Super User
Super User
Offline
0

பிறையும் புறக்கண்ணும் பகுதி : 27

தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர், தப்லீக் ஜமாஅத்தினர், ஸலஃபிகள் என்று பல்வேறு கொள்கைகளாலும், இயக்கங்களாலும் பிரிந்துள்ளனர். அனைத்துப் பிரிவினரும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி விஷயத்தில் ஒன்றுபட்டு ஓரணியாக வேண்டும் என்பதே நமது நோக்கம்.

சுன்னத் ஜமாஅத்தினர் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் என்று நான்கு விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர். இன்னும் ழயீஃபான ஹதீஸ்களை நடைமுறைப் படுத்துவதில் சுன்னத் ஜமாஅத்தினருக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மத்ஹபு இமாம்களின் சட்டங்கள், முன்னோர்களான பெரியார்களின் போதனைகளையும் சரியென நம்பி நடைமுறைப் படுத்துகின்றனர்.

பிறையை புறக்கண்களால் பார்த்தே அமல் செய்ய வேண்டும் என்பதற்கு எவ்வித மார்க்க ஆதாரமும் இல்லை என்பதை சுன்னத் ஜமாஅத்தினர் அறிந்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான செய்திகள் ஒருபோதும் மார்க்க ஆதாரமாகாது. இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் தீய சக்திகளின் கோர செயலினால் இப்பிறை விஷயத்தை மையமாக வைத்து நமது முஸ்லிம் உம்மத் பிரிந்து கிடக்கிறது என்பதையும் சுன்னத் ஜமாஅத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். பிறையை புறக்கண்ணால் பார்த்த பின்னர் 'அமல்' செய்வது சம்பந்தமாக நாம் இதுவரை கூறியுள்ள உண்மைகளை விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து படித்து தங்களது கொள்கைவாதிகளுக்கு சத்தியத்தை உடைத்துச் சொல்லக் கடமைப் பட்டுள்ளார்கள்.

இப்பிறை விஷயத்தில் பல்வேறு ஆதாரமற்ற பலவீனமான செய்திகளையும் நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் முகமாக அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் மீது மிகுந்த முஹப்பத் வைக்க வேண்டும் என்பது சுன்னத் ஜமாஅத்தினரின் பிரச்சாரம். நபி (ஸல்) அவர்கள் மீது உண்மையிலேயே முஹப்பத் வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்படியானால் மேற்படி பொய்ச் செய்திகளை உணர்ந்து தமிழக எல்லைக்குள் தான் பிறையை பார்ப்போம் என்ற தவறான நிலைப்பாட்டை விட்டொழிக்க வேண்டுகிறோம். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களும் வழிகாட்டியுள்ள படி ஹிஜ்ரி நாட்காட்டியின் பிறை கணக்கீட்டின் பக்கம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறோம். தாங்கள் காலம் காலமாக நம்பியிருந்த இந்தப் புறக்கண் பார்வை நிலைபாட்டை தூக்கி நிறுத்திட வேண்டுமென்றோ, தற்போதுதான் இவை உங்களுக்குத் தெரியவந்ததா? என்ற கோணத்திலோ சிந்திக்கும் பட்சத்தில் அத்தகைய சுன்னத் ஜமாஅத்தினக்கு ஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வறிக்கைகள் எத்தகைய பயனையும் அளிக்காது என்பதே உண்மையாகும்.

தவ்ஹீது ஜமாஅத்தினர் எனப்படுவோர் திருக்குர்ஆன், ஸஹீஹான ஹதீஸ்கள், ஆகிய இவ்விரண்டு மட்டும்தான் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் என்றும், இந்த இரண்டில் எதையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது என்றும் ஏற்று பின்பற்றுகின்றனர். இன்னும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளில்கூட குர்ஆனுக்கு முரண் இல்லை என தங்களுக்கு தெரிபவற்றை மட்டும்தான் ஏற்று நடப்போம் என்று தவ்ஹீது ஜமாஅத்தினர் பிரசாரம் செய்கின்றனர். அத்தகையோர் நாம் இதுவரை கூறியுள்ள உண்மைகளை விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து படித்து தங்களது கொள்கைவாதிகளுக்கு சத்தியத்தைச் சொல்லிடக் கடமைப் பட்டுள்ளார்கள். தங்களின் பிறை நிலைப்பாடுகளை பலமானதாகவும், ஆதாரமானதாகவும் நம்பி மக்களிடம் பிரச்சாரமும் செய்து விட்டதால், தற்போது இந்த உண்மைகளை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது? என்று தயக்கம் காட்டுவார்களேயானால் அத்தகைய தவ்ஹீதுவாதிகளுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் சத்தியக் கருத்துக்கள் எத்தகைய பயனையும் அளிக்காது என்பதை வேதனையோடு சொல்லிக் கொள்கிறோம்.

