வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00

பூமியின் மையப்பகுதி மக்கா நகரமா? சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா?

Rate this item
(13 votes)

கேள்வி : புனித மக்காவை உலகின் மையப்பகுதியாக (Prime Meridian - பிரதான தீர்க்கரேகையாக) அமைத்து, இப்பூமிப்பந்தில் மக்காவுக்கு நேர் எதிரிலுள்ள (140 Degree West - Antipode of Makkah) இடத்தை தேதித் கோடாகவும் கொண்டு காலண்டர் உருவாக்குவதுதான் சரியானதாகும். இதற்கு மாற்றமாக ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சர்வதேசத் தேதிக் கோட்டை (180 Degree East) அடிப்படையாக வைத்து காலண்டரை உருவாக்குவது, மேற்படி தேதிக்கோட்டை கிப்லாவாக ஏற்றுக் கொண்டதற்கு சமமாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு உலகை ஆண்டதால்தான் கிரீன்வின்ச் பகுதியை மையப்பகுதியாக அமைத்து அதன் அடிப்படையில் தேதிக்கோட்டை அவர்கள் அமைத்து விட்டனர். எனவே இந்த தேதிக்கோட்டை மக்காவுக்கு நேர்எதிர் பகுதிக்கு மாற்றி அமைக்க வேண்டும். அப்படி மாற்றப்பட்ட பிறகு அமையும் புதிய தேதிக்கோட்டிலிருந்துதான் ஒவ்வொரு புதிய நாளையும் துவக்க வேண்டும். மக்காவில் பிறை பார்த்ததன் அடிப்படையில் இஸ்லாமிய மாதங்களைத் தொடங்க வேண்டும். இவை போன்ற விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன?

 

பதில் : மேற்படி விமர்சனத்தை முன் வைப்பவர்களை மூன்று வகையினராகப் பிரிக்கலாம்.

 1. பிறை பார்க்கும் எல்லையானது தத்தமது பகுதி (அல்லது மாநிலம்) அளவுக்குத்தான் என்ற நிலைபாட்டை பின்பற்றுபவர்கள். சர்வதேச சந்திர நாட்காட்டி என்பதே சாத்தியமில்லாத ஒன்று என்ற கருதும் இவர்கள் முதல் சாரார் ஆவர்.
 2. முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கைக்கு காலண்டர் என்பது முக்கியமான ஒன்றுதான், ஆனாலும் ஹிஜ்ரி காலண்டர் சரியில்லை. இப்படி கூறி தங்களின் பிறை நிலைப்பாடு எது? என்பதைக்கூட தெளிவாக சொல்லாதவர்கள் இதில் இரண்டாவது அணியினர்.
 3. மூன்றாவதாக சஊதி அரேபியா நாட்டின் மீது அன்பு கொண்டு அதை வெளிப்படுத்தும் வகையில் சவுதியின் பிறைத் தகவலைத்தான் ஏற்க வேண்டும் என்போர்.

மேற்படி மூன்று சாராரும் பிறைகள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் கொண்டுள்ளனர். இருப்பினும் சர்வதேச தேதிக்கோட்டை மாற்ற வேண்டும் என்பதிலும், மக்காவை மையப்பகுதியாக வைக்க வேண்டும் என்ற கருத்திலும் அதில் சிலர் ஒத்தக் கருத்தில் உள்ளனர். எனவே மேற்படி மூன்று சாராருக்கும் சேர்த்து பொதுவான விளக்கமான நமது பதில் அமைகிறது.

அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கமான இஸ்லாம், அறிவுபூர்வமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மார்க்கம் ஆகும். உணர்ச்சிப்பூர்வ கருத்துகளினாலோ, மனோ இச்சைகளை முன்னிறுத்தியோ அறிமுகம் தேடும் அளவுக்கு பலவீனமான கோட்பாடல்ல இஸ்லாம். விமர்சனம் செய்யும் மேற்படி மூன்று சாரார்களும் இதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் புனித இறை இல்லமான கஅபத்துல்லாஹ்வும், புனித ஹரம் ஷரீஃபின் பரந்து விரிந்த எல்லைகளும், மினா, முஜ்தலிஃபா, அரஃபா மைதானம், மற்றும் மீக்காத் என புனித மக்கா மாநகருக்குள் அமைந்துள்ள அனைத்து பகுதிகளையும் வல்ல அல்லாஹ் கண்ணியப்படுத்தியே உள்ளான். அல்லாஹ் அளித்துள்ள இச்சிறப்புகளை உலகம் அழியும் காலம் வரை யாராலும் குறைத்து விடவோ, அழித்து விடவோ முடியாது. புனித மக்கா மாநகரம் இப்பூமியில் மையப் பகுதியாக இருந்தாலும், அல்லது இல்லாவிட்டாலும், புனித மக்காவானது இறைவனால் வாக்களிக்கப்பட்ட புனிதம் மிகுந்த பூமிதான். குறிப்பிட்ட ஒரு ஊரை பூமியின் மத்தியப் பகுதியாக அமைப்பதைக் கொண்டு எவ்வித மேலதிக சிறப்புகளையும் அந்த ஊர் பெறப் போவதில்லை. இவ்வுலகை படைத்த இறைவனால் மக்கா நகருக்கு வழங்கப்பட்ட மேன்மைகளுக்கும், வரலாற்று தனிச்சிறப்புகளுக்கும் நிகரில்லை என்பதால், அது பூமியின் மையப்பகுதியாக இருக்கத்தான் வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை என்பதையும் உணர வேண்டும். இந்த அடிப்படையை மனதில் பதிந்து திறந்த மனதுடனும், தூய்மையான எண்ணத்துடனும் நமது விளக்கங்களை இறுதிவரை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மனோ இச்சைகள் ஒருபோதும் மார்க்கமாகாது.

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை.... அல்குர்ஆன் (2 : 177)

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன், எல்லாம் அறிந்தவன் அல்குர்ஆன் (2 : 115)

புனித மக்காவை உலகின் மையப்பகுதியாக (Prime Meridian - பிரதான தீர்க்கரேகை) உலக நாடுகள் அங்கீகரித்து அறிவித்தால்தான் மக்காவுக்கு சிறப்பு வரும் என்ற ரீதியில் இக்கேள்வி அமைந்துள்ளது.

உலக உருண்டையில் கிழக்கிலிருந்து மேற்காக வரையப்பட்டிருக்கும் கோடுகள் அட்சரேகை (latitude) ஆகும். அதுபோல வடக்கிலிருந்து தெற்காக இரு துருவப்பகுதிகளையும் இணைத்து வரையப்பட்டிருக்கும் கோடுகள் தீர்க்கரேகை (longitude) ஆகும். மக்காவானது லண்டன் கிரீன்விச் பகுதியிலிருந்து கிழக்கே 39.81-வது தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. எனவே மக்காவின் நேர்எதிர் புறம் (Antipode) கிரீன்விச் பகுதியிலிருந்து மேற்கே 140.19-வது தீர்க்கரேகை பகுதியாகும்.

moon-calendar-earth-center-makkah-1

moon-calendar-earth-center-makkah-2 moon-calendar-earth-center-makkah-3

 

நாம் முதலாவதாக கேட்பது என்னவெனில், இவ்வாறு மக்காவை மத்தியப் பகுதியாகவும், மக்காவுக்கு நேர்எதிர் திசையை (140 Degree West - Antipode of Makkah) தேதிக் கோடாகவும் வைக்க வேண்டும் என்று,

 • அல்குர்ஆனில் கட்டளை இடப்பட்டுள்ளதா?
 • நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்களா?
 • நபித்தோழர்களில் யாராவது இது போன்ற கருத்தை சொல்லியுள்ளார்களா?
 • இவ்வாறு மாற்றம் செய்வதற்கு இஸ்லாமிய ஆட்சியின் கலீஃபாக்கள் முயன்றார்களா?
 • முற்கால இமாம்கள் இப்படி ஆய்வு செய்து சொன்னதாக ஒரு வரலாற்று பதிவாவது இருக்கிறதா?

இல்லவே இல்லை என்பதுதான் மேற்காணும் கேள்விகளுக்கு பதிலாகும். நாம் இப்படி கேள்வி எழுப்பியுள்ளதால், 'பார்த்தீர்களா கலீஃபாக்களையும், இமாம்களின் கூற்றையும் ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்' என்று திசை திருப்பிட வேண்டாம். மார்க்கத்தின் மூலாதாரம் குர்ஆனும், சுன்னாவும் மட்டுமே என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அந்த நிலையில் இருந்துதான் மேற்கண்ட கேள்விகளை சிந்திப்பதற்காக கேட்கிறோம்;. எனவே குர்ஆன் சுன்னா கட்டளையிடாத ஒன்றை மார்க்கத்தின் பெயரால் மக்களிடம் திணிக்காதீர்கள் என்கிறோம்.

ஒருவரது மனோ இச்சைகள் ஒருபோதும் மார்க்கமாகாது. புனித மக்காவை உலகின் மையப்பகுதியாக (Prime Meridian - பிரதான தீர்க்கரேகை) அமைக்க வேண்டும். பின்னர் மக்காவுக்கு நேர்எதிர் பகுதியை (140 Degree West - Antipode of Makkah) தேதிக் கோடாக அமைக்க வேண்டும் என்ற கருத்து, கேட்பதற்கு இனிமையாகத்தான் இருக்கிறது. அப்படி மாற்றி அமைப்பதற்கு ஹிஜ்ரி கமிட்டியினர்தான் தடையாக இருப்பதைப் போலக் கருதியுள்ளனர். அதனால் இவ்விஷயத்தை மையப்படுத்தி ஹிஜ்ரி நாட்காட்டிக்கு எதிராக பிரச்சாரமும் செய்கின்றனர். இது ஏன்? என்று கேட்கிறோம். தற்போதுள்ள தேதிக்கோட்டுப் பகுதியை ஹிஜ்ரிகமிட்டி கிரையப் பத்திரம் செய்து வாங்கிவிடவில்லை என்பதையும் விமர்சிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே உலகத்தேதிக் கோட்டை மாற்ற வேண்டும் என்று நம்புபவர்கள்தான் அதை மாற்றிக் காட்ட வேண்டும். தற்போது இருக்கும் தேதிக்கோட்டை மாற்றி அமைத்து காட்டிய பின்னரே இந்த விமர்சனத்தை இவர்கள் எழுப்புவது நியாயமாக இருக்கும்.

எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள். ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லர். அல்குர்ஆன் (30:29)

நாட்களை முன்பின்னாக ஆக்குவது இறைநிராகரிப்பே!

முஸ்லிம்களாகிய நாம் தினமும் பயன்படுத்தும் தொழுகை கால அட்டவணையின் நேர அளவுகளின் சூத்திரத்தையும், அதன் கணக்கீட்டையும் கண்டுபிடித்தது யார்? என்று நாம் ஆராய்ச்சி செய்வதில்லை. அதை ஏற்று சரி கண்டு பின்பற்றத்தான் செய்கிறோம். இந்நிலையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு உலகை ஆண்டதால்தான் International Date Line – IDL எனும் சர்வதேசத்தேதிக் கோட்டுப் பகுதி ஏற்படுத்தப்பட்டது என்று வரலாறு தெரியாமல் விமர்சிக்கின்றனர். இதற்கு தனியாக பதில் அளிக்கப்பட்டுள்ளது (பார்க்க : http://mooncalendar.in/index.php/ta/ta-faq/476-idl-is-not-the-sacred-property-of-british).

