திங்கட்கிழமை, 13 ஜூலை 2015 00:00

ஹிஜ்ரி 1436 - ரமழான் நோன்பு அறிவிப்பு

Rate this item
(1 Vote)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...

ஹிஜ்ரி 1436 - ரமழான் நோன்பு அறிவிப்பு

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஷஅபான் உர்ஜூஃனில் கதீம் : பிறை 28 - திங்கட்கிழமை (15/06/2015)

ஷஅபான் முடிவு : பிறை 29 - செவ்வாய்க் கிழமை (16/06/2015)

ரமழான் துவக்கம் : பிறை 1 - புதன்கிழமை (17/06/2015)

இவ்வருடத்தின் ஷஅபான் மாதம் கடந்த மே-19- ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று துவங்கியது. புறக்கண்களால் பார்க்க இயலும் ஷஅபான் மாதப்பிறைகளின் இறுதிவடிவமான உர்ஜூஃனில் கதிம் தினம் ஜூன்-15-ஆம் தேதி (15/06/2015) திங்கள் கிழமை.
ஜூன் -16-ஆம் தேதி 16/06/2015 செவ்வாய்க் கிழமை அன்று ஷஅபான் 29 வது நாள் அமாவாசை என்னும் புவி மையச் சங்கம தினமாகும். அன்று பொதுவாகப் புறக்கண்களால் பார்க்க முடியாதவாறு பிறை மறைக்கப்படும் நாளாகும். ஷஅபான் மாதம் 29-நாட்களில் செவ்வாய்க் கிழமை (16/06/2015) அன்று முடிவடைகிறது.

எனவே, எதிர் வரும் ஜூன்-17-ஆம் தேதி (17/06/2015) புதன் கிழமை அன்று ரமழான் முதல் தினமாகும். அன்று முஸ்லிம்கள் அனைவரும் ரமழான் முதல் நோன்பை நோற்றவர்களாக இருக்கவேண்டும்.

பிறைகள் குறித்து வருடம் முழுவதும் அலட்சியம் செய்துவிட்டு வருடத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் மட்டும் பிறை அறிவிப்பு செய்பவர்களையும், அரபுப் புலமை பேசி வீண்விவாதம் செய்பவர்களையும் புறம்தள்ளிவிட்டு எதிர் வரும் ஜூன்-17-ஆம் தேதி (17/06/2015) புதன் கிழமை அன்று ரமழான் முதல் நோன்பைத் துவங்குமாறு முஸ்லிம்கள் அனைவரையும் ஹிஜ்ரி கமிட்டியின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம். பிறைகள் பற்றிய ஞானம் இல்லாதவர்களின் அறிவிப்புகளை அலட்சியம் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

மக்களே! பல்வேறு பிரிவினராய் பிரிந்துள்ள முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ் வழங்கியுள்ள ஹிஜ்ரி காலண்டர் விஷயத்திலாவது ஒரே கருத்திற்கு வந்து, ஓரணியாக நிற்கவேண்டும் என்பதே நம் அவா! பிறையைப் புறக்கண்களால் பார்த்த பின்னரே புதிய மாதத்தைத் துவங்கவேண்டும் என்பதற்கு மார்க்க ஆதாரம் எதுவுமில்லை. இட்டுக் கட்டப்பட்ட, பலவீனமான செய்திகள் ஒருபோதும் மார்க்க ஆதாரமாகாது.

மேலும், இஸ்லாமிய மார்க்கத்தை எதிர்ப்போரின் கோரச் செயகளாலேயே பிறை விஷயத்தில் நம் முஸ்லிம் உம்மத் பிரிந்து கிடக்கிறது. இவற்றைத் தகுந்த ஆதாரங்களுடன் நாம் நிரூபித்து வருகிறோம்; அல்ஹம்துலில்லாஹ். நபி(ஸல்) அவர்களின் மீது மிகுந்த `முஹப்பத் - அன்பு' வைக்க வேண்டும் என்பது சுன்னத் வல்ஜமாஅத்தினர் வலியுறுத்தும் பிரச்சாரம். நபி(ஸல்) அவர்களின் மீதுள்ள 'முஹப்பத்தின்' காரணமாக பிறைகள் குறித்து ஹிஜ்ரி கமிட்டி இது வரை கூறியுள்ள உண்மைகளை விருப்பு வெறுப்பின்றி நன்கு ஆய்ந்து படிக்க வேண்டுகிறோம். தங்களின் கொள்கைவாதிகளுக்கு மேற்படி உண்மைகளை உரக்கச் சொல்லி, சத்தியத்திற்கே சான்று பகருமாறு சுன்னத் வல்ஜமாத்தினரை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

குர்ஆன் சுன்னா மட்டுமே மார்க்கம் என்பதுதான் தவ்ஹீதுவாதிகளின் பிரச்சாரம். பிறைகள் விஷயமாக நாம் இது வரை கூறியுள்ள சத்தியக் கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து படிக்குமாறு அவர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். குரைப் சம்பவம், வாகனக் கூட்டம் அறிவிப்பு போன்ற பலவீனமான செய்திகளை ஆதாரமாகவும், சரியானதாகவும் நம்பி முன்னர் மக்களிடம் பிரச்சாரமும் செய்திருக்கலாம். ஆனால், உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்வதில் தயக்கம் வேண்டாம். தவறுகளை திருத்திக் கொள்பவர்களே உத்தமர்கள்; உண்மையாளர்கள் என்றே நம் மார்க்கம் போதிக்கிறது.

எனவே, சத்தியத்தைத் துணிந்து சொல்வது ஒவ்வொறு முஸ்லிமின் பொறுப்பாகும் என்பதை தவ்ஹீதுவாதிகளுக்கு நினைவூட்டுகிறோம். முஸ்லிம்களின் முக்கியக் கடமைகளுள் ஒன்றான தொழுகை விஷயத்தை நிலை நாட்டிட களப்பணி செய்பவர்களே தப்லீக் ஜமாஅத்தினர். தங்களின் அழைப்புப் பணிகளுக்கு மத்தியில் மனிதர்களுக்கு நாட்காட்டியாகவும், ஹஜ்ஜை அறிவிப்பதாகவும் (2:189) அல்லாஹ் கூறுகிற இந்தப்பிறை விஷயங்களை அக்கரையோடு கவனத்தில் எடுக்க வேண்டும் என அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். ஓரே இறை, ஒரே மறை, ஒரே பிறை என முஸ்லிம் உம்மத்தை ஒரு குடையின் கீழ் அனைவரையும் ஒன்று படுத்திட வேண்டும். அதற்குள்ள ஒரே வாய்ப்பான ஹிஜ்ரி கமிட்டியின் பிறைத் தீர்வுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று இத்தருணத்தில் தப்லீக்வாதிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

ஸலஃபுகளைப் பின்பற்றுவோர் என தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளும் சகோதரர்கள் அனைவரும் நபித்தோழர்களையே சிறந்த ஸலஃபுகளாக ஏற்றுக் கொள்வர். குரைபு சம்பவம் போன்ற செய்திகளை முன்வைத்து ஸஹாபாக்கள் தங்களுக்குள் முரண்பட்டு, வெவ்வேறு நாட்களில் ரமழான் நோன்பை நோற்றுள்ளதாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இப்பிறை விஷயத்தில் பல்வேறு பலவீனமான செய்திகளையும் கண்ணிய மிக்க அந்த ஸஹாபாக்களின் பெயரைப் பயன்படுத்தியே புனையப்பட்டுள்ளன. குறிப்பாக நம் உயிரிலும் மேலான இறைத்தூதர்(ஸல்), ஹராமான தினத்தில் நோன்பை நோற்றிருந்தார்கள் என வாகனக் கூட்டம் அறிவிப்பின் வாயிலாக இட்டுக் கட்டி புனையப்பட்டுள்ளது. இவ்வாறு, நபி(ஸல்) அவர்களின் கண்ணியத்திற்கும், நபித்துவத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மக்ரிபு வேளையில் மறையும் பிறையை புறக்கண்ணல் பார்த்து விட்டு அடுத்த நாள்தான் ரமழான் முதல் நோன்பைத் துவங்க வேண்டும் என்ற சித்தாந்தத்திற்கு மேற்படி பலவீனமான சம்பவங்களை வைத்தே முட்டுக் கொடுக்கப்படுகின்றன. மார்க்கத்தின் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள இத்தகைய மோசமான நிலையை ஸலஃபுகள் எனத் தங்களை அடயாளப்படுத்துவோர் நிச்சயமாக மக்களுக்கு எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.

`உர்ஜூஃனில் கதீம்' `கும்ம' உடைய நாள் பற்றிய சிறுவிளக்கம்:

உலர்ந்த வளைந்த பழைய பேரீத்தப்பாளையைப் போல் திரும்பி வரும் வரை சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தி இருக்கிறோம் (36:39) என அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்டுள்ள படித்தரங்களை, வடிவ நிலைகளைக் கொண்ட பிறைகளை நாம் தொடர்ந்து அவதானித்து வரவேண்டும். அவ்வாறு வரும் வேளையில், ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் என்றால் இறைவசனம் (36:39) கூறும் `உர்ஜூஃனில் கதீம்' - உலர்ந்த வளைந்த பழைய பேரீத்தபாளை என்ற பிறையின் இறுதி வடிவம் 29-ஆம் நாளன்று ஃபஜ்ரு வேளையில் கிழக்குத் திசையில் காட்சியளிக்கும். அது போல ஒரு மாதத்திற்கு 29 நாட்கள் எனில், அந்தமாதத்தின் 28-ஆம் நாள் அன்று `உர்ஜூஃனில் கதீம்' ஃபஜ்ரு வேளையில் கிழக்குத் திசையில் காட்சியளிக்கும்.

`உர்ஜூனில் கதீம்' என்ற புறக் கண்ணால் பார்க்க இயலும் பிறையின் இறுதிப் படித்தரத்திற்கு அடுத்த நாள் புவிமைய சங்கம (Geocentric Conjunction Day) தினமாகும். சங்கமம் என்பது ஒவ்வொரு சந்திரமாதத்தின் இறுதி நாளிலும் சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் ஒரே தளத்தில் (ஒரே நேர் கோட்டில்) தவறாமல் சங்கமிக்கும் தினமாகும். அந்த புவிமையச் சங்கம தினத்தில் பிறை பொதுவாக பார்க்க முடியாதவாறு புறக்கண்களுக்கு மறைக்கப் பட்டிருக்கும். இதற்குத்தான் `கும்மிய', `உஃமிய', `ககுபி(F)ய', `க(G)ம்மிய', `ஹஃபிய்ய', `குபிய' அல்லது `கும்ம' உடைய நாள் என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். மேற்சொன்ன கும்ம உடைய நாளுக்கு அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாள். அன்று சூரியனைத் தொடர்ந்து சந்திரனும் கிழக்குத் திசையில் உதிக்கும். அந்த நாள்தான் புதியமாதத்தின் முதல் நாள் என்பதற்கு சாட்சியாக, மக்ரிபு வேளையில், உலகின் சில பகுதிகளில், மேற்கு திசையில், சூரியன் மறைந்த பின்னர், பிறை மறையும்போது காட்சியளிக்கும். இதுவே, முதல் நாளுடைய சந்திரனின் படித்தரமாகும். முதல் நாளுக்குரிய அந்தப் பிறை, அந்த முதல் நாளின் பாதிப் பகுதியை (சுமாராக 12 மணி நேரங்களைக்) கடந்துவிட்டதன் அத்தாட்சியும் கணக்கும் ஆகும். இதுதான் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் சந்திரனில் ஏற்படும் படித் தரங்களான பிறைகளை மவாகீத்து லின்னாஸ் - மக்களுக்குத் தேதிகளை காட்டும் (Calendar For Mankind) என்ற ஒரு சொல்லை வைத்து இந்த உம்மத்திற்கு வலியுறுத்தியதாகும். மேற்கூறிய விபரங்களை நாம் குர்ஆனிலும், பழங்கால குர்ஆன் விரிவுரைகளிலும் காணலாம்.

உலகம் முழுவதும் ஒரே இஸ்லாமிய நாட்காட்டியை நிறுவிட குர்ஆன் சுன்னா ஒளியில் தெளிவான வழிகாட்டலை ஹிஜ்ரி கமிட்டி அளித்து வருகிறது. இதற்காக நாம் யாரிடமும் கூலிவாங்கவில்லை; வாங்கப்போவதும் இல்லை. தலைவர், செயலாளர், பொருளாளர் என்று பதவிகளைப் பெற்று, தனி இயக்கம் நடத்தி ஜமாஅத்துகளைப் பிரிக்கவில்லை. அதனை விட்டும் நம்மை வல்லஅல்லாஹ் காப்பாற்றியே வந்துள்ளான். அல்லாஹ்வுடைய நாட்காட்டியை இவ்வுலகில் நிலைபெறச் செய்யவும், இந்த முஸ்லிம் உம்மத் சரியான தினத்தில் அமல்களை அமைத்துக் கொள்ளவுமே நாம் பாடுபடுகிறோம். - அல்ஹம்து லில்லாஹ்.

குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டுதலின்படி துல்லியமான விஞ்ஞானகணக்கீட்டு முறையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹிஜ்ரி கமிட்டியின் இஸ்லாமிய ஹிஜ்ரிகாலண்டரை முஸ்லிம் சமுதாயத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு!. இதில் ஒத்த கருத்திற்கு வருமாறுதான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். நன்மையான காரியத்தை துவக்கி முன்னெடுத்துச் செல்வோருக்கும், அதில் இணைந்து உழைப்போருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

இவண்:
ஹிஜ்ரி கமிட்டி, 160/101, வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி - 627103, தமிழ்நாடு.
Hijri Committee, 160/101, North Main Road,Eruvadi - 627103,Tirunelveli District.,Tamilnadu, India.
Mobile Contacts: 99626 22000, 99626 33000, 99624 77000, 95007 94544, 99943 44292.
Websites:- www .mooncalendar .in
Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Google Group: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Read 513 times Last modified on திங்கட்கிழமை, 13 ஜூலை 2015 20:57