மேலும் தப்லீக் ஜமாஅத்தினர் எனப்படுவோர் சுன்னத் ஜமாஅத்தினர்களின் மார்க்க ஆதாரங்களைப் போலவே அவர்களும் ஏற்றிருந்தாலும், தப்லீக் தஃலிம் தொகுப்புகள் போன்ற பெரியவர்களின் போதனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். முஸ்லிம்களின் கடமைகளுள் ஒன்றான தொழுகையை இந்த முஸ்லிம் சமூகத்தில் நிலை நிறுத்தி அதை சரி செய்துவிட்டால் ஒரு முஸ்லிமின் பெரும்பாலான விஷயங்கள் சரியாகிவிடும் என்ற நல்ல நோக்கத்தில் தொழுகை விஷயத்தை மட்டுமே ஏவுவோம் என்ற நிலைப்பாட்டை கெட்டியாகப் பற்றிப் பிடித்து பிரச்சாரமும் செய்து வருகின்றனர். தொழுகை விஷயம் என்பது மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படைதான். அடிப்படையான விஷயங்களிலும் மிகமிக அடிப்படையான ஒரு விஷயமே தொழுகை என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்துமில்லை.

ஒரு மாணவன் துவக்கப் பாடசாலையில்தான் முதலாவதாக தன் கல்வியைத் துவங்குவான், பின்னர் நடுநிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும், பிறகு அவன் உயர்நிலைக் கல்வியை கற்க வேண்டும். அதன் பின்னர் கல்லூரி வாழ்கை, அதற்கு அடுத்தபடியாக பல்கலைக்கழகங்களில் துறைசார்ந்த ஆய்வு என்று கல்விக்கு பல படித்தரங்கள் உள்ளன. தொழுகையை சரி செய்து கொள்ள வேண்டும் என்ற தப்லீக் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு ஒரு மனிதனின் துவக்கப் பாடசாலை என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். ஒரு மாணவன் துவக்க பாடசாலையிலேயே இறுதி காலம் வரை இருக்க வேண்டும் என்பது அறிவார்ந்த வாதமாக இருக்க வாய்ப்பில்லை. தொழுகை என்ற கடமையோடு நோன்பு, ஜக்காத், ஹஜ், இஸ்லாத்தை பிறருக்கு எடுத்துச் சொல்வது போன்ற பல்வேறு கடமைகள் நமக்கு இருக்கின்றன என்பதையும் கண்ணிமிக்க தப்லீக் ஜமாஅத்தினர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தப்லீக் ஜமாஅத்தினர்கள் வானத்திற்கு மேலேயும் பூமிக்குக் கீழேயும் உள்ள விஷயங்களை மட்டுமே கருத்தில் கொள்வார்கள் என்ற மலிவான குற்றச்சாட்டை பொய்யாக்கிட இனியேனும் அவர்கள் முயல வேண்டும். தங்களின் அழைப்புப் பணிகளுக்கு மத்தியில் மனிதர்களுக்கு நாள்காட்டியாகவும், ஹஜ்ஜை அறிவிப்பதாகவும் அல்லாஹ் கூறுகின்ற இந்தப் பிறை விஷயத்தை அக்கரையோடு கவனம் எடுக்க வலியுறுத்துகிறோம். 'ஓர் இறை', 'ஓர் மறை', 'ஒரே பிறை' என்று இந்த முஸ்லிம் உம்மத்தை ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுத்திட இருக்கும் ஒரே வாய்ப்பான இந்திய ஹிஜ்ரி கமிட்டியின் பிறை தீர்வுகளை கருத்தில் கொள்ள வேண்டும். மாறாக இப்பிறை பிரச்சனையை ஒரு பொருட்டாகவே கருதாத பட்சத்தில் அத்தகைய தப்லீக் ஜமாஅத்தினருக்கும் ஹிஜ்ரி கமிட்டியின் பிறை ஆய்வு கருத்துக்கள் எத்தகைய பிரதிபலனையும் அளிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்னும் ஸஹாபாக்களின் ஏகோபித்த கருத்தையும் பின்பற்ற வேண்டும், நம் காலத்திற்கு முன்னர் வாழ்ந்து மறைந்த நல்ல ஸலஃபு ஸாலிஹீன்களின் கருத்துக்களையும் ஏற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்களே ஸலஃபிகள் என்று அழைக்கப் படுகின்றனர். ஸலஃபிகள் எனப்படுவோரில்

• அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்களை மையமாகக் கொண்ட ஸலஃபி அல்பானிய்யா என்ற பெயரில் ஒரு பிரிவினர்,


• அரபு உலகின் சம காலத்தில் வாழ்ந்து மறைந்த அறிஞரான பெரியவர் இப்னல்பாஸ் என்ற பின்பாஸ் அவர்களின் சிந்தனைகளை மையப்படுத்தி பின்பற்றும் ஸலஃபிகள் பின்பாஸிய்யா என்ற பெயரில் மற்றொரு பிரிவினர்,


• இன்னும் மறைந்த மற்றொரு அறிஞர் ஸாலிஹ் அல் உதைமீன் அவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போர் என்று பல பிரிவுகளாக இருப்பதை நாமும் அறிவோம்.