இப்பூமிப் பந்தின் கிழக்கில் தீர்க்கரேகை 180-ஆவது டிகிரியில் அமைந்திருக்கும் International Date Line – IDL எனும் சர்வதேசத்தேதிக் கோட்டுப் பகுதியில்தான் ஒவ்வொரு கிழமையும் (நாள்) மாறுகிறது. இதை ஒட்டுமொத்த உலக மக்களும் எவ்வித கருத்து வேறுபாடின்றி ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்கன் சமோவாவையும், ஃபிஜி தீவுகளையும் பிரிக்கும் பகுதியாக உள்ள சர்வதேசத்தேதிக் கோட்டுப்பகுதி இயற்கையாகவே மிகச் சரியான இடத்தில் அமைந்துள்ளது. இது வல்ல அல்லாஹ்வின் ஏற்பாடு ஆகும். அந்த இடத்தில்தான் வியாழக்கிழமையிலிருந்து, வெள்ளிக்கிழமை மாறுகிறது. அதாவது அமெரிக்கன் சமோவா முஸ்லிம்கள் வியாழக்கிழமையின் லுஹர் தொழுகையின் வக்தாக இருக்கும்போது ஃபிஜி தீவுகளின் முஸ்லிம்களுக்குஅது வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆவுடைய நேரமாக இருக்கும். இவ்வாறு தினமும் கிழமை மாற்றம் அந்த இடத்தில்தான் நடைபெறுகிறது. அல்குர்ஆனின் 55:17-ஆவது வசனம் சிலாகித்துச் சொல்லும் இடமாகவும் இது இருக்கிறது. இவ்வாறு அல்லாஹ்வின் அத்தாட்சிகள் உள்ள இடமாக இவ்விடம் திகழ்கிறது. உலக மக்கள் அனைவரும் அங்கிருந்துதான் புதிய நாள் தொடங்குவதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அதை மாற்றி 140 Degree West - Antipode of Makkah பகுதியைத்தான் தேதிக் கோடாக அமைக்க வேண்டும் என்றால் அதற்கு மார்க்க ஆதாரம் என்ன? என்பதைத் தரவேண்டும். அதை விட்டுவிட்டு, ''மக்காவை மத்திய நகரமாக்குவோம்! நாரே தக்பீர் அல்லாஹூஅக்பர்!!'' என்று உணர்ச்சிப் பொங்க ஆர்ப்பரிப்பதால் யாருக்கும் எப்பயனும் இல்லை. 140 Degree West - Antipode of Makkah பகுதியைத்தான் தேதிக் கோடாக அமைத்து, அந்த இடத்திலிருந்துதான் ஒவ்வொரு புதிய நாளும் தொடங்க வேண்டும் என்பதன் பொருள் இதுதான். அதாவது உலக வரைபடத்தில், 180 டிகிரி மேற்கிலிருந்து 140 டிகிரி மேற்குவரையுள்ள சுமார் 40 டிகிரி அளவுக்குள்ள மேற்கத்திய நாடுகளின் பகுதிகளை கிழக்கில் கொண்டு வைக்க வேண்டும் என்கின்றனர். அதாவது அங்குள்ளவர்கள் ஒரு நாளைக் கூட்டிக்கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

உலக மக்கள் கருத்து வேறுபாடில்லாமல் ஏற்றுக்கொண்டுள்ள உலக வரைபடம்.

moon-calendar-earth-center-makkah-4

 

விமர்சகர்கள் கருத்துப்படி அமையும் உலக வரைபடம்

moon-calendar-earth-center-makkah-5

 

இன்னும் தெளிவாக விளக்குவதென்றால், சுமார் 40 டிகிரி அளவுக்குள்ள மேற்கத்திய நாடுகளின் பகுதிகள் என்பது அலாஸ்கா, கனடா நாடுகளின் பகுதிகள் உட்பட பசுபிக் பெருங்கடலின் பல தீவுகளையும் உள்ளடக்கியது. அது இரண்டரை மணி நேரங்களுக்கும் அதிகமான சர்வதேச நேர அளவுள்ள நிலப்பரப்பாகும். அங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒரு வியாழக்கிழமையில் இப்பதாகக் கொள்வோம். அவ்வாறு வியாழக்கிழமையின் ஐந்து வேளை ஃபர்ளான தொழுகைகளை முடித்த பின்னர்தான் வெள்ளிக்கிழமையின் தொழுகைகளை அவர்கள் 6 ஆரம்பிக்க முடியும். இந்நிலையில் வியாழக்கிழமையின் ஐந்து வேளை தொழுகைகளை அவர்கள் தொழுது முடிக்காத நிலையில், அந்த வியாழக் கிழமை என்ற அந்த நாளை, வெள்ளிக் கிழமையாகக் கருதிக் கொள்ள வேண்டும் என்று இவர்கள் கூறுகின்றனர். அதாவது அலாஸ்கா, கனடாவின் பகுதிகள் மற்றும் பசுபிக் பெருங்கடலின் பல தீவுகளிலுள்ள மக்கள் தங்கள் காலண்டரில் ஒரு நாளைக் கூட்டிக்கொள்ள வேண்டும் என்கின்றனர். விபரீதம் புரிகிறதா?

40 டிகிரி அளவுக்குள்ள மக்கள் ஒரு நாளைக் கூட்டிக்கொள்ள வேண்டும் என்றால், அதன் பரப்பளவையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது இந்தியாவுக்கும், சஊதி அரேபியாவுக்கும் இடையே இரண்டரை மணிநேர அளவு வித்தியாசம் உள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே 40 டிகிரி அளவுக்கு மாற்ற வேண்டும் என்பது சஊதிக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட தூரம் அளவுக்குள்ள நிலப்பரப்பாகும் அது. இவ்வளவு பெரிய இடைவெளியை மாற்றி அமைக்க வேண்டும் என்கிறார்கள்.

இவ்வாறு 180 டிகிரி மேற்கிலிருந்து 140 டிகிரி மேற்குவரையுள்ள பகுதி மக்களுக்கு ஒருநாள் விடுபடும் என்பது மட்டுமல்ல. அவ்வாறு மாற்றினால் அப்பகுதி மக்கள் ஒவ்வொரு வார ஜூம்ஆத் தொழுகையை உண்மையில் வெள்ளிக்கிழமையில் தொழ மாட்டார்கள். வெள்ளிக்கிழமையாக கருதி அவர்கள் தொழும் ஜூம்ஆத் தொழுகையானது, அவர்கள் உண்மையான வியாழக்கிழமையில் இருக்கும் நிலையில் தொழுவார்கள். என்னே கைசேதம் பாருங்கள்!. எனவே இது வெறுமனே தொழுகை விரிப்பை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி திருப்பிப் போடும் விஷயமல்ல. மாறாக ஈமானையே புரட்டிப் போடும் விஷயம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளில், ஒரு நாளை சர்வ சாதாரணமாகக் கூட்டுவதற்கு எவருக்கும் உரிமையில்லை. நாட்களை முன்பின்னாக மாற்றுவது குஃப்ரு எனும் இறைநிராகரிப்பை அதிகமாக்கும் (அல்குர்ஆன் 9:37). இயற்கையாகவே அல்லாஹ்வினால் அமைக்கப்பட்ட தேதிக்குரிய கிழமைகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்.

மேலும் சர்வதேசத்தேதிக் கோட்டை ஹிஜ்ரி கமிட்டியினர் கிப்லாவாக ஏற்றுக் கொண்டதாகவும் பிரச்சாரம் செய்கின்றனர். பொய்யான, அவதூறான கருத்துகளை முன்னிறுத்தி, எங்களை வரம்பு மீறி விமர்சிப்பவர்களை அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுமாறு எச்சரிக்கிறோம். ஒவ்வொரு தொழுகையிலும் இஸ்லாம் வழிகாட்டியபடி புனித கஅபாவின் திசையை நோக்கி தொழுது வரும் நம்மைப் பார்த்து சர்வதேசத் தேதிக்கோட்டை கிப்லாவாக கருதுவதாக புனைந்துரைப்பது வடிகட்டிய அவதூறு இல்லையா? இவர்களுக்கு ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்ற விருப்பமில்லை என்றால் விட்டுவிடட்டும், பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்று இவர்களை நாமும் வற்புறுத்திட வில்லை. எங்களுடைய பிரசாரத்திற்கு மார்க்க ரீதியில் மறுப்பை வெளியிட முடியாமல் கோபமான கடுஞ்சொற்களையும், அவதூறுகளையுமே நம்மீது அள்ளி வீசுகின்றனர். சர்வதேசத்தேதிக் கோட்டை ஹிஜ்ரி கமிட்டியினர் கிப்லாவாக ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது அடிப்படையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டு இல்லையா? நாங்கள் எத்தகைய பொய்களையும் துணிந்து பேசுவோம், எங்களை யார் கேட்பது? என்ற ரீதியில் பேசித்திரிபவர்களை மக்கள்தான் அடையாளம் காண வேண்டும்.

இந்த விமர்சனத்தின் நோக்கமென்ன?

இக்கேள்விகளை எழுப்பியோர், அவர்கள் விரும்புவது போல (140 Degree West பகுதிக்கு) தேதிக் கோட்டை மாற்றி அமைத்து அதன் அடிப்படையில் ஒரு நாட்காட்டியை தயார் செய்து தரட்டுமே. அவர்களை யார் தடை செய்தார்?. அந்த நாட்காட்டியின் தேதிகளுக்கு பிறைகளின் வடிவ நிலைகள் பொறுந்திப் போகின்றனவா என்று பரிசோதித்து பார்ப்பதற்கு நாமும் தயாராகவே உள்ளோம். முதலில் அவர்கள் விரும்பும் அந்த இடத்தை புதிய சர்வதேசத் தேதிக் கோட்டுப் பகுதியாக (New IDL) அறிவித்து உலக நாடுகளை ஏற்றுக்கொள்ளச் செய்யட்டுமே!. எனவே ஹிஜ்ரி நாட்காட்டியை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு அப்படி ஒரு புதிய தேதிக்கோட்டை அமைத்து, அங்கிருந்து நாட்களைத் தொடங்கி, அதன் அடிப்படையில் நாட்காட்டியையும் அமைத்துத் தர வேண்டுகிறோம்.

ஒருவேளை அப்படி ஒரு நாட்காட்டியை இவர்கள் தயாரித்து விட்டால்,

 • அந்த நாட்காட்டியையாவது முஸ்லிம் உலகம் இஸ்லாமிய நாட்காட்டியாக ஏற்று பின்பற்றுமா?
 • தத்தமது பிறை, சர்வதேசப் பிறை, சவூதிதேசப் பிறை போன்ற பிறை குழப்பங்கள் அப்போதாவது தீர்ந்து விடுமா?
 • குறைந்த பட்சம் இவர்களின் இயக்கத் தலைமையாவது அப்புதிய நாட்காட்டியை ஏற்றுக் கொள்ளுமா? சற்று சிந்தியுங்கள்.

