திங்கட்கிழமை, 13 ஜூலை 2015 00:00

மறைக்கப்படும் உண்மைகளும், மறுக்கப்படும் மார்க்க ஆதாரங்களும்

Rate this item
(1 Vote)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...

மறைக்கப்படும் உண்மைகளும், மறுக்கப்படும் மார்க்க ஆதாரங்களும்

முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக வைத்து குறித்த கிழமைகளில் பின்பற்றப்பட வேண்டும். இதுதான் படைத்த ரப்புல் ஆலமீனான அல்லாஹ்வின் கட்டளை. ஆம்! பிறைகளை வைத்தே மாதக் கணக்கைத் தீர்மானிக்குமாறு அல்லாஹ் முஃமின்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். அதாவது

 1. ரமழான் மாதத்தின் (ஃபர்ளு) கடமையான நோன்பைச் சரியான தினத்தில் துவங்குவது,
 2. ஈதுல்ஃபித்ர், ஈதுல் அழ்ஹா ஆகிய இருபெருநாட்களை சரியான தினத்தில் கொண்டாடுவது,
 3. துல் ஹஜ்ஜு 8-ஆம் நாள் முதல் 13-ஆம் நாள் வரை ஹஜ்ஜுவுடைய கிரிகைகளை நிறைவேற்றுவது,
 4. முஹர்ரம் மாதத்தின் 9-வது மற்றும் 10-வது நாட்களில் ஆஷூரா நோன்புகளை நோற்பது,
 5. அய்யாமுல் பீழ் என்னும் மாதந்தோரும் வெண்மை நாட்களின் சுன்னத்தான மூன்று நோன்புகள்,
 6. ஹஜ்ஜுக்கு செல்லாதோர் துல்ஹஜ்ஜு மாதம் 9-வது நாள் அரஃபா நோன்பு நோற்பது,
 7. இஸ்லாமிய மாதங்கள் ஒவ்வொன்றையும் ஆரம்பித்தல்,
 8. குர்ஆன் கூறும் புனித மாதங்களைச் சரியாகத் துவங்குதல்,
 9. ஒரு தாய் தன் குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய காலம்,
 10. தலாக் சொல்லப்பட்ட அல்லது கணவனை இழந்த பெண்ணுடைய இத்தாவின் மாதக் கணக்கு,
 11. கடன் கொடுக்கல் வாங்கள் பற்றிய தவணை பத்திர காலங்களை குறித்தல்.

வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாகக் கொண்ட இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையிலும், குறித்த கிழமைகளிலும் பின்பற்றப்பட வேண்டும். சந்திரப் படித்தரங்களை இறைவன் மனிதகுலத்தின் கலண்டர் ஆக ஆக்கியுள்ளான். இது குறித்து திருக்குர்ஆனின் 2:189, 10:5, 55:5 முதலிய வசனங்கள் கூறுகின்றன. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும் இது குறித்து தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார்கள். அந்த விளக்கங்களில் சிலவற்றை நாம் இப்போது காண்போம்.

``நிச்சயமாக அல்லாஹ் சந்திரனின் படித்தரங்களை (பிறைகளை) மக்களுக்காக நாள்காட்டியாக (காலண்டராக) ஆக்கியுள்ளான். எனவே, அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டு நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்; இன்னும் அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டு நோன்பைத் துறந்துவிடுங்கள். அவை உங்களுக்கு மறைக்கப்பட்டால் முப்பது நாள்களாக எண்ணிக் கொள்ளுங்கள்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.

அறிவித்தவர்: இப்னு உமர்(ரலி) நூல்: முஸன்னஃப் அப்திர் ரஸாக், ஹதீஸ் எண்: 7306

இது போன்றே இப்னு குஸைமாவில் 1789வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனின் 2:189 வது வசனத்தின்படி மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களும் சந்திர நாள்காட்டியைக் குறிக்கின்றன. இந்த இரண்டு ஹதீஸ்கள் முழுமையான கருத்தைக் கொண்டுள்ளன.

இறைத்தூதர்(ஸல்), மற்ற மாதங்களை (அதன் நாள்களை எண்ணி) கவனித்து வருவதைவிட ஷஅபானை (அதன் நாள்களை எண்ணி) கவனித்து வருவார்கள். பின்னர் ரமளானுடைய காட்சியின் அடிப்படையில் நோன்பை நோற்பார்கள். அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தால் முப்பது நாள்களாக எண்ணிக் கொண்டு பின்னர் நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா(ரழி) அறிவித்தார். நூல்: ஸுனன் அபீ தாவூத் ஹதீஸ் எண்: 1993

மக்ரிப் நேரத்தில் மேற்கு திசையில் மறையும் பிறையை பார்த்த பிறகு மாதத்தின் முதல் நாளை இழந்துவிட்டு இரண்டாம் நாளாகிய மறு நாளை மாதத்தின் முதல் நாளாக எடுக்காமல் ஒவ்வொரு நாளின் படித்தரத்தையும் கவனித்து கணக்கிட்டு வருவதே சரியான நிலைபாடு என்பதை நமக்கு மேற்கண்ட ஹதிஸ் உணர்த்துகிறது.

நடப்பு மாதம் எத்தனை நாள்களில் முடியும் என்பதையும், புதிய மாதத்தின் ஆரம்பத்தையும் அறிந்திருந்த நபியும் நபித்தோழர்களும்

கத்ரு நாள் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நாங்கள் நினைவு படுத்தினோம். அப்போது, ``இம்மாதத்தில் எத்தனை நாள்கள் முடிந்துள்ளன?'' என இறைத்தூதர்(ஸல்) வினவினார்கள். ``22 நாட்கள் முடிந்துள்ளன; இன்னும் 8 நாள்கள் மீதம் உள்ளன'' என நாங்கள் கூறினோம்.

``இல்லை; மாறாக 7 நாள்களே மீதம் உள்ளன'' என நபி(ஸல்) கூறினார்கள். ``இல்லை; மாறாக 8 நாள்கள் மீதம் உள்ளன'' என அவர்கள் கூறினர். ``இல்லை; மாறாக 7 நாள்கள் மீதம் உள்ளன'' என நபி(ஸல்) கூறினார்கள். ``இல்லை; மாறாக 8 நாள்கள் மீதம் உள்ளன'' என அவர்கள் கூறினர். ``இல்லை; மாறாக 7 நாள்கள் மீதம் உள்ளன; இந்த மாதம் 29 நாள்களைக் கொண்டது'' என நபி(ஸல்) கூறினார்கள். பின்னர், தம் கையால் 29 நாள்கள் வரை நபி(ஸல்) எண்ணினார்கள். இந்த நாளில் கத்ரு நாளைத் தேடுங்கள் என்றும் நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவித்தவர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: இப்னு குஜைமாஹ், ஹதீஸ் எண்: 2024.

நபி(ஸல்) தம் தோழர்களிடம் ஒரு கேள்வி கேட்டால், ``அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கு அறிவர்'' என்றே நபித்தோழர்கள் பதில் அளிப்பர். இருப்பினும் மேற்கண்ட ஹதீஸில் 8 நாள்கள் மீதம் இருப்பதாகக் கூறிய நபித் தோழர்களின் கூற்றும், இல்லை; 7 நாள்கள்தான் மீதம் இருக்கின்றன என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்றும் நமக்கு எதை உணர்த்துகிறது?

நடப்பு மாதத்தின் கடைசி நாளையும் அதற்கு அடுத்த மாதத்தின் முதல் நாளையும் நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் கணக்கிட்டு அறிந்தே இருந்தார்கள்; மாதத்தின் முதல் பிறையைப் புறக்கண்ணால் பார்த்துத்தான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலையில் அவர்கள் இல்லை என்பதை மிகத் தெளிவாக இந்த ஹதீஸ் தெரிவிக்கிறது.

29 நாள்களில் முடியும் ரமளான் மாதத்தில், 20ஆம் நாள் ஃபஜ்ர் தொழுதுவிட்டு நபி(ஸல்) இஃதிகாஃப் இருப்பதற்கு இறை இல்லதிற்குள் நுழைவார்கள். 30 நாள்களில் முடியும் ரமளான் மாதத்தில், 21ஆம் நாள் ஃபஜ்ர் தொழுது விட்டு நபி(ஸல்) இஃதிகாஃப் இருப்பதற்கு இறை இல்லதிற்குள் நுழைவார்கள். நடப்பு மாத்தின் இறுதி நாளை நபி(ஸல்) தலைப் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து ஆரம்பிக்கவில்லை என்பதற்கு இந்த இரண்டு ஹதீஸ்களும் மிகச் சரியான சான்றுகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

துல்கஅதா மாதத்தின் ஐந்து நாள்கள் மீதமிருக்கும் நிலையில் ஹஜ்ஜை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கியதும், பலிப் பிராணியைக் கொண்டு வராதவர் வலம் வந்துவிட்டு இஹ்ராமிலிருந்து விடுபடட்டும் என இறைத்தூதர்(ஸல்) கட்டளையிட்டார்கள். பிறகு துல்ஹஜ் 10ஆம் நாள் எங்களுக்கு மாட்டிறைச்சி வந்தது. ``இது என்ன?'' என நான் கேட்டேன். ``இறைத்தூதர்(ஸல்) தம் மனைவியர் சார்பாகப் பலியிட்டார்கள்' என மக்கள் கூறினர்.

அறிவித்தவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரீ, ஹதீஸ் எண்: 1633

துல்கஅதா மாதத்தின் ஐந்தே நாள்கள் மீதம் இருக்கும் நிலையில் நாங்கள் புறப்பட்டோம் என ஆயிஷா(ரலி) தெளிவாக அறிவிப்பதிலிருந்து, நபித்தோழியர்களும் நடப்பு மாதத்தின் இறுதிநாள் மற்றும் அதற்கு அடுத்த மாதத்தின் முதல் எது என்பதைத் தெளிவாக அறிந்தே இருந்தார்கள் என்பதைத்தான் குறிக்கிறது.

பழங்கால தஃப்ஸீரிகள் உரைக்கும் உண்மைகள்

புவி மையச் சங்கம நாள் (அமாவாசை) தான் சந்திர மாதத்தின் இறுதி நாள் என்பதை தற்போது யாரும் புதிதாகக் கூறவில்லை. இப்பேருண்மை இப்னு கஸீரில் உள்ளதைப் பாருங்கள்.

சூரியன், சந்திரன், மற்றும் பூமி ஆகிய மூன்றும் சங்கமிக்கும் புவி மையச் சங்கம நாள் (அமாவாசை) தான் சந்திர மாதத்தின் இறுதிநாள் ஆகும். மாதத்தின் முதல் நாளில் சந்திரன் சூரியனை பின்தொடர்ந்து வரும். சந்திரனின் ஒளியை வேறுபடுகிறவாறு அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். சில சமயங்களில்; சந்திரனின் ஒளி முழுமை அடைகிறவரை அது அதிகரிக்கிறது. பிறகு சந்திரனின் ஒளி முற்றிலுமாக மறைகிற வரை அது தேய ஆரம்பிக்கிறது. இந்நிலையே கடந்து சென்ற மாதங்களையும் வருடங்களையும் குறிக்கிறது என்பதே அல்குர்ஆனின் 71:16 வசனத்திற்கான விளக்கமாகும்.

நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் மக்ரிப் வேளையில் மறையும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து அது அடுத்த நாளின் பிறை எனக் கருதுவது முற்றிலும் தவறானது. உண்மையில் அது நாம் பார்க்கும் நாளுக்குரிய பிறைதான் என்பதை தற்போது யாரும் புதிதாகச் சொல்லவில்லை. இப்னு கஸீரில் இந்த விளக்கம் உள்ளதைப் பாருங்கள்.

சந்திர மாதத்தின் முதல் நாளில், சூரியன் உதித்த பின்னர் சற்று தாமதித்தே பிறை கிழக்கில் உதிக்கும். அந்த முதல் நாளில், சூரியன் மறைந்த பின்னரே அப்பிறை நம் புறக் கண்களுக்குக் காட்சியளிக்கும் என கத்தாதா(ரஹ்) கூறியுள்ளார்.

மாதத்தின் முதல் நாளில் சந்திரன் சூரியனை பின்தொடர்ந்து வரும் என நபித்தோழர் இப்னு அப்பாஸ்(ரழி) கூறி செய்தியும் தஃப்ஸீர் இப்னு கஸீரில் அல்குர்ஆன் 91வது அத்தியாயத்தின் முதல் இரண்டு வசனங்களின் விளக்கவுரைகளில் உள்ளது.

நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் 410/8

ஒட்டுமொத்த கருத்தின்படி நாம் இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் உள்ளோம். ஒன்று இபாதத் அடிப்படையில் தெளிவான ஆதாரங்களின் வெளிப்படையான பொருளையும், அதன் கணக்கையும் எடுத்து வணக்க வழிபாடுகளின் நேரங்கள் அனைத்திலும் பார்ப்பதைக் கொண்டே அமல் செய்வதாகும். 

இந்நேரத்தில் அடிவானத்தில் படர்ந்து அகன்று வருகின்ற ஃபஜ்ர் நேரத்தின் ஒளியை காணும் வரையிலும், சூரியன் உச்சி சாய்வதையும், அது மறைவதையும் காணும் வரை பாங்கு சொல்லாமல் இருப்பது ஒவ்வொரு முஅத்தின் மீதும் வாஜிப் என்னும் கடமையாகிறது.

மற்றொரு கருத்து உறுதி செய்யப்பட்ட கணக்கீட்டின்படி அமல் செய்வதாகும். இதுதான் அல்லாஹ்வின் நோக்கத்திற்கு மிக நெருக்கமானதாகும். இதுவே நேரங்கள் (காலங்கள்) பற்றிய உறுதியான கல்வியும், கருத்து வேறுபாடில்லாத நிலையும் ஆகும்.

இச்சமயம் பிறையை பார்க்க முடியாத நேரத்தில் (காலத்தில்) ஒவ்வொரு நாட்டிலும் (பகுதியிலும்) ஒவ்வொரு மாதத்தின் பிறை பார்க்கப்படுகிற நேரங்களை விளக்குகிற பொது நாட்காட்டியை பயன்படுத்துவதற்கு இது சாத்தியமாகும். மேலும் அது உலகம் முழுவதும் வினியோகிக்கப்பட வேண்டும். இந்த நாட்காட்டியுடன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ஜமாஅத் (கூட்டம்) பிறை தொடங்கப்படுவதைக் கண்டால் அது தெளிவுக்கு மேல் தெளிவாகும்... நூல்: தஃப்ஸீர் அல் மனார் 151/2

புறக்கண்களுக்கு மேற்கு திசையில் மறையும்போது தென்படும் பிறையானது அடுத்த நாளுக்குரிய பிறை என்ற கருத்து தவறானது. இதற்கு, குர்ஆன், ஹதீஸ் அதாரத்தையோ, நபித்தோழர்கள், இமாம்கள், குர்ஆன் விரிவுரையாளர்களின் கருத்தையே ஆதாரமாகக் காட்டமுடியாது.

பிறையை மேற்கு திசையில் மறையும்போது பார்ப்பது அடுத்த நாளுக்குரிய பிறை என்ற விளக்கத்தை குர்ஆன், ஹதீஸ், நபித்தோழர்கள் கருத்து, இமாம்கள் கருத்து, குர்ஆன் விரிவுரையாளர்கள் கருத்து என எந்த ஆதாரத்தையும் யாராலும் காட்டவே முடியாது.

பிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹப் இமாம்கள்

சாட்சியாளர் காட்சியை, தான் கண்டதாகக் கூறினாலும், காட்சியைக் காண முடியாது என்பது தீர்க்கமான கணக்கின் மூலம் நிரூபணம் ஆகிவிட்டால், காட்சி குறித்த, நீதமான சாட்சியாளரின் கூற்று ஏற்கப்படாது. இதன் காரணமாக அவர்களின் சாட்சிகள் மறுக்கப்படும். மேலும், அச்சமயம் நோன்பு நோற்பது அணுமதிக்கப்படாது. அதை மறுப்பது வரம்பு மீறுவதும், பெரும் பாவமும் ஆகும் என இமாம் அப்பாதி(ரஹ்) அவர்களிடமிருந்து கல்யூபி(ரஹ்) குறிப்பிடுகிறார்.

நூல்: ஷர்ஹ் அல் பஹ்ஜத்துல் வர்தீயா 7/17

குறிப்பு: இமாம் கல்யூபி(ரஹ்) ஷாஃபியீ மத்ஹபைச் சார்ந்த இமாம் என்பதை அறிக.

இச்சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாது; ஏனெனில், கணக்கே தீர்க்கமானது. சாட்சியோ சந்தேகத்திற்கு இடமானது. இன்னும், சந்தேகத்திற்கிடமானதால் தீர்க்கமானதை எதிர்க்க முடியாது என இமாம் ஸுப்கீ(ரஹ்) கூறினார்.

நூல்: முக்னியுல் முஹ்தாஜ் இலா மஅரிஃபதில் மின்ஹாஜ் 5/165, ரத்துல் முக்தார் 7/365).

குறிப்பு: இமாம் ஸுப்கீ ஹனஃபீ மத்ஹபைச் சார்ந்த இமாம் என்பதை அறிக.

தலைப் பிறையைப் புறக்கண்ணால் காணாமல் மாதத்தை துவங்கக் கூடாது என்பது ஷியாக்களின் கருத்து

அன்றைய சுன்னவல்ஜமாஅத் அறிஞர்கள் ஷியாக்களின் கொள்கைகளை கடுமையாக எதிர்த்து வந்தார்கள். ``பிறந்த பிறையை பார்த்துவிட்டு சுன்னவல்ஜமாஅத் அறிஞர்கள் அமல் செய்வதில்லை'' என அன்றைய கால ஷியாக்கள் `லாத்தஸூமூ' எனும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டியே சுன்னவல்ஜமாஅத் அறிஞர்களுக்கு எதிராக வாதிட்டனர்.

ஒரு நாளை ஜ(ஷ்)வால் என்னும் நண்பகலிலிருந்து கணக்கிடுவதா, அதன்பின்னர் கணக்கிடுவதா என்றதொரு பிரச்சனையை சுன்னத் வல்ஜமாஅத் அறிஞர்களுக்கு எதிராகக் கிளப்பிவிட்டனர். இன்று மக்களிடையே புரையோடிக்கிடக்கும் மக்ரிபுக்குப் பின்னர்தான் ஒருநாளைத் துவங்க வேண்டும் என்ற யூதர்களின் வழிமுறையை ஷியாக்கள் நடைமுறைக்குக் கொண்டுவர எடுத்த முயற்சிகளை அன்றைய ஷியா எதிர்ப்பு சுன்னத் வல்ஜமாஅத் அறிஞர்களின் (இஜ்மா) ஆலோசனை முடிவின்படி நிராகரிக்கப்பட்டது. நூல்: ஃபத்ஹுல் பாரி.

பிறைகள் குறித்து பேசும் முஸ்லிம் அறிஞர்கள் மேற்கண்ட ஹதீஸ்களையும், ஆதாரங்களையும் மக்களிடம் சொல்லாமல் மறைப்பதேன்? உண்மையை ஏற்போம் தயக்கமின்றி.

இவண்:
ஹிஜ்ரி கமிட்டி, 160/101, வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி - 627103, தமிழ்நாடு.
Hijri Committee, 160/101, North Main Road,Eruvadi - 627103,Tirunelveli District.,Tamilnadu, India.
Mobile Contacts: 99626 22000, 99626 33000, 99624 77000, 95007 94544, 99943 44292.
Websites:- www.mooncalendar.in 
Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Google Group: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Read 689 times Last modified on திங்கட்கிழமை, 13 ஜூலை 2015 19:11

Media