பிறையும் புறக்கண்ணும் பகுதி : 28
விமர்சனம் :
உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டிகள் பல உள்ளன. அல்ஜீரியா, துனிசியா மற்றும் லிபியா போன்ற நாடுகள் சந்திரக் கணக்கீட்டு முறையை பின்பற்றினாலும் அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்திற்கு ஏற்றாற்போல கணக்கு முறைகளைக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஹிஜ்ரி கமிட்டியினராகிய நீங்கள் வெளியிடும் நாட்காட்டியை மட்டும் எந்த அடிப்படையில் துல்லியமான கணக்கு என்று பின்பற்றச் சொல்கிறீர்கள்? கணக்கீட்டாளர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் இல்லையா?
விளக்கம்:
மேற்படி குற்றச்சாட்டில் கூறியுள்ளதுபடி அல்ஜீரியா, துனிசியா மற்றும் லிபியா போன்ற நாடுகள் சந்திரக் கணக்கீட்டு முறையைப் பின்பற்றி ஹிஜ்ரி நாட்காட்டியை வெளியிட்டுள்ளனர் என்ற கூற்று வடிகட்டிய பொய்யாகும். குர்ஆன் சுன்னா ஒளியில் மேற்படி நாடுகள் துல்லியமான ஹிஜ்ரி நாட்காட்டியை வெளியிட்டுள்ளதாக பிரச்சாரம் செய்வோர் அந்நாட்காட்டிகளை முதலில் நமக்கு அனுப்பித் தரட்டும்.
சந்திர மாதத்தின் முதல்நாளில், சூரியன் மறைந்த பிறகு பிறையை பார்ப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் பிறைக்கும் சூரியனுக்கும் உள்ள கோணதூரம் (Angular Distance) அல்லது நீட்சி (Elongation) அல்லது பிறையின் ஒளிர்வு (illuminations) போன்றவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு சிலர் மாதங்களை ஆரம்பிக்கின்றனர். அதற்காக அவர்கள் நமதூர் குத்துமதிப்பு காலண்டர்களைப் போல காலண்டர் ஒன்றை தயாரித்துள்ளனர் என்பதே உண்மை.
மேற்படி குத்துமதிப்பு காலண்டர்கள் குர்ஆன் சுன்னாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பிறையை புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்பதை நம்பி தயாரிக்கப் பட்டவையாகும். எனவேதான் அவை ஒன்றோடொன்று முரண்படுகிறது. மேற்படி காலண்டர்களை ஹிஜ்ரி காலண்டரோடு ஒப்பிட்டுக் கூறுவதை அறியாமையின் உச்சகட்டம் என்றே கூறவேண்டும்.
அல்ஜீரியா, துனிசியா மற்றும் லிபியா போன்ற நாடுகளின் காலண்டர்கள் முரண்பட்டு உள்ளன என்று வாதம் வைக்கின்றனர். புறக்கண்ணால் பிறையைப் பார்க்க வேண்டும் என்பதற்காக போடப்பட்ட குத்துமதிப்பு காலண்டர்கள் முரண்படுவதில் என்ன ஆச்சரியம் உள்ளது? இவர்கள் ஏன் அல்ஜீரியாவுக்கும், துனிசியாவுக்கும்,லிபியாவுக்கும் செல்ல வேண்டும்? நமதூர் சர்வதேசப்பிறை இயக்கத்தின் காலண்டரும், தமிழகப்பிறையை சரிகாணும் இயக்கத்தவரின் காலண்டரும் முரண்பட்டு இல்லையா?.
நமதூர் தத்தமது பகுதி பிறையினர், தமிழகப் பிறையினர், ஒரு நாடு அளவுக்குள்ள எல்கையை ஒப்புக் கொண்ட தேசியப் பிறையினர் மற்றும் சர்வதேசப் பிறையினர் என்று பிறையை புறக்கண்களால் பார்க்கும் நிலைபாடுகளைக் கொண்டுள்ளவர்கள், ரமழான் துவக்கத்தில் முரண்படுகிறார்கள். அவ்வாறே மேற்படி காலண்டர்களும் முரண்படுகின்றன. எனவே மேற்படி காலண்டர்கள் பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்த்த பிறகுதான் அமல் செய்வோம் என்ற அணியைச் சார்ந்தவைகளே. அவை ஹிஜ்ரி காலண்டரைச் சார்ந்தவை அல்ல என்பதை முதலாவதாக புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் சந்திரனைக் கணக்கிடுவதில் முரண்பாடு உள்ளது. எனவே கணக்கீட்டு முறையை பின்பற்றக் கூடாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இப்படி வாதிப்பதே சிறுபிள்ளைத் தனமான வாதமாகத் தெரியவில்லையா? அவர்களைப் பார்த்து நாம் கேட்பது இதுதான். ஒருவர் ஐந்தையும் ஐந்தையும் கூட்டினால் பத்துவரும் என்கிறார் (5+5=10).மற்றொருவரோ ஐந்தையும் ஐந்தையும் கூட்டினால் பதினொன்று என்று சொல்கிறார் (5+5=11) என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இருவரும் முரண்பட்டு சொல்வதினால் நான் கணக்குப் பாடமே படிக்க மாட்டேன்! எங்கள் குழந்தைகள் கணிதப் பாடத்தை படிக்க அனுமதிக்க மாட்டேன்! என்று யாராவது கூறுவார்களா? ஐந்தையும் ஐந்தையும் கூட்டினால் என்ன வரும்? என்பதை ஆய்வு செய்வதுதானே நமது கடமை. மாறாக கணக்கே ஹராம் என்று ஃபத்வா கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்ன அறியாமை இது? சிந்தியுங்கள் மக்களே!.
குர்ஆன் சுன்னா ஒளியில் துல்லியமான விஞ்ஞான கணக்கீட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே நமது ஹிஜ்ரி காலண்டர். பல ஆண்டுகளாக நாம் வெளியிட்டு வரும் ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகளுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சியான பிறைகளே சாட்சியாகும். ஹிஜ்ரி நாட்காட்டி பௌர்ணமி என்று தெரிவித்துள்ள அந்தக் கிழமை பௌர்ணமி தினமாக உள்ளதா? இல்லையா என்பதை மக்களே உறுதிபடுத்திக் கொள்ளலாம். நாம் அமாவாசை எனும் புவிமைய சங்கமதினம் என்று குறிப்பிட்டுள்ள அந்த நாள் அமாவாசை தினமாக உள்ளதா இல்லையா? என்பதையும் மக்களே உறுதிபட அறிந்து வருகின்றனர். மேலும் சந்திரனின் முதல் கால்பகுதி நாள், இறுதிகால் பகுதி நாள் என்று நாம் காலண்டரில் குறிப்பிட்டுள்ள நாட்களில் பிறையின் வடிவங்களும் அதன் கோணவிகிதமும் சரியானதாக உள்ளனவா என்பதையும் நீங்களே பார்த்து ஆய்வு செய்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் என்கிறோம்.
சரி, ஒரு வாதத்திற்காக பல ஹிஜ்ரி காலண்டர்கள் உள்ளன என்றே வைத்துக் கொள்வோம். பிறையை புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்று கூறும் அனைவரும் ஒற்றுமையாக, முரண்படாமல், ஓர் அணியில்தான் இருக்கிறார்களா? இல்லையே. எத்தனை கருத்துள்ளவர்களாக அவர்கள் பிரிந்துள்ளனர் என்பதை கீழே பட்டியலிடுகிறோம்.
1- சர்வதேசப்பிறை நிலைபாடு (Internatioanl Sighting).
2- தத்தமதுபகுதி பிறை நிலைபாடு (Local Sighting).
3- பிறை பார்க்கப்படும் எல்கை ஒரு நாடு என்ற அளவில் இருக்கலாம் என்றமாநில அளவு பிறை நிலைபாடு (State Level Boundary)
4- தேசியப் பிறை நிலைபாடு (National Boundary)
5- சவூதி அரேபியாவின் பிறைத் தகவலை (Following Saudi Arabia) ஏற்று பின்பற்றி வருபவர்கள்.
6- 'இம்கானே ருஃயத்' என்ற பிறை நிலைபாடு.
7- மாதங்களை ஆரம்பிக்க மக்கா தேதிக்கோடு (Makkah Date Line) என்ற பிறை நிலைபாடு.
8- ரமழானுக்கும், ஷவ்வாலுக்கும் சர்வதேசப் பிறை, ஹஜ் மாதத்தை துவங்குவதற்கு சவூதி அரசாங்க முடிவு என்ற பிறை நிலைபாடு.
மக்களே இவர்களின் வாதத்தின்படி உலகில் காலண்டர்கள் பல உள்ளன. எனவே ஹிஜ்ரி காலண்டரை பின்பற்றக் கூடாது என்று வாதம் வைத்தவர்கள், பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்ற கருத்தில் இந்த அளவுக்கு முரண்பாடுகள் உள்ளன என்பதை சிந்திக்கத் தவறியது ஏன்?.
கணக்கீடு முறையில் பல காலண்டர்கள் உள்ளது அதனால் ஹிஜ்ரி காலண்டரைப் பின்பற்றக் கூடாது என்றால் புறக்கண் பார்வை என்ற நிலைப்பாட்டில் அதிக முரண்பாடுகள் உள்ளதால் பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று இவர்கள் இனி பிரச்சாரம் செய்யத் தயாரா? என்று கேட்கிறோம்.

Please login to post a reply
You will need to be logged in to be able to post a reply. Login using the form on the right or register an account if you are new here.
Register Here »