நமது ஹிஜ்ரி நாட்காட்டியானது குர்ஆன் சுன்னா அடிப்படையிலும், விஞ்ஞானத்தின் துணை கொண்டும் அமையப் பெற்றது. தற்போது நிலைபெற்றிருக்கிற பூலோக புவியியல் அமைப்பின் படியும் துல்லியமாக அமைந்துள்ளது. ஹிஜ்ரி நாட்காட்டியின் இயற்கையான கட்டமைப்பு நமது கிப்லாவை கண்ணியப்படுத்தும் முகமாக எவ்வாறெல்லாம் அமைந்துள்ளன என்பதை மற்றொரு சர்ந்தர்ப்பத்தில் விரிவாக விளக்குவோம் இன்ஷா அல்லாஹ். இப்படிப்பட்ட ஹிஜ்ரி நாட்காட்டியை நாம் வழங்கிய பிறகும், 'பிறையை எங்கள் மாநில எல்கைக்குள் புறக்கண்களால் பார்த்த பின்னர்தான் வணக்க வழிபாடுகளைத் தொடங்குவோம்' என்று முழங்கி ஹிஜ்ரி நாட்காட்டியை புறக்கணிக்கின்றனர். இந்நிலையில் மக்காவின் எதிர்பகுதியை புதிய தேதிக் கோடாக அமைத்து, அதன் அடிப்படையில் அமையும் காலண்டரை இவர்களே பின்பற்றுவார்களா என்றால் அது சந்தேகம்தான். நிச்சயமாக அவர்களது நாட்காட்டியை அவர்களே பின்பற்ற மாட்டார்கள்.

காரணம் முஸ்லிம்களால் துல்லியமான ஒரு சர்வதேசக் காலண்டரை உருவாக்க இயலாது என்ற கோட்பாடு கொண்டவர்களோடு கைகோத்துக் கொண்டுதான் இக்கேள்விகளை தொடுக்கிறார்கள். ஒரு தேதிக்கு மூன்று கிழமைகள் வரலாம், தவறில்லை என்பதுதான் இவர்களது நம்பிக்கை. நாம் பார்ப்பது மூன்றாம் பிறைதான், இருப்பினும் அதுதான் முதல் பிறை என்பதுதான் இவர்கள் சகாக்களின் பிறை நிலைப்பாடு. ஹிஜ்ரி நாட்காட்டியை எப்படியேனும் ஒழித்துவிட வேண்டும் என்ற நோக்கில்தானே இவை போன்ற குதர்க்கமான வாதங்களை மக்கள் மத்தியில் பரப்பி விடுவிகிறார்கள். 8

தங்களின் பிறை நிலைப்பாடு தோல்வியைத் தழுவி விட்டதால் மார்க்க ஆதாரமற்ற அவர்களின் பிறை நிலைப்பாட்டிலிருந்து விடுபட்ட மக்கள் ஹிஜ்ரி கமிட்டியின் தீர்வுகளை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டனர். அதனை தடுத்து நிறுத்தவே இவை போன்ற ''அறிவுபூர்வமான!'' கேள்விகளைக் கேட்டு குழப்பிவிடுவோம் என்று கங்கனம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ளனர். அல்லாஹ்வின் சத்திய ஜோதியை அணைப்பதற்கு இவ்வளவு பகீரத முயற்சிகளா? அந்தோ பரிதாபம்!. ஆக இவர்கள் எந்த காலண்டரையும் பின்பற்ற மாற்றார்கள் என்பதுதான் உண்மை. இந்த விமர்சனத்தின் நோக்கமே காலண்டர் விஷயம் என்பது புரிவதற்கு எளிதான விஷயமல்ல என்ற ஒரு மாயத் தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும் முயற்சியே அல்லாமல் வேறொன்றும் இல்லை. மார்க்க சட்டங்களை விளக்கும் அதிகாரம் தங்களுக்கு மட்டுமே உள்ளது என்றும், தங்கள் அறிவுக்கு புரியாத விஷயங்களை வேறு எவரும் விளக்கிடக் கூடாது எனவும் நினைப்பவர்கள் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டுகிறோம்.

பூமியின் மையப்பகுதியாக எதை வைக்க வேண்டும்?

''புனித மக்காவை உலகின் மையப்பகுதியாக (Prime Meridian - பிரதான தீர்க்கரேகை) அமைக்க வேண்டும். அதன் நேர் எதிர் பகுதியை (Antipode) தேதிக் கோடாக அமைக்க வேண்டும். அந்த புதிய தேதிக் கோட்டிலிருந்து ஒவ்வொரு புதிய நாளையும் துவக்க வேண்டும். மக்காவில் பிறை பார்த்ததின் அடிப்படையில் இஸ்லாமிய மாதங்களைத் துவங்க வேண்டும்'' என்பதே இவர்களின் வாதம்.

மக்காவை மையப்புள்ளியாக, அல்லது மையப் பகுதியாக வைக்க வேண்டும் என்று வாதிப்போர் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்ல வேண்டும். காரணம் மக்காவை மையப்படுத்த வேண்டும் என்று பேசுபவர்களில் ஒருசாரார் தீடீரென சஊதி அரேபியாவின் பிறை அறிவிப்பைத்தான் ஏற்க வேண்டும் என்று கூறி ஒரு நாட்டையே மையப்படுத்துகின்றனர். இன்னும் முஸ்லிம்கள் தொழுகைக்காக முன்னோக்க வேண்டிய திசை (கிப்லா) சம்பந்தமான வசனங்களை மேற்கோள் காட்டி ''கஅபாவுக்கு எத்தகைய முக்கியத்துவம் பார்த்தீர்களா?'' என்று கேள்வி கேட்டு மெய்சிலிர்க்கின்றனர்.

நாம் கேட்பது என்னவெனில், மையப்புள்ளியாக எதை வைப்பது? ஒரேயொரு இடத்தை தெளிவாகச் சொல்லுங்கள் என்கிறோம். பூமியின் மையப்பகுதியாக இவர்கள் எந்த இடத்தை வைக்கச் சொல்கிறார்கள்?

 • சுமார் 13 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்ட புனித கஅபாவை மட்டும் மையப்புள்ளியாக வைக்க வேண்டுமா?
 • அல்லது தற்போது சுமார் 88 ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட (விரிவாக்கப்பணிக்குப் பிறகு சுமார் 106 ஏக்கர்களில் அமையும்) புனித ஹரம்ஷரீபு பள்ளிவாசலை மையப் பகுதியாக எடுக்க வேண்டுமா?
 • அல்லது ஹரமுடைய எல்கையான புனித மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசல் முதல், மினா, முஜ்தலிஃபா, அரஃபா மைதானம் உட்பட மதீனா, ஜித்தா, தாயிஃப் நகர எல்லைகள் 9 உள்ளடங்கிய மீக்காத்தின் எல்லை வரை உள்ள பகுதியை மையப்பகுதியாக வைத்துக் கொள்ளலாமா?
 • அல்லது சுமார் 1200 சதுர கீலோ மீட்டர்கள் கொண்ட ஒட்டுமொத்த மக்கா நகரையே ஒரு மையப்புள்ளி என்று வைத்து அதற்கு எதிர்பகுதியில் தேதிக்கோட்டை அமைக்க வேண்டுமா? என்னதான் சொல்கிறார்கள்?

மக்காவை மையப்பகுதியாக அமைக்க வேண்டுமென்றால் இவர்கள் பிரசாரம் செய்யும் (140 டிகிரி மேற்கு) புதிய தேதிக்கோடானது 1200 சதுர கீலோமீட்டர் பரப்பளவில் அமையுமா? அல்லது மக்கா நகரின் கிழக்கு எல்லை முதல் மேற்கு எல்லை வரையுள்ள நீளத்தின் அளவுக்கு தேதிக்கோடும் அதே அகலத்தில் அமையுமோ? இப்படி நாம் கேள்வி எழுப்பியுள்ளதால் வெறும் தசம இலக்கத்தில் வரும் வித்தியாசத்தைக்கூட எல்லாம் பெரிதாக பேசுவதேன் என்று நினைக்கலாம். பூமியின் எப்பகுதியை மையப்பகுதியாக வைக்க வேண்டும் என்பதில் விமர்சகர்களுக்கே சரியான புரிதல் இல்லை என்பதால் இப்படி கேட்கிறோம்.

மக்காவை மையப்புள்ளியாக அல்லது மையப்பகுதியாக வைக்க வேண்டும் என்று வாதிப்போரில் ஒரு அணியினர், ரமழான் நோன்பை ஆரம்பித்தல், இரு பெருநாட்களைக் கொண்டாடுதல் போன்ற வணக்கவழிபாடுளுக்கு (இபாதத்) பிறை காணப்பட்ட தகவலை சஊதியிலிருந்துதான் பெறவேண்டும் என்கின்றனர். என்னே முரண்பாடு!

இவர்கள் பின்பற்றச் சொல்லும் சஊதி அரேபியா அரசானது, இவர்கள் கூறுவதுபோல மக்கா நகரை, பூமியின் மையப்புள்ளியாகவும், அதன் நேர்எதிர் பகுதியை தேதிக்கோடாகவும் ஏற்றுச் செயல்பட வில்லையே. இவர்களின் கற்பனை சித்தாந்தத்தை சஊதி அரேபிய அரசாங்கமே பின்பற்றாதபோது, சஊதி அரபியாவின் பிறைத் தகவலை ஏற்று நடக்க வேண்டும் என்று இவர்கள் கூறுவது முரண்பாடாகத் தெரியவில்லையா? இவர்களின் கருத்துப்படி, தீர்க்கரேகையில் சுமார் 20 டிகிரி பரப்பளவு கொண்ட சஊதி அரேபியா என்ற ஒரு நாட்டையே மையப்புள்ளியாக அமைக்க வேண்டி வரும். பிறகு இந்த பரப்பளவை வைத்து சஊதி அரேபியாவின் நேர்எதிர் பகுதியை தேதிக்கோடாக அமைக்க வேண்டும். நல்ல வேடிக்கைதான்.

moon-calendar-earth-center-makkah-6

இல்லாத சந்திரத் தேதிக்கோட்டை பெரிய விஞ்ஞானமாகக் காட்டி, மக்காவை சந்திரத்தேதிக் கோடாக அமைக்க வேண்டும் என்றும், 140 டிகிரி மேற்கில் புதிய தேதிக்கோட்டை அமைக்க வேண்டும் என்றும் இவர்கள் வாதிப்பது அறியாமை இல்லையா? சற்று சிந்திப்பீர். அவ்வாறு 140 டிகிரி மேற்கில் புதிய தேதிக்கோட்டை அமைக்கும் பட்சத்தில், 140 டிகிரி மேற்கில் அமைந்திருக்கும் அலாஸ்கா, கனடா மற்றும் பசிபிக் பெருங்கடலின் அமைந்திருக்கும் தீவுப் பகுதிகளின் பல நகரங்களை அப்புதிய தேதிக்கோடு இரண்டாக பிரிக்கும். ஒரே பகுதிக்கு இரண்டு கிழமைகளை கொடுக்க வேண்டி வரும்.

பூமியின் மேற்பரப்பில் மத்தியப் பகுதி என்று வரையறுக்க முடியுமா?

பூமியில் ஒரு பகுதியை மையப்புள்ளியாக அமைப்பதற்கு அறிவியல் ரீதியில் வாய்ப்புள்ளதா என்பதையும் சிந்திக்க வேண்டுகிறோம். உதாரணமாக. ஒரு வட்டம், சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்களில் எது மத்தியப் பகுதி? என்பதை வரையறுத்துக் கூறிவிட இயலும். அதே நேரத்தில் பந்தைப் போன்ற ஒரு உருண்டை வடிவத்தின் மேற்பகுதியில், எந்தப்புள்ளி மையப்புள்ளி? என்பதை வரையறுத்துக் கூறிவிட இயலாது. அதுபோலத்தான் நாம் வாழும் பூமியானது ஒரு உருண்டை வடிவத்தில்கூட இல்லை. அது துருவப்பகுதியில் சற்று தட்டையாகவும், பூமத்தியரேகைப் பகுதியில் சற்று வீங்கியும் கோள வடிவத்திற்கு (Sphere) நெருக்கமான, ஒரு நீள்வட்ட கோள வடிவத்தில் ((Oblate Spheroid or Oblate Ellipsoid) பூமி அமைந்துள்ளது. எனவே இத்தகைய வடிவம் கொண்ட பூமியின் மேற்பரப்பில் இருந்து கொண்டு, ஒரு குறிப்பிட்ட பகுதியை குறிப்பிட்டு, இதுதான் மத்தியப் பகுதி என்று எதையும் வரையறுத்து சொல்லிவிட முடியாது. இதுதான் யதார்த்தமான உண்மை.

