Super User
Super User
Offline
0

பிறையும் புறக்கண்ணும் பகுதி : 33

 

ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள், பவுர்ணமி தினம், வளர்பிறை மற்றும் தேய் பிறைகளின் கணக்கீட்டை அமெரிக்காவின் நாஸா நிறுவனம்தானே வெளியிட்டுள்ளது. நீங்கள் நாஸாவின் கணக்கீட்டை எந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறீர்கள்?

விளக்கம்:
ரமழான் நோன்பு ஆரம்பம், இரு பெருநாட்கள் போன்ற மார்க்கத்தின் இபாதத்துகளை நிர்ணயம் செய்வதற்கு பிறந்த முதல்நாளின் பிறையை அது மறையும் மஃரிபு வேளையில் புறக்கண்களால் பார்த்த பிறகுதான் மாதத்தைத் துவங்க வேண்டும் என்ற தீவிர நம்பிக்கையின் வெளிப்பாடுதான் மேற்படி கேள்வியாகும். பிறை பார்க்கப்படுவதாக சொல்லப்படுபவற்றை பற்றி நாம் கேள்வி கேட்டால், நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான கணக்கீட்டை எதிர்மறையாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாஸாவின் கணக்கை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள்.

பிற மதத்தவர்களின் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ள அறிய கண்டுபிடிப்புகளை, தொழில்நுட்ப சாதனங்களை தங்கள் வசதிக்காகப் பயன்படுத்திடும் இவர்கள் இப்படியொரு கேள்வியைக் கேட்கலாமா? ஒரு விஷயத்தை ஆய்வு செய்யும் போது ஆத்திரப்படாமல் நிதானமாகவும், உளத்தூய்மையோடும், நல்லெண்ணத்துடனும் ஆய்வு செய்தால்தான் அறிவுப்பூர்வமான, உண்மையான கேள்விகளும், கருத்துகளும் பிறக்கும்.

நாஸா வெளியிட்டுள்ள கணக்கீடுகள் சரியானதுதானா? என்று நாம் பரிசோதித்து அறிந்து சரிபார்க்க முடிந்த காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்நிலையில் இப்படியொரு கேள்வியை நம்மை நோக்கி இவர்கள் எழுப்பியுள்ளது இவர்களின் முதிர்ச்சியற்ற நிலையையே காட்டுகிறது. அடிப்படையற்ற கேள்வியை கேட்டுவிட்டு அறிவார்ந்த கேள்வியை எழுப்பியதாக நினைத்துக் கொள்கின்றனர் போலும்.

முஸ்லிம்களுக்கு உதவி செய்வதற்காகவா நாஸா நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது? அல்லது நாஸா விஞ்ஞானிகள் ஹிஜ்ரி கமிட்டியினருக்கு சொந்தக்காரர்களா? முஸ்லிம்கள் சந்திரனின் படித்தரங்களால் அமைந்த ஹஜ்ரிகாலண்டரை வெளியிட வேண்டும் என்பதற்காகவா அவர்கள் சந்திரனின் படித்தரங்களை கணக்கிட்டுள்ளார்கள் - இல்லையே!. அவர்களின் சுய ஆராய்ச்சிக்காகவும், அவர்களின் செயற்கைக் கோள்கள் உட்பட விஞ்ஞான ஆய்வு சாதனங்கள் துல்லியமாக இயங்கவுமே சூரியன், சந்திரன் மற்றும் பிற கோள்களின் சூழற்சிகளை துல்லியமாகக் கணக்கிட்டு வைத்துள்ளார்கள். அவர்களின் சுயநலத்திற்காகத்தான் இவ்வளவு ஆய்வுகளையும் செய்து வைத்துள்ளார்களே தவிர முஸ்லிம்களுக்கு உதவி செய்வதற்காக அல்ல. இவையே உண்மையாகும்.

இதுவல்லாமல் ஹிஜ்ரி காலண்டரை எங்கள் கணக்கீட்டின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளுங்கள் என்று இதே நாஸாவினர் ஒரு கணக்கீட்டை உலகிற்குத் தந்தால் அதில் முதலில் சந்தேகம் கொள்பவர்களாக நாங்களாகத்தான் இருப்போம்.

இவர்கள் அமாவாசை நாளில்கூட சவுதியில் பிறை புறக்கண்களால் பார்க்கப்பட்டது என்று வெளியிடப்படும் தகவல்களை உண்மை என தக்லீது செய்வதைப்போல நாம் நாஸாவை தக்லீது செய்யச் சொல்லவில்லை. நாஸா வெளியிடும் அந்தத் துல்லியமான சந்திர சுழற்சியின் கணக்கீடுகளை சரி பார்க்காமலும், உறுதி செய்யாமலும் ஹிஜ்ரி காலண்டரின் கணக்கை நாம் வெளியிடவில்லை. மேலும் நாஸாவின் சந்திரக் கணக்கீட்டை மட்டும் வைத்துக் கொண்டு நாம் காலண்டர் வெளியிடவில்லை. அப்படி நாம் தயாரிப்பதாகத் தவறான ஒரு யூகத்தை இவர்களுக்குச் சொன்னது யார்? இதையாவது தெளிவு படுத்தட்டும்.

