திங்கட்கிழமை, 13 ஜூலை 2015 00:00

பிரபஞ்ச இறை நியதிகள் பின்பற்றப்படுமா?

Rate this item
(0 votes)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...

பிரபஞ்ச இறை நியதிகள் பின்பற்றப்படுமா?

இப்பிரபஞ்சமும், பிரபஞ்சத்தில் காணப்படும் புலப்படக்கூடியவை, புலப்படாதவை, உயிருள்ளவை, உயிரற்றவை அனைத்தும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவையே. படைப்பாளனான அல்லாஹ் அனைத்தினதும் இருப்புக்கும், இயக்கத்திற்கும், அழிவிற்கும் நியதிகளை ஏற்பாடு செய்துள்ளான். அந்த மாறாத நியதிகள் பிரபஞ்ச ஒழுங்கை சீராக வைத்திருக்கின்றன. இந்தப் பரபஞ்சத்தை இயக்கும் நியதிகளை, படைக்கும் ஆற்றலை மனிதன் ஒருபோதும் பெற்றிருக்கவில்லை.

மாறாக உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து இந்த நியதிகளின் சீரான தொழிற்பாடுகளையும், பயன்பாடுகளையும் இயற்கையிலிருந்து மனிதன் கண்டறிந்து கொண்டு வருகின்றான். பிரபஞ்ச நியதிகள் பலவற்றை மனிதன் ஆராய்ந்து அறிவதற்கு முன்பே அல்குர்ஆன் அவற்றை எடுத்துக் கூறியிருக்கின்றது. அதனை ஏற்று பின்பற்றுவதொன்றே அவனது கடமையாகும்.

1. ``வானம் பூமியில் இருக்கும் அனைத்து (படைப்புக்களு)ம் விரும்பியோ, வெறுத்தோ அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு விட்டன.'' (3:83)

அல்லாஹ்வின் சிருஷ்டியில் மனிதன் சிரேஷ்டமானவன். பூமியில் மனித வாழ்வு சீர்பெறுவதற்கு அல்லாஹ் பல ஏற்பாடுகளை மனிதனை சிருஷ்டிக்கும் முன்பே ஏற்பாடு செய்துவிட்டான். அதில் ஒன்றுதான் காலத்தை கணக்கிடும் ஏற்பாடாகும். அதனை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

2. ``நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஒரு வருடத்திற்கு) பன்னிரெண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வால் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும்.'' (9:36)

வருடத்திற்கு 12 மாதங்கள் என்ற இறை நியதியைக் கூறிய அல்லாஹ், மாதங்களில் நாட்களின் எண்ணிக்கையை அறிவதற்கு சந்திரனில் பல படித்தரங்களை ஏற்படுத்தி இருப்பதாகவும் அல்லாஹ் கூறியுள்ளான்.

நாயகத் தோழர்கள் ரசூல்(ஸல்) அவர்களிடம், சந்திரனின் தோற்றம் ஒவ்வொரு நாளும் வேறுபடுவதைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.

3. ``(நபியே! மாதந்தோறும் வளர்ந்தும், தேய்ந்தும் பிறக்கும்) பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். அதற்கு, நீர் கூறும்: அவை மனிதர்களுக்கு (ஒவ்வொரு மாதத்தையும்) காலங்களையும், ஹஜ்ஜையும் அறிவிக்கக்கூடியவை.'' (2:189)

இவ்வசனத்தில் `மவாகீத்து லின்னாஸ்' மனித குலக் காலண்டர் என அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். காலண்டர் என்பது குறைந்தது ஒரு வருடத்திற்குத் தயாரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாதத்திற்குமான நாட்களின் எண்ணிக்கைக் குறிக்கப்படும். அல்லாஹ் குறிப்பிடும் இக்காலண்டரின் பிறையின் வடிவங்களே நாட்களைத் தீர்மானிக்கின்றன. வேறு யாரும் எதுவும் நாட்களை தீர்மானிக்கமுடியாது. பிறையின் ஒவ்வொரு வடிவமும் (படித்தரங்களும்) ஒவ்வொரு நாளுக்குமான அடிப்படையாகவும், ஆதாரமாகவும் ஆக்கப்பட்டுள்ளன. நாளை மிகச் சரியாகச் சுட்டுவது பிறையின் வடிவமே ஆகும். இதனை மேலும் உறுதிபடுத்த அல்லாஹ் அல்குர்ஆனில் `உர்ஜூனுல் கதீம்' பிறையின் இறுதி வடிவத்தை இவ்வாறு கூறி வைத்துள்ளான்.