மக்காவை மையப்பகுதியாக அமைக்க வேண்டும் என்ற கருத்துடையோருக்கு, பூமியின் நிலவியல் கோட்பாடுகள் பற்றியோ, புவியியல் விஞ்ஞானம் பற்றியோ தெளிவான ஞானமில்லாததை காட்டுகிறது. காரணம் நாம் தற்போது வசிக்கும் காலத்தில் உள்ள நாடுகள் மற்றும் கண்டங்களின் (Continents) வடிவ அமைப்பில்தான், உலகம் தோன்றிய நாளிலிருந்து பூமியின் நில அமைப்பு இருந்து வருகிறது என்ற நம்பிக்கையில் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் படிப்படியாகக் குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன். அவன் தீர்ப்பை மாற்றுப்பவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன். அல்குர்ஆன் (13:41)

மனிதர்கள் வாழும் பூமியின் நிலப்பரப்பின் எல்கை பல்வேறு மாற்றங்களுக்கும் உட்பட்டுள்ளது வரலாறு. இன்று புழக்கத்தில் இருக்கும் பூமியின் வரைபடத்தை போன்றுதான் கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்ததா என்றால், ஆம் என்று உறுதியாகக் கூற முடியாது. நாடுகளின் அமைப்பிலும், கண்டங்களின் எல்கையிலும் காலத்திற்குக் காலம் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உறுதியாகக் கூற முடியும்.

காரணம் பூமியில் முன்னர் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடும் பாங்கியா, லாரேசியா, கோண்ட்வானா, லெமூரியா போன்ற கண்டங்கள் பூமியின் தற்போதைய வரைபடத்தில் இல்லை. அக்கண்டங்களில் சில சிதறுண்டு பல நாடுகளாகப் பிரிந்து விட்டன. சில கண்டங்கள் நீரில் மூழ்கி அழிந்தும் விட்டன. இந்தியாவின் குமரி முனைக்கு தெற்கே இருந்ததாகச் சொல்லப்படும் தென்பலிநாடு இன்று இந்திய வரைபடத்தில் இல்லை. கன்னியாகுமரிக்கு தெற்கில் அமைந்திருந்ததாக தமிழ் அறிஞர்கள் கூறும் நாவலந்தீவு இன்றை உலக வரைபடத்தில் இல்லை. அன்றைய பூம்புகார் என்ற பகுதி இன்று அழிந்து விட்டது. நாம் அறிய பல தீவுகள் கடலில் மூழ்கி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. ஆக நமது பூமியில் மனிதர்கள் வாழும் நிலப்பரப்பானது பல்வேறு மாற்றங்களுக்கும் உட்பட்டுள்ளது என்பது வரலாற்று உண்மை. இனியும் மாறுபடலாம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

moon-calendar-earth-center-makkah-7

 

moon-calendar-earth-center-makkah-8

 • Continental Drift எனும் கண்டங்கள் உருமாற்றம் பற்றிய கண்டுபிடிப்புகள்,
 • Pangaea பேஞ்சீ அல்லது பாஜ்சியா என்று அழைக்கப்படும் பூமியின் நிலப்பரப்புகள் ஒன்றோடொண்டு பிரிந்த சாத்தியக் கூறுகள் பற்றிய கருத்துகள்,
 • கண்டத்தட்டு இயக்கவியல் எனும் Plate Tectonics பற்றிய சமீபத்திய ஆய்வுகள்,
 • மற்றும் பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றங்களால் (Shift of earth's magnetic field) நிகழும் நிலவியல் மாற்றங்கள் பற்றிய அறிவியல் கருத்துகள்

போன்றவை பூமியிலுள்ள நிலப்பரப்பும், கண்டங்களின் வடிவமைப்பு காலத்திற்கு காலம் மாறு பட்டிருந்ததற்கும் சாட்சியம் பகர்கின்றன. இவை பற்றிய சிறு குறிப்புகளை பின்வரும் தொடுப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Continental Drift (https://www.youtube.com/watch?v=_5q8hzF9VVE)
Pangaee effect (https://www.youtube.com/watch?v=3HDb9Ijynfo)
Plate Tectonics (https://en.wikipedia.org/wiki/Plate_tectonics)

இணைய ஊடக கருத்துகளின் தாக்கமாக இருக்கலாம்.

இணையதள ஊடகங்களில் பல்வேறு ஆய்வறிக்கைகளும், கருத்துகளும் குவிந்துள்ளது உண்மையே. மக்காவை பூமியின் மையப்பகுதியாக ஆக்கி விடவேண்டும் என்ற சிந்தனை ஏற்பட சில இணையதளங்களின் அறிக்கைகளும், அதனால் ஏற்பட்ட சிந்தனையின் தாக்கமாக இருக்கலாம் என்று கருதுகிறோம்.

கடந்த 1997-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சார்ந்த கமால் அப்தலி என்பவர் கிப்லாவின் திசையை கண்டு பிடிப்பதற்காக ஒரு கட்டுரையை வெளியிட்டார். பெரிய வட்டக் கோட்பாடு (Great Circle on Azimuthal projection of earth) பற்றிய அவரது ஆய்வறிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம். அந்த அறிக்கை கிப்லாவின் திசையை கண்டுபிடிப்பது பற்றியதே என்றாலும், மக்காவை மையப்படுத்தியும், மக்காவுக்கு நேர்எதிர் திசை பற்றிய கருத்துகளும் அதில் இடம்பெற்றன. அந்த அறிக்கையில், இதைவிட சிறந்த ஆய்வுகள் எதிர்வரும் காலத்தில் தெளிவாகலாம் என்று கமால் அப்தலி அவர்களே கூறுகிறார்.

சகோதரர் கமால் அப்தலி அவர்களின் கிப்லாவின் திசை பற்றிய கருத்துகளை தழுவி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா முஸ்லிம்கள் தொழுகைக்காக எந்தத் திசையை முன்னோக்குவது? போன்ற கருத்துகளைக் கூறும் சகோதரர் உமர் அஃப்ஜல் மற்றும் அவரது அணியினர் கடந்த 2007-ஆம் ஆண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதில் சர்வதேச சந்திர நாட்காட்டி சாத்தயமற்றது என்ற கருத்தும் பதியப்பட்டிருந்தது. கிப்லா சம்பந்தமாக மேற்படி கருத்துகளை படித்ததன் விளைவாக, மக்காவை பூமியின் மத்தியப் பகுதியாக வைக்க வேண்டும் என்ற கருத்திற்கு விமர்சகர்கள் வந்திருக்கலாம். இதை நாம் வெறுமனே யூகித்துச் சொல்லவில்லை. ஹிஜ்ரி காலண்டரை விமர்சிக்கும்போது மேற்படி நபர்களின் ஆய்வறிக்கைகளையே, விமர்சனம் செய்தோரும் மேற்கோள் காட்டினர் என்பதால் சொல்கிறோம்.

நம்மைப் பொறுத்தவரை முஸ்லிம் ஆய்வாளர்கள் அனைவரையும் மதிக்கிறோம். அவர்களின் கூற்று குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் சரியாக இருக்குமானால் எடுத்துக் கொள்வோம். பிழையாக இருப்பின் விட்டு விடுவோம். இதுதான் நமது நிலைப்பாடு. மேற்படி விமர்சனத்தை கிளப்பியவர்கள் நம்மை தரம் தாழ்ந்து விமர்சிப்பது போன்று நாம் பிற ஆய்வாளர்களை விமர்சிப்பதில்லை.

சகோதரர் கமால் அப்தலி போன்று, சகோதரர் உமர் அஃப்ஜல் போன்று சமகாலத்தில் பிறைகள் பற்றிய ஆய்வுக் கருத்துகளை டாக்டர் காலித் சவுக்கத் அவர்களும் தெரிவித்து வருகிறார். அவர், மக்காவை பூமியின் மையப்பகுதியாக ஆக்குவது பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளதை கீழே கொடுத்துள்ளோம். சகோதரர் காலித் சவுக்கத் அவர்கள் சொல்வதெல்லாம் சரி என்றோ, அவரின் கூற்றுகள் நமக்கு ஆதாரம் என்ற அடிப்படையிலோ அதை நாம் இங்கு பதிவிடவில்லை. மக்காவை பூமியின் மையப்பகுதியாக ஆக்க இயலாது என்ற மாறுபட்ட கருத்துக்களைப் படிப்பதற்கு விமர்சகர்கள் தவறியுள்ளதை இதன் மூலம் சுட்டிக் காட்டுகிறோம்.

Source : http://www.moonsighting.com/faq_qd.html

Question: Is the Ka'bah really at the centre/heart of the Earth geographically?

Answer: No! Ka'bah is not the center of the earth geographically. Earth is a sphere (more or less), and there can be no center on the surface of a sphere. If one can pick a point on the surface of the sphere to be the center, then every point can be considered as the center.

Those who say Ka'bah is the center, are trying to manipulate the argument on flat map or other irrelevant things. I have seen books written on it with absurd arguments. Some say, it is the center of land masses. This is absurd too. By no mathematical means anyone can correctly prove that hypothesis. Moreover, all land masses of the continents are floating in the oceanic waters, which are floating over the molten core of the Earth, and they all shift over a period of time. With such shifting, the center of land masses also shifts. Whoever came up with the notion, "Ka'bah is the centre of the Earth" is trying to prove un-necessary hypthesis.

இதன் தமிழாக்கம் பின்வருமாறு :-

கேள்வி : புவியியல் ரீதியாக கஅபா உண்மையில் பூமியின் மையத்தில் உள்ளதா?

பதில் : இல்லை! கஅபா புவியியல் ரீதியாக பூமியின் மையப் பகுதியில் இல்லை. பூமியானது (சற்றொப்ப) ஒரு கோள வடிவம் கொண்டது. ஒரு கோளத்தின் மேற்பரப்பில் எந்த மையப் பகுதியும் இருக்க முடியாது. ஒரு கோளத்தின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியை மையப் புள்ளியாக எடுக்க முடியும் என்றால், அக்கோளத்தின் ஒவ்வொரு புள்ளியையும் மையமாகக் கருதலாம்.

புனித கஅபாவானது பூமியின் மையப் பகுதியாக உள்ளது என்று கூறுபவர்கள், தட்டையான உலக வரைபடத்தின் மூலம் வாதம் புரிய முயற்சிக்கின்றனர், அல்லது பொருத்தமற்ற விஷயங்களை கையாள முயற்சிக்கின்றனர். இவை போன்ற அபத்தமான வாதங்கள் எழுதப்பட்ட புத்தகங்களை நான் பார்த்திருக்கிறேன். சிலர் நிலப்பரப்பின் அடிப்படையில் கஅபா நடுவில் உள்ளதாக சொல்கின்றனர். இதுவும் மிகவும் அபத்தமானது. இக்கருதுகோளை எந்தக் கணிதம் மூலமும் யாரும் நிரூபிக்க இயலாது.

மேலும், அனைத்து கண்டங்களிலுள்ள நிலப்பரப்புகளும் கடல் நீரில் மிதந்தபடி உள்ளன. அவை பூமியின் உருகிய மையப்பகுதிக்கு மேல் மிதக்கிறது. அவை அனைத்தும் குறிப்பட்ட காலத்திற்கு இடம் பெயர்ந்து மாறுபவை. அப்படி புலம் பெயரும்போது, அந்நிலப்பரப்பின் மையப்பகுதியும் சேர்ந்தே மாறிவிடும். கஅபாவானது பூமியின் மையப்பகுதியில் உள்ளதாக யார் சொன்னாலும், அவர் தேவையில்லாத கருதுகோளை நிரூபிக்க முயற்சிக்கிறார்.

 

கிப்லா திசையை முன்னோக்குவது பற்றி விரிவான ஆய்வறிக்கைகளை நாம் இன்னும் வெளியிடவில்லை. வட ஐரோப்பா, வடதென் அமெரிக்கா பகுதியிலுள்ள முஸ்லிம்களில் விரல்விட்டு என்னும் அளவுக்குள்ள சிறு குழுக்களிடையேதான் கிப்லாவை முன்னோக்குவது பற்றிய கருத்து வேறுபாடுகள் உள்ளது. அக்குழுவினரில் சிலர், பெரிய வட்டக் கோட்பாட்டை (Great Circle on Azimuthal projection of earth) முன்னிருத்தி வடஅமெரிக்காவின் பள்ளிவாயில்கள் சிலவற்றை மாற்றி அமைக்க வேண்டும் என்கின்றனர். இருப்பினும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் கிப்லாவை முன்னோக்கும் திசை விஷயத்தில் கருத்து வேறுபாடின்றி ஒன்றுபட்டே உள்ளனர். இவ்விஷயத்தில் குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டல்கள் மிகத்தெளிவாகவும், புரிவதற்கு லேசகவுமே உள்ளன.

சுருக்கமாக சொல்வதென்றால், நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர், இஸ்லாத்தை எட்டுத்திக்கும் எடுத்துச் சென்ற நபித்தோழர்களான ஸஹாபாக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவிச் சென்றனர். அவர்கள் சென்றடைந்த பகுதிகள் அனைத்திலும் தொழுகைக்காக பள்ளிவாயில்களை ஏற்படுத்தினர். அவர்களில் யாரும் பூமியை அஸிமத்தல் வடிவில் (Azimuthal Projection) பார்த்து, பெரிய வட்டக் கோட்பாட்டின் (Great Circle Concept) படி பூமிப்பந்தில் நூல் பிடித்து கிப்லாவின் திசையை நிர்ணயம் செய்யவில்லை. மேலும் நபித்தோழர்களுக்குப் பிறகு அவர்கள் வழி தொடர்ந்த தாபியிஈன்களும், தபஅ தாபியிஈன்களும் இஸ்லாத்தை எடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றனர். தொழுகைக்காக பூமியெங்கும் பள்ளிவாயில்களை அமைத்தனர். அவர்களும் அஸிமத்தல் வடிவம், பெரிய வட்டக் கோட்பாடு என்று அலட்டிக் கொள்ளவில்லை.

அவ்வளவு ஏன்? நாம் வாழுகின்ற இக்காலத்தில்கூட நாம் கட்டும் பள்ளிவாயில்களை சகோதரர் கமால்அப்தலி அவர்களின் கூற்றுப்படி (Great Circle on Azimuthal projection of earth) கிப்லாவின் திசையை அமைப்பதில்லை. காரணம் கிப்லா விஷயத்தில் இந்த அளவுக்கு கஷ்டப்பட வேண்டும் என்று மார்க்கம் நமக்கு வலியுறுத்தவில்லை. மார்க்கம் மிக இலேசானது. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை (2:177). கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது (2:115) என்பதை அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம்.

அபூஹூரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள் : கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே உள்ளது கிப்லாவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, இப்னுமாஜா)

மக்கா, மதீனா ஆகிய இரு நகரங்கள் எந்தெந்த திசையில் எப்படி அமைந்துள்ளன என்பதை நபித்தோழர்கள் நன்கே அறிவர். தாங்கள் பிறந்து வளர்ந்து, அடிக்கடி பிரயாணங்கள் செய்த இடங்கள் என்ற அடிப்படையில் நபித்தோழர்களுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மக்கா நகருக்கு வடக்கு பக்கமாக மதீனா நகர் அமைந்துள்ளது. எனவே மதீனத்து முஸ்லிம்கள் கஃபாவை முன்னோக்கி தெற்கு திசை நோக்கி தொழ வேண்டும்.

இருப்பினும் நபி (ஸல்) அவர்களிடம் மதீனாவில் வைத்து கிப்லாவின் திசை பற்றி நபித்தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அஜிமத்தல் வடிவம், பெரிய வட்டக் கோட்பாடு என்றெல்லாம் முன்அறிவிப்பு செய்யவில்லை. குறைந்த பட்சம் தெற்கு பகுதியை நோக்கி தொழுங்கள் என்றுகூட மதீனாவாசிகளுக்குக் கட்டளையிட வில்லை. ஆனால் 'கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே உள்ளது கிப்லாவாகும்' என்று ரத்தினச் சுறுக்கமாக சொல்லி விட்டார்கள். நபித்தோழர்களின் கேள்வியும், நபி (ஸல்) அவர்களின் பதிலும் விமர்சகர்கள் தேவையில்லாமல் இன்று எழுப்பும் கிப்லா பிரச்சனைக்கு தீர்வைச் சொல்வது போல அமைந்துள்ளதை காண்கிறோம் - ஸூப்ஹானல்லாஹ்.

ஜெரூசலத்தை பூமியின் மத்தியப் பகுதியாக அறிவிக்க யூதர்களின் சதிகள்

ஜெரூசலம் நகரை உலகின் மையப்பகுதியாக ஆக்கிவிட வேண்டும் என்று யூதர்கள் காலங்காலமாக முயன்று வருகின்றனர். 'ஒரு நாள் என்பதை எங்கிருந்து தொடங்கலாம் என்பதில் யூத அறிஞர்களிடையே கருத்து மோதல்கள் உள்ளன. சர்வதேசத் தேதிக் கோட்டுப் பகுதியை தவிர்த்து விட்டு அவர்கள் புனித பூமியாகக் கருதும் ஜெரூசலத்தை பிரதான தீர்க்கைரேகையாக (Prime Meridian) அறிவித்து அலாஸ்கா நாட்டின் கிழக்குப் பகுதியை எதிர் தீர்க்கரேகையாக (Anti Meridian) அமைக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது'. (Courtesy : Wikipedia) யூதர்கள் ஜெரூசலம் நகரை உலகின் மையப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று முயற்சிக்கக் காரணம், கீழ்க்காணும் பைபிள் வசனங்கள் அதை வலியுறுத்துவதாகவும் கூறுகின்றனர்.

Ezekiel (5 : 5) : Thus saith the Lord GOD; This is Jerusalem: I have set it in the midst of the nations and countries that are round about her.

எசேக்கியேல் (5:5) : கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதுவே எருசலேம், புற ஜாதிகளின் நடுவிலே நான் அதை வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது.

Ezekiel (37 : 28) And the heathen shall know that I the LORD do sanctify Israel, when my sanctuary shall be in the midst of them for evermore.

எசேக்கியேல் (37:28) : அப்படியே என் பரிசுத்த ஸ்தலம் அவர்கள் நடுவிலே என்றென்றைக்கும் இருக்கும்போது, நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம் பண்ணுகிற கர்த்தர் என்று ஜாதிகள் அறிந்து கொள்வார்கள் என்கிறார், என்று சொல் என்றார்.

Ezekiel (38 : 12) : To take a spoil, and to take a prey; to turn thine hand upon the desolate places that are now inhabited,and upon the people that are gathered out of the nations, which have gotten cattle and goods, that dwell in the midst of the land.

எசேக்கியேல் (38:12) : நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப் போவேன். நிர்விசாரமாய் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின் மேல் வருவேன்;. அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.

(Isaiah 2:1–4) Speaks Jerusalem being the center of administration for the entire world.

ஜெரூசலமானது முழு உலக நிர்வாகத்தின் மையப்பகுதியாக இருப்பதாக எசாயா (2:1-4) வசனங்கள் கூறுகின்றன என்றும் யூதர்கள் நம்புகின்றனர். ஜெரூசலத்தை பூமியின் மத்தியப் பகுதியாக மாற்ற வேண்டும் என்ற கருத்தில் பல்வேறு கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதி இணையதளங்களில் பதிந்துள்ளனர். ஜெரூசலம் நகரிலிருந்துதான் மனித நாகரிகம் கடல் வழியாகப் பரவின என்பதாகப் புனைந்து நீர்வழிப் பாதைகளின் வரைபடங்களுடன் ஆய்வறிக்கைகளை தயாரித்துள்ளனர்.

moon-calendar-earth-center-makkah-9

இன்றைய செய்தி நாளைய வரலாறாக மாறலாம் என்பதால், ஜெரூசலத்தை பூமியின் மையப்பகுதியாக அறிவிப்பதற்கு யூதர்கள் முற்கூட்டியே திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

ஜெரூசலத்தை பூமியின் மத்தியப் பகுதியாக எப்படியேனும் அமைத்து விடவேண்டும் என்ற யூதர்களின் திட்டங்கள் தற்போதைய காலகட்டத்தில் நிறைவேறாமல் இருப்பது உண்மைதான். யூதர்களைப் பொறுத்தவரையில் இன்று திட்டம்தீட்டி, அதை நாளைக்கே நிறைவேற்றுபவர்கள் அல்லர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக யூதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததை கொள்ளலாம்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பாலஸ்த்தீன பூமியானது முஸ்லிம்களின் ஆளுமையிலும் அதிகாரத்திலும் இருந்தது. அந்த பாலஸ்த்தீன பூமிக்கு அகதிகளாவும், வந்தேறிகளாகவும் வந்த யூதர்கள், திட்டமிட்டு மெல்ல மெல்ல பலவருடங்களாக குடியமர்ந்தனர். பிறகு முழு பாலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்தனர். ஆயுத பலங்களை படிப்படியாக அதிகரித்து முஸ்லிம்களிடமிருந்து பாலஸ்தீனத்தை இன்று கைப்பற்றியும் கொண்டனர். அதோடுகூட அவர்கள் நிற்கவில்லை. பின்னர் பாலஸ்த்தீனத்தின் உரிமையாளர்களான முஸ்லிம்களை அகதிகளாக்கி, நாட்டை விட்டே விரட்டுகின்றனர். இவையெல்லாம் பல ஆண்டுகளாக நன்கு திட்டமிடப்பட்ட கூட்டுச் சதிவேளைகளின் விளைவுகளாகும். நபிமார்கள் காலம் முதல் இன்று வரை முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு சதிகள் செய்வதில் யூதர்களுக்கு நிகர் யூதர்களே. அதனால்தான் வல்ல அல்லாஹ் யூதர்கள் குறித்து முஃமின்களை கீழ்க்கண்டவாறு எச்சரிக்கின்றான்.

(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாத வரையில் உம்மைப் பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) ''நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி'' என்று சொல்லும். அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (அல்குர்ஆன் 2 : 120)

யூதர்களின் சதிவேலைகளுக்கும், நாம் படித்துக்கொண்டிருக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என்று நீங்கள் நினைக்கலாம். சம்பந்தம் இருக்கத்தான் செய்கிறது. சற்று பொறுமையாகப் படியுங்கள்.

பூமி உருண்டையில் கிழக்கிலிருந்து மேற்காக வரையப்பட்டிருக்கும் கோடுகள் அட்சரேகை (latitude) ஆகும். இது பூமத்தியரேகையிலிருந்து ஒன்றுக்கொன்று இணையாக (Parallel) வரையப்பட்டிருக்கும். அதுபோல வடக்கிலிருந்து தெற்காக இரு துருவப் பகுதிகளையும் இணைத்து வரையப்பட்டிருக்கும் கோடுகள் தீர்க்கரேகை (longitude) ஆகும் என்பதை முன்னரே எழுதியுள்ளோம்.

தற்போது புழக்கத்தில் இருக்கும் அட்சரேகை, தீர்க்கரேகை அளவீடுகளில், புனித மக்காவுடைய புவியியல் குறியீட்டின் அளவு latitude : 21.4167° N, longitude : 39.8167° E என்பதாகும். அதுபோல யூதர்கள் புனித இடமாகக் கருதும் ஜெரூசலத்தின் புவியியல் குறியீட்டின் அளவு latitude : 31.7833° N, longitude : 35.2167° E ஆகும்.

மக்கா : longitude : 39.81° E, ஜெரூசலம் : longitude : 35.21° E

அதாவது தீர்க்கரேகையின் மதிப்பீட்டு அடிப்படையில், கீரீன்விச்சிலிருந்து சுமார் 39-ஆவது டிகிரி கிழக்கில் மக்கா நகரம் அமைந்துள்ளது. கீரீன்விச்சிலிருந்து சுமார் 35-ஆவது டிகிரி கிழக்கில் ஜெரூசலம் அமைந்துள்ளது. இரண்டு நகருக்கும் இடையே சுமார் நான்கு (4) டிகிரிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. தீர்க்கரேகையில் நான்கு டிகிரிகள் என்பது இரண்டு ஊருக்குமிடையே வெறும் 16 நிமிடங்கள் நேர வித்தியாசம் மட்டுமே.

யூதர்கள் தங்களது புண்ணிய இடமாகக் கருதும் ஜெரூசலத்தை பூமியின் மையப்பகுதியாக அமைக்க வேண்டும் என்று வெளிப்படையாக வாதித்தால், முஸ்லிம்கள்தான் அதை முதல் வரிசையில் நின்று எதிர்ப்பார்கள். இது யூதர்களுக்கும் நன்கு தெரியும். அதனால்தான் முஸ்லிம்களின் சிந்தனையை திசை திருப்பிட, மக்காவை பூமியின் மையப்பகுதியாக மாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்தை கிளப்பியுள்ளனர். மக்காவை பூமியின் மையப்பகுதியாக அமைக்க வேண்டும் என்ற கருத்தை பரப்பினால் உலக முஸ்லிம்களில் பெரும்பான்மையோரை அக்கருத்தில் உடன்பட வைக்கலாம். குர்ஆன், சுன்னாவில் இப்படிப்பட்ட கட்டளை ஏதும் உள்ளதா? என்ற ரீதியில் சிந்திக்கும் முஸ்லிம்கள் மிக குறைவாகவே இருப்பார்கள். உலக முஸ்லிம்கள் அனைவரும் புனித பூமியாகக் கருதும் மக்காவை மையப்படுத்தி விட்டால் முஸ்லிம் அறிஞர்கள்கூட அக்கருத்தை எதிர்ப்பதற்குத் தயங்குவார்கள். இதனால் யூதர்களுக்கு என்ன இலாபம்? என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்விதான்.

மக்காவை மையப்படுத்தும் கருத்தை முஸ்லிம்களிடையே பரப்பிவிட்டால் யூதர்களின் திட்டத்தில் 95 சதவிகிதம் சிரமம் இல்லாமல் நிறை வேறிவிடும். மேலும் இஸ்லாமிய வரலாற்றின் தேதிகளையும், நாட்காட்டியிலும் குழப்பத்தையும் ஏற்படுத்தலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்வார்களே அதுபோல.

அதாவது, கீரீன்விச்சிலிருந்து சுமார் 39-ஆவது டிகிரி கிழக்கிலுள்ள மக்காவை மையப் பகுதியாக ஏற்றுக் கொள்வதற்கு உலக முஸ்லிம்களை முதலில் தயாராக்கி விடுவார்கள். முஸ்லிம்கள் அப்படி தயாராகி விட்டால், பின்னர் கீரீன்விச்சிலிருந்து சுமார் 35-ஆவது டிகிரி கிழக்கில் இருக்கும் ஜெரூசலம்தான் சிறந்த மையப்பகுதி என்று உலக மீடியாக்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் மனதில் பதிய வைப்பார்கள்.

மேலும் ஜெரூசலமானது மதங்களுக்கு அப்பாற்பட்டு யூதர்களுக்கும், கிருஸ்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் புனிதமான பூமியாகும் என்பர். முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் மக்திஸ் இங்குதான் உள்ளது என்பார்கள். நபிமார்களில் பலர் ஜெரூசலத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பார்கள். மிஅராஜ் எனும் விண்வெளிப் பயணத்தை நபி (ஸல்) அவர்கள் இங்கிருந்துதான் தொடங்கினார்கள். எனவே ஜெரூசலம் முஸ்லிம்களுக்கு விரோதியான நகரம் அல்ல என்று மிக நேர்த்தியான வாதங்களைக் கூறி முஸ்லிம்களை ஒப்புக்கொள்ள வைப்பார்கள். மக்காவைவிட ஜெரூசலத்தை மையப் பகுதியாக ஆக்குவதற்கு வலிமையான ஆதாரங்களும், புவியியல் ரீதியான ஆய்வுகளும் உள்ளதாக உலகை நம்பவைத்து அதையே இலகுவாக நிறுவி விடுவர்.

தங்களை நவீன விஞ்ஞானிகளாக காட்டிக் கொண்டு, நம்மை எதிர்ப்பதையே முழுநேரப் பணியாக செய்து வருபவர்களுக்கு ''ஜெரூசலத்தை மத்திய நகரமாக்குவோம்! நாரே தக்பீர் அல்லாஹூஅக்பர்!!'' என்று மீண்டும் உணர்ச்சிகள் பொங்கும். இதுதான் எதார்த்த நிலை. இயற்கையாக இருக்கும் ஒன்றை, முதலாவது முறை மாற்றுவதுதான் கடினம். பூமியின் மையப்பகுதியாக மக்காவாக மாற்றிய பிறகு அதை ஜெரூசலமாக மாற்றுவது எளிதாகும். மேலும் 16 நிமிட நேரங்கள் வித்தியாசத்தையும் பகல் ஒளி சேமிப்பு (Daylight Saving) போன்ற ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லி ஜெரூசலத்தின் நேரத்தை உலக நேரமாக மாற்றுவதும் எளிதாக நடைபெறும்.

இரண்டாவதாக, ஒவ்வொரு சந்திர மாதத்தின் தொடக்கம் மற்றும் முடிவு, அதன் எண்ணிக்கைகள், சந்திர, சூரியக் கிரகணங்களின் தேதிகள் என்று ஒரு நாட்காட்டிக்குத் தேவையான கட்டமைப்புகள் சில உள்ளன. அவை அனைத்தும் சந்திரனின் வடிவநிலைகள், அதன் கோணவிகிதம், மற்றும் புவிமைய சங்கம நிகழ்வின் தேதிகளின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன. இந்நிலையில் மக்காவை உலகின் மையப்பகுதியாக (Prime Meridian - பிரதான தீர்க்கரேகையாக) அமைத்து, அதன் நேர்எதிர் பகுதியை (Antipode) தேதிக்கோடாக அமைக்க முனைந்தால், ஒரு நாட்காட்டிக்குத் தேவையான மேற்கூறிய உள்கட்மைப்புகள் சிதையும். சந்திரனின் வடிவநிலைக்கும் அது காட்டும் தேதிக்கும் தொடர்பு இல்லாமல் போகும் வாய்ப்புகள் நிகழும். அதன் அடிப்படையில் பின்நோக்கிக் கணக்கிட்டால் இஸ்லாமிய வரலாற்றின் தேதிகள் மாறுபட்ட நாட்களில் இடம்பெறும். இஸ்லாமிய நாட்காட்டியில் மிகுந்த குழப்பம் ஏற்படும்.

எனவே மக்காவை பூமியின் மையப்பகுதியாக அமைக்க வேண்டும் என்ற கருத்து யூதர்கள் ஜெரூசலத்தை மையப்படுத்திடும் முயற்சிக்குத்தான் உதவும். மக்காவின் நேர் எதிர் திசையை புதிய தேதிக்கோடாக அமைத்தால் இஸ்லாமிய நாட்காட்டியை சிதைப்பதற்கே அது வழிவகுக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை யூதர்கள் அடிக்க முனைவது இதிலிருந்தே அப்பட்டமாகத் தெரியவில்லையா?

மக்காவை பூமியின் மையப் பகுதியாக மாற்ற வேண்டும் என்று நம் முஸ்லிம் சகோதரர்களே பிரச்சாரம் செய்வதுதான் வேதனையிலும் வேதனை. அவர்களை யூதக் கைக்கூலிகள் என்றோ, யூதர்களை பின்பற்றுகிறார்கள் என்றோ நாம் சொல்லவில்லை, அது நமது நோக்கமுமல்ல. மாறாக யூதர்களின் சதியில் வீழ்ந்து விடாதீர்கள் என்று அவர்களுக்கு உபதேசிக்கிறோம். கட்டுரையின் இப்பகுதியை படிக்கும் மாற்றுக் கருத்துடையோருக்கு இக்கருத்துக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அல்லது சற்று நெருடலாகக்கூட இருக்கலாம். காலச்சக்கரம் சுழலும், உண்மை தாமதமாகத்தான் உணரப்படும். மக்காவை பூமியின் மையப் பகுதியாக மாற்ற வேண்டும் என்று குர்ஆனிலோ, ஸஹீஹான ஹதீஸிலோ இல்லை. குர்ஆன் சுன்னா வலியுறுத்தாத ஒரு சித்தாந்தம் நமக்கு தேவையில்லை. இந்த கோணத்திலாவது அவர்களை சிந்திக்க வேண்டுகிறோம்.

''உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறிஸ்துவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ''வேறு யாரை (நான் கூறப்போகிறேன்)'' என்று கூறினார்கள். நூல் : புகாரி 3456, 7319

கிப்லா சம்பந்தமான குர்ஆன் வசனங்கள் கூறுவது என்ன?

மக்காவை மையப்பகுதியாகவும், மக்காவின் நேர்எதிர் பகுதியை புதிய தேதிக்கோடாகவும் மாற்றி அமைக்கவும் வேண்டும் என்பதே விமர்சனம். இதை வலியுறுத்தும் மாற்றுக்கருத்தினரில் சிலர், அதற்கு ஆதாரமாக அல்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸூரத்துல் பகராவின் 142 முதல் 150 வரையுள்ள வசனங்களை மேற்கோள் காட்டுகின்றனர். அவர்களின் கூற்றுக்கும் அல்குர்ஆனின் மேற்படி வசன்களுக்கும் எள் முனையளவும் சம்பந்தம் இல்லை என்பதை தெளிவாக விளங்க வேண்டும்.

ஹிஜ்ரத்திற்குப் பின்னர், நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் அல்லாஹ்வின் கட்டளைபடி சுமார் 16 மாதங்கள் வரை ஜெரூசலத்திலுள்ள பைத்துல் மக்திஸை நோக்கி தொழுதனர். இச்செய்கையை பார்த்த அன்றைய காலத்து யூதர்கள் முஸ்லிம்களை பரிகசித்தனர். நபி (ஸல்) அவர்கள் மக்காவிலுள்ள புனித கஅபாவின் திசையை முன்னோக்கி தொழுவதையே விரும்பினர். தாங்கள் விரும்பியது போல கிப்லாவின் திசை மாற்றப்படாதா என்று அடிக்கடி வானத்தை பார்க்கும் அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் ஏங்கினார்கள். மதீனாவில் முஸ்லிம்கள் தொழுது கொண்டிருக்கும் போதே நபி (ஸல்) அவர்கள் விரும்பியபடி கிப்லா மாற்றம் குறித்து இறைகட்டளையும் வந்தது. ''(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் (இருக்கும்) திசையில் திருப்புவீராக!'' என்று வல்ல அல்லாஹ் கட்டளையிட்டான். இந்த கிப்லா மாற்றம் என்ற நிகழ்வானது, நபி (ஸல்) அவர்களை தூதராக முற்றிலுமாக ஏற்று நடந்தவர்கள் யார்? என்பதை பிரித்தறிவிப்பதாக இருந்தது. மேலும் அல்லாஹ்வுடைய நேர்வழி கிடைக்கப் பெறாதவர்களுக்கு இச்சம்பவம் பெரும் சுமையாகவும் இருந்தது. இதுதான் அல்குர்ஆனின் 2:142 முதல் 2:150 வரையுள்ள வசனங்கள் கூறும் சுருக்கமான கருத்தாகும்.

குர்ஆன் விரிவுரையாளர்கள் அனைவரின் கருத்தும் இவ்வாறுதான் உள்ளது. இக்கருத்துதான் சரி என்பதை தெளிவுபடுத்திடும் பல ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் காணக் கிடைக்கின்றன. இந்நிலையில் மக்காவை மையப்பகுதியாகவும், மக்காவின் நேர்எதிர் பகுதியை புதிய தேதிக்கோடாகவும் மாற்றி அமைக்க மேற்படி வசனங்கள் எப்படி ஆதாரமாக அமையும் என்பதுதான் ஆச்சரியம்.

''(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் (இருக்கும்) திசையில் திருப்புவீராக!'' (2:144,149,150) என்ற கட்டளை இவ்வசனங்களில் மூன்று முறை இடம்பெற்றுள்ளது. இதை வைத்துக் கொண்டு, ''பார்த்தீர்களா அல்லாஹ்வே கட்டளையிட்டு விட்டான். கஅபாவுக்குள்ள முக்கியத்துவத்தை பார்த்தீர்களா? எனவே மக்காவைத்தான் நாம் மையப்படுத்த வேண்டும்'' என்று ஆர்ப்பரிப்பது அறிவுடையாகுமா? கஅபாவுக்கு முக்கியத்தும் இல்லை என்று யார் சொன்னார்? நாமும் மறுக்கவில்லையே!. இறைக் கட்டளைபடி நாமும் கஅபாவின் திசையை நோக்கித்தானே தொழுது வருகிறோம். இமயமலையை நோக்கி தொழுது கொள்ளுங்கள் என்றோ, தாஜ்மஹாலின் திசையை நோக்கி தொழுங்கள் என்றோ நம்மில் யாரும் பிரசாரம் செய்யவில்லையே.

கிப்லாவை முன்னோக்குதல் என்ற அம்சத்திலிருந்து, மக்காவை மையப்பகுதியாகவும், மக்காவின் நேர்எதிர் பகுதியை புதிய தேதிக்கோடாகவும் மாற்றி அமைக்கவும் வேண்டும் என்ற நிலைப்பாட்டை இவர்கள் எப்படி எடுத்தார்கள்? என்பதுதான் நமது கேள்வி. மக்காவுக்கு உள்ள சிறப்புகளோ, கிப்லாவுடைய வசனங்களோ, அதை உலகின் மத்தியப் பகுதியாக ஆக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.

மேற்காண்ட வசனங்களில் இடம்பெறும் 'ஷத்ரல் மஸ்ஜிதில் ஹராம்' என்ற வாக்கியத்தில் 'ஷத்ர்' என்றால் 'ஜிஹத்து' என்று பொருள்படும். அதாவது 'திசை', 'இலக்கு', 'முன்னோக்குதல்', அல்லது 'அதன் பக்கம்' என்று பொருள்படும். 'கிப்லா' என்ற சொல்லானது முன்னோக்கும் திசையைக் குறிக்கும். இவற்றை ஏன் இங்கு குறிப்பிடுகிறோம் என்றால், 'முஸ்லிம்கள் முன்னோக்கும் திசை' என்று நாம் கிப்லா பற்றி குறிப்பிடும் போது ஹிஜ்ரி கமிட்டியை குறை கூறுவதற்காகவே உயிர்வாழக்கூடிய அண்ணனின் தம்பிமார்கள் நம்மை நையாண்டி செய்தனர். 'திக்கை வணங்கும் துலுக்கர்கள் என்ற பாரதியாரின் பாடலுக்கு நாம் வலுசேர்ப்பதாக' எழுதி நம்மை நையாண்டி செய்தனர். அவர்களை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறோம். இங்கு நாம் குறிப்பிட வருவது, 'ஷத்ர்' பற்றியும், 'கிப்லா' பற்றியும் முற்கால இஸ்லாமிய அறிஞர்களின் பல்வேறு ஆய்வுகளை செய்து, பல அரிய குறிப்புகளையும் இவ்வுலகிற்கு தந்துள்ளனர். அவ்வறிஞர்களும் அல்குர்ஆனின் 2:142 முதல் 2:150 வரையுள்ள இதே வசனங்களை ஆய்வு செய்துள்ளனர். அவர்களில் யாரும் மக்காவை மையப்பகுதியாகவும், மக்காவின் நேர்எதிர் பகுதியை புதிய தேதிக்கோடாகவும் மாற்றி அமைக்க வேண்டும் என்று மேற்படி வசனங்கள் தெரிவிப்பதாகக் கூறவில்லை.

தொழுகைக்காக கஅபாவை முன்னோக்குதல் என்பதில், கஅபாவை நேருக்குநேராக மிகச்சரியாக (ஐனுல் கஅபா) முன்னோக்க வேண்டுமா? என்ற கேள்விகளுக்கு இஸ்லாமிய அறிஞர்களுக்கிடையே பல கருத்துப் பறிமாற்றங்களும் நடைபெற்றுள்ளன. பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்து என்னவெனில், ''யார் கஅபாவுக்கு நெருக்கமாகவும், அதை பார்க்கும் அளவிலும் இருக்கிறார்களோ அவர் கஅபாவை மிக நேர்த்தியான முறையில் முன்னோக்க வேண்டும். யார் கஅபாவுக்கு தொலைவிலும், அதை பார்க்க இயலாத தூரத்திலும் உள்ளார்களோ அவர்கள் கஅபாவுடைய திசையை முன்னோக்கட்டும்'' என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். ''பயணத்தின் போதோ அல்லது கிப்லாவின் திசையை அறிய முடியாத சூழ்நிலையில் இருந்தாலோ, கிப்லாவின் திசையை ஓரளவு யூகித்துக் கொண்டு தொழுகையை நிறைவேற்றிவிட வேண்டும்'' என்றும் முற்கால இஸ்லாமிய அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இதில் நாம் தெரிவிப்பது என்னவெனில், இவ்வறிஞர்களும் அல்குர்ஆனின் 2:142 முதல் 2:150 வரையுள்ள இந்த வசனங்களை மேற்கோள்காட்டியே தீர்ப்பு வழங்கியுள்ளனர். இப்படி கிப்லா பற்றிய குர்ஆன் ஹதீஸ்களை ஆய்வு செய்தவர்கள் யாரும் தங்கள் ஆய்வறிக்கைகளில் மக்காவை உலகிற்கு மையப் பகுதியாக வைக்க வேண்டும் என்றோ, மக்காவின் நேர்எதிர் பகுதியை புதிய தேதிக்கோடாக மாற்றி அமைக்க வேண்டும் என்றோ எங்கும் குறிப்பிடவில்லை. மேற்படி கிப்லாவின் வசனங்கள் இதற்கு ஆதாரமாக எந்த அறிஞர்களும் கூறவில்லை. எனவே அல்குர்ஆன் ஸூரத்துல் பகராவின் 142 முதல் 150 வரையுள்ள வசனங்கள் மாற்றுக் கருத்துடையோருக்கு ஒருபோதும் ஆதாரமாக அமையாது.

பரக்கத் பெற்ற இடத்தை மையப்படுத்த வேண்டுமா?

'புனித மக்கா நகரம் பரக்கத் பொறுந்திய பகுதியாகும். இன்னும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்துமே பரக்கத் பொறுந்திய பகுதிகளாகும். எனவே மக்காவைத்தான் நாம் பூமியின் மையப் பகுதியாகக் கொள்ள வேண்டும்' என்றும் வாதிக்கின்றனர். அல்குர்ஆனின் 3:96-ஆவது வசனத்தை அவர்கள் தவறாக புரிந்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட குழப்பமே இது.

(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. அல்குர்ஆன்(3:96)

மேற்காணும் அல்குர்ஆன் வசனம் நேற்றுதான் வஹியாக இறங்கியதைப் போலவும், அது கூறும் உண்மையை இவர்கள் கஷ்டப்பட்டு கண்டுபிடித்து விட்டதைப் போலவும் ஒரு மாயையை ஏற்படுத்துகின்றனர். இவ்வசனம் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரிந்த ஒரு குர்ஆன் வசனம்தான் என்பதை விமர்சகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். மேற்படி வசனத்தைக் குறித்து, மக்காவை பூமியின் மையப் பகுதியாக ஆக்கிவிட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் எங்காவது கூறியுள்ளார்களா? மேற்படி வசனம் இக்கருத்தைதான் சொல்கிறது என நபித்தோழர்களில் யாராவது புரிந்தார்களா? இவ்வசனத்தை பயின்ற கலீபாக்கள், இமாம்கள் உட்பட இஸ்லாமிய வரலாற்றில் கடந்த 1400 வருடங்களாக இஸ்லாமிய அறிஞர்கள் யாராவது இக்கருத்தை சொன்னார்களா? இல்லையே.

மக்கா நகரம் பரக்கத் பொருந்திய நகரம் என்பதில் நமக்கு ஐயமில்லை. அதனால் அதை பூமியின் மையப் பகுதியாக வைக்க வேண்டும் என்ற கருத்துக்கு எப்படி ஆதாரமாக அமையும்? ஒரு இடத்தை பூமியின் மையப்பகுதியாக வைப்பதற்கு அது பரக்கத் பொருந்திய இருக்க வேண்டும் என்பதுதான் பிரதான அளவுகோளா? அப்படியானால், குர்ஆன் ஹதீஸ்களில் பல ஊர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவை பரக்கத் செய்யப்பட்டுள்ள இடங்கள் என்று வந்துள்ளன. எனவே அத்தகைய அனைத்து ஊர்களையும் பூமியின் மையப் பகுதியாக வைத்து விடலாமா?

மதீனா நகருடைய சிறப்புகளையும் அதன் பரக்கத் பொருந்திய மகத்தான் நிலையையும் நாம் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. மதீனா நகரின் பெயரைக் குறிப்பிட்டு அதற்கு பரக்கத் வேண்டியும், மக்காவைவிட இரண்டு மடங்கு அதிகமான பரக்கத்தை மதீனாவுக்கு வழங்குமாறும் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள் (புகாரி 1885, முஸ்லிம் 2661). மேலும் மதீனாவிலிருந்து சுமார் நான்கு மைல் தூரத்திலுள்ள 'வாதில்அகீக்' என்ற பள்ளத்தாக்கு பரகத் வாய்ந்த பள்ளத்தாக்கு ஆகும் என்று ஹதீஸ் கூறுகிறது (புகாரீ 1534). இன்று சிரியா, பாலஸ்தீனம், லெபனான் மற்றும் ஜோர்டான் என்று நான்கு நாடுகளாக இருக்கும் பகுதிகள், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் 'ஷாம்' என்று அழைக்கப்பட்டது. அத்தகைய ஷாம் நாட்டிற்கும், ஏமன் நாட்டிற்கும் பரக்கத் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை பிராத்தனை செய்துள்ளார்கள் என்ற செய்தி ஹதீஸ்களில் (புகாரி 1037, 704) காணக் கிடைக்கின்றன. மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வுடன் உரையாடிய மலைப் பகுதியையும் பாக்கியம் பெற்ற இடம் என்றுதான் அல்குர்ஆன் (28:30) கூறுகிறது. எனவே மதீனா, வாதில்அகீக், சிரியா, பாலஸ்தீனம், லெபனான் மற்றும் ஜோர்டான் போன்ற பகுதிகள் அனைத்தையும் பூமியின் மையப்பகுதியாக, பிரதான தீர்க்கரேகையாக அறிவித்து விடலாமா? அந்த நாடுகளில் பிறை காணப்பட்டால்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி விடலாமா?

குர்ஆன், ஹதீஸில் 'பரக்கத்' என்ற சொல்லானது பல கோணத்தில் பல விஷயங்களுக்கும் பயன் படுத்தப்பட்;டுள்ளது. அல்லாஹ் மிகப்பெரும் பரக்கத் பொருந்தியவன் என்று அல்குர்ஆன் (43:85) கூறுகிறது. அருள்மறை குர்ஆனை பரக்கத்தும், பாக்கியமும் நிறைந்த வேதம் என்று அல்லாஹ் (6:155, 21:50, 38:29) கூறுகிறான். சொர்க்கமானது பாக்கியமும், பரக்கத்தும் பொருந்திய இடம் என்று அல்குர்ஆன் (26:85) பல இடங்களில் கூறுகிறது. அவ்வளவு ஏன்? ஜைத்தூன் எனும் ஆலிவ் மரங்களும், பேரிச்ச மரங்களும்கூட பரக்கத் நிறைந்தவைதான் (அல்குர்ஆன் 24:35, புகாரி : 5444). எனவே அவை எங்கெல்லாம் விளைந்துள்ளதோ அவ்விடங்களை பூமியின் மத்தியப் பகுதியாக்கி விடலாமா? பூமி முழுவதும் பரக்கத் செய்யப்பட்டுள்ளது என்றும் அல்குர்ஆன் (41:10) கூறுகிறது. எனவே முழுபூமியையும் மையப்பகுதியாக அறிவித்து விடலாமா? என்ன வேடிக்கை இது?

மக்காவும் அதை சுற்றியுள்ள இடங்களும் பரக்கத் பொறுந்திய இடங்கள் எனவே மக்காவை இப்பூமியின் மத்தியப் பகுதியாக கொள்ள வேண்டும் என்றால், ஜெரூசலம் நகரமும் பரக்கத் பொறுந்திய இடம் என்ற அளவுகோளில் அடங்கும். அதாவது 'மஸ்ஜிதுல் அக்ஸாவின் எல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்' என்று கீழ்காணும் அல்குர்ஆன் வசனம் கூறுகிறது.

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன் அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான். (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் பார்ப்போனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:1)

மக்காவை பூமியின் மையப்பகுதியாக அமைக்க வேண்டும் என்ற கருத்து, யூதர்கள் ஜெரூசலத்தை மையப்படுத்திடும் முயற்சிக்கு எவ்வாறு துணை புரியும் என்பதை முன்னர் படித்தோம். அவ்வாறே மக்கா பரக்கத் பொறுந்திய இடம் என்ற வாதமும், ஜெரூசலத்தை மையப்படுத்திடும் அம்சத்தைத்தான் மறைமுகமாகத் தெரிவிப்பதை அறிகிறோம். எனவே இவை போன்ற யூத சூழ்ச்சிகளிலிருந்து அல்லாஹ்தான் நம்மை பாதுகாக்க வேண்டும். மக்கா நகரம் பரக்கத் பொருந்திய நகரம் என்பதால் அதை பூமியின் மையப்பகுதியாக வைக்க வேண்டும் என்ற கருத்து மிகவும் பிழையானது என்பதையும் அறிய வேண்டுகிறோம்.

தங்கள் மனதில் கற்பனையாக உதிப்பதை எல்லாம் அறிவார்ந்த சிந்தனையாகக் கருதி அதை மார்க்கமாக்கிடத் துடிப்பவர்களின் கருத்துக்களை புறக்கணிப்பதே சாலச் சிறந்தது. இத்தகைய வழிகேடான மனோ இச்சைகளிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை வல்ல அல்லாஹ் பாதுகாப்பானாக என்று பிராத்தித்து முடிக்கிறோம்.

கூறுவீராக! என்னுடைய இறைவன் நிச்சயமாகப் பொய்மையை அழித்து சத்தியத்தை மேலேற்றுகிறான். மறைவானவற்றை எல்லாம் அவன் நன்கறிந்தவன். கூறுவீராக, சத்தியம் வந்து விட்டது. அன்றியும் பொய் எதையும் புதிதாகச் செய்வதுமில்லை இனிச்செய்யப் போவதுமில்லை. அல்குர்ஆன் (34:48,49)

அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம் அதனால், சத்தியம் அசத்தியத்தின் சிரசைச் சிதறடித்து விடுகிறது. பின்னர் அசத்தியம் அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் கற்பனையாக இட்டுக்கட்டி வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான். அல்குர்ஆன் (21:18)

இதுவரை படித்த விஷயங்கள் சுருக்கமாக...

 • புனித மக்கா மாநகரம் இப்பூமியில் மையப் பகுதியாக இருந்தாலும், அல்லது இல்லாவிட்டாலும், புனித மக்காவானது இறைவனால் வாக்களிக்கப்பட்ட புனிதம் மிகுந்த பூமிதான். குறிப்பிட்ட ஒரு ஊரை பூமியின் மத்தியப் பகுதியாக அமைப்பதைக் கொண்டு எவ்வித மேலதிக சிறப்புகளையும் அந்த ஊர் பெறப் போவதில்லை.
 • மக்காவை மத்தியப் பகுதியாகவும், மக்காவுக்கு நேர்எதிர் திசையை (140 Degree West - Antipode of Makkah) தேதிக் கோடாகவும் வைக்க வேண்டும் என்ற கருத்திற்கு குர்ஆன், சுன்னாவில் எத்தகைய ஆதாரங்களுமில்லை.
 • உலக வரைபடத்தில், 180 டிகிரி மேற்கிலிருந்து 140 டிகிரி மேற்குவரையுள்ள சுமார் 40 டிகிரி அளவுக்குள்ள மேற்கத்திய நாடுகளின் பகுதிகளை கிழக்கில் கொண்டு வைக்க வேண்டும், அல்லது அம்மக்கள் ஒரு நாளைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இச்சிந்தனை குஃப்ரு எனும் இறை நிராகரிப்பில் கொண்டு சேர்க்கும்
 • இப்போதுள்ள தேதிக்கோட்டை மாற்றவேண்டும் என்போர், தாங்கள் விரும்பவது போல தேதிக் கோட்டை மாற்றி அமைத்து அதன் அடிப்படையில் ஒரு நாட்காட்டியை தயார் செய்து தர வேண்டும். அதை புதிய சர்வதேசத் தேதிக் கோட்டுப் பகுதியாக (NEW IDL) அறிவித்து உலக நாடுகளை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும்.
 • ஒரு தேதிக்கு மூன்று கிழமைகள் வரலாம் - அது தவறில்லை என்போர், ஹிஜ்ரி நாட்காட்டியை எப்படியேனும் ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கில்தான் இவை போன்ற குதர்க்கமான வாதங்களை பரப்பி விடுகிறார்கள். காலண்டர் விஷயம் என்பது புரிவதற்கு எளிதான விஷயமல்ல என்று ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்திட முயலுகின்றனர்.
 • பூமியின் மையப்பகுதியாக இவர்கள் எந்த இடத்தை வைக்கச் சொல்கிறார்கள்? கஅபாவையா?, ஹரம்ஷரீஃபு பள்ளிவாசலையா?, மீக்காத்துடைய எல்லையையா?, முழு மக்கா நகரையுமா? ஒரேயொரு இடத்தை தெளிவாகச் சொல்ல வேண்டும்.
 • கோளவடிவத்திற்கு (Sphere) நெருக்கமான வடிவத்தில் உள்ள பூமியின் மேற்பரப்பில் இருந்து கொண்டு, ஒரு குறிப்பிட்ட பகுதியை குறிப்பிட்டு, இதுதான் மத்தியப் பகுதி என்று எதையும் வரையறுத்து சொல்லிவிட முடியாது.
 • பூமியிலுள்ள நாடுகளின் அமைப்பிலும், கண்டங்களின் எல்கையிலும் காலத்திற்குக் காலம் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உறுதியாகக் கூற முடியும்.
 • மக்காவை பூமியின் மையப்பகுதியாக ஆக்க இயலாது என்ற மாறுபட்ட கருத்துகளைப் படிப்பதற்கு விமர்சகர்கள் தவறியது ஏன்?
 • எனவே மக்காவை பூமியின் மையப்பகுதியாக அமைக்க வேண்டும் என்ற கருத்து யூதர்கள் ஜெரூசலத்தை மையப்படுத்திடும் முயற்சிக்குத்தான் உதவும். மக்காவின் நேர் எதிர் திசையை புதிய தேதிக்கோடாக அமைத்தால் இஸ்லாமிய நாட்காட்டியை சிதைப்பதற்கே அது வழிவகுக்கும்.
 • கிப்லாவை முன்னோக்குதல் என்ற அம்சத்திலிருந்து, மக்காவை மையப்பகுதியாகவும், மக்காவின் நேர்எதிர் பகுதியை புதிய தேதிக்கோடாகவும் மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இவர்கள் எப்படி எடுத்தார்கள்?
 • மக்காவுக்கு உள்ள சிறப்புகளோ, கிப்லாவுடைய வசனங்களோ, அதை உலகின் மத்தியப் பகுதியாக ஆக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் இல்லை. ஸூரத்துல் பகராவின் 142 முதல் 150 வரையுள்ள கிப்லா சம்பந்தமான இறை வசனங்களை இதற்கு ஆதாரமாக எந்த அறிஞர்களும் கூறவில்லை.
 • கிப்லா பற்றிய குர்ஆன் ஹதீஸ்களை ஆய்வு செய்தவர்கள் யாரும் தங்கள் ஆய்வறிக்கைகள் மக்காவை மையப்பகுதியாக வைக்க வேண்டும் என்றோ, மக்காவின் நேர்எதிர் பகுதியை புதிய தேதிக்கோடாக மாற்றி அமைக்க வேண்டும் என்றோ எங்கும் குறிப்பிடவில்லை.
 • மக்கா நகரம் பரக்கத் பொருந்திய நகரம் என்பதால் அதை பூமியின் மையப்பகுதியாக வைக்க வேண்டும் என்ற கருத்துக்களும் மிகவும் பிழையானது ஆகும்.

அல்லாஹ்வே மிக விளங்கியவன்.

Read 8150 times Last modified on வெள்ளிக்கிழமை, 19 பிப்ரவரி 2016 07:05