நாஸா வெளியிட்டுள்ள சந்திர, சூரியக் கணக்கீடுகள் சரியானதுதானா? என்பதை பரிசோதிக்கும் அளவிற்கு ஆய்வாளர்களை ஹிஜ்ரி கமிட்டிக்கு அல்லாஹ் வழங்கி தனது நாட்காட்டியை தவறுகளிலிருந்து தூய்மையாக்கி வைத்துள்ளான் - அல்ஹம்துலில்லாஹ். பிறை விஷயத்தில் சவுதி அரேபியாவின் தொலைக்காட்சியை, அல்லது இவர்கள் இயக்கத் தலைமைகளின் அறிவிப்புகளை இவர்கள் கண்மூடி பின்பற்றுவதைப் போல, ஹிஜ்ரி காலண்டரை நாம் கண்மூடி பின்பற்றச் சொல்லவில்லை.

இன்னும் நாம் வெளியிட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகளுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சியான பிறையின் படித்தரங்களே சாட்சி பகர்கின்றன. ஹிஜ்ரி நாட்காட்டி பௌர்ணமி என்று தெரிவித்துள்ள அந்தக் கிழமை பௌர்ணமி தினமாக உள்ளதா? இல்லையா என்பதை மக்களே உறுதிபடுத்திக் கொள்ளலாம். நாம் அமாவாசை எனும் புவிமைய சங்கம தினம் என்று குறிப்பிட்டுள்ள அந்த நாள் அமாவாசை தினமாக உள்ளதா இல்லையா? என்பதையும் மக்களே உறுதிபட அறிந்து வருகின்றனர்.

மேலும் சந்திரனின் முதல் கால்பகுதி நாள், இறுதிகால்பகுதி நாள் என்று நாம் காலண்டரில் குறிப்பிட்டுள்ள நாட்களில் அந்தந்த மன்ஜிலில் பிறையின் வடிவங்களும், அதன் கோண விகிதமும் சரியானதாக உள்ளனவா? என்பதையும் நீங்களே பார்த்து ஆய்வு செய்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் என்று மீண்டும் பதிவு செய்கிறோம்.

அல்லாஹ்வின் உதவியால் ஹிஜ்ரி நாட்காட்டியை பல வருடங்களாக வெளியிட்டு இதை ஒரு சவாலாகவே வைத்து வருகிறோம். அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகளை, அவனது நாட்காட்டியை இதுவரை யாராலும் பொய்யாக்கிட இயலவில்லை – அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் நாட்காட்டிக்கு எதிரான மாநிலப் பிறை, தேசியப் பிறை மற்றும் சர்வதேசப் பிறை போன்று எந்தப் பிறை போர்வைகளில் ஒளிந்து கொண்டிருப்பவர்கள் என்னதான் முயற்சித்தாலும், கியாமநாள் வரை சூழ்ச்சிகள் செய்தாலும், சத்தியத்தை தங்கள் வாய்களால் ஊதி அணைத்திட முயன்றாலும் அவர்களால் வெற்றிபெற இயலாது என்பதை மட்டும் சொல்லி வைக்கிறோம்.

மக்களே! நமது ஹிஜ்ரி காலண்டரின் துல்லியமான பிறைக் கணக்கீட்டை பொய்யாக்க நினைத்தவர்களின் சூழ்ச்சிகள் இதுவரை தோல்வியில் முடிந்துள்ளதுதான் வரலாறு. அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகளுக்கு முன் தோற்றுப்போனவர்கள் நமது எஜமானனான அல்லாஹ்விடம் மண்டியிடாமல் அடம் பிடிக்கின்றனர். ஹிஜ்ரி நாட்காட்டிக்கு எதிராக பொய்ச் செய்திகளை மக்களிடம் பரப்பி வருகின்றனர். அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் எதிராகப் போர்ப்பிரகடனம் செய்யத் துணிந்துள்ளனர். அல்லாஹ்வைத் தவிர இவர்களுக்கு யார் நேர்வழி காட்டிட முடியும்? இதுபோன்ற ஜாஹிலியாவிலிருந்து நம்மை வல்ல அல்லாஹ் பாதுகாப்பானாக.

மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலை நாட்டவே நாடுகிறான். (அல்-குர்ஆன் 8:8)

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply