திங்கட்கிழமை, 13 ஜூலை 2015 00:00

ஒரு நாளின் துவக்கம் ஃபஜ்ருதான்! (அதிகாலை)

Rate this item
(1 Vote)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...

ஒரு நாளின் துவக்கம் ஃபஜ்ருதான்! (அதிகாலை)

இரவு பகலை முந்தாது: சூரியன் சந்திரனை அடைவதற்கு பொருத்தமானதல்ல. இன்னும் இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் வட்டவரையில் நீந்துகின்றன. அல்குர்ஆன் 36:40.

ஒரு நாளில் இரவும், பகலும் உள்ளன. அந்த இரவு பகலை ஒருபோதும் முந்தாது என்றால் பகல்தான் முந்தியது, இரவு பிந்தியதே எனத் தெளிவாக விளங்க முடியும்.

நாளின் நடுத்தொழுகை அஸர்: தொழுகைகளையும் நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். அல்குர்ஆன் 2:238

நடுத்தொழுகை என்பது அஸ்ருத் தொழுகை (புகாரீ 4533, முஸ்லிம் 1032).

நம்மை நடுத் தொழுகையைத் தொழவிடாமல் சூரியன் மறையும் வரை எதிரிகள் தாமதப்படுத்திவிட்டார்கள். அல்லாஹ் அவர்களின் புதை குழிகளையும் வீடுகளையும் அல்லது அவர்களின் வயிறுகளையும் நெருப்பால் நிரப்பு வானாக என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். புகாரீ - 4533.

சூரியன் மறையும் வரை தாமதமாகியது என்றால் அந்தத் தொழுகை அஸ்ருத் தொழுகைதான் என்பது தெளிவு. ஒரு நாளைக்கு ஐவேளை கடமையான தொழுகையில், முதல் தொழுகை ஃபஜ்ராக இருந்தால் மட்டுமே அஸ்ருத் தொழுகை நடுத்தொழுகையாக இருக்க முடியும். ஆக முதல் தொழுகை ஃபஜ்ரு என்றால் நிச்சயமாக ஒரு நாளை மக்ரிபிலிருந்து துவங்க இயலாது. பஜ்ருதான் ஒரு நாளின் துவக்கம் என்பது மிகத் தெளிவு.

சூரியனைச் சந்திரன் பின்தொடர்கிறது: சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக, அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக. பகல் வெளியாகும்போது அதன் மீதும் சத்தியமாக. மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக... (அல்குர்ஆன் 91:1-4) வெளியாகிவிட்ட பகலைத்தான் பின்தொடர்ந்து வரும் இரவு மூடிக்கொள்கிறது என்பதை அறிக.

நபி(ஸல்) ஃபஜ்ர் தொழுதுவிட்டு இஃதிகாஃபிற்குள்? இறைத்தூதர்(ஸல்) ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன். ஸுபுஹுத் தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்துவிடுவார்கள். (புகாரீ: 2033)

ஒரு நாளின் ஆரம்பம் மக்ரிபு என்றால் மக்ரிபு தொழுதுவிட்டுத்தானே நபி(ஸல்) இஃதிகாஃபுக்குள் நுழைந்திருக்க வேண்டும்? மாறாக நபி(ஸல்) ஸுபுஹுத் தொழுதுவிட்டு இஃதிகாஃபிற்குள் நுழைந்துள்ளார்கள் என்றால் ஒரு நாளின் துவக்கம் ஃபஜ்ருதான் என்பதும் நாளின் துவக்கம் மக்ரிபு எனப் பேசுவதற்கே இடமில்லை என்பதும் தெளிவாகிறது.

மக்ரிபிற்கு முன் மனைவியுடன் உடலுறவா? ...பெண்கள் குறித்து இறைத்தூதர்(ஸல்) குறிப்பிடுகையில், உங்களில் ஒருவர் திட்டமிட்டு தம் மனைவியை, அடிமையை அடிப்பது போல் அடிக்கிறார். பின்னர் அந்நாளின் இறுதியில் அவளுடன் அவர் இல்லறத்தில் ஈடுபட நேரலாம். (புகாரீ :4942)

ஒரு நாளின் ஆரம்பம் மக்ரிபு என்றால் அஸருக்குப் பிறகு மஃரிபுக்கு முன்னர் யாரும் மனைவியுடன் சேர்வார்களா? பெரும்பாலும் இரவில்தான் மனைவியுடன் கூடுகிறோம். ஆக ஒரு நாளின் இறுதிப்பகுதி இரவு என்றால் ஃபஜ்ரு வேளையில்தான் புதிய நாள் துவங்குகிறது என்பதை அறிய வேண்டும்.

ஃபஜ்ருக்கு முன்னர் அரஃபாவில் நுழைந்தவர்: ஹஜ் என்பதே அரஃபா நாள்தான். `ஜம்வு நாளின்' ஃபஜ்ருக்கு முன் ஒருவர் வந்துவிட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்...' என்று நபி(ஸல்) கூறினார்கள். அபூதாவூத் 1951.

ஒரு நாளின் ஆரம்பம் மக்ரிபு என்றால், மக்ரிபுக்கு முன்னரே அரஃபாவுக்குள் சென்றுவிட நபி(ஸல்) கட்டளை இட்டிருப்பார்கள். ஃபஜ்ருக்கு முன்பு ஒருவர் வந்துவிட்டால் என்ற சொற்றொடர் ஒரு நாளின் துவக்கம் பஜ்ருதான் என மிகத் தெளிவாகப் பறைசாற்றுகிறது.

ஒரு நாளின் இறுதித் தொழுகை வித்ர்: இறைத்தூதர்(ஸல்) மேடை மீது இருந்தபோது, இரவுத் தொழுகை பற்றி என்ன கூறுகிறீர்கள்? என ஒருவர் கேட்டார். இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். அதிகாலையை அடைந்துவிடுவார் என அஞ்சினால் ஒரு ரக்அத் தொழுங்கள். அவர் தொழுதது அவருக்கு வித்ராக அமையும் என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். (புகாரீ - 472) ஒரு நாளின் ஆரம்பம் மக்ரிபு என்றால், அதிகாலையை அடைந்து விடுவாரோ என்று அவர் அஞ்சத் தேவையில்லை. வித்ரு என்பது ஒரு நாளின் இறுதித் தொழுகை என்பதை நினைவில் கொள்க.

யூதர்களின் வழிமுறை: ஒரு நாளை ஃபஜ்ரிலிருந்து துவங்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு நாளை மக்ரிபிலிருந்து துவங்குவது யூதர்களின் வழிமுறை. மறுமைநாள் நெருங்கும் வேளையில் முஸ்லிம்கள் யூத கிருஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு-ஜான் முழத்திற்கு-முழம் பின்பற்றத் துவங்குவார்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை இத்தருணத்தில் மனதில் கொள்ள வேண்டுகிறோம்.

எனவே, உலக முஸ்லிம்கள் அனைவரும் தங்களின் அன்றாடக் கிழமையை குர்ஆன் சுன்னா அடிப்படைப்படையில் ஃபஜ்ரு வேளையிலிருந்து துவங்கி யூதர்களுக்கும் மாறுசெய்தாக வேண்டும். அதுபோல குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமைந்த துல்லியமான இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியைப் பின்பற்றி யூத, நஸாராக்களுக்கு மாறு செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

ஒருநாள் என்பதை மஃரிபிலிருந்து துவங்கும் யூதர்கள்

ஒவ்வொரு சந்திர மாதத்தின் இறுதி நாளான புவிமைய சங்கம தினத்தில் (Geocentric Conjuction Day) பிறை பிறந்து அதற்கு அடுத்த நாளான புதிய மாதத்தின் முதல் நாளில் மேற்குத் திசையில் மக்ரிபு வேளையில் அது மறையும்போதுதான் புறக்கண்களுக்குக் காட்சியளிக்கும். இதுவே உலகமே அறிந்துள்ள உண்மை. இருப்பினும் அந்த முதல் நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு, மாதத்தின் இரண்டாவது நாளை முதல்நாளாகக் கொள்ளும் பழக்கம் யூதர்களின் வழிமுறையிலிருந்து பிறந்ததாகும்.

யூதர்கள்தான் தங்களுடைய ஹீப்ரு காலண்டரின்படி ஒருநாளின் துவக்கத்தை சூரியன் மறைந்த பின்னர் மக்ரிபு வேளையிலிருந்து ஆரம்பிக்கின்றனர். முதல் நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் இவர்கள் பார்த்துவிட்டு, அதற்கு அடுத்த நாளை முதல் நாளாக எடுத்து தங்களின் மாதத்தைத் துவங்குகின்றனர். இதற்கான ஆதாரங்களை சுருக்கமாக இங்கே தருகிறோம் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பெயரிட்டார்; சாயங்காலமும், விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம் (1:5)

யூத நாட்காட்டியின் தேதி: கடவுள் காலத்தை உருவாக்கியபோது, அவர் முதலில் இரவை படைத்தார் பின்னர் பகலை உருவாக்கினார். எனவே, ஒரு யூத காலண்டரில் தேதி இரவிலிருந்து தொடங்குகிறது.

மதச்சார்பற்ற ஆங்கில நாட்காட்டி எனப் பெயர்பெற்றுள்ள கிரிகோரியன் நாட்காட்டிபடி கிருத்தவர்கள் ஒரு நாளை நள்ளிரவில் துவங்கி, நள்ளிரவில் முடிக்கின்றனர்.

யூதர்களின் ஒரு நாள் என்பது பொழுது சாய்ந்ததிலிருந்து (மக்ரிபிலிருந்து) துவங்கி, அடுத்த பொழுது சாயும்வரை (மக்ரிபு) ஆகும். சபாத் (எனும் யூதர்களின் புனித நாள் சனிக்கிழமை) வெள்ளிக்கிழமை இரவிலிருந்து தொடங்குகிறது. (ஆதாரம்: www.chabad.org)

அனைத்து யூத விடுமுறை நாட்களும், காலண்டர்களில் குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் மாலையிலிருந்து ஆரம்பிக்கின்றன. இதற்குக் காரணம் என்னவெனில், யூதர்களின் ஒருநாள் என்பது சூரியன் மறையும் நேரத்திலிருந்து துவங்கி சூரியன் மறையும்போது முடிவடைகிறது, மாறாக நள்ளிரவில் அல்ல. பைபிலின் ஆதியாகமம் முதல் அதிகாரத்தில், படைப்பின் கதையைப் பற்றி 'சாயங்காலமும், விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று' என்றே நீங்கள் படிப்பீர்கள். இதன்படிதான் சூரியன் மறையும் மாலை நேரத்திலிருந்து ஒரு நாள் துவங்குகிறது என்கிறோம்.

விடுமுறை நாட்கள் காலண்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியின் இரவோடு (பொழுது சாய்ந்ததும்) முடிவடைகிறது. அதாவது அது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் என்ற அளவில் இருள் சூழும் அந்த நேரம் ஆகும். (ஆதாரம்: www.jewfaq.org )

சபாத் (யூதர்களின் புனித நாள்) வெள்ளிக்கிழமை மாலை சூரியன் மறையும் முன் ஒரு சில நிமிடங்களிலிருந்து அனுசரிக்கப்படுகிறது. அதாவது அது சனிக்கிழமை இரவு வானில் மூன்று நட்சத்திரங்கள் தோன்றும் வரையுள்ள நேரமாகும். (ஆதாரம்: www.wikipedia.org )

ரோஷ் சோடஸ் (தலைமாதம்) எனும் யூதர்களின் மாதப்பிறப்பானது, தலைப்பிறை என்ற சந்திரனின் முதல் வளர்பிறை (ஜெரூஸசலமில்) பார்க்கப்படுவதிலிருந்து துவங்குகிறது. தலைப்பிறை தென்பட்டவுடன், இஸ்ரேலின் அறிஞர் பேரவை (யூதமுரப்பிகளின் உச்ச நீதிமன்றம்) மூலம் தகவல் அளிக்கப்பட்டு யூதர்களின் மாதப்பிறப்பு (ரோஷ் சோடஸ்) முறையாக அறிவிக்கப்படும். தலைப்பிறையைப் பார்த்த பின்னர் அதற்கு அடுத்தநாளே திருவிழா தினமாகும். அந்நாளில் கட்டியங்கூறி கனிமொழியுரைத்தலும், வழியனுப்பு விழாக்களும், அறுத்துப் பலியிடலும் நிகழும். (ஆதாரம்: www.hebrew4christians.com)

உண்மை இப்படி இருக்க முஸ்லிம் அறிஞர்களில் சிலர், முழுப் பூசனிக்காயை சோற்றில் வைத்து மறைக்க முயல்வது போல பேசிவருகிறார்கள். ஹிஜ்ரி கமிட்டியினரைப் பார்த்து மஜூஸிகள், யூதர்கள், ஷியாக்கள் என்றெல்லாம் அதிரடி ஃபத்வாக்கள் கூறிவருகிறார்கள். நாம் மேற்குறிப்பிட்டுள்ள ஆதாரங்களை வைத்து இவர்களை மிகச்சுலபமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் விமர்சிக்க முடியும். ஆனால், நாங்கள் யாருக்கும் எதிராக ஃபத்வாக்களை அள்ளி வீசுபவர்கள் அல்ல என்பதால் நாங்கள் இவர்களை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறோம். இதில், சிந்தித்துச் செயல்பட மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

திருக்குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் போதனைகளின்படி முஸ்லிம்கள் தங்களின் நாளை ஃபஜ்ரு வேளையிலிருந்து தான் துவங்க வேண்டும். இதற்கான குர்ஆன், சுன்னாவின் தெளிவான ஆதாரங்களை முன்வத்து மக்களுக்கு நாம் பலமுறை விளக்கி விட்டோம். 'ஒரு நாளின் துவக்கம் எது? ஃபஜ்ரா? மக்ரிபா?' என்ற ஹிஜ்ரி கமிட்டியின் பதிவுகளையும், ஆக்கங்களையும் எங்களின் இணைய தளத்தில் ( www.mooncalendar.in ) பதிவு செய்தே வைத்துள்ளோம்.

அவசியம் படியுங்கள்! சிந்தியுங்கள்!! சத்தியத்திற்குத் துணை நில்லுங்கள்!!!

இவண்:
ஹிஜ்ரி கமிட்டி, 160/101, வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி - 627103, தமிழ்நாடு.
Hijri Committee, 160/101, North Main Road,Eruvadi - 627103,Tirunelveli District.,Tamilnadu, India.
Mobile Contacts: 99626 22000, 99626 33000, 99624 77000, 95007 94544, 99943 44292.
Websites:- www.mooncalendar.in
Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Google Group: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Read 1066 times Last modified on திங்கட்கிழமை, 13 ஜூலை 2015 18:47