செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:37

காயல்பட்டினம் பிறை கருத்தரங்கம்! விரிவான செய்திகள்!!

Rate this item
(1 Vote)

காயல்பட்டினம் பிறை கருத்தரங்கம்! விரிவான செய்திகள்!!

 பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெருங்கிருபையால் கடந்த ஷவ்வால் 18, (24-08-2013) சனிக்கிழமை அன்று காயல்பட்டினம், துளிர் கேளரங்கத்தில் ஓர் இறை, ஓர் மறை, ஒர் பிறை என்ற மையக்கருத்தில் பிறை கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. 

இக்கருத்தரங்கத்தில் காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத்துகளையும் சார்ந்த ஆண்கள், பெண்கள் உட்பட, சுற்றுவட்டாரப் பகுதியைச்சார்ந்த தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சார்ந்த ஆர்வமுள்ள சுமார் 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் - அல்ஹம்துலில்லாஹ்.

 

 

முதலாவதாக காலை 9:30 மணியிலிருந்து 1:30 மணிவரை ஆர்வமுள்ள 100 நபர்களுக்கு மட்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றும், பின்னர் மாலை 4:30 மணிமுதல் இரவு 9:30 மணி வரை பொதுமக்களுக்கான கருத்தரங்கம் என்றும் இந்நிகழ்ச்சி முறைபடுத்தப்பட்டிந்தது.

காலை அமர்வுகளின் முதலாவதாக பிறைசார்ந்த இறைமறையின் வேத வசனங்களை மொழிபெயர்ப்போடு அல்ஹாபிழ் முஃபீஸூர் ரஹ்மான் அவர்கள் ஓதி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஹிஜ்ரி கமிட்டி ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் ஹிஜ்ரி கமிட்டியின் நிலைபாடுகளை சகோதரர் அஹ்மது ஸாஹிபு அவர்கள் சுறுக்கமாக விளக்கினார். 

அதன்பின்னர் சுமார் 10:30 மணியிலிருந்து 11:45 மணிவரை பிறை குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஹதீஸ்களும், மறக்கடிக்கப்பட்ட குர்ஆன் வசனங்களும் என்ற தலைப்பில் உரையாற்றிய  மௌலவி அப்துர்ரசீத் ஸலஃபி அவர்கள் தற்போதுள்ள முஸ்லிம்கள் பின்பற்றிவரும் பிறை நிலைபாடுகளையும் நாம் ஆராய்வதாக இருந்தால் அதுபற்றி நமது மார்க்கம் என்ன சொல்கிறது? என்பதை அறிந்திடவேண்டும் என்றும், முக்கியமாக ரமழான் மற்றும் பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா? என்பதையும் முதலில் தெளிவாக விளங்கிட வேண்டும் என்றும் இவைகளைத் தெரிந்து கொண்டாலே எது சத்தியம் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளங்கிடும் என்றும் தெரிவித்தார். மேலும்

'அல்லாஹ் பிறையின் படித்தரங்களை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவைகளின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு பிடியுங்கள். அவைகளின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை விடுங்கள். எனவே அவைகள் உங்கள் மீது மறைக்கப்படும்போது முப்பது நாட்களாக கணக்கிட்டு கொள்ளுங்கள்.'  அறிவிப்பாளர் இப்னு உமர் (ரழி) நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக் 7306.

''அல்லாஹ் நிச்சயமாக பிறைகளை தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவைகளை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நீங்கள் நோன்பு வையுங்கள். மேலும் அவைகளை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நிறைவு செய்யுங்கள். எனவே அவைகள் உங்கள் மீது மறைக்கப்படும்போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் மாதம் என்பது முப்பதை விட அதிகமாவதில்லை. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி)) நூல்: ஸஹீஹ் இப்னு ஹீசைமா 1789

போன்ற ஹதீஸ்களையும் அதில் உள்ளடங்கியுள்ள அல்அஹில்லா, மவாகீத், மவாகீத்து லின்னாஸ், லி ருஃயத்திஹி, ஃபஇன்கும்மஅலைக்கும், ஃபக்துரு, ஃபஉத்தூ போன்ற சொற்களையும் விளக்கிப் பேசினார்.

தேனீர் இடைவேளைக்கப் பின்னர் 11:50 மணியளவில் பிறை விளக்கக் சாட்சிகளோடு பிறைகளை எவ்வாறு கவனிக்க வேண்டும் என்பதையும் விஞ்ஞானி அலிமனிக்பான் அவர்கள் உரைநிகழத்தினார். 

அவரது உரையில் ஒரு மாதத்தின் முதல்நாளை நாம் சரியாக கணக்கிட வேண்டுமென்றால் முந்திய மாதத்தின் பிறையின் படித்தரங்களில் உள்ள தேய்பிறைகளையாவது கண்டிப்பாக பார்த்து, கணக்கிட்டு வந்திருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்திய அலிமனிக்ஃபான் அவர்கள் தேய்பிறைகளை கணக்கிடாமல் விட்டுவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் பார்க்கின்ற பிறை எந்த நாளை காட்டுகிறது என்பதை தோராயமாக அறிந்து கொள்ளும் வழிமுறையையாவது தெரிந்திருக்க வேண்டும்.

அதாவது மாதம் என்பது 29நாட்கள் அல்லது 30 நாட்களைக் கொண்டது. ஒரு மாதம் எத்தனை நாட்கள் கொண்டது என்பதை முன்கூட்டியே நாம் தோராயமாக அறிய வேண்டுமானால், மாலை சூரியன் முழுமையாக மேற்கு நோக்கி மறையும் நேரத்தில், பிறையை நாம் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் நம் தலைக்கு மேலே (சுமார் 86-90டிகிரியில்) நிலைபெற்றிருந்தால் அந்த பிறை 7 அல்லது 8 வது நாளை காட்டுகிறது. 

மாலை சூரியன் முழுமையாக மேற்கில் மறையும் போது, பிறை முழுநிலவு அளவில் கிழக்கு திசையில் உதித்துக் கொண்டிருந்தால் அந்த பிறை பௌர்ணமி நாளை தெரிவிக்கிறது. ஒரு மாதத்தில் பௌர்ணமி பெரும்பாலும் 14அல்லது 15 ம் நாளில் வரும். அந்நாளில் மேற்கில் சூரியனின் அஸ்தமனத்தையும் கிழக்கில் சந்திரன் உதிப்பதையும் காணலாம். 

அதிகாலை சூரியன் கிழக்கே உதிக்கும் வேளையில்,  நாம் நமது தலைக்கு மேல் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் இருந்தால் அந்த பிறை 21 அல்லது 22 வது தேதியை காட்டும் பிறையாகும்.

இதில் முதல் கால் பாதி நிலை 6-வது நாளில் வருவதும், பவுர்ணமி 13 அல்லது 16-வது நாளில் ஏற்படுவதும்,  இறுதி கால்பகுதி 23 வது நாளில் ஏற்படுவதும் அரிதானதாகும். இவற்றை துல்லியமாக பிறைகளை கணக்கீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

மேலும் சந்திரனின் தேய்ந்து வரும் மன்ஸில்களில் நாம் உற்று நோக்கிக்கொண்டு வந்தால், எந்த கிழமையில் சந்திரனின் ஒளி பிறையின் வடிவத்தை அடைகின்றதோ, அதே கிழமைதான் எதிர்வரும் சந்திர மாதத்தின் முதல் தினமாக இருக்கும். பிறந்த பிறையை மட்டும் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டம் என்று கூறித்திரிவோர் சந்திரனில் ஏற்படும் பிறைகளின் படித்தரமான மனாஜில்களை  منازل புறக்கண்ணால் அறிந்துகொள்ளும் இதுபோன்ற முறையை என்றைக்காவது மக்களுக்கு சொல்லி இருக்கிறார்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.

அதன்பின்னர் லுஹர் தொழுகை ஜமாஅத்தாக அரங்கத்திலேயே நிறைவேற்றப்பட்டது. லுஹர் தொழுகைக்கான இடைவேளைக்குப் பிறகு 1:15 மணியளவில் குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டல் படி ஒரு நாளின் துவக்கம் எப்போது என்பது பற்றி மௌலவி முஹம்மது கடாஃபி MISC அவர்கள் உரை நிகழ்தினார். ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ருதான் மஃரிபு அல்ல என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை தெரிவித்த அவர், மாற்றுக் கருத்துடையோரின் பலஹீனமான ஆதாரங்கள் குறித்தும் விளக்கிப்பேசினார்.

பிற்பகல் 2 மணி முதல் 3 மணிவரை மதிய உணவிற்கான இடைவெளி விடப்பட்டது. பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட சுமார் 120க்கும் மேற்பட்ட நபர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

மதிய உணவு இடைவேளைக்குப்பின்னர் 3 மணிமுதல் 4 மணிவரையும் பயிற்சிப்பட்டரையில் கலந்து கொண்டோருக்களின் கேள்விகளுக்கு மௌலவி அப்துர்ரஷீத் ஸலஃபீ அவர்கள் பதில் அளித்தார். ஹிஜ்ரி கமிட்டி மஸூராவின் முடிவின் படி அனைத்து கேள்விகளும் எழுத்துப்பூர்வமாகவே பெறப்பட்டன. அஸர் தொழுகை ஜமாஅத்தாக அரங்கத்திலேயே நிறைவேற்றப்பட்டது. பின்னரும் 5:30 மணிவரை எஞ்சிய கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது.

 

மாலை 5:30 மணியளவில் பொதுமக்களுக்கான கருத்தரங்க நிகழ்வுகள் துவங்கின.

கருத்தரங்கின் முதலாவதாக குர்ஆன் சுன்னா கூறும் நாட்காட்டியை அறிவோம் என்ற தலைப்பில் அழைப்பாளர் அப்துல்ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார். பல்வேறு குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி பேசிய அவர், ஹஜிரி நாட்காட்டியே குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமைந்த நாட்காட்டியாகும் என்பதை மஃரிபு வக்த் வரை தெளிவாக விளக்கி பேசினார்.

அதனைத் தொடர்ந்து மஃரிபு தொழுகை ஜமாஅத்தாக அரங்கத்திலேயே நிறைவேற்றப்பட்டது. 

தொழுகை முடிந்து தேனீர் இடைவேளைக்குப் பின்னர் இரவு 7:15 மணியளவில் தவறுகள் நிறைந்த கிரிகோரியன் நாட்காட்யை இஸ்லாம் அங்கீகரிக்கிறதா? என்ற தலைப்பில் அழைப்பாளர் செங்கிஸ்கான் அவர்கள் உரைநிகழ்த்தினார். கிரிகோரியன் நாட்காட்டியில் ஏற்பட்ட இடைச்செறுகல்கள், குளறுபடிகள, மாற்றங்கள் போன்றவற்றை சுட்டிக்காட்டிய அவர், ஆங்கில நாட்காட்டியிலுள்ள ஒவ்வொரு மாதங்களின் பின்னனியைப் பற்றி விளக்கமாக பேசினார். நம் கைகளில் தவழும் இரத்தினக்கல்லான ஹிஜ்ரி நாட்காட்டியின் அருமை தெரியாத சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் மாறிவிட்டதை பற்றி வேதனையுற்ற அவர் இந்த ஹிஜ்ரி நாட்காட்டியை எவ்வித வியாபார நோக்கமுமில்லாமல் தங்களது சொந்தப் பணத்தை செலவளித்துதான் ஹிஜ்ரிகமிட்டி வெளியிடுகிறது என்றார். இந்த ஹிஜ்ரி கமிட்டி என்பது ஒரு இயக்கமோ, அமைப்போ அல்ல மாறாக அல்லாஹ்வின் இந்த நாட்காட்டி மக்களிடையே நிலைபெற்று விட்டால் இந்த ஹிஜ்ரி கமிட்டியையே கலைத்து விடுவோம் என்று பகிரங்கமாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடாந்து 8:30 மணிக்கு பிறையும் புறக்கண்ணும் என்ற தலைப்பில் மௌலவி முஹம்மது கடாஃபி MISC அவர்கள் உரைநிகழ்தினார். அவர் பேசுகையில் ஹிஜ்ரிகமிட்டியினர் பிறைகளை பார்க்கவே தேவையில்லை என்று சொல்கின்றனர் என்று சர்வ சாதாரணமாக நம்மை குறித்து சிலர் அவதூறை பரப்பி விடுகின்றனர் என்றும் பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்கம் என்று நம்பியுள்ள பொதுமக்களும் இவர்களின் பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாந்து நாம் சொல்லும் சத்தியத்தை உள்வாங்கிடத் தவறிவிடுகின்றனர். அதனால்தான் பிறைகைளை புறக்கண்ணால் பார்த்து வருபவர்கள் யார்? என்பதையும் விளக்க வேண்டியுள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தார்.

பிறைகளை கணக்கிடுங்கள் என்று நாம் சொல்வதை ஏதோ ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கணிப்பொறியைத் தட்டிச் சொல்வதாக சிலர் நினைத்துக் கொண்டுள்ளனர். தமிழக வரலாற்றில் பல வருடங்களாக பிறைகளின் படித்தரங்களை புறக்கண்களால் பார்த்தும், கணக்கீட்டின் மூலமும் கவனமாக அவதானிப்பவர்கள் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினரைத் தவிர வேறு எவருமில்லை என்பதை அறியத்தருகிறோம். என்பதை ஆணித்தரமாக பதிவு செய்தார். பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்களால் பார்ப்பது மார்க்க சட்டமில்லை என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை முன்வைத்த அவர், நேர நெருக்கடியை கருத்தில் கொண்டு சுறுக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டார்.

பார்வையாளர்கள் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதை கருத்தில் கொண்டு மௌலவி ஜூபைர் ஃபிர்தவ்ஸி முஹம்மதி அவர்களின் உரைக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தையும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. 

சுமார் 1:30 மணிநேரம் நடைபெற்ற இக்கேள்விபதில் நிகழ்ச்சி இரவு 10 மணி வரை தொடர்ந்தது. கேள்விகளுக்கு அழைப்பாளர் சிராஜ் அவர்களும், மௌலவி அப்துர்ரஷீத் அவர்களும் தெளிவாக பதில் அளித்தனர்- இறுதியில் நன்றியுரையுடனும், கஃப்பாராவுடன் கருத்தரங்கம் நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ். பின்னர் இஷா தொழுகையை ஜமாஅத்தாக அரங்கத்திலேயே நிறைவேற்றப்பட்டன.  நிகழ்ச்சிகளை சகோதரர் அஹ்மது ஸாஹிபு நெறிப்படுத்தினார். கருத்தரங்கத்திற்கு வருகை தர வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெண்களுக்கு தனி இடவசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 

இப்பிறை கருத்தரங்கத்தின் வீடியோ பதிவுகள் www.mooncalendar.in என்ற இணைய முகவரியில் இன்ஷா அல்லாஹ் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

இவண்

ஹிஜ்ரி கமிட்டி

(இயக்கம், கட்சி, அமைப்புகளுக்கு அப்பாற்பட்டது)

 

  

Read 2149 times