செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 11:57

பிறைகளை கணக்கிடுவோம்! பிரிவுகளை களைந்திடுவோம்!!

Rate this item
(0 votes)

 அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பிறைகளை கணக்கிடுவோம்! பிரிவுகளை களைந்திடுவோம்!!

பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

பரிசுத்த இறைவேதமாம் திருக்குர்ஆன் அஹில்லா என்று பன்மையில்மட்டும் கூறியுள்ள (2:189) பிறைகளின் அனைத்து வடிவங்களையும் கவனமாக பார்த்தும், துல்லியமாக கணக்கிட்டும் வரவேண்டும் என்றும், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் கட்டளைபடி நோன்பையும், பெருநாட்களையும் அந்த அஹில்லாக்களின் அடிப்படையில்தான் அமைத்துக் கொள்ளவும் வேண்டும் என்றும் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் பல வருடங்களாக பின்பற்றியும், பிரச்சாரம் செய்தும் வருகிறோம் - அல்ஹம்துலில்லாஹ்.

      பிறைகளை கணக்கிடுங்கள் என்று நாம் சொல்வதை ஏதோ ஏசிஅறையில் உட்கார்ந்து கொண்டு மடிக்கணிணியை தட்டி சொல்வதாக சிலர் நினைத்துக் கொண்டுள்ளனர். தமிழக வரலாற்றில் பல வருடங்களாக பிறைகளின் படித்தரங்களை கவனமாக அவதானிப்பவர்கள் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினரைத் தவிர வேறு எவருமில்லை என்பதை அறியத்தருகிறோம்.

இதை பெருமைக்காக நாம் சொல்லவில்லை. மாறாக பிறைவிஷயத்தில் அடிப்படை அறிவுகூட இல்லாத சிலர் பிறைகளை புறக்ககண்ணால் மட்டுமே பார்க்கவேண்டும் என்று மார்க்கத்தின் பெயரால் மக்களை குழப்பி பிளவுபடுத்துகின்றனர் என்பதை அனைவரும் அறிவோம். இவ்வாறு பிளவுபடுத்தி பிரித்தாழும் சூழ்ச்சியைவிட்டும் மக்களை மீட்டெடுக்கத்தான் இந்திய ஹிஜ்ரி கமிட்டி பொதுமக்களுக்கு பிரசுரங்கள் வாயிலாகவும் சத்தியத்தை எடுத்துச் சொல்லி வருகிறது - அல்ஹம்துலில்லாஹ்.

      மக்களே! ஒரு மாதத்தின் முதல்நாளை நாம் சரியாக கணக்கிட வேண்டுமென்றால் முந்திய மாதத்தின் பிறையின் படித்தரங்களில் உள்ள தேய்பிறைகளையாவது கண்டிப்பாக பார்த்து வந்திருக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாடு பிரயாணத்திற்கு செல்வதாக வைத்துக் கொள்ளுங்கள். விமானம் புறப்படும் அந்த நேரத்தில் நீங்கள் பிரயாணத்திற்கு தயாராக மாட்டீர்கள். மாறாக பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே அதற்காக தயாராகுவீர்கள், விமானம் புறப்பட சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே விமான நிலையத்தை அடைய முயற்சிப்பீர்கள். அதுபோலத்தான் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை நீங்கள் தெரிந்து பெருநாளை சரியான தினத்தில் கொண்டாட வேணடுமெனில் ரமழான் மாதத்தின் இறுதி நாட்களின் பிறைகளையாவது சரியாக கணக்கிட்டு வந்திருக்க வேண்டும்.

      சரி நீங்கள் தேய்பிறைகளை பார்க்காமல் விட்டுவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் பார்க்கின்ற பிறை எந்த நாளை காட்டுகிறது என்பதை தோராயமாக அறிந்து கொள்ளும் வழிமுறையையாவது தெரிந்திருக்க வேண்டும்.

      அதாவது ஒரு மாதம் எத்தனை நாட்கள் கொண்டது என்பதை முன்கூட்டியே நாம் தோராயமாக அறிய வேண்டுமானால், மாலை சூரியன் முழுமையாக மேற்கு நோக்கி மறையும் நேரத்தில், பிறையை நாம் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் நம் தலைக்கு மேலே (சுமார் 86-90டிகிரியில்) நிலைபெற்றிருந்தால் அந்த பிறை 7 அல்லது 8 வது நாளை காட்டுகிறது.

      மாலை சூரியன் முழுமையாக மேற்கில் மறையும் போது, பிறை முழுநிலவு அளவில் கிழக்கு திசையில் உதித்துக் கொண்டிருந்தால் அந்த பிறை பெளர்ணமி நாளை தெரிவிக்கிறது. ஒரு மாதத்தில் பௌர்ணமி பெரும்பாலும் 14 அல்லது 15 ம் நாளில் வரும். அந்நாளில் மேற்கில் சூரியனின் அஸ்தமனத்தையும் கிழக்கில் சந்திரன் உதிப்பதையும் காணலாம்.

அதிகாலை சூரியன் கிழக்கே உதிக்கும் வேளையில்நாம் நமது தலைக்கு மேல் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் இருந்தால் அந்த பிறை 22 அல்லது 23 வது தேதியை காட்டும் பிறையாகும்.

மேலும் சந்திரனின் தேய்ந்து வரும் மன்ஸில்களில் நாம் உற்று நோக்கிக்கொண்டு வந்தால், எந்த கிழமையில் சந்திரனின் ஒளி பிறையின் வடிவத்தை அடைகின்றதோ, அதே கிழமைதான் எதிர்வரும் சந்திர மாதத்தின் முதல் தினமாக இருக்கும்.

அதாவது 1432 ரமளான் மாதத்தின் பிறையின் நிலைகளை நாம் உற்று நோக்கிக்கொண்டு வந்தோமானால் செவ்வாய்கிழமை (23.08.2011) அன்றுதான் சந்திரனில் படும் சூரிய ஒளி பிறையின் வடிவத்தை அடைந்ததை நாம் பார்க்க முடிந்தது.   எனவே 1432 ஷவ்வால் மாதத்தின் முதல் நாளான ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் தினம் அடுத்துவரும் அதே செவ்வாய்கிழமை (30.08.2011) ஆரம்பமாகும் என்பதை முன்கூட்டியே நாம் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு தேய்ந்து வளரும் பிறைகளை தொடர்ந்து பார்த்து கொண்டிருந்தோமானால் தான், மாதத்தின்  கடைசி நாளுக்கு முந்திய நாளின் பிறையான உர்ஜூஃனில் கதீமை நாம் சரியாக கணக்கிட முடியும். ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் என்றால் 36:39 இறைவசனம் கூறும் உர்ஜூஃனில் கதீம் என்ற பிறையின் இறுதி வடிவம் 29 அன்று ஃபஜ்ரு வேளையில் கிழக்கில் தென்படும். அதுபோல ஒரு மாதத்திற்கு 29 நாட்கள்தான் என்றால், 28ம் நாள் அன்று உர்ஜூஃனில் கதீம் தென்படும்.

உர்ஜூஃனில் கதீம் என்ற புறக்கண்ணால் பார்க்க இயலும் பிறையின் இறுதி படித்தரத்திற்கு அடுத்தநாள் அமாவாசை தினமாகும். அந்த அமாவாசை தினத்தில் பிறையை பார்க்க இயலாது. அதற்கு அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் வளர்பிறை மேற்கில் தெரியும்.

      இவ்வாறு புறக்கண்ணால் பிறைகளை தோராயமாக கணக்கிடும் முறைதான் விஞ்ஞான வளர்ச்சியில்லாத காலத்தில் நடைமுறையில் இருந்தது. விஞ்ஞான அறிவு பெற்றிராத சமுதாயமான நபிகளார் (ஸல்) அவர்கள் காலத்தில் சூரியனையும் சந்திரனையும் கணக்கீடு செய்வதற்கு புறக்கண்ணால் பார்ப்பது என்ற ஒரு நிலை மட்டும்தான் இருந்தது. எனவே பிறைகளை புறக்கண்ணால் பார்த்து அவர்கள் கணக்கிட்டுக் கொண்டனர். சூரியனின் சுழற்சியை பூமியில் ஒரு குச்சியை நட்டி அதிலிருந்து விழும் நிழலை கணக்கிட்டு நேரங்களை தெரிந்து கொண்டு அமல் செய்தனர்.

      ஆனால் இன்று கணிணி துணைகொண்டு நீங்கள் பார்க்கும் பிறை எத்தனை டிகிரியில் நிலை கொண்டுள்ளது, அமாவாசைக்குப் பின்னர் பிறை தெரிந்து எத்தனை மணிநேரங்கள் ஆகின்றது, முதல்பிறை எந்த பகுதியில் தென்படும் என்பதையெல்லாம் துல்லியமாக கணக்கீடு செய்யமுடியும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தோராயமாக அறிந்துகொள்வதைவிட துல்லியமான கணக்கீட்டின்படி ஒப்பிட்டு பார்த்து பின்பற்றுவதை நம் மார்க்கம் ஒருபோதும் தடுக்கவில்லை. மாறாக கணக்கிடுவதை வலியறுத்தியும் ஆர்வமூட்டியும் இருப்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

      அல்லாஹ்வின் பிரம்மாண்ட படைப்புகளான சூரியனும் சந்திரனும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்படியே இயங்குகின்றன என்கிறது திருக்குர்ஆன் (55:5). நேரத்தையும் காலத்தையும் மனிதர்கள் அறிந்து கொள்வதற்காகவே இவற்றை படைத்துள்ளதாக வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறான். (பார்க்க : 2:189, 6:96, 10:5, 13:2, 21:33, 36:38-40). அறிந்தோ அறியாமலோ கணக்கீட்டு முறையை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொண்டுதான் இருக்கின்றது, அவைகளை நடைமுறையில் நாம் பின்பற்றிதான் வருகிறோம்.

கடமையான ஐந்து வேளை தொழுகைகள் மற்றும் ஜூம்ஆ தொழுகை, இஃப்தார் முடிவு, சஹர் நேரம்  போன்ற நேரங்கள் அனைத்தும் சூரியனை அடிப்படையாக வைத்து பின்பற்ற வேண்டியவைகள்.

      நோன்பு, இருபெருநாட்கள், ஹஜ் மற்றும், ஆஷூரா  நோன்பு, மாதமாதம்  வெண்மை நாட்களின் மூன்று நோன்பு, அரஃபா நோன்பு, அனைத்து சந்திர மாதங்களையும் ஆரம்பித்தல், புனித மாதங்களை சரியாக ஆரம்பித்தல் ஆகிய வணக்கங்கள் சந்திரனை மையமாக வைத்து அதன் அடிப்படையில் பின்பற்ற வேண்டிய கடமைகள்.

      இங்கு சூரியனை அடிப்படையாக வைத்து செய்யவேண்டிய காரியங்களான தொழுகை நேரங்களை எவரும் சூரியனை புறக்கண்ணால் பார்த்து அறிந்துகொள்வதில்லை. அதுபோல சஹர் நேரத்தை ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் (2:187) என்ற இறைகட்டளையை எவரும் புறக்கண்ணால் பார்த்து நடைமுறைப் படுத்துவதில்லை. மாறாக விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ள நேரங்களின் அடிப்படையில்தான் அட்டவணையிட்டு நாம் அனைவரும் பின்பற்றுகிறோம். இதற்கு எவரும் ஆட்சேபனை தெரிவிப்பதில்லை.

      ஆனால் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட அமல்களை செய்வதற்கு மட்டும் நிலவை புறக்கண்ணால்தான் பார்ப்போம் என்று பிடிவாதமாக இருப்பது எந்த விதத்தில் நியாயம்? வல்ல அல்லாஹ் சூரியனைப்போலவே சந்திரனையும் சேர்த்துதான் துல்லியமாக இயங்குவதாக சொல்கிறான். சூரியனை நாங்கள் கணக்கிடுவோம், ஆனால் சந்திரனை கணக்கிட மாட்டோம் என்றால் இதை நாம் எங்கு போய் சொல்வது? ஒருவேளை சந்திரன் துல்லியமாக இயங்கவில்லை என்கின்றனரா?. இவ்வாறு பிறைகளை புறக்கண்ணால்தான் பார்க்கவேண்டும் என்பதிலாவது இவர்கள் உண்மையாளர்களாக இருக்கின்றார்களா என்றால் அதுவுமில்லை. அவர்கள் பிறைகளை தொடர்ந்து மாதம் முழுவதும் பார்த்து வருவதுமில்லை, பிறைகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இதுதான் பிறையை பார்த்து நோன்பு வைப்போம் என கூறுபவர்களின் உண்மை நிலை மக்களே!.

      இந்நிலையில் தத்தம்பகுதி பிறை, அல்லது ஊர்பிறை என்ற நிலைபாட்டை கடந்த வருடம் வரை ஓங்கி உரைத்த சில சகோதரர்கள் நிலைமையை புரிந்து கொண்டு இந்த ரமழானில் மாநிலபிறை என்ற நிலைபாட்டிற்கு வந்துள்ளதை அறிகிறோம். அதாவது தமிழகத்தில் எங்கு பிறை தென்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்வோம் என்ற புதிய முடிவிற்கு வந்துள்ளனர். அதுபோல மாநிலபிறை என்ற நிலைபாட்டில் இருந்தவர்கள் இவ்வருடம் சர்வதேச பிறைக்கு மாறியுள்ளனர்.

      குர்ஆன் சுன்னா ஒளியில் துல்லியமான பிறை கணக்கீடு என்ற சரியான நிலைபாட்டின் முதற் படியை அவர்கள் எட்டியுள்ளனர் என்று நாம் நல்லெண்ணம் கொள்வோம். இன்னும் ஆய்வு செய்து காலப்போக்கில் தமிழக பிறையிலிருந்து இந்தியப்பிறை, பின்னர் சர்வதேச பிறை என்றும் அவர்கள் தங்கள் நிலைபாடுகளை அறிவிக்கலாம். எனினும் பிறை விஷயத்திற்கு சந்திர நாட்காட்டி (ஹிஜ்ரி நாட்காட்டி)  மூலம் சரியான தீர்வு கிடைத்துவிட்ட பிறகும் இனியும் காலம் தாழ்த்தாமல் மாநில, தேசிய மற்றும் சர்வதேச பிறை நிலைபாடுகளின் உள்ள தவறுகளையும், நடைமுறை சிக்கல்களையும் புரிந்து கொண்டு பிறைகளின் துல்லியமான கணக்கீட்டை ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம், அதற்காக அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். அத்தகையை தெளிவை அவர்கள் பெற்றிட வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்.

உதாரணமாக தமிழக பிறை என்ற நிலைபாட்டை சரிகாண்பவர்கள், தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக முஸ்லிம்களுக்கு சுமார் 600 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சென்னையில் பிறை தெரிந்தாலும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், தமிழகத்தில் எங்கும் பிறை தென்படாமல் இருந்து தங்கள் ஊருக்கு மிக அருகாமையில் இருக்கும் கேரள பகுதியில் பிறை தென்பட்டால் அதை ஏற்கொள்ள முடியாத துர்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். கூடவே 3 நாட்களில் நோன்பையும், பெருநாட்களையும் அனுசரிக்கும் தவறான நிலைக்குதான் இந்நிலைபாடு இட்டுச்செல்லும்.

இதே நிலைதான் தேசிய பிறைக்கும் பொருந்தும். அதாவது தமிழகத்தில் வசிப்போருக்கு மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற வடஇந்திய நகரங்களைவிட மிக அருகாமையில் இலங்கை உள்ளதை கவனத்தில் கொள்க. பிறைகளை தீர்மானிப்பதில் மனிதன் தன் நிர்வாக வசதிக்காக போட்டுக்கொண்ட மாநில, தேசிய எல்லைக் கோட்டிற்கு இவ்வளவு அதிகாரமா? – சுப்ஹானல்லாஹ்.

மக்களே சர்வதேசபிறை என்ற நிலைபாட்டிலுள்ளவர்களுக்கும் உலக நேரம் 18 UT க்கு அப்பால் உள்ள இடங்களில் பிறையின் பிறப்பு (அமாவாசை) நிகழும்போது இதுபோன்றதொரு பிரச்சனை வரும். காரணம் உலகில் எங்கு பிறை தென்பட்டாலும் அதை புறக்கண்ணால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்தநாள் நோன்பை, பெருநாளை அனுசரிப்போம் என்ற நிலைபாட்டில்தான் சர்வதேசபிறையினரும் இருக்கின்றனர். புரியும்படி சொன்னால் ஆப்பிரிக்காவிற்கு மேற்கிலுள்ள நாடுகளில் முதல் நாளின் பிறை தெரிகிறது என்று வைத்துக்கொள்வோம், இந்தியாவிலுள்ளவர்கள் நள்ளிரவில் இந்த பிறை தகவலை பெறுவார்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற கிழக்கத்திய நாடுகளிலுள்ளவர்கள் மறுநாள் காலையில் இருப்பார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் முதல் நோன்பை இழந்து, இரண்டாவது நோன்பையே முதல்நோன்பாக கருதி பின்பற்றி வருகின்றார்கள். என்ன கொடுமை இது?.

முஸ்லிம்களே! அல்லாஹ்வால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கமான தீனுல் இஸ்லாத்தின் முக்கிய வணக்கங்களான நோன்பு, ஹஜ் மற்றும் பெருநாட்களை அனுசரிப்பதில் அல்குர்ஆனும் சுன்னாவும் தெளிவான வழியை காட்டித்தான் இருக்கும், அதில் முரண்பாடுகளோ, தவறுகளோ, நடைமுறை சிக்கல்களோ இருக்காது என்று முதலில் நம்பிக்கை வையுங்கள்.

ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ருதான் மஃரிபு அல்ல. அந்தந்த நாட்களில் தென்படும் பிறை அந்த நாளுக்குரியது, அடுத்த நாளைக்குரியது அல்ல. பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் பார்த்து கணக்கிட்டு வரவேண்டும். மேலும் உலக முஸ்லிம்கள் ரமழானையும், பெருநாட்களையும் ஒரே தினத்தில் அனுசரிக்க இயலும் என்பதற்கு குர்ஆன் சுன்னா கூறும் தெளிவான வழிகாட்டுதலை இந்திய ஹிஜ்ரி கமிட்டி பொதுமக்களுக்கு பலமுறை எத்திவைத்துவிட்டது.

எனவே சுய வெறுப்பு விருப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு பிறை விஷயத்தை திறந்த மனதுடன் ஆய்வு செய்யுங்கள். இறுதியில் பிறைகளின் அனைத்து வடிவங்களையும் கவனமாக பார்க்கவேண்டும், துல்லியமாக கணக்கிட்டும் வரவேண்டும் என்ற நிலைபாட்டிற்குத்தான் நீங்களும் வருவீர்கள் என்பதையும் அடக்கத்துடன் கூறிக்கொள்கிறோம்.

இவ்வருடத்தின் (1432) ரமழான் முதல்நாள் 31-07-2011 ஞாயிற்றுக் கிழமை என்று நாம் அறிவித்திருந்தோம். நாம் அறிவித்தபடி அன்று உலகின் பல்வேறு நாடுகளில் முதல் நாளைக்குரிய பிறை தென்பட்டதை நீங்களும் அறிவீர்கள்.

அதுபோல 06-08-2011 அன்று சனிக்கிழமை ரமழானின் 7 வது பிறையையும், 13-08-2011 சனிக்கிழமை ரமழானின் பவுர்ணமி என்கின்ற 14 வது பிறையையும் தெளிவாக பார்த்திருப்பீர்கள்.

மேலும் இவ்வருடம் ரமழான் மாதத்தின் உர்ஜூஃனில் கதீம் என்ற பிறையின் இறுதி வடிவம் ரமழான் 29வது தினமான 28-08-2011 அன்று ஞாயிற்றுக் கிழமை தென்படும். 29-08-2011 அன்று திங்கள் கிழமை பிறை பிறக்கும் அமாவாசை தினமாகும்.

வருகின்ற 30-08-2011 செவ்வாய்க் கிழமை, ஹிஜ்ரி 1432ன் ஷவ்வால் மாதத்தின் முதல் தினமாகும். எனவே நாம் அனைவரும் இவ்வருடத்தின் நோன்புப் பெருநாள் கொண்டாட வேண்டிய தினம் 30-08-2011 அன்று செவ்வாய்க் கிழமை என்பதையும் அறியத்தருகிறோம்.  பெருநாள் தினங்களில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் ஹராம் ஆக்கியதை முஸ்லீம்களாகிய நாம் அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம்.

 

 

 இவண்

 

இந்திய ஹிஜ்ரி கமிட்டி

160/101, வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி - 627103.   தமிழ்நாடு

Websites: - www.lunarcalendar.in,  www.hijricalendar.com,  www.hijracalendar.in, www.mooncalendar.in.

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  Mobile:-  99626 22000, 99626 33000,  99626 44000,  99624 77000, 99626 33844,   95007 94544, 99943 44292, 93440 96221, 94439 55333,  94432 55643,   99524 14885.

Read 2538 times