்ன, எழுதிய, தீர்வு வழங்கிய, அனைத்தும் எந்த தரத்தில் இருக்கும் என்பதை மக்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். மனித குல நாட்காட்டி பிரச்சினைக்கும்,  இஸ்லாமியர்களின் தற்போதைய பிறை பிரச்னைக்கும், சரியான தீர்வு கூறாமல், இஸ்லாமியர்களை வழிகெடுக்கும் இந்த மோசடி ஃபத்வா கும்பலிடமிருந்து அல்லாஹ் மனித சமுதாயத்தை பாதுகாப்பானாக. பிறை விஷயத்தில் ஏற்பட்ட குழப்பதிற்கு ஒரே ஒரு   மகத்தான தீர்வு சந்திரனின் படித்தரங்களை அடிப்படையாக கொண்ட சந்திர காலண்டரை ஏற்று நடைமுறைப் படுத்துவதுதான்.

ஆகவே சரியான நாளில் நோன்பு வைத்து சரியான நாளில் பெருநாள் கொணடாட கூடிய மக்களாக இறைவன் நம்மை ஆக்கியருள் புரிவானாக.

த.த.ஜ வுடைய விவாத சவடாலில் நமது நிலைபாடு

இவர்களின் குர்ஆன் திரிபுகளையும்,  பலஹீனமான செய்திகளை ஆதாரமாக பயன்படுத்தியதையும் நாம் அவர்களுடைய பிரசுரத்தில் இருந்து தெளிவுபடுத்தியிருந்தோம்.   குர்ஆனிலிலும் ஹதீஸிலும் பொய் சொல்லும் இவர்கள் விவாத அழைப்பு விஷயத்திலும் பொய் கூறும் செயலையே செய்து வருகின்றனர்.  ஹிஜ்ரி கமிட்டியின் பிறை நிலைபாட்டை ஆதரிப்பவர்களில் பலர் தற்போதைய த.த.ஜ தலைவரின் பல நேரடி விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளனர்.  த.த.ஜ வின் நேரடி விவாத அரங்குகளில் இதுவரை ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும், பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் விவாதத்தை திசைதிருப்பி நேரத்தை வீணடிக்கும் இவர்களின் தந்திரங்களையும் கருத்தில் கொண்டு இவர்களிடம் நேரடி விவாதம் நடத்துவதால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது என்று அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டோம்.

ஆகையால், எழுத்து மூலமான நேரடி இணையத்தள விவாதம் தான் கருத்து வேறுபாடுகளுக்கு சரியான தீர்வுதரும் என்பதை நாங்கள் உணர்கின்றோம். ஒரே மேடையில் நேரடிவிவாதம் நடத்த வேண்டாம் என நாங்கள் கூறுவது பயந்ததினால் அல்ல, ஏனென்றால் இவர்களுக்கு பிறை விஷயத்தில் எந்த ஒரு நிலையான நிலைபாடும் அறவே கிடையாது.  மேலும், இவர்கள் கண்மூடி பின்பற்றும் இவர்களுடைய தலைவர் ''எங்களுடைய வாதம் கூட கேள்விக்குறி தான்' என்று இலங்கையில் கூறினார். (mooncalendar.in/index.php?option=com_content&view=article&id=299:pj-ilankai-pirai-naam-parkum-pirai-moonnam-pirai&catid=60:2012-03-31-13-49-52&Itemid=95)

எனவே இவர்கள் கண்மூடி பின்பற்றும் இவர்களின் தலைவரே பகிரங்கமாக இவ்வாறு ஒப்புக்கொண்ட பிறகு நாங்கள் ஏன் இவர்களிடம் விவாதிக்க பயப்பட வேண்டும்.

த.த.ஜ வை பல காலமாக எழுத்து மூலமான விவாதத்திற்கு ஹிஜ்ரி கமிட்டி அழைத்து வருகின்றது.  நமது அழைப்பையும் இருட்டடிப்பு மற்றும் திரிபும் செய்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் இவர்கள், கழுத்தை கொடுத்தாலும் எழுத்தை கொடுக்க கூடாது என்ற பழமொழிக்கேற்ப எழுத்து மூலமான நேரடி இணையத்தள விவாத முறைக்கு அஞ்சி பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி ஒழிந்து விட்டனர்.   எனவே இந்த பிரசுரத்தை வெளியிட்ட த.த.ஜ ஏர்வாடி கிளை சகோதரர்கள் துணிவிருந்தால் அவர்களுடைய தலைவரை  எழுத்து மூலமான இணையத்தள விவாதத்திற்கு நம்மிடம் ஒப்பந்தம் செய்ய அழைத்துவரட்டும் என இப்பிரசுரம் மூலம் அறைகூவல் விடுக்கின்றோம்.

எனவே ஹிஜ்ரி கமிட்டியின் இந்த அறைகூவலை ஏற்று நமது எழுத்து மூலமான நேரடி இணையத்தள விவாதத்திற்கு வருகின்றார்களா? அல்லது  பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி ஒழியப்போகின்றார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இன்ஷாஅல்லாஹ்.

பெருநாள் அறிவிப்பு:

சந்திர கணக்கீட்டின் படி ஹிஜ்ரி 1434 உடைய ரமளான் மாதம் செவ்வாய்கிழமை துவங்கி ஐந்தாவது செவ்வாய்க்கிழமையுடன் 29 நாட்களாக  நிறைவடைகின்றது. எனவே எதிர்வரும் புதன்கிழமை (7.8.2013) அன்று ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும்.  பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பதற்கு நபி(ஸல்) தடை(ஹராம்) விதித்துள்ளார்கள். எனவே   அனைவரும் அன்று பெருநாள் தினத்தை கொண்டாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பெருநாள் தொழுகை அறிவிப்பு:

தொழுகை நேரம்: 7:00 மணி

தொழுகை நடைபெறுமிடம்: அல்ஹுதா மெட்ரிக் பிரைமரி பள்ளி  (9வது தெரு) ஏர்வாடி

இந்தியாவின் மற்ற பகுதிகளிலும், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் சந்திர கணக்கீட்டின் அடிப்படையில் பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்களை அறிய எங்கள் இணையத் தளமான www.mooncalendar.in சென்று அறிந்து கொள்ளவும்.

இவண்

Hijri Committee இந்திய ஹிஜ்ரி கமிட்டி

160/101, வடக்கு மெயின்ரோடு, ஏர்வாடி

Websites     :         www.mooncalendar.in, www.hijricalendar.com, www.hijracalendar.in.

Mobile         :         99626 22000, 99626 33000, 99626 44000, 99624 77000, 99626 33844,

95007 94544, 99943 44292, 93440 96221, 94439 55333, 94432 55643, 99524 14885, 99945 16368.

 

 

Read 3281 times Last modified on செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 05:22