சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை!

Super User
Super User
Offline
0

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...

சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை!

ஹிஜ்ரி 1433 ஆம் ஆண்டின் இறையருள் பொழியும் இனிய ரமழானின் இறுதிப் பகுதியை நாம் அனைவரும் கடந்து கொண்டிருக்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ். இப்பிரசுரத்தின் தலைப்பை படித்தவுடன் சிலருக்கு நெருடல் ஏற்படலாம், சிலர் கோபமும் படலாம். எனினும் யாரையும் கோபமூட்டுவது ஹிஜ்ரி கமிட்டியினராகிய எங்களின்  நோக்கமல்ல, அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை.

காரணம் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கத்திற்கு சொந்தக்காரர்களாகிய முஸ்லிம்கள், பிறையை வைத்து பிரியக்கூடாது என்றும், பிறைகளால் முஸ்லிம் சமுதாயத்திற்குள் குழப்பம் ஏற்படும் அளவிற்கு வல்ல அல்லாஹ் தன் மார்க்கத்தை பலவீனமாக படைத்திடவில்லை என்பதையும் ஆணித்தரமாக பதிவுசெய்து அதை சர்வதேச முஸ்லிம் சமூகத்திற்கு மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். 

ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ருதான்; மக்ரிப் அல்ல. அந்தந்த கிழமைகளில் தென்படும் பிறை அந்தந்த கிழமைகளுக்கே உரியது; அடுத்த கிழமைக்குரியது அல்ல. குர்ஆனின் (10:5,36:39) அறிவுறுத்தலின் படி பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் நாம் கவனமாக உற்றுநோக்கி  கணக்கிட்டு வரவேண்டும். உலக முஸ்லிம்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை என்ற 24 மணிநேரம் கொண்ட ஒரே நாளில் தங்களின் ஜுமுஆ தொழுகையை நிறைவேற்றுவது போலவே ரமழான் நோன்பை 24 மணிநேரம் கொண்ட ஒரே நாளுக்குள் ஆரம்பிக்க வேண்டும். நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாளை ஒரே நாளுக்குள் அனுசரிக்க வேண்டும். மற்ற மாதங்களையும் இவ்வாறே முறையாக ஆரம்பிக்க வேண்டும். இதுவே சரியான வழிமுறையாகும் என்ற பேருண்மையையும், பிறை குழப்பத்திற்கு இஸ்லாம் காட்டும் மிகச்சரியான தீர்வையும், குர்ஆன் சுன்னா கூறும் தெளிவான வழிகாட்டுதலையும் மக்களுக்கு நாம் எத்திவைத்து வருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.

அந்த அடிப்படையில் கடந்த வியாழக்கிழமை (19.07.2012) அன்றுதான் ஷஅபான் மாதத்தின் கடைசி நாளாகும். ஆனால், அன்றைய தினம் பிறையை உலகில் புறக்கண்களால் யாராலும் பார்க்க முடியாத அமாவாசை நாளாகும். வெள்ளிக்கிழமை (20.07.2012) அன்று ஹிஜ்ரி 1433ன் ரமழான் மாதம் ஆரம்பம் என நாம் ஏற்கனவே அறிவித்தோம். அதை உண்மைப்படுத்தும் வகையில் அன்று மக்ரிப் வேளையில் உலகின் பல்வேறு நாடுகளிலும் ரமழான் மாதத்தின் முதல் பிறையை அது மறையும் நேரத்தில் முஸ்லிம்கள் கண்டார்கள்.

 

மறு வியாழக்கிழமை (26.07.2012) அன்று பிறை அரைவட்ட வடிவமாகி ரமழானின் 7ஆம் நாள் எனக் காட்டியதையும், அதேபோல இந்த வருட ரமழான் மாதத்தின் 14ஆம் நாளான வியாழக்கிழமை (02.08.2012) அன்று பௌர்ணமி நிலவு முன்கூட்டியே கணக்கிட்டு வெளியிட்ட நம்முடைய நாட்காட்டி தேதிகளுக்கும்  நாம் புறக்கண்ணால் பார்த்ததற்கும் சரியாக உள்ளது என்பதை ஆதாரத்துடன் மக்கள் மன்றத்தில் மீண்டும் உறுதி செய்தோம்; அல்ஹம்துலில்லாஹ்.

ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளை நாம் துல்லியமாக முன்கூட்டியே முடிவு செய்து, புதிய மாதத்தை தவறில்லாமல் ஆரம்பிப்பதற்காக  வல்ல அல்லாஹ் குர்ஆனின் 36:39 வது வசனத்தில் உர்ஜூனில் கதீம் என்ற நிலை குறித்துக் கூறியுள்ளான். இதை நாம் நம் புறக்கண்ணால் பார்க்கவியலும். பிறையின் இந்த இறுதிப் படித்தரத்தை எதிர்வரும் வியாழக்கிழமை (16.08.2012) அன்று ஃபஜ்ர் வேளையில் கிழக்கு திசையில் நாம் காணலாம்.

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை (17.08.2012) அன்று இவ்வாண்டு ரமழான் மாதத்தின் இறுதி நாள் அமாவாசையாகும். இப்பிறையை உலகில் யாராலும் தம் புறக்கண்களால் காணமுடியாது; அன்று பிறை புறக்கண்களுக்கு (கும்ம) மறைக்கப்பட்டிருக்கும்.

எனவே அதற்கு அடுத்த நாளான சனிக்கிழமை (18.08.2012 ) ஷவ்வால் பிறை 1 ஆகும். அந்நாளில் உலக முஸ்லிம்கள் அனைவரும் சந்தோஷமாக மக்களுக்கு உணவளித்து அல்லாஹ்வை பெருமைப்படுத்தி, புகழ்ந்து நோன்புப் பெருநாளை கொண்டாட வேண்டிய நாளாகும். எனவேதான், அன்று நோன்பு நோற்பது ஹராம் என மார்க்கம் தடைசெய்துள்ளது.

உண்மை நிலை இவ்வாறு இருக்க சர்வதேசப் பிறை என்றும், பிறை பார்த்த தகவலின் அடிப்படையில்தான் நாங்கள் செயல்படுகின்றோம் என்றும் கூறி, முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி, மார்க்கத்தில் குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம் என சம்பந்தப்பட்டவர்களை நாம் கேட்கிறோம்.

தத்தம் பகுதி பிறை என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள் தற்போது ஊர் பிறையாகவும், பின்னர் மாவட்டபிறையாக மாறினர். இதனால் இவர்களின் பழைய  நிலைபாடு அனைத்தும் முற்றிலுமாகக் காற்றில் கரைந்துபோனது. இன்றோ மாநில அளவு பிறை என்று மாறி அதிலும் இவர்கள் உறுதியாக நிற்காமல் இஸ்லாம் எல்லையை நிர்ணயிக்கவே இல்லை; எனவே, எல்லையை நாமே நம் இஷ்டத்திற்குத் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று புதுமையான பல்டி அடித்திருக்கிறார்கள். அவர்களும் சர்வதேசப் பிறையை சரிகாணும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே,  இனி சர்வதேசப் பிறை குறித்த அடிப்படை முரண்பாடுகளை விளக்குவதே இப்பிரசுரத்தின் தலையாய நோக்கம்.

உலகில் எங்கு பிறை தென்பட்டாலும் அதை புறக்கண்ணால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்த நாள் நோன்பு, அல்லது பெருநாள் தினத்தை அனுசரிக்க வேண்டும் என்பதே சர்வதேசப்பிறையினரின் நிலைபாடாகும். இந்நிலைபாட்டால் மாவட்ட, மாகாண, மாநிலப் பிறையினரைப் போலவே ஒவ்வொரு வருடமும் சர்வதேசப்பிறையினரில் பெரும் பகுதியினர் ரமழான் முதல்நாளை அறியாமையினால் விட்டுவிடுவதும்,  நோன்பு நோற்பது ஹராம் என தடைசெய்யப் பட்டுள்ள பெருநாட்களில் நோன்பு நோற்கும் நிலையும் ஏற்படுகிறது.

மேலும், சர்வதேசப் பிறையை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சிக்கல்களும் நிறைந்துள்ளன. இவர்களின் சர்வதேசப் பிறை கொள்கை சரியாக இருந்து வந்தால், சர்வதேச முஸ்லிம்களுக்கும் பாரபட்சமற்ற தீர்வு அதில் கிடைத்திருந்திருக்க வேண்டும். புரியும்படி சொல்வதென்றால், அவர்களின் வாதப்படி கஅபா அமைந்திருக்கும் மக்காவிற்கு, மேற்கிலுள்ள நாடுகளில் முதல்நாளின் பிறை தெரிகிறது என வைத்துக்கொள்வோம். கஅபாவிற்கு கிழக்கில் உள்ள இந்தியர்கள் நள்ளிரவில்தான் இப்பிறை தகவலை பெறுவார்கள். எனவே, இந்தியாவிலுள்ளவர்கள் அவசர கோணத்தில் சஹர் உணவு தயாரிப்பில் ஈடுபடவேண்டும்.

இன்னும் இந்தியாவிற்கு சற்று அருகே கிழக்கேயுள்ள நாட்டு மக்கள் பலருக்கு இந்த தலைப்பிறை அறிவிப்பு கிடைக்காமலேயே போய்விடும். அதே நேரம் இந்தியாவிற்கு மிகவும் தூரமான கிழக்கேயுள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலுள்ளவர்களோ விடிந்து மறுநாள் காலையில் இருப்பார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் முதல் நோன்பை இழந்து இரண்டாவது நோன்பை முதல்நோன்பாகக் கருதி சரியான நாட்களில் அமல்களை செய்யாமல் தவறுகின்றனர். இந்த தவறை இஸ்லாம் அங்கீகரிக்குமா?

சர்வ தேசப் பிறையா? சவுதி தேசப் பிறையா?

உலகில் எங்கு பிறைபார்க்கப்பட்டாலும், அல்லது பிறைபார்த்த தகவல் எங்கிருந்து கிடைத்தாலும் அதை ஏற்று செயல்படுவது என்பதுதான் சர்வதேசப் பிறையினரின் நிலைபாடு என்று பொதுமக்கள் நம்பியுள்ளனர். ஆனால், இந்த பிறை அறிவிப்பை வெளியிடுபவர்களோ சவுதி அரேபியாவைத் தவிர மற்ற நாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை, சவுதி அரசு பிறை அறிவிப்பை அறிவிக்காத பட்சத்தில் மற்ற நாடுகளில் பெறப்பட்ட அறிவிப்புகளை வைத்து இவர்கள் அமல் செய்வதுமில்லை. அவ்வளவு ஏன்?  பிற நாடுகளில் பிறை பார்த்த தகவல் நம் நாட்டிற்கு முன்கூட்டியே தெரிய வந்தாலும், சவுதி அரேபியா அறிவிக்கும் வரை, அதாவது இரவு 11 மணிவரை காலதாமதம் செய்ததன் இரகசியம் என்ன? இதன் மூலம் சர்வதேசப் பிறையை நம்பியுள்ள அப்பாவி மக்களை ஏமாற்றியதே மிச்சம்? எனவே, இவர்கள் சர்வதேசப் பிறையினர் அல்ல; சவுதிதேசப்பிறையினர் என்றே கூறவேண்டும்.

சர்வதேசப்பிறையினராகிய நீங்கள் சவுதிஅரேபியாவை அடிப்படையாகக் கொள்ள காரணம்தான் என்ன எனக் கேட்கப்பட்டால்,  'சவுதி அரேபியாவில் இஸ்லாமிய அரசாட்சி உள்ளது. இது உலமாக்கள் நிறைந்த நாடு, ஹஜ்ஜை அறிவிக்கும் அதிகாரம் அந்நாட்டிற்கே இருக்கிறது என்பன போன்ற சவுதியின் புகழை விவரித்துவிட்டு சவுதியை நம்பலாம் மற்ற நாடுகளின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள இயலாது, மற்ற நாட்டு அறிவிப்பில் நம்பகத் தன்மையில்லை' என நாக்கூசாமல் பொய்யுரைக்கின்றனர்.

என்னே ஒரு பதில்! ஸூமு லி ருஃயத்திஹி வஅஃப்திரு லி ருஃயத்திஹி என்ற நபிமொழி எல்லாம் தற்போது வசதியாக மறந்துவிட்டதே. இவர்கள் சர்வதேசப் பிறையிலிருந்து சறுக்கி விழுந்து, சவுதி தேசப் பிறையில் தஞ்சமடைந்துவிட்டதற்கு இப்படியா சப்பைகட்டு கட்டவேண்டும்? நாங்கள் தவறுதலாக ஒரு நோன்பை விட்டுவிட்டோம், இரண்டாவது நோன்பை முதலாவது என்று அறிவித்துவிட்டோம். எனவே, ஒரு நோன்பை களாச்செய்யுங்கள் என்று இதே சவுதி அரசாங்கம் பலமுறை அறிவிப்பு செய்துள்ளதை மறந்துவிட்டார்கள் போலும். இவர்கள் சொல்வது போல சவுதியில் இஸ்லாமிய அரசு இருப்பதால் அவ்வரசின் விதிகளுக்கெல்லாம் இவர்களும் கட்டுப்படுவார்களா?

சவுதிஅரேபியா உலமாக்கள் நிறைந்த நாடு அங்குதான் புனித நகரங்கள் உள்ளன என இவர்கள் சொல்வதால், நாம் கேட்கிறோம் சவுதி உலமாக்களின் ஃபத்வாபடிதான் அங்குள்ள புனிதமிக்க இரு ஹரமிலும் ரமழானின் தராவிஹ் 20 ரக்அத்துக்கள் தொழுகை நடத்தப்படுகின்றன. எனவே, சர்வதேசப் போர்வையில் இருக்கும் சவுதி தேசப்பிறையினர் ரமழானில் தராவிஹ் 20 ரக்அத்துக்கள் சரியானதே என அறிவிப்பார்களா?

சவுதி உலமாக்களின் ஃபத்வாபடிதான் வித்ரு தொழுகைளில் இமாம் நீண்ட துஆவை சப்தமிட்டு ஓத மற்றவர்கள் அனைவரும் ஆமீன் ஆமீன் என்று கூறும் பித்அத்தை அங்கீகரித்து ஏன் இவர்களும் அதைப்போலவே அமல் செய்யக்கூடாது? மேலும் பலஹீனமான ஹதீஸ், ஸலபுஸாலிஹீன்கள், துஆ, சூனியம், வங்கிகளில் பணிபுரிவது, இன்ஸூரன்ஸ் பாலிஸி போன்ற எத்தனையோ சட்ட விஷயங்களில் இதே சவுதி உலமாக்களின் நிலைபாட்டை இவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரா? பிறைக்கு மட்டும்தான் சவுதி அரேபியாவா? ஏன் இந்த இரட்டை நிலைபாடு?

மார்க்க அறிவில் சிறந்த எத்தனையோ சிந்தனையாளர்கள் சவுதியில் இருப்பதை நாம் மறுக்கவில்லை. அவர்கள் அனைவரையும் நாமும் மதிக்கிறோம். அவர்களின் சிந்தனைகள் வளம்பெற்று அவர்களின் மார்க்க சேவைகள் மேலோங்க  நாம் துஆ செய்கிறோம்.  அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்யட்டும்.

அதே சமயம் பிறைவிஷயத்தில் மக்காவை மையமாக வைத்து 29ம் நாளன்று மக்காவில்  சூரியனுக்கு முன்னால் சந்திரன் மறைந்து விட்டால் அந்த மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்யவேண்டும் என்றும், சூரியன் சந்திரனுக்கு   முன்பாகவே மறைந்து விட்டால் அடுத்த நாள் முதல் நாள் என்றும், இதுவே மக்கா தேதிக்கோடு என்ற அவர்களின் புதிய நிலைபாடு. இன்றைய நாளின் மறையும் பிறையை பார்த்துவிட்டு அது அடுத்த நாளைக்குரிய பிறை என்று அறிவிப்பதையும், நாம் குர்ஆன் சுன்னா அடிப்படையிலும் விஞ்ஞான ரீதியிலும் மிகவும் தவறு என்கிறோம்.

காரணம் மக்காவில் சந்திரன் சூரியனுக்கு முன்னால் மறைந்து மக்ரிப் வேளையும் முடிந்துவிட்டால் அதோடு அந்த நாள் முடிந்து விடவில்லை. மக்காவிற்கு மேற்கே பல நாடுகளில் கோடான கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அந்த நாடுகளில் ஏதேனும் ஒன்றில் சந்திரன் மறைவதற்கு முன்னால் சூரியன் மறைந்து அதற்குப்பின் சந்திரன் மறையும். எனவே, அவர்களுக்கும் சேர்த்து தீர்வைச் சொல்வதுதான் மார்க்கம் மற்றும் அறிவார்ந்த செயல் என்கிறோம்.

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply