மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.
பகுதி : 2 / 7
அல்குர்ஆனின் இரவு ('லைல்') பகல் ('நஹார்') பற்றி வரும் இடங்களில் 'லைல்' எனும் இரவைத்தான் அல்லாஹ் முற்படுத்தி கூறுகிறான். எனவே ஒரு நாள் என்பதை இரவிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்று வாதிக்கின்றனர். இது அர்த்தமற்ற வாதமாகும். அல்குர்ஆனுடைய அரபு மொழி நடையைப் பற்றிய தெளிவான ஞானமின்மையால் ஏற்பட்ட சிந்தனையே இது.
உமர் என்ற பெயருடைய தந்தைக்கு அப்துல்லாஹ் என்ற மகன் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். மேற்படி அப்துல்லாஹ் என்ற அந்த மகனை அரபு மொழி வழக்கில் 'அப்துல்லாஹ் இப்னு உமர்' என்றே அழைப்போம். 'அப்துல்லாஹ் இப்னு உமர்' என்பதில் அப்துல்லாஹ் முந்தியும் உமர் பிந்தியும் வந்துள்ளதால், தந்தை உமருக்கு முன்னரே மகன் அப்துல்லாஹ் பிறந்தார் என்று யாராவது புரிவார்களா?
அல்குர்ஆனில் ஒரு சொல் முன்னர் சொல்லப்பட்டால் அதைத்தான் முற்படுத்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தரவில்லை. கீழ்க்காணும் அல்குர்ஆன் வசனங்கள் மூலம் இதை தெளிவாக விளங்கலாம்.
மர்யமே! உம் இறைவனுக்கு ஸூஜூது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக (என்றும்) கூறினர். அல்குர்ஆன் (3:43)
மேற்காணும் அல்குர்ஆன் வசனத்தில் 'வஸ்ஜூதி வர்கயி' என்று ஸூஜூது முற்படுத்தியும், ருகூவை பிற்படுத்தியும் அல்லாஹ் சொல்கிறான். தொழுகையில் நாம் ருகூவைத்தான் முதலில் செய்கிறோம். அதன் பின்னர்தான் ஸூஜூது செய்கிறோம். இந்த வசனத்தில் ஸூஜூதை முற்படுத்தியும், ருகூவை பிற்படுத்தியும் சொல்லியிருப்பதால் ஸூஜூதுதான் முந்தியது, ருகூவு பிந்தியது என்று யாரேனும் வாதித்தால் அவரை என்ன நினைப்பீர்கள்? மேலும் மற்றொரு குர்ஆன் வசனத்தையும் படியுங்கள்
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்;. அல்குர்ஆன் (2:196)
மேற்காணும் அல்குர்ஆன் வசனத்தில் வஅதிம்முல் ஹஜ்ஜ வல் உம்ரத லில்லாஹி என்று ஹஜ்ஜை முற்படுத்தியும், உம்ராவை அதற்கு அடுத்தும் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான். நம்மில் ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்கள் யாரும் ஹஜ்ஜை முதலில் முடித்துவிட்டு உம்ராவை செய்வதில்லை. ஹஜ்ஜை முற்படுத்தியும், உம்ராவை பிற்படுத்தியும் சொல்லப்பட்டதால் ஹஜ்ஜூகடமையை நிறைவேற்றச் செல்வோர் ஹஜ்ஜைத்தான் முதலில் செய்ய வேண்டும், அதன் பின்னர்தான் உம்ராவை செய்ய வேண்டும் என்று வாதித்தால் அது சரியாகுமா? சிந்திப்பீர்.
அரபுகள் தங்கள் சொல் வழக்கில் 'நாளை' என்பதைக் குறிப்பிடுவதற்கு 'புகுரா' بكرة என்ற சொல்லை பயன்படுத்துவதை அறிவோம். அல்குர்ஆனில் பகல் பொழுதைக் குறிப்பதற்கு நஹார் نهار என்ற சொல்லைப் போன்றே 'புகுரா', بكرة 'கதின்', غد 'அதுவ்வி', 'கதவாத்தி' غدوات போன்ற சொற்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன. ஒருநாளின் அதிகாலைப் பொழுதைக் குறிக்கவும் இதே 'புகுரா', 'கதவாத்தி' போன்ற சொற்கள் பயன்படுத்தப்படும். அதுபோல மாலை, இரவு என்பதைக் குறிப்பதற்கு 'அஸிய்யா', عشيٌة 'அஸீலா', اصيلة 'ஆஸால்' آصال போன்ற பதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
காலை மாலை என்று சொற்றொடர் அமையும் அத்;தகைய அல்குர்ஆனின் வசனங்கள் 'புகுரத்தன்வ் வ அஸீலா', 'بكرة * واصيلة* 'புகுரத்தன்வ் வ அஸீய்யா', بكرة وعشيٌة மற்றும் 'பில் உதுவ்வி வல் ஆஸால்' ٌفي الغدو والآصال என்ற வாக்கிய அமைப்பில் அமைந்துள்ளன. அல்குர்ஆனின் மேற்படி வசனங்கள் அனைத்திலும் காலைப் பொழுதை முற்படுத்தியும், மாலைப் பொழுதை பிற்படுத்தியும் வல்ல அல்லாஹ் கூறியுள்ளான். (பார்க்க : 19:11, 19:62, 25:5, 48:9, 7:205, 6:52, 13:15, 18:28, 24:36, 33:42, 76:25, 40:46).
உதாரணமாக
இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள். அல்குர்ஆன் (33:42)
காலையிலும், மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹூ செய்து கொண்டிருப்பீராக. அல்குர்ஆன் (76:25)
காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப் படுவார்கள். மேலும் நியாயத்தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் 'ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்' என்று கூறப்படும். அல்குர்ஆன் (40:46).
'இரவு பகல்' என்ற வரிசையில் அல்குர்ஆன் வசனங்கள் இருப்பதால் இரவுதான் முந்தி என்று வாதிப்போர், 'காலை மாலை' என்ற வரிசையில் வரும் மேற்படி வசனங்களுக்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார்கள்? அவற்றில் 'காலை' எனும் 'சுபுஹூ' நேரத்தைத்தானே அல்குர்ஆன் முற்படுத்திக் கூறுகிறது என்பதால் அவர்களின் வாதப்படியே காலைதான் முந்தியது, மாலை பிந்தியது என்பதை ஒப்புக் கொள்வார்களா?
ஹதீஸ்களிலுள்ள அரபு சொற்களுக்கு ஹிஜ்ரி கமிட்டியினர் தவறான அர்த்தங்களை கொடுக்கின்றனர் என்று சிலர் நம்மை விமர்சிக்கின்றனர். அரபு மொழிப் புலமைகள் தங்களுக்கே உள்ளதாகக் கருதும் அத்தகைய மௌலவிகள்கூட, இரவு என்ற சொல் குர்ஆனில் முற்படுத்தப்பட்டுள்ளதால் ஒரு நாளை இரவிலிருந்துதான் தொடங்க வேண்டும் எனக் கூறுவதுதான் ஆச்சரியமாக உள்ளது.
இன்னும் நபி (ஸல்) அவர்கள் தங்களது இஃதிகாஃபை ஃபஜ்ரிலிருந்துதான் தொடங்கினார்கள் என்று ஸஹீஹான நபிமொழியின் நேரடிப் பொருளைக்கூட மேற்படி மௌலவிகளுக்கு ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. ஃபஜ்ரை தொழுத நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃபுக்குள் செல்லவில்லை மாறாக கூடாரத்துக்குள்தான் போனார்கள் என்றும் வாதிக்கின்றனர். இவர்கள்; அரபுமொழிப் புலமையின் விபரீதத்தை புரிந்து கொள்ள இதுவும் ஒரு உதாரணம் ஆகும்.