இந்நிலையில் ஸலஃபிக் கொள்கையுடையோர் அனைவரும் நபித்தோழர்களான ஸஹாபாக்களை சிறந்த ஸலஃபுகளாக ஏற்றுக் கொள்வர். 'குரைபு சம்பவம்' போன்ற செய்திகளை முன்னிருத்தி ஸஹாபாக்கள் முரண்பட்ட இருவேறு நாட்களில் நோன்பை ஆரம்பித்ததாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இப்பிறை விஷயத்தில் பல்வேறு பலவீனமான செய்திகள் அந்த ஸஹாபாக்களின் பெயரைப் பயன்படுத்தியே புனையப் பட்டுள்ளன. குறிப்பாக ஒட்டுமொத்த அனைத்து ஸலஃபுகளையும் தாண்டிய கண்ணியத்தையும், சிறப்பையும், அந்தஸ்தையும் பெற்றுள்ள அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள், நோன்பு நோற்க ஹராமான தினத்தில் அவர்கள் நோன்பை நோற்றிருந்தார்கள் என்று வாகனக்கூட்டம் அறிவிப்பு போன்றவை இட்டுக்கட்டி புனையப்பட்டு அவர்களின் கண்ணியத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது.

பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பின்னர்தான் ரமழான் மாதத்தின் முதல் நோன்பைத் துவங்க வேண்டும் என்ற சித்தாந்தத்திற்கு மேற்படி பலவீனமான சம்பவங்கள்தான் முட்டுக் கொடுக்கப் படுகின்றன. மார்க்கத்தில் பெயரால் ஏற்படுத்தப் பட்டுவிட்ட இத்தகைய மோசமான நிலையை ஸலஃபிகள் நிச்சயமாக மக்களுக்கு எடுத்துச் சொல்லிடக் கடமைப் பட்டுள்ளார்கள். இன்னும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் இரண்டாவது கலீஃபாவும் தலைசிறந்த நபித்தோழருமான செய்யிதுனா உமர் (ரழி) அவர்களின் ஆட்சித் தலைமையில், இஸ்லாமிய நாட்காட்டியின் முக்கியத்துவத்தை அன்றைய ஸஹாபாக்கள் தெளிவாக அறிந்து கொண்டனர். ஹிஜ்ரி நாட்காட்டியின் ஆண்டுகளின் எண்ணிக்கையை நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்திலிருந்து தொடங்கிய ஒட்டுமொத்த ஸஹாபாக்களின் ஏகோபித்த ('இஜ்மாவுஸ் ஸஹாபா') முடிவை ஸலஃபுக் கொள்கையுடையோர் ஏற்று ஹிஜ்ரி நாட்காட்டியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முன்வர வேண்டும்.

இதை விடுத்து நபி (ஸல்) அவர்கள், மற்றும் நபித்தோழர்களின் கண்ணியத்தை கருத்தில் கொள்ளாமல், கண்ணை மூடிக்கொண்டு ஹிஜ்ரி கமிட்டியினரை எதிர்ப்பதில் கவனம் செலுத்து வார்களேயானால் அத்தகைய பரிதாப நிலையுள்ள ஸலஃபிகளுக்கும் ஹிஜ்ரி கமிட்டியின் எக்கருத்துக்களும் எப்பயனையும் அளிக்காது என்று நிதர்சனமாகக் கூறிக் கொள்கிறோம்.

ஹிஜ்ரி கமிட்டியின் கருத்துக்களை தூய நோக்கோடு படித்ததின் காரணமாக, இதுநாள்வரை நம்பியிருந்த பிறை கோட்பாடுகளை தற்போது எப்படி மாற்றிக் கொள்வது? என்ற சிந்தனை தங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். அல்லது இக்கருத்துக்கள் சரியானதாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தும் போது நமது சமுதாய மக்களின் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது? என்று நீங்கள் நினைக்கலாம். சத்தியத்தை உளப்பூர்வமாக உணர்ந்து மேற்படி சிந்தனையில் நீங்களும் இருந்தால், தாங்கள் நிதர்சனமாக விளங்கிக் கொண்ட சத்தியத்தை துணிந்து உரைக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.

உண்மையை உணர்ந்து வெளிப்படுத்துவோரும், தவறை திறுத்திக் கொள்வோரும்தான் உத்தமர்கள், உயர்ந்தவர்கள், இறை உவப்பைப் பெற்றவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். ஒரு முஃமின் சத்தியப்பாதையில்தான் இருக்க வேண்டும். எதிர்ப்புகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் அஞ்சிவிடக் கூடாது. நேரான வழியில் நடப்பதற்கும், சத்தியத்திற்கு சான்று பகர்வதற்கும் தயங்கிடவே கூடாது. இதைத்தான் நமது மார்க்கம் போதிக்கிறது. இறைவனின் சத்தியப்பிறை அத்தாட்சிகளை உலகிற்கு உணர்த்த, உண்மையை உரக்கச் சொல்லிட எங்களோடு புறப்பட்டு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறோம். 'வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது இஸ்லாமாக இருக்கட்டும்' என்ற சிந்தனையோடு இப்பிறை விஷயத்தில் எங்களோடு கைகோத்து செயல்பட உங்களையும் அழைக்கிறோம்.

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply