செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00

நேரம் வித்தியாசப்படுவதால் ஒரு நாளுக்குரிய தேதி மாறுபடுமா?

Rate this item
(3 votes)

கேள்வி : அவரவருக்கு நோன்பு வரும்போதுதான் நோன்பு நோற்க வேண்டும், அவரவருக்கு பெருநாள் வரும்போதுதான் பெருநாள் கொண்டாட வேண்டும். உதாரணமாக இந்தியாவின் வடக்கு பகுதியிலுள்ள ஜெய்ப்பூரையும், தெற்குப் பகுதியிலுள்ள காயல்பட்டினத்தையும் எடுத்துக் கொள்வோம். ஜெய்ப்பூருக்கும், காயல்பட்டினத்திற்கும் அட்சரேகை மாறுபட்டிருப்பதால் பிறையின் காட்சி நேரத்தில் மிகுந்த நேர வித்தியாசம் வரும், அதனால் நோன்பும், பெருநாளும் மாறுபடத்தான் செய்யும் என்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன?

 

பதில் : உலக முஸ்லிம்கள் 24 மணிநேரங்கள் கொண்ட ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்கிட வேண்டும் என்று நாம் கூறுவதை 'ஒரே நேரத்தில்' நோன்பை நோற்க வேண்டும் என்று நாம் கூறுவதாக மீண்டும் மீண்டும் திரித்துக் கூறி வருகின்றனர்.

ஜெய்ப்பூரில் ஃபஜ்ரு தொழுகை தொழும் அதே மணிநேர நிமிடத்தில் காயல்பட்டினத்தில் நாம் ஃபஜ்ரு தொழுகையைத் தொழுவாமா என்றால் அதற்கு வாய்ப்பில்லை. சில நிமிட நேரங்கள் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும். அதைப்போல ஜெய்ப்பூரில் சூரியன் மறையும் அதே நேரத்தில் காயல்பட்டினத்தில் சூரியன் மறைவது இல்லைதான். ஆனால் மேற்படி இரண்டு ஊர்களுக்குமிடையே நேர வித்தியாசம் இருக்குமே அல்லாமல் நாள் வித்தியாசம் என்பது இல்லை. இதற்கு ஜெய்ப்பூர் என்ன தமிழ்நாட்டிற்குள்ளேயே இந்தகைய நிமிட நேர வித்தியாசங்கள் வரத்தான் செய்யும். ஆனால் தேதி மாறுபடுவதில்லை.

அதாவது ஜெய்ப்பூருக்கும், காயல்பட்டினத்திற்கும் வெள்ளிக்கிழமை என்பது ஒரு தேதிக்குள்தான் வருகிறது. ஜெய்ப்பூருக்கும், காயல்பட்டினத்திற்கும் தனித்தனியாக இரண்டு தேதிகளில் வெள்ளிக்கிழமை வருவதில்லை. வெள்ளிக்கிழமை என்ற 24 மணிநேரங்கள் கொண்ட அந்த ஒருநாளுக்குள்ளேயே ஜெய்ப்பூர், காயல்பட்டினம் முஸ்லிம்கள் உட்பட உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை தொழுது விடுகிறோம். இந்நிலையில் 'அட்சரேகை (Latitude)', 'பிறையின் காட்சி நேர வித்தியாசம்' என்றெல்லாம் எழுதி கஷ்டமான கேள்வியை கேட்டு விட்டதாக காண்பிப்பதில் யாருக்கும் எந்தப் பயனுமில்லை. ஒரு தீர்க்கரேகையில் (Longitude) அல்லது ஒருநாட்டில் உள்ள இரண்டு ஊர்கள் வடக்கு, தெற்கமாக அமைந்திருந்தால் அவற்றின் அட்சரேகையின் மதிப்பளவீடு வித்தியாசமாக இருப்பது இயற்கையே. அவரவருக்கு நோன்பு வரும்போதுதான் நோன்பு நோற்க வேண்டும் என்று புரிந்துகொண்டு காயல்பட்டினத்தில் ஒருநாளிலும், ஜெய்ப்பூரில் அதற்கு அடுத்த நாளிலும் நோன்பைத் துவங்கலாம் என்ற போதிப்பது ஏன்? என்று கேட்கிறோம். அவரவருக்கு பெருநாள் வரும்போதுதான் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று கூறிக்கொண்டு மேற்படி இரு ஊர்களிலும் வெவ்வேறு நாட்களில் பெருநாள் கொண்டாடுவது ஏன்? என்றுதான் கேட்கிறோம்.

பிறையின் காட்சி நேரத்தில் நேர வித்தியாசம் வரும் என்பதால், மேற்படி இரு ஊர்களுக்கும் வெள்ளிக்கிழமை என்ற ஒருநாளுக்குள் தெரியும் பிறை வெவ்வேறு தேதிகளைக் காட்டுமா? சற்று சிந்திப்பீர். நேர வித்தியாசம் என்பதையும், நாள் வித்தியாசம் என்பதையும் ஏன் இவர்களால் இன்னும் புரிந்து கொள்ள இயலவில்லை? தமிழ்நாட்டிற்குள்ளேயே வக்த்துகளில் இத்தகைய நிமிட நேர வித்தியாசங்கள் வருத்தானே செய்கிறது. அப்படி வருவதால் இவர்களின் இயக்கத்தவர்களும், இவர்களை இயக்குபவர்களும் தமிழ்நாட்டிற்குள் இரண்டு வெவ்வேறு நாட்களில் வித்தியாசப்பட்டு பெருநாள் கொண்டாடட்டும். செய்வார்களா?

அவரவர்களுக்கு நோன்பும், பெருநாளும் என்பதுதான் மார்க்கம் எனப் புரிந்து கொண்டதால்தான் பிறைகள் விஷயத்;தில் மாநில அளவு, ஒரு நாட்டளவு மற்றும் சர்வதேசம் என்று பிறை பார்க்கும் எல்லைகளை தாங்களாகவே நிர்ணயித்துக் கொண்டு வேறுபட்டுள்ளனர்.

இன்னும் சவுதியில் தெரியும் பிறையானது, பூமியை ஒரு ரவுண்டு சுற்றி இந்தியாவுக்குள் வந்து, நம் கண்களுக்குத் தெரிய வேண்டுமானால் இருபத்து ஒன்றரை (21.30) மணிநேரம் ஆகும் என்பதுதான் இவர்களது தலைவரின் பிறை நிலைப்பாடு. ஆக பிறை விஷயத்தில் சவுதி அரேபியாவைவிட இந்திய நாடு, ஒரு நாள் பின்தங்கி உள்ளது என்பதே இவர்களின் பிறை நிலைப்பாடும், நம்பிக்கையும் ஆகும். அப்படியானால் ஹிஜ்ரி 1436-இன் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையை சவுதி அரேபியா கடந்த 2015 செப்டம்பர் 24-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தொழுதார்கள். இவர்களது இயக்கமும் அதே செப்டம்பர் 24-ஆம் தேதி வியாழக்கிழமை பெருநாள் தொழுகையை தொழுதது ஏன்? சவுதிக்கும் இவர்களுக்கும் ஒரே நாளில் கடந்த ஹஜ்ஜூப் பெருநாள் அமைந்தது எப்படி? தவறிழைத்தது யார்? நம்மை விமர்சிக்கும் முன்னர் இதையாவது இவர்கள் சிந்திக்கட்டும்.

Read 1572 times Last modified on செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 06:28