4. ``(உலர்ந்து வளைந்த) பழைய பேரீட்சம் பாளையைப் போல் (பிறையாக) ஆகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல படித்தரங்களை ஏற்படுத்தி இருக்கின்றோம்.'' (36:39)

இந்த இறுதி வடிவம் அடுத்த நாள் மறைக்கப்படும். அதனை ஹதீஸ் `கும்ம' நாள் எனக் குறிப்பிடுகின்றது. அது அமாவாசையாகும்.

சந்திரனின் ஒளி மறைக்கப்படும் இந்த நாள் சந்திர மாதத்தின் இறுதி நாளாகும். மாதாமாதம் தோன்றும் இந்த நாளையும் சந்திர மாத நாட்களில் சேர்த்து மாதத்தைப் பூர்த்தி செய்யும்படி ரசூல்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

சூரா யூனுஸின் 5 ஆம் வசனம் இப்படிக் கூறுகின்றது.

5. ``அவனே, சூரியனை ஒளிவாகவும் (பிரகாசமாகவும்) சந்திரனை (அழகிய) வெளிச்சம் தரக்கூடியதாகவும் ஆக்கி வருடங்களின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு (சந்திரனாகிய) அதற்கு (மாறிமாறி வரக்கூடிய) படித்தரங்களையும் ஏற்பாடு செய்தான். மெய்யான (தக்க) காரணமின்றி இவற்றை அல்லாஹ் படைக்கவில்லை. அறியக்கூடிய மக்களுக்காக தன் ஆற்றலுக்குரிய சான்றுகளை இவ்வாறு விவரிக்கின்றான்.'' (10:05)

இந்த இறைவசனம் நாட்களை, மாதங்களை பல வருடங்களுக்குக் கணக்கிட்டுக் கொள்ளமுடியும் என்பதை உறுதி செய்கின்றது. அத்துடன் தொடர்ந்து வரும் இறை வசனங்கள் யார், யாருக்கு இவ்வத்தாட்சிகளை தெளிவுபடுத்துவதாகவும், எங்கெங்கு அத்தாட்சிகள் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றன. ஆயினும், இப்பிரபஞ்ச இறைநியதிகளை நாம் பொருட்படுத்தாமையாலும் அசட்டை செய்வதாலும் எங்களுக்கான காலண்டரை முன்கூட்டியே தயாரிக்க முடியாத அறியாமையில் உழல்கின்றோம். மேலும், அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

6. ``இரவையும் பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக நாம் ஆக்கினோம். பின்னர், இரவின் அத்தாட்சியை மங்கிடச் செய்தோம். உங்கள் இறைவனின் அருட்கொடையை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும், கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம். மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரிக்கின்றோம்.'' (17:12)

7. ``அவனே பொழுது விடியச் செய்பவன். (நீங்கள் களைப்பாறி) அமைதி பெற அவனே இரவையும், காலக்கணக்கினை அறிவதற்காக சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான். இவை யாவும் வல்லமையில் மிகைத்தோனும் எல்லாம் அறிந்தோனுமாகிய (அல்லாஹ்வின்) ஏற்பாடாகும்.'' (6:96)

முன்கூட்டியே பிறை காலண்டரை தயாரிக்க முடியாது என்று சொல்பவர்கள் அல்லாஹ்வின் மேற்கூறிய பிரபஞ்ச நியதிகளை சிந்தித்துப் பார்க்கமாட்டார்களா?

8. சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (55:5)
ரசூல்(ஸல்) அறிவிக்கின்றார்கள்:

``மாதம் என்பது சில சமயங்களில் 29 ஆகவும், சில சமயங்களில் 30 ஆகவும் இருக்கும் என தங்கள் விரல்களைக் கொண்டு காட்டிவிட்டு, நாம் உம்மி சமுதாயமாக இருப்பதினால் நாம் கணக்கிட்டு எழுதும் முறையை அறியாமல் இருக்கின்றோம்.'' புகாரீ 1913, 1780

புறக்கண்ணால் பிறைகளைத் தோராயமாகக் கணக்கிடும் முறைதான் விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலத்தில் நடைமுறையில் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த அந்த முலிம் உம்மத் எழுத்தறிவும் அடிப்படைக் கணக்கறிவும் கொண்ட சமுதாயமாகத் திகழ்ந்தனர் என்றாலும் மேற்கூறிய ஹதீஸில் ரசூல்(ஸல்) அவர்கள் குறிப்பிடும் சூரியன் மற்றும் சந்திரனின் சுழற்சிகளை (முற்கூட்டியே) கணக்கீடு செய்து நாட்காட்டி தயாரிக்கும் வானயிற் பௌதீகம் விஞ்ஞான அறிவு பெற்றிராத `உம்மீ' சமுதாயமாக இருந்தனர். பிறைகளைக் கணக்கிடுவதற்கு புறக்கண்ணால் பார்ப்பது என்ற ஒரு நிலை மட்டும்தான் அந்த உம்மீ சமுதாய மக்களிடம் இருந்தது. எனவே, மாத்தின் அனைத்துப பிறைகளையும் புறக்கண்ணால் பார்த்தே அவர்கள் கணக்கிட்டுக் கொண்டனர்.

ஆனால், இன்று பிறையைப் பார்த்துத்தான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என வெற்றுக்கூச்சல் போடுபவர்கள் பிறையின் படித்தரங்களை அறிந்து கணக்கிட்டு வருகிறார்களா? என்பது கேள்விக்குறியே. ஏனெனில் இந்த மக்கள் வழிகாட்டிகள்தான் தாங்கள் கருதும் ஒரு இருபத்தி ஒன்பதாம் நாள் மாலையில் மக்களை மேற்கிலே அடுத்த மாதம் முதல் பிறையைத் தேடச் சொல்கிறார்கள். அடுத்த மாத முதல் பிறை தெரியவில்லை என்ற செய்தி வந்ததும் மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்கின்றார்கள். விஞ்ஞான ரீதியாக மறைக்கப்படும் பிறை உண்மையில் முதல் பிறை அல்ல. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி சந்திரனின் ஒளி பூமியில் விழாது மறைக்கப்படும். சந்திர மாத இறுதி நாளாகும்.

தேய்பிறையின் இறுதிப் படித்தரங்கள் மேற்கு திசையில் தோன்றாது என்கின்ற எளிய உண்மையைக் கூட தெளிவான விஞ்ஞானி அறிவிருக்கும் இக்காலத்திலும் இவர்கள் அறியாத உம்மீகளாக இருக்கின்றனர் என்பது வெட்கப்பட வேண்டிய நிலையே ஆகும்.

தற்போதைய விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக முதல் பிறை எந்தப் பகுதியில், எப்போது தோன்றும் என்பதை துல்லியமாகக் கணக்கீடு செய்ய முடிந்த காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிறையைப் புறக்கண்ணால் தேடி தோராயமாக அறிந்து கொள்வதை விட துல்லியமான கணக்கீட்டின் படி ஒப்பிட்டுப் பார்த்து பின்பற்றுவதை நமது மார்க்கம் ஒருபோதும் தடுக்கவில்லை. மாறாக கணக்கிடுவதை வலியுறுத்தியும் ஆர்வமூட்டியும் இருப்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

அக்கால பாலைவன ஒட்டகப் பயணக்குழுக்களும் கடற்பிரயாணிகளும் வளர்பிறைகளையும் தேய் பிறைகளையும் தொடர்ந்து அவதானித்து அதன் தோற்றத்தை வைத்தே நாளை சரியாக அறிந்து வந்தனர். அந்த அளவுக்கு எளிதான நாட்காட்டியே ஹிஜ்ரி நாட்காட்டியாகும். இன்று உண்மையான சந்திரக் காலண்டர் முஸ்லிம்களிடம் அந்நியமாகி வருவது பெரும் வேதனைக்குரியதே. இதனால் இபாதத்துகளுக்கான உரிய தினங்கள் மாற்றப்படுவது மாபெரும் இழப்பும் ஆபத்துமாகும். அல்லாஹ்வின் பிரபஞ்ச நியதிகள் புறக்கணிக்கப்படுவதே இதற்கான காரணமாகும்.

அல்லாஹ் நிர்ணயித்த நாட்களை முன்பின் ஆக்குவதை நிராகரிப்பை அதிகப்படுத்தும் செயல் என்று அல்குர்ஆன் கண்டிக்கிறது. (9:37) நாட்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. மனிதர்கள் அதனை தங்கள் இஷ்டப்படி மாற்றுவது உதாணமாக 29 நாட்களுக்குள்ள மாதத்தை 30 நாட்கள் கொண்ட மாதமாக மாற்றுவதும், அல்லது 30 நாட்கள் உடைய மாதத்தை 29 நாட்கள் கொண்ட மாதம் என மாற்றுவது `குஃப்ரை' அதிகரிக்கும் என்ற இறைநியதியை கருத்திற்கொண்டு வாழ்வது எமது கடமை. நிலையான சந்திர நாட்காட்டி அமுலில் வருவதே சகல தவறுகளுக்கும் குழப்பங்களுக்கும் தீர்வாக அமையும்.

இஸ்லாமிய நாட்காட்டியை ஏற்படுத்த முடியுமா? முடியாதா?

உலகில் கிருதவர்களும் யூதர்களும் தங்களுக்காக ஏற்படுத்திக் கொண்டுள்ள நாட்காட்டியைத்தான் நாம் பின்பற்றி ஆகவேண்டுமா? இஸ்லாம் ஒரு மாதத்தை 29 அல்லது 30 நாள்கள் என வரையறுத்துள்ளது. வருடத்திற்கு 12 மாதங்கள்தாம் என 9:36, 37 ஆம் வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான். கிருதவ மாதம் 28,29,30,31 என நான்கு தேதிகளில் முடிகிறது. இதை முஸ்லிம்கள் பின்பற்ற முடியுமா? பின்பற்றினால் முஸ்லிம்களின் நிலை என்ன? இலாம் பரிபூரண வாழ்க்கை நெறி அல்லாஹ் அருளிய இறுதி வேதம். இலாத்தில் நிரந்தர நாட்காட்டியைத் தயாரிக்க வழியே இல்லையா? யூத, கிருதவ சதிகள் எம்மை நாட்காட்டி இல்லாத சமுதாயமாக மாற்றி வைத்துள்ளன. நாங்கள் விழிப்படைவது எப்போது?

அன்பானவர்களே! இந்திய ஹிஜ்ரி கமிட்டி பல வருட ஆய்வின் பின் நேர்த்தியான சந்திர நாட்டியை வெளியிட்டு வைத்துள்ளது. அதில் பல வருடங்களாக எந்தப் பிழையும் ஏற்படவில்லை. அந்நாட்காட்டியை உண்மை என உணர்ந்த முஸ்லிம்கள் தேடி பின்பற்றி வருகிறார்கள். அது அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் `மவாகீத்து லின்னாஸ்' மனித குல நாட்காட்டியாகும் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

இவண்:
ஹிஜ்ரி கமிட்டி, 160/101, வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி - 627103, தமிழ்நாடு.
Hijri Committee, 160/101, North Main Road,Eruvadi - 627103,Tirunelveli District.,Tamilnadu, India.
Mobile Contacts: 99626 22000, 99626 33000, 99624 77000, 95007 94544, 99943 44292.
Websites:- www .mooncalendar .in
Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Google Group: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Read 653 times Last modified on திங்கட்கிழமை, 13 ஜூலை 2015 19:33